சிகரம் தேடிய பயணம் ...

Posted by அகத்தீ Labels:

 


 

சிகரம் தேடிய பயணம் ...





மாபெரும் ஆளுமைகளை வாழும் காலத்தில் வாழ்த்துவதும் பாராட்டுவதும் கொண்டாடுவதும் பெருமைக்கு  உரிய வாய்ப்பு. சிகரம் செந்தில்நாதனின் எண்பதாவது அகவையைக் கொண்டாட விழா எடுத்ததும் ; அவரை போற்றும் இந்நூலைக் கொண்டுவந்ததும்  பெருநிகழ்வே !

 

இந்நிகழ்வில் நேரடியாகப் பங்கேறக எனக்கு வாய்ப்பு அமையவில்லை . இருந்த இடத்திலிருந்தே என் அன்பைப் பகிர்ந்து கொள்கிறேன். நூலைப் புரட்டிய போது நான் எழுதிய ஓர் நூல் மதிப்புரையும் இடம் பெற்றிருப்பதை கண்டு மகிழ்ந்தேன் .என் நினைவுகள் சற்று பின்னோக்கி குமிழியிட்டன .

 

நூலறிமுகத்தில் சுயபுராணம் கூடாதுதான் ; ஆயினும் அடக்க முடியா ஆர்வத்தால் சில வரிகளை எழுதிவிட்டு நூலுக்குள் செல்கிறேன்.

 

அவசரகாலத்தில் என் அண்ணன் தோழர் சு.பொ.நாராயணன் தட்டச்சராக ச.செந்தில்நாதனிடம் பணியாற்றினார் . அப்போதுதான்  ‘சிகரம் வெளியிடப்பட்டது .சு.பொ.அலி என்கிற பெயரில் நான் கவிதைகள் கிறுக்கிக் கொண்டிருந்தேன். என் கவிதை ஒன்றை என் அண்ணன் எடுதும் போய் செந்தில் நாதனிடம் கொடுக்க சிகரம் முதல் இதழில் அது வெளியானது மறக்க முடியாத நினைவு . அதைத் தொடர்ந்து சிகரத்தோடு என் பிணைப்பு அதிகமானது .சில கவிதைகள் வெளிவந்தன . அதோடு உ.ரா .வரதராசன் ,நான் எல்லோரும் பழவந்தங்கலில் இலக்கிய நிகழ்வுகள் நடத்தத் துவங்கியதும் மேலும் நெருங்கினோம். நான் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியாய் செயல்படத் துவங்கும் முன் எழுத்தாளர் சங்கமே என் முதல் அடிவைப்பாக இருந்தது .

 

அவசரகாலத்தில் நாமக்கல்லில் நடந்த தமுஎச [ அப்போது தமுஎசதான் தமுஎகச அல்ல] பயிற்சி முகாமில் பங்கேற்க என்னை அழைத்துப் போனார் . செலவை அவரும் உ.ரா.வரதராசனும் பங்கிட்டு அளித்தனர் . முகாம் முடிந்தபின் செந்தில்நாதன் சேலத்தில் இருநாள் தங்க திட்டமிட்டார் .அவர் மனைவி சேலத்தில் பணியாற்றி வந்தததால் .  சேலத்தில் ஒரு கால் ,சென்னையில் ஒரு கால்’ என அவர் வேடிக்கையாகச் சொல்வார்.என்னை தோழர் கே.முத்தையாவுடன் அன்ரிச்ர்வ்ட் கோச்சில் அனுப்பி வைத்தார் .தலைமறைவாய் இருப்பதால் டிக்கெட் ரிசர்வ் செய்யவில்லை அவருக்கு . அவரோடு போக வேண்டும் ஆயின் அவரோடு பேசாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் . போலீஸ் மோப்பம் பிடிப்பதால் அந்த கண்டிசன் . இது ஓர் வித்தியாசமான அனுபவம் .

 

ச.செந்தில்நாதன் தமுஎச மாவட்ட செயலாளர் .நான் துணைச் செயலாளர் என பணியாற்றினோம். அக்கால கட்டத்தில் முனைவர் கோ.கேசவன் பல அரிய கட்டுரைகளை மாதாந்திர நிகழவில் வாசித்ததும் அவை  “மண்ணும் மனித உறவுகளும்” எனும் நூலாய் வெளிவந்ததும் நினைவில் இருக்கிறது .

 

வாலிபர் சங்கம் ,கட்சி ,தீக்கதிர் என் என் பயணம் தொடர்ந்த போதும் அவரோடு தோழமை பூண்டிருந்தேன்.அது குடும்ப நட்பாகவே நீடித்தது .

 

தோழர்கள் செந்தில்நாதன் , முகம் மாமணி ,சமுத்திரம் , தயானந்தன் பிரான்ஸிஸ் , தி.க.சி, போன்றோருடன் நானும் கிறுத்துவ இலக்கியக் கழக அறையில் / செந்தில்நாதன் அறையில் /சமுத்திரம் அலுவலத்தில் என மாறிமாறி சந்தித்து இலக்கிய உரையாடியதும் , பலவேறு இலக்கியம் சார்ந்த போராட்டங்களை கூரேற்றியதும் பசுமையாய் உள்ளன .

 

சு.சமுத்திரத்தின் படைப்புலகைத் தொகுக்கும் பணியை என்னிடம் பேசி ஒப்படைத்தது ச.செந்தில்நாதனே . அவ்வப்போது வழிகாட்டி நூல் சிறப்பாக அமைய வழிகாட்டினார் .சமுத்திரத்தின் மறைவு செந்தில்நாதனுக்கும் எனக்கும் பேரிழப்பே !

 

நான் ‘தேடல் வெளி’ என ஓர் ஆய்வு வட்டத்தை சொற்பகாலம் நடத்திவந்தேன் .மாதந்தோறும் பத்து பன்னிரெண்டு இளம் ஆய்வாளர்கள் யாரேனும் ஓர் வீட்டில் சந்திப்பது ; ஏதேனும் ஒரு பொருளில் ஒருவர் ஆயுவு கட்டுரை வாசிப்பது ;விவாதிப்பது என்பதே அதன் செயல்பாடு . சி.இளங்கோவன் எழுதிய “ தமிழ்நாட்டில் வேதக் கல்வி” எனும் அரிய நூல் இங்கு பிறந்ததே. அதற்கான கூட்டமும் செவ்வாப்பேட்டையில் என் வீட்டில் நடந்ததே . செந்தில்நாதன் வீட்டில் நடந்த தேடல்வெளி கூட்டத்தில்தான் நான் அவரை கடைசியாக நேரில் சந்தித்தேன் . அன்று சோஷலிச யதார்த்த வாதம் குறித்து அண்ணாதுரை கட்டுரை வாசித்தார் .அதில் செந்தில்நாதன் குறுக்கிட்டு பொருள் பொதிந்த கருத்துகளை கிராம்ஷியோடு இணைத்து சுட்டிக்காட்டினார்.

 

சொல்லச் சொல்ல நீளும் .இடம் கருதி  ஒரு செய்தியோடு நிறுத்துகிறேன் .ஒரு கட்டத்தில் தீக்கதிர் ஆசிரியர் குழுவில் பேசி அ.குமரேசன் ,மயிலை பாலு இருவரும் தமுஎகச பணியில் ஈடுபடட்டும் என முடிவெடுத்து நான் ஒதுங்கிக் கொண்டபின் தமுஎகச தொடர்பு நடைமுறையில் மொத்தமாக அறுந்துவிட்டது . செந்தில்நாதனோடு தொடர்பும் எழுத்துவழி என்பதாகிவிட்டது .வாழ்க்கைச் சூழல் நான் பெங்களூருக்கு குடிபோய் விட்டேன். இனி நூலுக்குள் போவோம்…

 

முதல் பகுதி வாழ்த்துச் செய்திகள் .அதைத் தொடர்ந்து பல ஆளுமைகளின் கட்டுரைகள் , அதன் பின் நூலின் இதயமான சிறப்பு நேர்காணல் , சுவடுகள் என்கிற தலைப்பில் செந்தில்நாதன் பதித்த பல்வேறு முத்திரைகளை அவ்வப்போது பல ஆளுமைகள் நினைவுகூர்ந்தவை , நூல் மதிப்புரைகள் ,சுருக்கமான சொந்த வாழ்க்கைக் குறிப்பு , செந்தில்நாதனின் இதுவரையிலான படைப்புகள் பட்டியல் [இன்னும் தொடரும் ] என ஏழு பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது .

 

செந்தில்நாதன் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் பலரின் வாக்குமூலமாகவே இந்நூல் தொகுப்பு அமைந்துள்ளது பாராட்டத்தக்கது . அதிலும் தனிநபர் துதியாக இல்லாமல் படைப்பு சார்ந்தும் கருத்து சார்ந்துமே அவை பெரிதும் அமைந்திருப்பது தற்செயலானது அல்ல ; செந்தில்நாதனின் வாழ்க்கைப் பாதையும் பயணமும் அத்தகையதே !

 

நூலின் இதயமாக அமைந்துள்ள சிறப்பு நேர்முகத்தை வாசிக்கும் முன் நேர்காணல் செய்த வே.குமரவேல் ஆரம்பத்தில் சொல்லிய வரிகள் முக்கியமானவை .

 

“இந்த நேர்முகத்தை – கலந்துரையாடலை படிக்கும் நண்பர்களும் புதிய வாசகர்களும்  , திரு .சிகரம் செந்தில்நாதன் அவர்கள் முருகவேள் அவர்களுக்கு வழங்கிய நேர்காணல் புத்தகத்தை படித்த பிறகு இதனை வாசித்தால் ஓர் தெளிவான சித்திரம் கிடைக்கும் .கூடவே சமகாலப் பிரச்சனைகள் பற்றி ச.செந்தில்நாதன் அவர்கள் பல இதழ்களில் பல நேரங்களில் வரைந்துள்ள கட்டுரைகள் ‘இலங்கை முருகனும் மலேசிய முருகனும்’ எனும்தலைப்பில் சந்தியா பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது .மேலும் ‘ நீதிமன்றமும் நானும்’ என்ற நூலும் இருக்கிறது .இந்த மூன்று நூல்களையும் படித்துவிட்டு பிறகு இந்த விரிவான நேர்காணலைப் படித்தால் அந்த வரிசைக் கிரமம் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் புரிந்துகொள்ள உதவும்.”

 

ஆம். இந்த சிறப்பு நேர்காணல் முழுக்க முழுக்க கருத்துத் தளத்தில் பயணிக்கிறது எனவே அதனை ஒட்டி முழு புரிதலுக்கு மேற்கண்ட வழிக்காட்டல் நியாயமானதே !

 

 “ நான் சொல்வது மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்ல ; மண்ணைப் புரிந்து கொண்ட ,மண் சார்ந்த மார்க்சியம்” என் இந்நேர்காணலிலும் அழுத்திச் சொல்கிறார் . நேர்காணலின் அழுத்தமும் அதை நோக்கியே அவர் கருத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது .

 

திராவிட இயக்கம் குறித்த பார்வை , தமிழில் வழிபாடு குறித்த பார்வை , ஈழத் தமிழர் போராட்டம் குறித்த பார்வை , அரசியல் சாசனம் குறித்த பார்வை ,மாநில உரிமை தமிழ் தேசியம் குறித்த பார்வை என நீளும் இந்த நேர்காணல் . இதுஅவரின் தொடர் எழுத்துகள் ,போராட்டங்கள் இவற்றின் தொடர்ச்சியே என்பதை அவரை தொடர்ந்து அவதானிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும் . இதில் உடன்படவும் முரண்படவும் நிறைய இடம் உண்டு .அது குறித்து சுட்டத் துவங்கினால் நூல் மதிப்புரை வேறு அரசியல் விவாத தளத்துக்கு நகர்ந்துவிடும் எனவே இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

 

“ உரிமை வழக்கும் /குற்ற வழக்கும் போலவே /உலக வழக்கும் செய்யுள் வழக்கும்/முறையாய்க் கற்றவர்/சிக்கல் அற்றவர்” …. எனவும் ,”நீதிமன்றத்துக்கு உள்ளேயும் /நீதிமன்றத்துக்கு வெளியேயும் வாதாடும் / ‘ புதிய மன்றாடி போலும்’ என்று /சேக்கிழார் தொடரை சிறிது மாற்றி /சிகரம் செந்தில்நாதனை / வாழ்த்தி மகிழ்கிறேன்.” என செந்தில்நாதனின் உயிர்நண்பர் கவிஞர் ஈரோடு தமிழ்ன்பன் வாழ்த்தியிருப்பது மிகை அல்ல . சு.சமுத்திரம் உயிரோடு இருந்திருந்தால் செந்தில்நாதனின் எண்பதாவது அகவை விழாவை எப்படி கொண்டாடித்  தீர்த்திருப்பார் ?

 

தாம் தொடங்கிய  ‘சிகரம்’ ஏட்டின் பெயராலேயே இன்றுவரை அறியப்படும் ச.செந்தில்நாதன் எனும் மாபெரும் ஆளுமையை தனிநபர் துதியின்றி கருத்துச் செறிவால் சித்தரித்துக் காட்டும்  “சிகரம் செந்தில்நாதன் -பாதை-பயணம்-படைப்புலகம்” இந்நூலை ஊன்றி வாசிப்பீர் ! விவாதிப்பீர் ! தமிழ்நாடு முற்போக்கு திசைவழியில் தொடர்ந்து பயணிக்க தோள் கொடுப்பீர் .

 

தோழர் சிகரம் செந்தில்நாதன் வாழும் இக்காலத்தில் அவரோடு கை இணைந்து பயணித்தேன் எனும் பெருமிதத்தோடு அவர் நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன்.

 

சிகரம் செந்தில்நாதன் - பாதை-பயணம்-படைப்புலகம்,

தொகுப்பாசிரியர் : வே.குமரவேல் ,

வெளியீடு : சந்தியா பதிப்பகம் ,சென்னை -600040,தொடர்புக்கு : 24896979 / 944471515, பக்கங்கள் : 428 , விலை :ரூ.450/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

15/11/2022.

 

 

 


0 comments :

Post a Comment