சிறுகதை .7.
[ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]
விக்ன லக்ன முகூர்த்த பத்திரிகை…
நண்பர் கிரஹப்பிரவேசத்துக்கு அழைத்ததும் ராமலிங்கம் ,” ஈஸ்வரா ! ரொம்ப மகிழ்ச்சி
.எப்படியோ கடனை வாங்கி வீட்டைக் கட்டிட்டே … இனி இஎம்ஐ ஒழுங்காக் கட்டி வீட்டை
காப்பாற்ற முயற்சி செய் !”
“ ராமலிங்கம்
! நீ ! கண்டிப்பா குடும்பத்தோடு வரணும் …”
“ கண்டிப்பாய்
வருவேன் ஈஸ்வரா! அது என்ன கிரஹப்பிரவேசம் … புதுமனை புகுவிழான்னு போடலாம்லே … நம்ம
வழக்கப்படி ‘புதுவீடு பால்காய்ச்ச
வாங்க’ன்னு அழைக்கலாம்ல…”
“ ராமலிங்கம் ! உன் கச்சேரியை ஆரம்பிச்சிட்டியா ?
சாஸ்திரப்படி ஐயரை வச்சு எழுதினது … அது எங்க நம்பிக்க …. கேலி செய்யாதே …”
“ சரிப்பா ! ஸாரி!
ஸாரி !கோவிச்சுக்காதே ! ஞாயிற்றுக் கிழமை காலையில டிபனுக்கு வந்திருவோம்…மதியம்
சாப்பிட்டுவிட்டுதான் கிளம்புவோம் … போதுமா ?” என சமாதானப்படுத்தி அனுப்பி வச்சான்
ராமலிங்கம்.
“ ஏங்க ! அவரு
புதுவீடு பால்காய்ச்ச கூப்பிடுறாரு .. சந்தோஷம்னு சொன்னா போதாதா ? இன்விட்டேஷனை
வாங்கிட்டு ஒரு இக்கன்னா வச்சு பேசுவானேன் … புண்படுத்துவானேன்…” மைதிலி கணவர்
ராமலிங்கத்தை இடித்தார் .
“ நீ சொல்றது சரிதான்! அதுதான் ஸாரி
கேட்டிட்டேன்லே…நம்ம வாயி சும்மா இருக்க மாட்டேங்குது …தப்புதான்…ஸாரி…”
ராமலிங்கம் தடலாடியாக விழ மைதிலி ஒரு படி மேலே ஏறினாள் .
“ அண்ணைக்கு
என்னன்னா ? என் தங்கச்சி உங்க கொழுந்தியா வைசாலி அவ பொண்ணு வயசுக்கு வந்திட்டா ..
சடங்கு சுற்றுறோம் வாங்கன்னு கூப்பிட வந்தாள் … நீங்க என்ன செஞ்சீங்க …?”
“ அதைவிடு ! அதைவிடு!” ராமலிங்கம் நழுவினான்.
“ நீங்க மஞ்சள் நீராட்டுவிழாவுக்கெல்லாம்
வரமாட்டீங்கன்னு அவளுக்கும் தெரியும் … பேசாமல் தலையை ஆட்டிக்கிட்டு உடகார
வேண்டியதுதானே …”
“ இதோ பாரு மைதிலி ! கசப்பு மருந்த கொடுப்பது நோயைக்
குணமாக்கத்தான்… குழந்தை பூப்பெய்வது இயல்பான பருவ வளர்ச்சி .. அப்போது எங்க வீட்ல
பொண்ணு கல்யாணத்துக்கு ரெடியாயிட்டான்னு விளம்பரம் செய்யுறதும்… பொண்ண ஒரு வட்டத்துக்குள்ள
அடைக்க உபதேசிக்கிறதும்தான் அந்த சடங்கு , அது தேவையா ? நல்ல சத்தான உணவு , ஓய்வு
, பருவமடைதல் குறித்த அறிவியல் மருத்துவ ஞானம் ,சுகாதரம் குறித்த விழிப்புணர்வு
இவைதானே தேவை … இதைச் சொன்னா கோவிச்சிட்டு போவாளோ உந்தங்கச்சி …”
“ ஆமா ! என் தங்கச்சின்னா அறிவுரை கிழியுது … உங்க
தங்கச்சி சொன்னா கமுக்கமாக நகர்றது …” என மைதிலி அடுத்த அம்பை வீச ..
இனி சண்டை ரூட் மாறிடும்னு சுதாகரிச்சு ராமலிங்கம்
பேச்சை மடை மாற்ற ,” சீக்கிரம் மளிகை லிஸ்டை ரெடி பண்ணு ,உடனே சூப்பர் மார்கெட்
போய் வந்திருவோம்…”
“லிஸ்ட்
நேற்றே ரெடி! ஐயாவுக்குதான் இன்னும் மூட் வரலை “ என மைதிலி கேலி செய்ய … விவாதம்
புயலாக மாறாமல் தடைபட்டது .
மார்கெட்டுக்கு ஒரு வழியா கிளம்பினார்கள் .
மார்கெட்டிங் வேலை முடிஞ்சதும் புறப்படும் போது மைதிலி கேட்டாள் , “ ஏங்க வைசாலி
வீடு பக்கத்திலதானே ஒரு எட்டு போய்ட்டு வந்திருவமா ? பொண்ணு கிருத்திகா சடங்குக்கு வேற நீங்க வரலை …”
இதை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த ராமலிங்கம் , “ டபுள்
ஒகே” சொன்னான்.
“வாங்க அக்கா
! வாங்க அத்தான் ..” என வைசாலி வரவேற்க
“ பெரியப்பா ! பெரியம்மா வாங்கன்னு “ கிருத்திகா ஓடி
வந்து ராமலிங்கத்தை கட்டிப் புடித்தாள் .
“ கிருத்திகா ! சடங்குக்கு பெரியப்பா ஏன் வரலைன்னு
கேளு!” மைதிலி உசுப்பிவிட்டாள்.
“ பெரியப்பா செய்தது கரெக்ட் பெரியம்மா . போனவாரம்
வந்து எனக்கு பிடிச்ச பாசந்தி தந்தாங்க அதோடு
’பூப்படைதல் என்றால் என்ன ?’ ன்னு ஒரு அறிவியல் இயக்க சின்ன பிரசுரம்
பதினைஞ்சு தந்தாங்க, நானும் படிச்சேன் .. என் பிரெண்டஸுக்கு எல்லாம் கொடுத்தேன்…
எல்லோருக்கும் ரொம்ப புடிச்சு போச்சு …” என கிருத்திகா பேச
“பாருடா !
சைலண்ட இப்படி ஒண்ணு இடையில ஓடியிருக்கு” என அக்காவும் தங்கச்சியும் வியந்தனர்.
“ பெரியப்பா ! ஒரு வீடியோ போடுரேன்னு சொன்னீங்க …”
“ கிருத்திகா ! மறந்திருவனா ? ஞாயிற்றுக் கிழமை ஒரு
பால்காய்ச்சுற வீட்டுக்கு போறோம் … அப்படியே ஈவினிங்கில நாம் வீடியோ போட்டுருவோம்…
நான் மெயில் அனுப்பி வைக்கிறேன் … அண்ணைக்கு அந்த குறும்படத்த எடுத்த என் பிரண்ட
கீதா இளங்கோவனையும் கூட்டிட்டு வர்றேன்… உன் பிரண்டசை எல்லாம் வரச் சொல்லு …
குறும்படம் முடிஞ்சதும் சும்மா ஒரு கலந்துரையாடல் வச்சுக்கலாம் .. எல்லோருக்கும்
பர்க்கரும் பாசந்தியும் என் செலவு…”
கிருத்திகா சந்தோஷமாய்க் குதித்தாள்.
ஞாயிற்றுக் கிழமை பால்காய்ச்ச போய்ட்டு வரும் போது
மைதிலி ஒரே புலம்பல் … “ அந்த அபார்ட்மெண்ட்ல எல்லோரு வீடும் ஒரளவு புழங்க
வசதியாய் இருக்கு, இவரு என்னடான்னா வாஸ்து புண்ணாக்குன்னு எல்லாற்றையும் குறுக்க
மறுக்க மாத்திமாத்தி வச்சு புழங்கவே இடமில்லாமல் வச்சிருக்காரே …”
’ம்’ கொட்டியவாறு ராமலிங்கம் இருந்தான்.
“ வாஸ்துன்னு
வாசலை ஹாலுக்குள்ள திருப்பி வச்சு ஹால ’ட’ ன மாதிரி குறுக்கியாச்சு , கிட்சனை
திருப்பி வச்சு பிரிட்ஜ் வைக்ககூட இலமில்லாமல் ஆக்கியாச்சு …பாத்ரூமை சின்னதாக்கி அவ்வளவு
பெரிய பூஜை ரூம் எதுக்கு ?” – மைதிலி ஆற்றாமையோடு புலம்பிக்கிட்டே இருந்தாள்.
வழியில்
ஆர்டர் கொடுத்திருந்த பர்க்கர் ,பாசந்தி எல்லாம் வாங்கிட்டு , கீதா
இளங்கோவனை கூட்டிக்கிட்டு வைசாலி வீட்டுக்குச் சென்றனர் .
கிருத்திகாவும் அவள் தோழிகளும் குழுமி இருந்தனர் .வீடே
கலப்பாக இருந்தது . ராமலிங்கத்தின் தங்கை பாக்கியலட்சுமி ,மச்சான் குமாரவேல் ,மருமகள்
மணிமேகலை என வந்திருந்தது மைதிலியை
ஆச்சரியப் படுத்தியது .இது ராமலிங்கம் அழைப்பு எனச் சொல்லவும் வேண்டுமோ !
பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சுய அறிமுகம் முடிந்தபின் ,டிவியில்
அந்த வீடியோவை ஓடவிட்டதும் எல்லோரும் உடகார்ந்து எந்த சலசலப்பும் இல்லாமல்
கூர்ந்து பார்த்தனர் .
குறும்படம் முடிந்ததும் “ யாரு வேணுமின்னாலும் எந்த
சந்தேகம் வேண்டுமானாலும் கேட்கலாம்..” என ராமலிங்கம் சொல்ல..
கேள்விகள் கேட்க முதலில் தயங்கினர் .கிருத்திகாக
தயக்கத்தை உடைத்து சித்தப்பா கொடுத்த தைரியத்தில் கேள்வி கேட்க ,தொடர்ந்து
கேள்விக்கணைகள் நாலாபக்கமும் இருந்து பாய்ந்தன .கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடியதே
தெரியவில்லை .
முடிக்கிற தருணத்தில் வைசாலி புருஷன் மருதநாயகம் ஓர் கேள்வியை வீசினார் ,” என் மச்சான்
மகாதேவன் சொல்றார் சடங்கு சுற்றுறது தாய்மாமா சீரு சொந்த சாதிஜன மொய் வாங்கி
கல்யாணத்துக்கு சேமிக்கத்தானாம் .இது சரியாத்தானே இருக்கு ?”
“ மொய் சீர்
செய்முறை என்பது ஆதியில ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கிற மாதிரி இருந்திருக்கலாம்
; நம்மால் உறுதியாய் சொல்ல முடியாது …இப்போ ஓவ்வோர் குடும்பத்துக்கும் அது
சுமையாய் போயிடிச்சு , யாரு எவ்வளவு செஞ்சான்னு கணக்கு வச்சு திருப்பி செய்ய
வேண்டி இருக்கு .. சீர் செனத்தி செய்முறை மொய்க்கு கடன் வாங்கி வாங்கி அதுவேற
சுமையாகுது … எது எப்படியோ மொய்யைக் காட்டி
பெண்ணடிமைச் சடங்கை நியாயப்படுத்துவது அநீதி..”ராமலிங்கம் நீண்ட விளக்கம்
கொடுத்தான்.
கிருத்திகாவின் தோழிகள் விடைபெற்ற பின்னும்
கலந்துரையாடல் தொடர்ந்தது ; ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவு ,மாதவிடாய்
குறித்தெல்லாம் குடும்பமே கூடி விவாதித்தது அன்றைய ஹைலட் .மைதிலி ,வைசாலி,பாக்கியலட்சுமி
எல்லோரும் தங்கள் வலிகளைக் கொட்டித்
தீர்த்தனர் .
பாக்கிய லட்சுமி தன் மகளுக்கு சடங்கு செய்ய மாட்டேன்
.இன்று போல் வீடியோ கலந்துரையாடல் என சொல்ல, ராமலிங்கம் வெற்றிப் புன்னகை
வீசினான்.
மைதிலி பால்காய்ச்சுக்கு போய்வந்த வீட்டில் வாஸ்து
படுத்தியிருக்கும் பாட்டினை சொல்லிச் சொல்லி வருந்தினாள் .
“ என் கவலை கணவன் மனைவி ,அவன் பெற்றோர் ,இரண்டு
பெண்குழந்தைகள் புழங்க அந்த டூ பெட்ரூமில் இடமே இல்லை ; இருந்த கொஞ்ச இடத்டையும் வாஸ்துன்னு
கெடுத்துவிட்டார் ஈஸ்வரன் .சரி ! இஎம்ஐ விடாமல் கட்டி இதையாவது தக்க வைக்கட்டும்”
என ராமலிங்கம் சொன்னான்.
இரவு சாப்பாட்டை முடித்து வீடு திரும்பினர் .
காலம் வேகமாக ஓடியது.
அன்று ,காலையில் வந்த ஈஸ்வரன் எதையும் சொல்லாமல்
குலுங்கி குலுங்கி அழுதான் .
“ அழாதீங்க அண்ணா ! விஷயத்தைச் சொல்லுங்க “ என மைதிலி
கேட்டுக்கொண்டே இருந்தாள் .
பால் வாங்கப்போன ராமலிங்கம் உள்ளே வந்தான் .
மைதிலி காப்பி போட்டுக் கொண்டுவர பேச்சு தொடங்கியது .
புது வீடுக்கு போனதில் இருந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்
.பேங்க் லோண் போதாமல் வட்டிக்கு வாங்கிய கடன் மென்னியைத் திருகி எடுத்தது .இஎம்ஐ
முதல் இரண்டு மாதத்திற்குப் பிறகு கட்டவே இல்லை . கடந்த இரண்டு வருஷமாக கொரானா
காலம் ; வேலையும் இல்லை .சம்பளமும் இல்லை . இப்போ கடன் தாங்க முடியலை வீட்டை
விற்றுவிட்டு கடனில் இருந்து தப்ப நினைச்சா அதுவும் குதிரமாட்டேங்குது…” ஈஸ்வரன்
கலங்கினான்.
“ ஏன்? அந்த ஏரியா நல்ல ஏரியா ,நல்ல அபார்ட்மெண்ட் …”
மைதிலி சந்தேகம் கேட்டாள்.
“வீட்டை வந்து
பாக்குறவங்க புழங்க இடமே இல்லையே . மீண்டும் உள் பகுதிகள் ,மெயின் டோர் உட்பட
ஆல்டர் பண்ணினாத்தான் யூஸாகும் .அதுக்கு ஏழெட்டு லட்சம் தேவை .எனவே விலையில்
குறையுங்கோ என்கிறார்கள் .குறைச்சால் கடனுக்கே பத்தாது … எல்லாம் வாஸ்து பார்த்து
நான் செஞ்ச குளறுபடிகள் ..என்ன செய்ய ?” –புலம்பினார் ஈஸ்வரன்.
“ ஈஸ்வரா !
நம்ம மாதிரி மிடில் கிளாஸ் கடனை வாங்கி வீட்டைக் கட்டு … வீட்டை விற்று கடனை அடை
என்கிற பொழப்புதான் .. வீட்டு வசதி அரசு பொறுப்பானால்தாம் பொழைக்க முடியும்
அதைவிடு .. இப்ப என்ன செய்யுறதுன்னு பார்ப்போம்…எனக்குத் தெரிஞ்ச ஒரு
காண்டிரக்டர்ட்ட பேசி வீட்டை ரீமாடல் செஞ்சு விறகச் சொல்லலாம்… இதில் அவர்
கில்லாடி .. பேங்கிலேயும் கொஞ்சம் கட்டி பிரச்சனையை தள்ளிவைப்போம் … உடனே நீ வாடகை
வீடு பார் ! ஒதுக்கு புறமா இருந்தாலும் பரவாயில்லை … சமாளிப்போம்…” ராமலிங்கம்
ஆறுதல் சொல்லி வழிப்படுத்த ஈஸ்வரன் புறப்படத் தயார் ஆனார்
“ இருங்கண்ணா ! உப்புமா ரெடியாயிடிச்சு சாப்பிட்டுட்டு
போங்க ..”
ராமலிங்க வாயை சும்மா மூடிக்கிட்டு சாப்பிடாமல் ,”
கிரஹப்பிரவேச முகூர்த்தம் குறிச்ச ஐயரு விக்ன லக்ன
முகூர்த்த பத்திரிகை குறித்து தருவாரா ?” எனக் கிண்டல் செய்ய …
மைதிலி ஒரு மொறை மொறச்சு ,”மனுஷனுக்கு கேலி செய்ய
நேரம் காலம் கிடையாதா ?”ன்னு தலையிலடிக்க….
“ ஸாரி ! வெரி
ஸாரி !” என கைஎடுத்துக் கும்பிட்டான் ராமலிங்கம்.
“ நீ கேட்டதில
தப்பே இல்லே”ண்ணு கும்பிட்ட கையைப் பிடிச்சு ஈஸ்வரன் சொல்ல இறுக்கம் தளர்ந்தது .
சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment