சிறுகதை .8.
[ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]
காதல் என்றால்
என்னவென்று தெரியுமா
உனக்கு ?
“ அண்ணா ! உங்க மருமக செய்யுறது நியாயமா
? சரியா ? அவளுக்கு சொல்லுங்க…” என பாக்கிய லட்சுமி அழுத்திச் சொன்னாள் .
“ பாக்கியா
!என்னம்மா ! தலையும் புரியாம வாலும் புரியாமா சொல்ற…” ராமலிங்கம்
“ அதுதான் உங்க மருமக மணிமேகலையை பெண் பார்க்க ஒரு
குடும்பத்திலிருந்து வர்றாங்க … ஜாதகம் பொருந்திப் போச்சாம் .. அடுத்தமாசம் வர்றேங்கிறாங்க
… இவ என்னடான்னா யாருட்ட கேட்டு ஜாதகத்த கொடுத்த என்னை யாரும் பார்க்க வேண்டாம்னு முரண்டு
பண்றா..உங்க மச்சான் கோவத்தில இருக்கார்…”
“ பாக்கியா
விடு நான் அவள்ட்ட பேசிட்டு முடிவு செய்யலாம் ..அவ்வளவுதானே !”
“ ஆமா இவரு கலெக்டரு இவரு உத்தரவு போட்டா ஊரே நடுங்கும்
… பொறந்தப்பவே மணிமேகலைன்னு பேரு வைக்காத இவவாழ்வு கண்ணாலம் காட்சி இல்லாத மணிமேகலை
மாதிரி ஆயிடும்னு சொன்னேன் .. கேட்டாளா ! எங்க அண்ணன் சொல்ற பேரு நல்லா இருக்கு தமிழ்ல
இருக்கு மாடர்னாயிருக்குன்னு சொல்லிட்டு இப்ப புலம்பினா எப்படி ?” மூச்சுவிடாமல் மச்சான்
குமாரவேலின் அம்மா காளியம்மா புலம்பினார் ..
“ ஆமாம் ! நீங்க உங்க பொண்ணுக்கு லட்சுமின்னு பேருவச்சீங்க
அவ வாழ்க்கை சீரழிஞ்சு கிடக்கு.. பேருல என்ன கிடக்கு ?” என பாக்கியா எதிர் கச்சேரியை
முணுமுணுக்க … காளியம்மா காதில் விழுமுன் ,
“ அம்மா
! சும்மா இருக்க மாட்ட … இந்தக் கழுத யாரையாச்சும் லவ் பண்ணுதோ என்னமோ ..சொல்லித் தொலைக்கவும்
மாட்டேங்கிறா..” குமாரவேல் சொல்லி மூள இருந்த பெரும் போரைத் தடுத்தார்.
“ நானும்
தனியா பலமுறை கேட்டுட்டேன் … கூடவே திரியுற அலெக்ஸ விரும்புறியான்னும் கேட்டுட்டேன்…
இல்ல அவன் பெஸ்ட் பிரண்டுங்கிறா … லவ் யாருட்டேயும் வந்துட்டா சொல்றேன்னு நழுவுறா”
“ மச்சான் ! விடு மாப்பிள வீட்டுக்காரங்க இன்னும் வர்ற தேதி சொல்லலைல
அதுக்கு முன்னாடி நான் மணிமேகலைட்ட பேசுறேன்
… நீங்க யாரும் அவள்ட்ட இதைப் பற்றி பேசாதீங்க … மாப்பிள வீட்டுக்காரங்க கேட்டால் தாய்
மாமாகிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு டேட்ட கன்பார்ம் பண்றோம்னு சொல்லி வைங்க ..” ராமலிங்கம்
இப்படி சொன்னதும் குமாரவேலும் பாக்கியாவும் தலையசைத்தனர் . காளியம்மா பிலாக்கணம் வைத்தவாறு
நழுவினார் .
கல்லூரியிலிருந்து
மணிமேகலை உள்ளே நுழைந்தாள் .
“ மாமா ! உங்க தங்கச்சி என்னப் பற்றி குற்றப் பத்திரிகை
வாசிச்சிருப்பாங்களே ..” என மணிமேகலையே பிரச்சனையை ஆரம்பிச்சிட்டாள்.
“ மேகல ! சொல்லமா இருப்பாரா ? அவளுக்கு இப்ப என்ன
கல்யாண அவசரம் பிஎஸ்சி முடிக்கட்டும் … அப்புறமா மேல படிக்கிறதா ? கல்யாணாமானு அவகிட்ட
கேட்டுக்கலாம்னு சொல்லிட்டு இருக்கேன்…நீ வந்திட்டே…”
“ மாமான்னா மாமாதான்” என ராமலிங்கம் கழுத்தை கட்டிப்
பிடிச்சா மேகல..
“நல்ல மாமா நல்ல மருமக.. அண்ணே ! உங்களுக்கு பிடிச்ச
அடை அவியல் செய்யுறேன் எல்லாம் ரெடியா இருக்கு பத்து நிமிசம்தான்…” பாக்கியா சொல்ல
ராமலிங்கம் தலையாட்டினாள்..
“மாமா! நம்ம கொய்யா மரத்தில நிறைய பழம் …வாங்க பார்க்கலாம்”
என மணிமேகலை அழைக்க ராமலிங்கம் உடன் போனார் . அங்கே பழம் பறிச்சாங்களோ இல்லையோ ஞாயிற்று
கிழமை மாமாவும் மருமகளும் அத்தையோடு மெரினா பீச் போக பிளான் போட்டுட்டாங்க…
பாக்கியம்
“ அடை ரெடி” என குரல் கொடுக்க வந்து சாப்பிட அமர்ந்தனர் .
ஞாயிற்று
கிழமை மைதிலி ,ராமலிங்கம் ,மணிமேகலை மூவரும் மெரினா பீச் வந்தனர் . மாற்றுத்திறனாளிகளுக்கு
பீச்சில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாதையை கண்டனர் . “ நல்ல முயற்சி” என ராமலிங்கம் சொல்ல
. ஆம் என்பதுபோல் தலையாட்டினர் .
கூட்டம் இல்லாத
இடத்தைப் பார்த்து உட்கார்ந்து பேசத்துவங்கினர் .
“ தேங்காய் மாங்காய் பட்டாணிச் சுண்டல் , பஜ்ஜி
,போண்டா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போகுது பர்க்கர் பீஸா , பாணி பூரி ன்னு பீச்ச
ஆக்கிரமிக்குது” என மைதிலி வருத்தம் தெரிவித்தாள் .
“ ரொம்ப சரி ! அதுமட்டுமா ? விற்பவர் பேசும் மொழியும்
இந்தியாக இருக்கிறது … பண்பாட்டு படை எடுப்பு நிகழ்கிறதோ என்னவோ ?” ராமலிங்கம் தன்
வருத்தத்தைப் பகிர்ந்தார் .
“ எங்க பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பை , மதுபாட்டில்
மாநகராட்சி சுத்தம் செய்யுதான்னு சந்தேகமே வருது …” மைதிலி சுட்டிக் காட்ட,
“ கவர்ன்மெண்டும்
இன்னும் அக்கறையோடு கவனிக்கணும் ,அதே நேரம் பொது மக்களும் நம்ம பீச்சு நம்ம சுத்தம்ன்னு
குப்பையை தாங்களே எடுத்துப் போய் உரிய இடத்தில போடலாம்ல … குடிமகனுங்களுக்கு இதை எப்படி
புரியவைக்கிறது.. “ ராமலிங்கம் அங்கலாய்ப்பு
“ஜப்பான்காரன் காலபந்து ஆடி முடித்ததும் ஆள் ஆளுக்கு
ஸ்டேடியத்தை சுத்தம் பண்ண கை குடுக்கிறான் ..அத பேஸ் புக்கில ஸ்டேட்டசா போடுறாங்க
.. ஆனால் இங்க கடைப் பிடிக்கிறது இல்ல .. சுத்தம் செய்வது ஒரு சாதிக்கும் வீட்டுல பெண்களுக்கும்னு
நம்ம பண்பாடு ஒதுக்கி வைத்ததின் கோரவிளைவு” என மணிமேகலை விளக்கம் கொடுத்தார்.
இளந்தலமுறையின்
கூர்த்த பார்வையை ராமலிங்கமும் மைதிலியும் வியந்து தட்டிக் கொடுத்தனர் .
நாலய்ந்து
இளம் பெண்களும் பையன்களும் சிரித்து அரட்டை அடித்து அவர்களைக் கடந்தனர் .
“ ஓர் ஆணும் பெண்ணும் காதலராக இருக்க வேண்டும் அல்லது
அண்ணன் தங்கைன்னு இருக்கணும் அப்படித்தானா ? ஏன் நண்பர்களாக இருக்கக் கூடாதா ? ..”
திடீரென மணி மேகலை கேட்கவும் ராமலிங்கம் மகிழ்ந்தார் ; உரையாடலுக்கான வாசல் திறந்துவிட்டது
அல்லவா ?
“ மேகலா !தாரளமாக ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கலாம்
தப்பே இல்லை ..”
“ பின்ன ஏன்
அலெக்ஸும் நானும் நண்பர்களென்பதை சந்தேகப் படுற மாதிரி அம்மா அவனை நீ லவ் பண்ணுறியான்னு
கேட்குறாங்க …” மேகலா கேள்வியைச் சொடுக்கினாள்.
“ அம்மா ! சந்தேகப் படலைம்மா … சந்தேகப்பட்டா நீ
அவனோடு சுற்றுறத கண்டுக்காமல் இருப்பாளா ? உன் பாட்டி அடிக்கடி குத்திக் காட்டுறாங்க
அதைக் கிளியர் பண்ணிக்கத்தான் அம்மா கேட்டாங்க … அப்பாவுக்கும் அவன் மேல் சந்தேகம்
இல்லை … இன்னும் சொன்னால் அவன் மேல ரொம்ப நல்ல அபிப்பிராயம் வச்சிருக்கார் … ஆனால்
பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வர்றார்ன்னு சொன்னதும் நீ கோவிச்சுக் கிட்ட இல்லை
… அதுதான் யாரையோ லவ் பண்ணுறியான்னு சந்தேகப் படுறாங்க அதுதான் கேட்டாங்க …” ராமலிங்கம்
சொன்னார் .
“ போங்க மாமா
! நான் இன்னும் படிக்கணும் … எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் .. எவனோ ஒருத்தன் திடீர்
ஒரு நாள் வீட்டுக்கு வருவானாம் ஒரு நிமிடம் பார்ப்பானாம் … நானும் பார்க்கணுமாம் …
அந்த ஒரு நிமிடத்தில என்ன தெரிஞ்சிக்க முடியும் … சும்மா அழகா இருந்தால் மட்டும் போதுமா
?”மணிமேகலை பொரிந்தாள் .
“ மணி ! நீ சொல்றது சரிதாம்மா … ஆனா பொம்பளைங்களுக்கு
வேற விதி … கல்யாணமே வேண்டாம்னு இருக்க முடியுமா ? அம்மா அப்பா சொல்றாங்கன்னு தலையாட்டத்தான்
நம்ம பண்பாடு சொல்லிக் கொடுத்திருக்கு ..” மைதிலி சமாதானம் சொன்னாள் .
“ அத்தை நீங்க மட்டும் சாதி பார்க்காமல் லவ் பண்ணி
கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க… என்ன மட்டும் கல்யாண சந்தையில மாடு மாதிரி நிக்கச் சொல்றீங்க
…” மணிமேகலை கோவத்தோடு பேச அத்தையும் மாமாவும் ரசித்தனர் .
“ சபாஷ்
! என் சிங்கக் குட்டி !உனக்கும் யாருட்டையாவது லவ் இருந்தா சொல்லு பேசி முடிச்சிருவோம்…”
“ மாமா ! இருந்தால் மொதல்ல உங்கள்ட்டதான் கூட்டிட்டு
வந்து நிற்பேன் … இந்த பெண் பார்க்கும் சடங்கு எனக்கு குமட்டலா இருக்கு ….ஏன் ஆண் பார்க்க
அவங்க வீட்டுக்கு நாம் மொதல்ல போய் பல்லைப் பிடிச்சு பார்க்கக்கூடாதா …”
“ போற போக்க பார்த்தா நீ பெரிய பெண்ணியப் போராளி
ஆகிடுவே போலிருக்கு !” மைதிலி கேலி செய்ய,
“ மாமா !
நீங்கதான நெறைய புக்கஸெல்லாம் கொடுத்து படிக்கச் சொன்னீங்க ..ரோஸலிண்ட் மைல்ஸ் எழுதிய
‘உலக வரலாற்றில் பெண்கள்’ பெரியார் எழுதிய
‘பெண் ஏன் அடிமையானாள்’ ..இப்படி நீங்க கொடுத்த எல்லா புக்ஸ்சையும் நானும் படிச்சேன் என்
எல்லா பிரெண்ட்ஸும் அலெக்ஸ் உட்பட படிச்சோம்… இங்க திருமணம் என்பது வெறும் பிஸினெஸ் அதில லவ்வுக்கு இடமே இல்லைன்னு
நெறைய டிஸ்கஸ் பண்ணிருக்கோம்…”
“ பலே ! பலே ! மாமா மருமகள இப்படி தயார் பண்ணிவிட்டா
அவங்க பாட்டி ஏன் திட்ட மாட்டா…” மைதிலி கேட்க
இருவரும்
சிரித்தனர் , “ பாட்டிக்கும் பேத்தி மேல உள்ள அக்கறையைத்தான் அதில் பார்க்கணும் அவங்க
அனுபவம் அவங்க உலகம் அவ்வளவுதான்..”
“ எல்லாம் சரி ! நாளைக்கு பாக்யா போண் பண்ணி என்னாச்சு,
என்ன சொல்றான்னு கேட்பாளே என்ன சொல்றது ..??” தன் கவலையைச் சொன்னாள் மைதிலி.
“ நாளைக்கே கல்யாணம் பண்ணி நாளைன்னிக்கே புள்ளயும்
பெத்துக்க ரெடின்னு சொல்லுங்க …” கோவமாக மணிமேகலை எழுந்திருக்க முயல
“ இரு ! இரு ! அவங்க அவங்க கஷ்டத்த சொன்னாங்க ..விடு
!”
“ மாமா! கட்டாயம்
பொண்ணாப் பொறந்தா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா ?”
“ பொண்ணோ
ஆணோ கல்யாணம் பண்ணிக்கிறது பண்ணாமலே இருக்கிறது குழந்தை பெற்றுக்கிறது பெறாமலிருக்கிறது
எல்லாம் அவங்க அவங்க விருப்பம். இதுல மூக்கை நுழைக்கிறது குறை சொல்றது எல்லாம் நாகரீகமே
இல்ல … எங்களுக்கு குழந்தை இல்லை எவ்வளவு ஏச்சு பேச்சை மைதிலி தாங்கி இருப்பா ! குறைபாடு
எங்கிட்டத்தான்ன்னு டாக்டர் சொன்னாரு ! தத்து எடுக்கலாம் ,செயற்கை கருத்தரித்தல் இப்படி
சில வாய்ப்புகள் இருந்தன … குழந்தை இல்லாமல் இருவரும் வாழ முடிவெடுத்தோம் … இப்பவும்
பல நிகழ்ச்சிகளில ‘மலடி’ன்னு அவள ஒதுக்கிறாங்க
ஆனா ‘மலட’ன்னு என்னை யாரும் சொல்வதில்லை
..” ராமலிங்கம் சொல்லும் போதே கண் கலங்கியது …
மைதிலி அமைதியாக
இருந்தாள்.
“ மாமா !
நான்தான் உங்க மகளா இருக்கன ஏன் கலங்குறீங்க ..”
“ நான் புள்ள
இல்லேங்கிறதுக்காக கலங்கலை .. மைதிலியை மங்கல நிகழ்வுகளில் குத்திக் காட்ற சமூகத்தை,
ஒவ்வொரு முறையும் மைதிலி படும் வேதனையை நினைச்சேன்… பொண்ணு கல்யாணமாகமல் இருந்தாலும்
இப்படி இழிசொல் வரும் தாங்க மனசு வேணும்…”
“ மாமா !
நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னா சொன்னேன் … இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம் ! அவ்வளவுதான்…
நான் எம் எஸ் சி படிக்கணும் பிஹெச்டி முடிக்கணும் … அதுக்குள்ள எவனாவது இழிச்சவாயன எனக்கு பிடிச்சா உங்கள்ட்ட வந்து
சொல்றேன் .. கல்யாணம் பண்ணிக்கணும் தோணி எவனோடும் காதலும் வரலைன்னான்னாலும் உங்கள்ட்ட சொல்றேன் .. நீங்க வழிகாட்டுங்க .. இப்ப
எனக்கு படிக்க அவகாசம் கொடுங்க..”
“ அப்புறம் …நாங்க ஒரு இழிச்சவாயனை பார்த்துத் தரணும்
..” என மைதிலி அவ சொன்ன வார்த்தய திருப்பி அடிக்கவும் ; வெட்கத்தோடு மணிமேகலை தலை கவிழ்ந்தாள்
.
இருட்டத்துவங்கிவிட்ட
பொழுதில் இதயத்தில் ஒளி துலங்கியது ..
“ மணிமேகலை ! நீ மேல படி ! நான் உங்க அப்பா அம்மாட்ட
பேசுறேன் … அவங்க புரிஞ்சுக்குவாங்க … பாட்டிதான் காச்சுவாங்க …பார்த்துக்கலாம் … உங்க
சித்தப்பாட்ட சொல்லி சோதிடத்தின் மீது பழியைப் போட்டு பாட்டியை கொஞ்சநாள் சைலண்ட் பண்ணிரலாம்
…
“ மாமா ! சோதிடத்தில நம்பிக்கையே இல்லேன்னு சொல்வீங்க
இப்ப பாட்டிய சமாதானப் படுத்த சோதிடமா ?” மணிமேகலை வினவ ,
“ சோதிடமே ஒரு டுபாக்கூர்… நாம பாட்டிய சமாதானப்
படுத்த டுபாக்கூர் விடுறோம் … ஒண்ணு தெரியுமா ? என் பிரண்டஸ் சில பேரு பொண்ணுங்க ,பையனுக
ஜாதகம் சரி இல்லேன்னு புலம்பினப்போ நான் டூப்பிளிகேட் ஜாதகம் ரெடி பண்ணிக் கொடுத்து
கல்யாணம் முடிச்சு அவங்களும் ரொம்ப நல்லா இருக்காங்க .. முறையா எழுதின ஜாதகம் பொருந்தி
கல்யாணம் பண்ணினவங்க பலபேரு விவாகரத்து ஆகி இருக்காங்க … திருமணம் என்பது வெறும் ஜாதகப்
பொருத்தமோ பணப் பொருத்தமோ சாதிப் பொருத்தமோ அல்ல காதலில் ஒருவருவரை ஒருவர் புரிந்து
வாழ்தல்…” ராமலிங்கம் சொல்ல மணிமேகலை உற்சாகமானாள்.
மூவரும் ஐஸ்
சாப்பிட நகரலாயினர் .
மணிமேகலை
கையிலிருந்த “ பெயல் மணக்கும் பொழுது” [ அ.மங்கை
தொகுத்த ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ] நழுவி கீழே விழுந்தது .அதை எடுத்த
மைதிலி அதில் மணி மார்க் பண்ணி வைத்திருந்த நளாயினி தாமரையின் கவிதையைப் படித்து விட்டு
ராமலிங்கம் கையில் கொடுத்தாள் .
“ காதல் என்றால்
என்னவென்று
தெரியுமா
உனக்கு ?
எனக்கே எனக்கான
வாழ்வையும்
உனக்கே உனக்கான
வாழ்வையும்
நீயும் ,நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து
பார்ப்பதுதான்.
அதற்காக
என் வாழ்வை
என் விருப்பு
வெறுப்பை
எல்லாம் துறந்து
உனக்காய்
மட்டும்
உன் விருப்பு
வெறுப்போடு
உனக்காய்
வாழ
எனக்கு இஷ்டமில்லை
நீ நினைக்கும்
குருட்டு
செவிட்டு
ஊமைக்காதலியாய்
நான் இருப்பேன்
என
நினையாதே
!”
“ என் மருமகளுக்கு காதலைப் பற்றியும் வாழ்க்கையைப்
பற்றியும் நிறைய தெளிவு இருக்கு … கவலை இல்லை …” என கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள்
மைதிலி .
சு.பொ.அகத்தியலிங்கம்.
28/11/2022.
0 comments :
Post a Comment