தகர்க்கப்படும் கிருஷ்ண பிம்பம்.

Posted by அகத்தீ Labels:


தகர்க்கப்படும் கிருஷ்ண பிம்பம்

சு.பொ.அகத்தியலிங்கம்
காபாரதமும் இராமாயணமும் வற்றாத இலக்கியச் சுரங்கங்கள் . அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாய் புதியபுதிய கற்பனைகளை ஊற்றெடுக்கச் செய்யும் . அதன் தெய்வீகத்தைக் கட்டுடைத்துப் பார்த்தால்  இந்திய சமூகத்தில் புரையோடிப்போன வர்ணாஸ்ரமும் , ஆணாதிக்கமும் தன் கோரப்பற்களை நிணமொழுக காட்டி நிற்கும் . இப்படி அதிரடியாய் தீர்ப்பெழுதும் போது ஏற்பது அவ்வளவு சுலபமல்ல . பக்தியில் தோய்ந்த பெரும்பான்மை மக்கள் காதுகொடுத்து இவ்வுண்மையை கேட்கவும் மறுப்பர் . கதை சொல்லி கதை கேட்டு வளர்ந்த மரபின் சொந்தக்காரர்களன்றோ நாம் . எந்தக் கதைகள் வழி நமக்கு மயக்க மருந்து ஊட்டப்பட்டதோ அதே கதைகளின் வழி மயக்கத்தைத் தெளியவைப்பது உன்னதமான செயலன்றோ !அதனைத்தான் இந்நாவலில் ப.ஜீவகாருண்யன் செய்துள்ளார்.

 “ கிருஷ்ணன் என்றொரு மானுடன் ” என்பது பெயர் மட்டுமல்ல இந்நாவலின் மைய இழையே அதுதான் .மக்களிடம் ஆழமாக வேருண்றியுள்ள கிருஷ்ணன் என்றொரு கடவுள் / அவதாரக் கற்பிதத்தை - பிம்பத்தை உடைத்தெறிவதுடன் கிருஷ்ணன் இறந்துவிட்டான் என அறிவிக்க மகா துணிச்சல் வேண்டும் . போகிற போக்கில் சொல்லிவிட முடியாது . வலுவான செய்திகள் நிகழ்வுகளூடே வாசிப்பவன் நெஞ்சில் பதிய வைக்கவேண்டும். ஏற்கச்செய்ய வேண்டும் . இதில் ஜீவகாருண்யன் வெற்றி பெற்றுள்ளார் .

 “ அல்லும் பகலும் அனவரத நேரமும் ஊண் , உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் கடலிலும் நிலத்திலும் ஒயாமல் உழைத்துத் துவாரகைச் செல்வம் கொழிக்கச் செய்யும் யாதவர்கள் ஓய்வு சாய்வாக கொஞ்சம் மதுவோடு உறவாடுவதில் தவறொன்றுமில்லை என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுநெறியாக இருந்த “ மது நெறி ” இன்று ” மது வெறி ” யாக மாறி ,ஒப்பற்ற இனத்தின் பேரழிவுக்கு மூலகாரணமாகிவிட்டது ” என முதல் அத்தியாயத்தில் கடல்விழா கொண்டாடி துவாரகை மக்கள் மது போதையில் அழிந்தொழிந்த கதையை விவரிக்கிறபோது நெஞ்சில் தமிழ் சமூகமும் டாஸ்மாக்கும் ஏனோ வந்து தொலைக்கிறது .

விழாவில் கூடிய அத்தனை பேரையும் விழுங்கிய மது அரக்கனுக்கு தப்பிய தாருக்கனை அர்ச்சுனனுக்கு சேதி சொல்ல அனுப்பிவிட்டு - போதை முற்றும் தெளியாத - எண்பத்தி நான்கு வயதைத் தாண்டிய - முதுமையின் தள்ளாட்டம் மிகுந்த கிருஷ்ணன் தனிமையில் -  “ ..உயிர்களிடத்தில் பாகுபாடில்லாத ஒற்றை நிச்சயமான இறப்பை எதிர் நோக்கி காத்திருப்பதுதான் ” என்ற பிரபஞ்ச உண்மை உறைக்கும் வேளையில் - கிருஷ்ணர் நெஞ்சில் பின்னோக்கிக் குமிழியிடுகிறது கடந்தகால வாழ்க்கைக்கதை .நினைவலைகளில் 1] பிறவிப் பேறு , 2] சூது - தூது - வனம் , 3] குருதிக்களம் 4] சகோதர அம்பு 5] யாத்திரை எனும் ஐந்து பாகமாக நாவல் நீள்கிறது . நினைவலைகள் ஒடுங்கும் நேரம் ஜரா மறைந்திருந்து தாக்கிய விஷ அம்புக்கு பலியாகிறான். ஆம் , கிருஷ்ணன் இறந்தே விட்டான் - அதுவும் எண்பத்தி நாலே வயதில் - நூறாண்டு கூட வாழவில்லை . அடடா! அதற்குள் எத்தனை எத்தனை புதிர் நிறைந்த நிகழ்வுகள் .

ருக்மணி ,ஜம்பாவதி , சத்தியபாமா , சத்தியவதி , காளிந்தி , மித்ரவிந்தை ,நீலாவதி , லட்சுமணை , என எட்டு மனைவிகளை மணந்த கதைமட்டுமா - ஆறு வயது மூத்த ராதையோடும் சைரந்திராவோடும் இளமையில் காமம் சுகித்தது- அது போக ;  “ சரி , எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் ! நரகனால் பாதிக்கப்பட்டு நீங்கள் ஏற்றுக்கொண்டது போக மிச்சமாயிருக்கும் இந்த இருபத்தி நான்கு பெண்களும் என் மனதறிந்த உண்மையில் எனக்குரியவர்கள் ” என அறிவித்து மனைவியாய் ஏற்று அனுபவித்த இருபத்தி நாலு பெண்களும் என கிருஷ்ணனின் பட்டியல் நீளும்.முகமது நபிக்கு 13 மனைவிகள், அதில் யுத்தத்தால் விதவையாக்கப்பட்டவர்களும் உண்டு . இதனை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கும் இந்துத்துவ சக்திகள் கிருஷ்ணலீலை எனில் கொண்டாடுவார்கள். மதங்கள் அனைத்தும் சாராம்சத்தில் ஒன்று என்பதை சொல்லவும் வேண்டுமோ ! மது ,மாது , மாமிசம் அனைத்திலும் கிருஷ்ணன் கொண்ட மோகமும் வெறியும் இந்நாவல் நெடுக நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பேரன்களுக்காக  அவர்கள் விரும்பும் பெண்களுக்காக கிருஷ்ணன் நடத்திய யுத்தங்கள் அதற்கான நியாயங்கள் இன்றைய அரசியலோடு பொருத்திப் பார்க்கும் போது நாம் நேற்றைய ஆணாதிக்கச் சமூகத்திலிருந்து விடுபடாமலிருப்பதை உணர்த்துகிறது . திரெளபதி ஐவரின் மனைவியாக வாழ்ந்த கதை மட்டுமா ? சப்தரிஷிகளை மணந்த ஐடிலா, பிரிசேட்டகமுனி சகோதரர்கள் பதின்மரை மணந்த ரிஷிபத்தினி , பலபேரை மணந்த வார்ஷி எல்லாம் எதன் குறியீடு ? ஒருவனுக்கு ஒருத்தி வழக்கதிற்கு வரத்துவங்கினும் கட்டற்ற பாலுறவு சமூகத்திலிருந்து முற்றிலும் விடுபடா காலகட்டத்தின் விளை பொருளே பாரதம் . இந்நூல் அதனையும் கதைப் போக்கில் நிறுவுகிறது.

கிருஷ்ணன் பிறந்த கதை , கம்சனை வதைத்த கதை ,ஜராசந்தாவை போரில் தோற்கடித்தாலும் அவன் வலிமைக்கு பயந்து மதுராவை காலி செய்துவிட்டு யாதவ குலமே துவாராகவுக்கு பெயர்ந்த்து - துவாராக கட்டி எழுப்பப்பட்டது ; என விரிந்த கதையில் கிருஷ்ணன் பலராமன் இருவரும் ஆற்றிய பங்குபாத்திரம் என பலவற்றை பேசும் முதல் அத்தியாயம் பாகவதத்தின் மறுவாசிப்பு . கிருஷ்ணனை அவதாரமாக அணுகாமல் ஆசா பாசம் பலம் பல்வீனம் அனைத்தும் உள்ள மனிதனாக நிறுவுகிறார் ஜீவகாருண்யன்.

சூது - வாது - வனம் என்கிற இரண்டாவது அத்தியாயமும் , குருதிக்களம் என்கிற மூன்றாவது அத்தியாயமும் மகாபாரத்த்தின் மறுவாசிப்பு அதுவும் கிருஷ்ணன் என்ற மனிதனின் நினைவோடையில் கதை நகர்த்தப்படுகிறது .சாம்பன் சிறைப்பட்ட கதை 144 ஆம் பக்கத்திலும் 162 ஆம் பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது. கட்டுரை எனில் கூறியது கூறல் தேவைப்படக்கூடும் ; ஆனால் புதினத்தில் தேவையா ? இப்படி சில வழுவுகள் இந்நூலில் உண்டு .

நியோகம் எனப்படும் கர்ப்பதானத்தில் பிறந்தவர்களே பாண்டவர்கள் ; அவர்கள் பாண்டுவின் பிள்ளைகள் அல்ல ; குந்தியும் அவள் இளையவளும் காட்டுவாசிகளிடம் கட்டற்று உறவு கொண்டு பிறந்தவர்கள் எனவே சொத்தில் பங்கேது என்பதுதான் கெளரவர்களின் வாதம் ; இது வாரிசுரிமைப் போரே தர்ம-அதர்ம யுத்தம் அல்ல . குந்தி மந்திரத்தால் பிள்ளை பெறவில்லை ; மானிடரால்தான் பெற்றாள் . கொண்டவன் ஆண்மையற்றவனெனில் அவள் வேற்றிடம் நாடலில் பிழை என்ன ? இக்கேள்வி நாவலில் வலுவாக பதிவாகவில்லை என்பது என் கருத்து.அது போல் கர்ணனின் வீரம் அர்ச்சுனனின் வீரத்தைவிட பன்மடங்கு ஓங்கி உயர்ந்தது இது போர்க்களத்தில் காட்சி படுத்தப் பட்டிருப்பினும் அர்ச்சுனன் வெற்றிக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சிவலை இன்னும் வலுவாய் சொல்லப்பட்டிருக்க வேண்டுமோ !

கடோத்கஜன் சாவை அவமரியாதை செய்யும் கிருஷ்ணன் தன் தங்கை மகன் அபிமன்யு மரணத்தில் இடிந்து போவது ரத்த பாசம் மட்டுமல்ல ; வர்ணாஸ்ரமத்தின் கோரமுகமும் கூட. அது நன்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 “ஆன்மா நிலையானது . அழிவற்றது . அது உடலாகிய நைந்த ஆடையை - பழைய ஆடையைக் களைந்து விட்டு புதிய ஆடையை உடுத்திக்கொண்டு எந்நாளும் உயிர்ப்புடன் இருக்கக் கூடியது என்று போர் தொடங்கிய நாளில் போரிடத் தயங்கிய அர்ச்சுனனிடம் நான் செய்த உபதேசம் அபிமன்யு இறப்பு விஷயத்தில் பொருந்திவராதது குறித்து நான் வெட்கப்பட்டேன். ஆன்மா என்று ஒன்று உண்டா ? ஆன்மா நிலையானதுதான் என்றால் அபிமன்யுவின் ஆன்மா அடுத்து எந்த ஆடையை உடுத்திக்கொள்ளும் ? என்று என் மனம் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை ” என கிருஷ்ணனை புலம்பவைத்து அவன் கீதையின் பொய்மையை தோலுரித்துவிட்டார் ஜீவகாருண்யன். மேலும் கீதையின் அடிநாதம் வர்ணாஸ்ரம்மே என்பதை கதை மாந்தர்கள் வழி சாட்சிப்படுத்திவிட்டார். கடைசியில் யுதிராஷ்டிர் பட்டமேற்புவிழாவில் சார்வாகன் எழுப்பிய கேள்விகள் மூலமும் சார்வாகன் கொல்லப்பட்டதின் மூலமும் பிராமணியத்தின் நிஜமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.பிராமணர்கள் மது மாமிசப் பிரியர்களே என்பதை பட்டவர்த்தனமாய் போட்டுடைக்கிறார். போரின் கொடுமையும் போரில் விளையும் வெற்றியின் வெறுமையும் இநாவலில் மனதை உருக்கும் விதத்தில் பதிவாகியுள்ளது.

மகாபாரதம் என்பது ஏதோ பாரத தேசம் முழுமைக்கானது என்ற கட்டுடைத்து சில இனக்குழுக்களிடையேயான யுத்தம் - ஹிரண்ய நதிக்கரையில் நடந்த யுத்தம் என்கிற அளவிலேயே நாவல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிக முக்கியம் பெரும்பாலோர் பாகவதத்தையும் மகாபாரதத்தையும் முழுமையாப் படித்திருக்க வாய்ப்பில்லை .இந்நிலையில் மூலமும் இந்நாவலும் வேறுபடும் இடம் எதுவென்பதை சாதாரண வாசகன் ஊகித்துணர்வதில் சிரமம் உண்டு.
இராமாயணமாகட்டும் மகாபாரதமாகட்டும் சில இனக்குழுக்களிடையே மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும் மாட்டுக்காகவும் நடந்த மோதல்களின்- கர்ணபரம்பரைக் கதைகளின் தொகுப்பாய் ; ஊதி ஊதி பெருக்கப்பட்டதின் வடிவம்தான் . ஒவ்வொரு காலத்திலும் அன்றைய தேவைக்கு ஏற்ப கருத்தூட்டம் செய்யப்பட்டுக்கொண்டே வந்ததை புரிந்து கொண்டால் ; இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப மறுவாசிப்பின் தேவையை உணர முடியும்.

குறிஞ்சி வேலனின் அணிந்துரை முக்கியமானது . பல தகவல்களைத் தருகிறது . ம்ருத்தியுஞ்செய , யுகாந்தா , யயாதி, முதலிய மராட்டிய நாவல்கள் - யாக்ஞசேனி எனும் ஒரிய நாவல் - வங்கமொழி நாவல்கள் = இனி ஞான் உறங்ஙட்டே , ரண்டாமூழம் முதலிய மலையாள நாவல் - மேலும் பைரப்பாவின் பருவம் - தமிழில் எஸ். ராமகிருஷ்ணனின் உப்பாண்டவம் என பெரும் மறுவாசிப்பு நாவலகளை நினைவு கூரும் குறிஞ்சி வேலன் அவற்றிர்க்கு ஈடாக - அதற்கும் மேலாக ஜீவகாருண்யன் இந்நாவலில் வெற்றி பெற்றுள்ளதாகக் கருதுகிறார் . சுப்பாராவ் ,அருணன்,ராஜம் கிருஷ்ணன் உட்பட பலரும் இதிகாசக் கதையின் பல்வேறு கூறுகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தியுள்ளனர் . திராவிட இயக்கத்தினர் எதிர் நிலையிலிருந்து புராணங்களை அணுகியுள்ளனர் . இந்த இதிகாசங்களை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பக்தி பூர்வமாய் அணுகுவதும் ; முற்றாய் எதிர் நிலையிலிருந்து அணுகுவதும் சாராம்சத்தில் ஒரே விளைவுதான். இலகியச் செறிவும் பண்டைய வாழ்க்கைக்கூறும் ஊடுபாவாய் உள்ள இவற்றைக் கட்டுடைத்து மறுவாசிப்பு செய்வது மிகவும் தேவையானது . அவதார தெய்வீக மாயமைகளை தகர்க்கவும் பிராமணியம்,வர்ணாஸ்ரமம் , பெண்ணடிமைத்தனம் இவற்றை அம்பலப்படுத்தவும் மறுவாசிப்புகள் தொடர வேண்டியது அவசியம் . இந்நாவல் அத்தகு பணியில் தனக்குரிய சிறப்பான பங்கை ஆற்றியுள்ளது . அவதார மாய்யைத் தகர்க்கும் இந்நாவலை ஒவ்வொருவரும் வாசிப்பது அவசியம்.

கிருஷ்ணன் என்றொரு மானுடன் ,
ஆசிரியர் : .ஜீவகாருண்யன்,
வெளியீடு : சீதை பதிப்பகம் ,
10/14 ,தோப்பு வேங்கடாசலம் தெரு ,
சென்னை 600005.
பக் : 392 ,விலை ரூ.200 .

நன்றி : புதிய புத்தகம் பேசுது - செப் 2013

 

0 comments :

Post a Comment