சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 18

Posted by அகத்தீ Labels:


சும்மா கிடந்த சொல்லை எடுத்து-18


 வரம்பு மீறி வலுத்த கைகள்


சு.பொ.அகத்தியலிங்கம்


“தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே /அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே /அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால் /உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணை யிருப்பேன்” இந்தப்பாடல் நெஞ்சை வருடும் . “ஆலய மணி” படத்தில் இடம்பெற்றது . கண்ணதாசன் எழுதியது. பலரை தாலாட்டித் தூங்கவைத்தது இந்தப் பாடல் .

“காலமிது காலமிது… கண்ணுறங்கு மகளே… கால மிதைத் தவற விட்டால்… தூக்கமில்லை மகளே… தூக்க மில்லை மகளே…” என “சித்தி” திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணதாசன் எழுதிய அர்த்தம் செறிந்த வரிகள் இன்றும் பசுமையாய் நெஞ்சிலாடுகிறது .“கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே” எனத் தொடங்கும் வைரமுத்து வின் பாடல் “தண்ணீர் தண்ணீர்” படத்தில் நம்மை அழவைக்கும் அதில் , “.. ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகிவந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை ..” என்ற வரிகள் நாட்டுப்புற தாலாட்டின் அடியொற்றியதெனினும் இதயத்தை ஊடுருவி நிற்பவை .

இப்படிக் காலம் நெடுகிலும் தூக்கம் என்பதை நிம்மதியின் அம்சமாகவே கண்டபோது அதிரடியாக தூங்காதே எனச் சொல்லுகிற துணிச்சல் பட்டுக் கோட்டைக்கே உரிய போர்க்குணம் மிக்க விழிப்புணர்வின் வெளிப்பாடு. பட்டுக் கோட்டையும் பதிபக்தி திரைப்படத்தில் ஒரு தாலாட்டுப்பாட்டு எழுதியிருப்பினும் அது பெருமளவு பிரபலமாகவில்லை . “ தூங்காதே..” என்ற வார்த்தையே அவருக்குத் தனி அடையாளத்தைத் தந்தது .

ஆம் ,நாடோடி மன்னன் (1958) திரைப்படத்தில் பாடிய பாடல் இன்றும் நம் தூக்கத்தை விரட்டி விழிப்புணர்வை விதைத்துக் கொண்டிருக்கிறது . “ தூங்காதே தம்பி / தூங்காதே - நீயும் / சோம்பேறி என்ற பெயர் வாங்காதே” இந்தப் பல்ல வியைத் தொடர்ந்து அடுத்தடுத்த சரணங்கள் பட்டுக்கோட்டையின் வீரியமான சமூகப்பார்வைக்கு சாட்சியாகும் .“ நீ தாங்கிய உடையும் / ஆயுதமும் - பல / சரித்திரக்கதை சொல்லும் / சிறைக்கதவும் / சக்தி இருந்தால் / உன்னைக் கண்டு சிரிக்கும் / சத்திரந்தான் உனக்கு / இடம் கொடுக்கும் ” திமுகவில் எம்ஜிஆர் இருந்த காலம் . அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை உரக்கப்பேசிய காலம் . பட்டுக்கோட்டையோ திராவிடநாடு கோரிக்கைக்கு எதிரானவர் . இச்சூழலில் தமிழனின் பழம்பெருமை யையும் பாரம்பரியத்தையும் நினைவூட்டிட வேண்டும் ; பிரிவினையை ஆதரிக்கவும் கூடாது . மிகச்சாதுரியமாக இவ்வரிகளில் அதனை சாதித்துள்ளார் .

அடுத்த சரணத்தில் பகுத்தறிவும் தொலைநோக்கும் பின்னிப்பிணைந்திருக்கும். “ நல்ல பொழுதையெல்லாம் / தூங்கிக் கெடுத்தவர்கள் / நாட்டைக் கெடுத்ததுடன் / தானுங் கெட்டார் - சிலர் / அல்லும் பகலும் / தெருக்கல்லா யிருந்துவிட்டு / அதிர்ஷ்டம் இல்லையென்று / அலட்டிக் கொண்டார் / விழித்துக் கொண்டோ ரெல்லாம் / பிழைத்துக் கொண்டார் - உன்போல் / குறட்டை விட்டோரெல்லாம் / கோட்டைவிட்டார் ” திராவிட இயக்கத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் அரசியல் பிரச்சாரத்தையும் மிகச்சரியாக இணைத்தவர் அவர்களின் பிரிவினை வாசம் தவறியும் வராமல் பார்த்துக் கொண்டார் .

இதனைத் தொடர்ந்து எங்கெங்கு தூங்கினால் என்னென்ன நட்டம் எனப்பாடுவார் , “ போர்ப்படையினில் தூங்கியவன் / வெற்றியிழந்தான் - உயர் / பள்ளியில் தூங்கியவன் / கல்வி இழந்தான் / கடைதனில் தூங்கியவன் முதலிழந் தான் - கொண்ட / கடமையில் தூங்கியவன் / புகழ் இழந்தான் ..” எனப் பெரியபட்டிய லிட்டவர் முத்தாய்ப்பாகத் தன் சமூக கோபத்தை வெளிப்படுத்துவார் “ இன்னும் / பொறுப்புள்ள மனிதரின் / தூக்கத்தினால் - பல / பொன்னான வேலையெல்லாம் / தூங்குதப்பா” ஆமாம் . ஆமாம் . இன்றும் இதுவே நிஜமாக உள்ளது .

உத்தம புத்திரன் திரைப்படத்தில் “மூளை நெறஞ்சவங்க / காலம் தெரிஞ் சவங்க மூத்தவங்க படிச்சவங்க / வாழுகின்ற நாடு” ஒருவன் குரலாய்ச் சொன்னார். ஆனால் என்ன நடக்குது தெரியுமா எனக் கேள்வி கேட்காமல் அடுத்தவன் மூலம் சொல்லுவார் ,

 “ மூச்சுத் திணறுதுங்க / முழியும் பிதுங்குதுங்க / பார்த்துக்குங்க கேட்டுக்குங்க / ஜனங்கள் படும்பாடு ! - இது” இதன் விளைவாய் நெலமை நெருக்குவதை “நீதி தவிப்பதை, கொடுமை மேல் கொடுமை பெருகுவதை, பொறுமை சோதிப்பதை - பாதை மாறி நடப்பதை பழம்பெருமையை , பழக்கவழக்கங்களைக் குலைப்பதை எல்லாம் சுட்டிக்காட்டி விட்டு ஒரு குட்டு வைப்பார் , “ என்ன இருந்தாலும் மனுஷன் / இப்படி ஆடக்கூடா தென ” ஒருவன் தொடங்க ; “ எதுக்கும் ஒரு முடிவிருக்கு அதிகநாள் ஆடாது ” என அடுத்தவன் இடிக்க : “ ஏழைகளை அடிச்சுப் பறிக்கும் / எண்ணம் உடம்புக் காகாது” என முன்னவன் மீண்டும் சொடுக்க ; “ காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா / கவனிக்காமெப் போகாது” என மற்றவன் அடக்க தொடரும் .

இந்த நிலைமை ஏன் என்ற கேள்விக்கு விடை தெறித்தது.“ அன்பு வளர்ந்த கோட்டைக்குள்ளே / அகந்தை புகுந்து கலைக்குது ” அதற்கு என்ன காரணமெனில் “ வரம்பு மீறி வலுத்த கைகள் / மக்கள் கழுத்தை நெரிக்குது / விருப்பம் போல நரிகள் சேர்ந்து / வேட்டையாடிக் குவிக்குது / வெறிநாய்க்கு உரிமைவந்து வீட்டுக் காரனைக் கடிக்குது ..” இந்த வரிகள் 2014 தேர்தல் முடிவைத் தொடர்ந்து ஆட்சிபீட மேறிய மதவெறி சக்திகளை விமர்சிப்பதுபோல் சவுக்காய் விழுகிறது . இது 1958 ல் எழுதியது. ஆனால் இன்றைக்கும் நூறு விழுக்காடு பொருந்துகிறதே அதுதான் பட்டுக்கோட்டையின் அரசியல் நோக்கின் தனிமுத்திரை.

பட்டுக்கோட்டை மக்களை நேசித்தவன் ஆயினும் மக்களின் அறியாமையைப் பகடி செய்தவன் ; அவர்களின் செயலின்மையை வெறுத்தவன் ; வாய்ப்புக் கிடைத்தபோது குத்திக் காட்டவும் தவறவில்லை ; உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் நம்பும் மனிதர்களை கண்டு நொந்தவனும் கூட .

“ பாண்டித்தேவன் ” ( 1959) திரைப்படத்தில் ஒரு பாடல் கடுமையாகச் சாடும். “ சொல்லுறதைச் சொல்லிபுட்டேன் / செய்யுறதைச் செஞ்சிடுங்க / நல்லதுன்னா கேட்டுக்குங்க / கெட்டதுன்னா விட்டுடுங்க” இப்படி ஏன் சொல்லுகிறார் ; அதற்கும் அவரே விளக்கம் சொன்னார் , “ முன்னமே வந்தவங்க / என்னென்னமோ சொன் னாங்க / மூளையில ஏறும்னு / முயற்சியும் செஞ்சாங்க / ஒண்ணுமே நடக்காம / உள்ளம் நொந்து செத்தாங்க / என்னாலும் ஆகாதுன்னு / எனக்கும் தெரியுமுங்க” சமூகயதார்த்தம் இன்றைக்கும் அப்படித்தானே உள்ளது .

இதைப் பார்க்கும் போது ஆத்திரம் வரத்தானே செய்யும் . பட்டுக்கோட்டைக்கும் வந்தது . “முடியிருந்தும் மொட்டைகளாய் / மூச்சிருந்தும் கட்டைகளாய் / விழியிருந்தும் பொட்டைகளாய் / விழுந்து கிடக்கப் போறீங்களா ? முறையைத் தெரிஞ்சு நடந்து / பழைய நினைப்பை மறந்து / உலகம் போற பாதையிலே / உள்ளம் தெளிஞ்சு வாரீங்களா ? ” இப்படிக் கேட்டவர் என்ன நடக்கும் எனக் காறி உமிழ்வதுபோல் சொன்னார், “சித்தர்களும் யோகிகளும் / சிந்தனையில் ஞானிகளும் / புத்தரோடு ஏசுவும் / உத்தமர் காந்தியும் / எத்தனையோ உண்மைகளை / எழுதி எழுதி வச்சாங்க / எல்லாந்தான் படிச்சீங்க / என்னபண்ணி கிழிச்சீங்க” உரிமையோடும் உறுத்தும் படியும் மக்களை விமர்சித்தார் . அதுவும் விழித்தெழ வேண்டும் என்கிற தணியா பேரார்வத்தால்தான் .

போராட எழவேண்டும் என்பதை அறைகூவலாக சொல்ல வாய்ப்பு கிடைத்த போது சொல்லவும் தவறவில்லை ; திரைப்படச் சூழல் எதுவானா லும் நவரசங்களிலும் சமூகவிடியலுக்காக சங்கு முழக்கியவரே பட்டுக்கோட்டை.

“அழகூட்டப்பட்ட வெற்றுச் சொற்களின் மீது முளைக்கும் குறுவாள்கள்” எனும் கவிதையில் இரா. தெ . முத்து எழுதுகிறார் ;
“ அம்மி நகர அடி
 உலை கொதிக்க
மூட்டுக நெருப்பு
தடம் பதிய நட
மிதிப்போரை மிதி
 மறுப்போரை மறு
விலையில்லா பொருட்களுக்கோ
 அழகூட்டப்பட்ட வெற்றுச் சொற்களுக்கோ
 சலனப்படுவதில்லை நாம்
 வேண்டுதலை மன்றாட்டு
கோரிக்கை மனு மீது
 சிலந்திகள் படரட்டும்
நமது மொழியில்
 எழுத்தில் சொல்லாடலில்
 ஒளிரட்டும் தீ .....”

இந்தத் தீயின் வெப்பம் பட்டுக்கோட்டையின் பாடல்களில் இயல்பாய் வெடித் ததை அடுத்து பார்ப்போம் .

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 1-8-2014

0 comments :

Post a Comment