மொய்:வட்டியில்லாக் கடனா?

Posted by அகத்தீ Labels:


 மொய்:வட்டியில்லாக் கடனா?
அர்த்தமிழக்கும் திருமண வரவேற்புகள்

சு.பொ.அகத்தியலிங்கம்


பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான தனி மனித வாழ்வில்
பெரும்பாலானோருக்குத் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாகிறது. சமூக வாழ்வில்திரு மணத்தின் முன் உள்ள சவால்கள் அநேகம். சாதி, கவுரவம், பணம், கர்வம்,மதம், மமதை என் னென்னவோ, தடைகள். விரும்பியபடி திருமணம் கைகூடுவதே பெரும்பாக்கியம். அந்த மகிழ்ச் சிக்கு ஈடேதும் கிடையாது. உற்றார், உறவினர்,நண்பர்கள் புடை சூழ - அவர்களின் வாழ்த் தொலி, கிண்டல், சிரிப்பு, ஆரவாரம்இவற்றுக்கி டையே கைத்தலம் பற்றக் கனாக் காணா தார் யார்?

முன்பெல்லாம் ஏழு நாட்களுக்குத் திருணச் சடங்குகள் தொடர்ந்ததாய்ப்
பெரியவர்கள் சொல் லிக் கேட்டிருக்கிறோம். அது படிப்படியே சுருங்கி இரண்டு
நாட்களாகி, இப்போது ஒரு நாளாக மாறிவிட்டது. நல்லதுதான். தேவையற்ற பணச்செலவு குறைக்கப்பட்டிருக்கிறது. சம்பந் திச் சண்டை, பங்காளிச் சண்டை எனஇரவு முழுவதும் வாய்ச்சண்டை நடத்துவது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.அதுவும் நல்லதே.

சென்னை போன்ற நகரங்களில் முதல்நாள் திருமண வரவேற்பு என்றும், மறுநாள்காலை திருமணம் என்றும் புதிய வழக்கம் யாருடைய உத்தரவும் உபதேசமும்இல்லாமல் அமலுக்கு வந்துவிட்டது. சாதிரம் ஏற்கிறதோ இல் லையோ, சமுதாயம்அதை ஏற்றுக் கொண்டது. இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் அவரவர் வந்துபோகவசதி கருதி இப்பழக்கம் வந்திருக் கிறது. திருமண மண்டபங்களின் அதீத வாடகையும் இவ்வாறு தீர்மானிக்க நிர்ப்பந்திருக்கிறது. எப்படியோ ஏற்பட்டுள்ளமாற்றம் நல்லதே. சடங்குகளுக்குள் மனித குலம் சிறைப்பட முடியாது.தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப புதிய பழக்கவழக்கங்களை வரிந்து கொள்வது அவசியமே.

அதே சமயம் திருமணங்களுக்கு வருகை தருவது வெறும் சடங்காகலாமா? அப்படி வருவதும், மொய் அல்லது அன்பளிப்பை வட்டி யில்லாக் கடன் எனக் கருதுவதும்நெஞ்சில் உறுத்தத்தான் செய்கிறது.

பொதுவாக இப்போது சென்னையில் மாலை நேர திருமண வரவேற்பு எப்படி நடக்கிறதுஎன்று பார்த்தால் அதன் போலித்தனமும் அதனை நிர்ப்பந்திக்கும் வாழ்க்கைச்சூழலும் நிஜத்தைத் தரிசிக்க வைக்கும்.

அலுவலக நண்பர்களும் பெரும்பாலான உறவினர்களும் மாலை 7 மணிக்குள் மண்டபத்துக்கு வந்துவிடுகின்றனர். பியூட்டி பார்லருக்குப் போன மணப்பெண்ணும்மணமகனும் மண்ட பத்தை அடைய எட்டு அல்லது எட்டரை மணி யாகி விடுகிறது.அலுவலகத்திலிருந்து வந்த பெண்கள் பதைக்கின்றனர். சென்னை போன்ற நகரில் பஸ் பிடித்து வீடு போய்ச் சேரும் கஷ்டம் பட்டால்தான் புரியும்.எட்டுமணிக்குள் புறப்பட் டால்தான் 9.30 மணிக்காவது போய்ச் சேர முடியும்.குழந்தைகள் பசியோடு இருப்பார்கள். சமையல் வேலை காத்திருக்கும். இரவு11.30 மணிக்குள்ளாவது தூங்கினால்தான் மறுநாள் காலை 4.30 மணிக்கு மனிதஇயந்திரமாய் ஓட் டத்தைத் தொடங்க முடியும். பெண்கள் என்ன செய்வார்கள்?அவர்கள் பதைப்பை வார்த்தை களும் கண்களும் காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த மாதிரி நேரங்களில் “ டிரபிள் ஷூட்டர் கள் ”- அதாவது பிரச்சனைக்கு
ரெடிமேடு தீர்வு வைத்திருப்பவர்கள் - பிரசன்னமாவார்கள். யாரு “ ப்ரீபெய்டு”,
யாரு போட்பெய்டு என தமாஷாகப் பேசுவதுபோல் வழிகாட்டுவார்கள்.

”ப்ரீபெய்டு” எனில் மொய் எழுதிய பின்னரே சாப்பிடப் போவது; போஸ்ட் பெய்டுஎனில் சாப்பிட்டு விட்டு மொய் எழுதுவது! ஒன்றிரண்டு நெருக்கமான
நண்பர்களைத் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் போட் பெய்டுக்குத் தாவிவிடு
வார்கள். சாப்பிட்டு முடித்து விட்டு வந்தாலும் பெரும்பாலும் பெண்ணும்
மாப்பிளையும் வந் திருக்க மாட்டார்கள். அலங்காரம் முடிந்திருக் காது.
ஒவ்வொருவராக மெல்ல நழுவுவார்கள். அவர்கள் கொண்டு வந்த மொய் கவர், கிஃப்ட்பாக்கெட் ஆகியவை அடுத்தவர் கைக்குப் போகும். பெண்ணும் மாப்பிளையும் மேடையேறும் போது நான்கைந்து பேர் வந்து மொத்த கவர் களையும் கிஃப்ட்பாக்ட்டுகளையும் கொடுப் பதும்; பெண்ணும் மாப்பிள்ளையும் தாமத மானதற் காகஅசடு வழிவதும் இப்போது பெரும்பாலான திருமண வரவேற்புகளில் காட்சியாகிறது.

உறவுகள் நட்புகள் சந்திக்க, உரையாட, கருத்துகள் பரிமாற, இழந்த
சொந்தங்களைப் புதுப் பிக்க என பயன்பட்ட திருமண வரவேற்பு அதன்
உள்ளடக்கத்தை மெல்ல மெல்ல இழந்து வருகின் றதோ? காதைக் கிழிக்கும் இசைநிகழ்ச்சிகள் கொஞ்ச நஞ்ச உரையாடலையும் முடக்கி விடுகிறதே!

இப்படியே போனால் அடுத்து என்ன செய்ய லாம்? மண்டப வாசலில் மணமகன் மணமகள்என இரண்டு பெரிய பெட்டிகள் வைத்துவிடலாம். வரு கிறவர்கள் மொய்ப்பணம்கவரையும் பரிசுப் பொருள் பார்சலையும் அதில் போட்டுவிட்டு நேராகஉணவுக்கூடம் சென்று சாப்பிட்டுவிட்டுச் சென்று விடலாம். மணமக்கள் தங்கள்வரவேற்புப் படங் களை உற்றார் உறவினரின் கைப்பேசிகளுக்கும், மின்னஞ்சல்முகவரிகளுக்கும் அனுப்பி விடலாம்! காலப்போக்கில் இப்படியும் ஆகலாம்தானே!

அன்பின் குதூகலம் மிக்க திருமண நிகழ்வு வெறும் மொய், பரிசு, சாப்பாடு என
சுருங்குவது உங் கள் மனதை வருத்தவில்லையா? ஏன் இந்த இயந் திரத்தனமானவரவேற்பு?

அதிலும் மொய் விவகாரம் ஒரு பெரிய சமூக நோயாகிவிட்டது. தனக்கு யார் யார்எவ்வளவு மொய் செய்தார்கள், என்னென்ன பரிசு தந்தார்கள் என ஒரு
நோட்புக்கில் எழுதி வைப்பதும்; அவர்கள் வீட்டு விசேஷத்தின்போது அதை அதேமதிப்பில் திருப்பிச் செலுத்துவதும்; கேட்டால் மொய் என்பதே வட்டியில்லாக்கடன்தான் என்று வியாக்கியானம் செய்வது காலங்காலமாக நடக்கிறது. சிலசமூகத்த வரிடையே நான் உனக்கு அவ்வளவு செய்தேன், நீ இவ்வளவுதானேசெய்கிறாய்,என சண்டை கூட நடக்கும். நகரங்களில் அந்தச் சண்டை குறைவு.ஆயினும் பரிசு என்பதை வட்டியில்லாக் கடன் என்பது சரியா? அவரவர் சக்திக்குஏற்ப அன்பை வெளிப்படுத்தும் விதமாகக் கொடுப்பதுதானே பரிசு? அதைவட்டியில்லாக் கடனாக மாற்றலாமா?

குசேலன் கொண்டு வந்த அவலை கிருஷ் ணன் விரும்பி ஏற்றதாகக் கதை சொல்லிமகிழ்கிற வர்கள், ஏழை தரும் எளிய பரிசு கண்டு எள்ளி நகை யாடாமல்இருக்கிறார்களா? இவங்க இதைத் தர லைன்னு யாரு அழுதா, என்று வார்த்தைகள்பொரியத் தானே செய்கிறது? எப்போது மாறப் போகிறோம்?

இறுதியாக ஒரு கொசுறுத் தகவல்: ஐரோப்பிய நாடுகளில் ஒரு பழக்கம் உள்ளதாம்.திருமண விருந்துக்கு அழைப்பு தரும்போது அதனுடன் விருத்துக் கூப்பனும்கொண்டு வருவார்களாம். அதற்குக் கட்டணம் உண்டு. காசு செலுத்தி கூப்ப னைப்பெற்றுக் கொள்ள வேண்டும்! மாலை வேளை தொடங்கும் திருமண விருந்து நள்ளிரவுவரை நீடிக்கும். மதுவும் இடம் பெறும் என்பதைச் சொல்ல வும் வேண்டுமோ?முதலிலேயே மணமக்கள் வந்துவிடுவார்களாம். வாசலில் நின்று அவர்கள்அனைவரையும் வரவேற்பார்களாம். திருமண விருந்தை தொடங்கி வைத்து ஒரு மணிநேரம் அங்கு வந்திருந்தவர்களோடு அளவளாவி விட்டு மணமக்கள் சென்றுவிடுவார்களாம். நள்ளிரவு வரை கேளிக்கையும் கும்மாளமும் தொடருமாம். இதுசரியா, தவறா? ஆனால் ஒன்று அவர்களிடம் ஒளிவு மறைவு இல்லை. இருண்மைத் தனம்
இல்லை. நேர்மை இருக்கிறது.

இங்கே தஞ்சையிலும் வேறு சில மாவட்டங் களிலும் அடித்தளத்து மக்கள்
திருமணத்தின் போது மணமக்கள் பொருளாதாரச் சுமையில் மூழ்கா திருக்க
நெல்லும் காய்கறிகளும் தேங்காயும், பிற பொருட்களும் மற்றவர்கள் தந்து
தோள் கொடுக்கும் நல்ல பண்பாடு முன்பு இருந்தது. இப்போது அங்கே
அவர்களிடையேயும் மெல்ல மெல்ல இந்தப் பண்பாடும், பரிசம் போடும் உயரிய பண்பாடும் கரைந்து காணாமல் போய் வரதட்சனையும் பிரா மணச் சடங்குகளும்ஆக்கிரமித்து விட்டனவே! என்ன சொல்ல? எப்படி நல்லதை மீட்டெடுக்கப்போகிறோம், அல்லது மேலும் உயரிய ஒன்றை எப்படிக் கட்டமைக்கப் போகிறோம்?

அன்பில் தோய்ந்த வாழ்த்துகளை விட மிகச் சிறந்த பரிசு எதுவாக இருக்க
முடியும்? ஆனால் எல்லா உறவுகளும் பணத்தால் தீர்மானிக்கப்படுகிற பண்டையசமூகத்தின் அன்பும் குதூகலமும் பொங்கி வழிந்த திருமணக் கொண்டாட்டம் பொய்யாய் பழங்கனவாய்ப் போய் விடுமோ? கூடாது. புதி தாய் நிகழ்ச்சி நிரலைஉருவாக்க வேண்டும்; அதில் அன்பும் தோழமையும் கைகோர்க்க வேண்டும்; பொருள்பொதிந்ததாய் அது அமைய வேண்டும். சாத் தியமா? முயன்றால் முடியாதது எது?சடங்குகளின் சிறை உடைபடட்டும்! சமத்துவம் கைகுலுக் கட்டும்!

சீர்திருத்தம் வேண்டி நிற்கும் சீர்திருத்தத் திரு மணங்கள் குறித்து
இப்போது விவாதிக்கத் துவங்க வேண்டாமா?

நன்ற் : வண்ணக்கதிர்[12-08-2012]

2 comments :

  1. SANKARAN

    கொடுக்கப்படும் பரிசுக்குப் பின்னால் இதயம் இருப்பதை உணர வேண்டும்.

  1. AIESES

    You have humorously pointed out deficiency in the Moiezhuthuvathu. You have correctly pointed out feelings of the people. We have to find out the correctway of expressing our wishes and love. You could have added one more suyggestion - presting good books. kng

Post a Comment