ஓய்வெனப்படுவது யாதெனில்...............

Posted by அகத்தீ

ஓய்வெனப்படுவது யாதெனில்...............

பிறந்தநாளின் அகத்தேடல் ---15 ஜூன் 1953

(2011 ஜூன் 15 ஆம் நாள் வாழ்த்துகள்)



இன்று(ஜூன் 15 ) எனக்கு ஐம்பத்தெட்டு வயது நிறைகிறது. வாழ்த்திய

நெஞ்சங்களுக்கு நன்றி. இதற்கு முன் எந்தப் பிறந்தநாளின்போதும் என்னைத்

தொற்றிக்கொள்ளாத பரபரப்பு இன்று ஏன்?



குடும்ப மரபின்படி என் முதல் பிறந்த நாளைக் கோயிலில் கொண்டாடி

இருக்கிறார்கள்.பின்னர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவும் பிறந்த

நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அது நடந்ததாம். இதுவும் செவிவழிச்

செய்தியே.நினைவு தெரிந்து நான் பிறந்த நாள் கொண்டாடியதில்லை.பத்தாம்

வகுப்பு படிக்கும் போது பிறந்த தேதியை ஆசிரியர் கேட்க சொல்லத்தெரியாமல்

அசடு வழிந்தது நினைவிருக்கிறது.தொழிற் பயிற்சி நிலையத்தில்(ஐ டி ஐ ) சேர

விண்ணப்பிக்கும்போது படிவத்தில் அந்தப் பகுதியை பூர்த்தி செய்ய எஸ் எஸ்

எல் சி சர்ட்டிபிகட்டை பார்த்துத்தான் எழுதினேன்.பிறந்த நாளுக்கு

அதற்குமேல் முக்கியத்துவம் அன்றநாட்களில் இருந்ததில்லை.



திருமணத்திற்குப் பிறகு வந்த முதல் பிறந்த நாளில் காலையில் மனைவி

வாழ்த்துச் சொன்னதும்- புது சட்டை வேட்டி பரிசளித்ததும்- வீட்டில்

பாயாசம் செய்ததும்- புது அனுபவமாக இருந்தது. மனைவியின் பிறந்த நாளை அன்று

மிகுந்த அக்கறையோடு கேட்டறிந்தேன்.அவள் பிறந்த நாளன்று வாழ்த்துச் சொல்ல

வேண்டும் என்ற ஞானோதயம் ஏற்பட்டது.முதல் நாள்வரை அந்த ஞாபகம் இருந்ததும்,

ஆனால் பிறந்த நாளன்று மறந்துவிட்டதும்-இரவில் அவள் நினைவுபடுத்தும்போது

சுருக்கென்று குத்தியதும்- பிறந்தநாள் கொண்டாடுவதைக் கிண்டலடித்து

சமாளித்ததும்- ஒவ்வொன்றாய் நெஞ்சில் நிழலாடுகிறது.ஏறத்தாழ கடந்த

இருபத்தொண்பது வருடங்களாக இதே கதைதான்..கடந்த சில வருடங்கள் முன்புவரை

என் பிறந்த நாளையும் யாராவது நினைவூட்டாமல் நான் உணர்ந்ததே இல்லை.



பிள்ளைகளின் பிறந்த நாளை ஞாபகம் வைத்திருந்து வாழ்த்துச் சொன்னதோ

பரிசளித்ததோ அபூர்வம். ஆயினும் மனைவி இதனை ஈடுகட்டிவிடுவதால் பிரச்சனை

ஏற்பட்டதில்லை.பேரனின் பிறந்த நாளே உணர்வுபூர்வமாக வாழ்த்தும் மரபை

என்னுள் ஊற்றெடுக்கச் செய்தது.கடந்த சில ஆண்டுகளாக அலுவலச் சூழலாலும்

,முகநூல் தொடர்பாலும் பிறந்த நாள் முக்கியத்துவம்

பெறத்துவங்கிவிட்டது,ஆனாலும் என் பிறந்த நாளுக்கென்று யாருக்கும் இதுவரை

ஒரு சாக்லேட்கூட வாங்கிக் கொடுத்ததே இல்லை.ஆயினும் முகநூல் நண்பர்களுக்கு

வாழ்த்துச் சொல்லும் வழக்கம் இப்போது எனது அன்றாட கணினிப்பணியின்

பாகமாகிவிட்டது.





மதச்சார்பற்ற-மனதை மிகவும் நெருங்கவைக்கிற-பிறந்த நாள் கொண்டாட்ட மரபு

நன்று ,ஆயினும் அது ஆடம்பரமாகவோ கைமீறிய செலவாகவோ

மாறிவிடக்கூடாது.நெஞ்சார வாழ்த்தினால் போதுமே. இதுவே இப்போதைய என்

மனோநிலை.



பொதுவாக இப்படி பல சிந்தனைகள் என்னுள் ஓடினாலும்,இந்த முறை என் பிறந்த

நாளுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது.நான் பொதுவாழ்வுக்கு வராமல்

நண்பர்கள் வற்புறுத்தியபடி தொழிற்பயிற்சி ஆசிரியராக( ஐ டி ஐ

இன்ஸ்ட்ரக்டர்) போயிருந்தால்(அதற்குரிய தகுதியும் எனக்கு இருந்தது

வாய்ப்பும் எனக்கு வந்தது)இன்று நான் பணி ஓய்வு பெற்றிருப்பேன்.அல்லது

பெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றி இருந்தால்

எப்போதோ வீதிக்கு வந்திருப்பேன். ஆம், அந்த ஆலையை சில ஆண்டுகளுக்கு

முன்பே மூடிவிட்டார்கள்.பொதுவாழ்வில் இருப்பதால் எனக்கு ஓய்வு உண்டா?

இல்லையா?இன்றைக்கு என்நெஞ்சில் சுழன்றடிக்கும் கேள்வி இதுதான்.



எதற்கு ஓய்வு? ஏன் ஓய்வு? எதிலிருந்து ஓய்வு?எப்போதிலிருந்து ஓய்வு?உடல்

தளர்ந்துவிட்டதா? உள்ளம் சோர்ந்துவிட்டதா?வாழ்வின் தேவைகள்

நிறைவாகிவிட்டதா?இலக்கை எட்டியாயிற்றா?மனம் சாந்தியாகிவிட்டதா?இப்படி பல

கேள்விகளை எனக்கு நானே எழுப்பிப் பார்க்கிறேன்.ஒரு புறம் பளிச்சென்று சில

பதில்கள் கிடைக்கின்றன.மறுபுறம் சில குழப்பங்கள் மிஞ்சுகின்றன.இது

குறித்து அண்மைக்காலமாக நான் நிறையவே யோசித்திருக்கிறேன்..பணச்சிக்

கலைத்

தவிர குடும்பத்துக்குள் பெரிய சிக்கல் ஏதுமில்லை-இன்னும் சொல்லப்போனால்

இணக்கமான குடும்பமே.2013க்குள் பண நெருக்கடியிலிருந்தும் மீண்டுவிடுவேன்.

உடலைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவே இதுவரை

உணர்கிறேன்.உள்ளத்தைப் பொறுத்தவரை அப்படிச் சொல்ல இயலவில்லை.குறிப்பாக

பணிச்சூழல் மனநிறைவைத் தரவில்லை.பொதுவாழ்விலும் ஏதோ ஒரு வெறுமை

சூழ்ந்துள்ளதை என்னாலும் மறைக்கமுடியவில்லை-சுற்றியுள்ளோ

ரும்

அவதானிக்கின்றனர்.அதன் தொடர் விளைவாக சில தீர்மானங்களுக்கு

வந்துள்ளேன்.இது சரியா? தவறா? காலம்தான் தீர்ப்பெழுதும்.



என்னைப் பொறுத்தவரை ஓய்வு எல்லோருக்கும் தேவை.ஆனால், ஓய்வெனப்படுவது

சும்மா இருப்பதல்ல ; மனதிற்கு மகிழ்வுதரும் தொண்டொன்றில் தன்னைக்

கரைத்துக்கொள்வதே.பதவி,பொறுப்பு எதனையும் நாடாமல் இளைஞர்களுக்கு

தோள்கொடுப்பது. துணை நிற்பது.வருவாயை எதிர்பார்ப்பதும்

எதிர்பார்க்காததும் அவரவர் குடும்பச் சூழல் சார்ந்தது.சிலரின் தலைமைப்

பண்பும் அறிவுத்திறனும் அனுபவஞானமும் வலுவாக இருக்கக்கூடும்.குறிப்பிட்ட

அந்த அமைப்புக்கோ நிறுவனத்துக்கோ அத்தகையவர்களின் தேவை இருக்கக்கூடும் ;

அச்சூழலில் விதிவிலக்காக அவர்கள் நீடிப்பது தவிர்க்க

முடியாததாகும்.ஆயினும் அது பொது விதியாகிவிடகூடாது. அது விதிவிலக்கே.



உடல் உழைப்பாளிகளுக்கு ஓய்வு வயது 58 ஆக இருக்கிறது. மாநில அரசு

ஊழியர்களுக்கும் இதுவே விதி. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ;

விஞ்ஞானிகள் போன்ற அறிவுத்துறையினருக்கு ஒய்வு வயது 65.ஆனால் பொது

வாழ்வுக்கு இப்படி வயதுவரம்பு இல்லாதிருப்பது சரியா?அதிலும் அரசியலில்

ஐம்பது அறுபதுக்கு மேல்தான் பதவி வாய்க்கிறது..அப்படியானால் அவர்களுக்கு

ஓய்வே கிடையாதா?விவாதத்திற்குரியது...



ஆனாலும் தவிர்க்க முடியாதவர்கள் தவிர மற்றவர்கள் பதவி

பொறுப்புகளிலிருந்து விலகி வழிவிடும் மரபு துளிர்க்க

வேண்டும்.வெளியிலிருந்து கொண்டே ஆலோசனகள் வழங்கலாம் -தொண்டாற்றலாம் -

எழுதலாம்- பேசலாம்- பிறரைப் பயிற்றுவிக்கலாம்-ஆம் இதற்கு இதயம்

விசாலமாகவேண்டும்.



என் தகுதியை திறமையை நான் நன்கு அறிந்துள்ளேன்.விதிவிலக்கு பெறுமளவுக்கு

பெருந்தகுதி எதுவும் எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.எனவே நான்

விரைவில் ஓய்வுபெற விழைகிறேன்.முன்னர் என் இச்சையினால்

பிறந்தேனில்லை..முதல் இறுதி என் வசத்தில் இல்லை..நான் ஒரு அமைப்பின்

அங்கம். நானாக ஒரு முடிவுக்குவருவது எளிதல்ல..ஆயினும் இந்த பிறந்த நாளில்

எனது உரத்த சிந்தனை ஓய்வைப்பற்றியதே..அதனை பகீரங்கமாகப் பகிர்ந்து

கொள்வதுகூட அமைப்பு ரீதியாக சரியில்லைதான்..ஆயினும் என்னுள் தகிக்கும்

உணர்வினை ஏதேனுமொரு வகையில் கொட்டிவிட்டேன்..அவ்வளவுதான்



ஓய்வே இன்று என் விருப்பமாக உள்ளது.ஓய்வெனப்படுவது யாதெனில் யாருக்கும்

எந்த இடைஞ்சலுமின்றி -பதவி பொறுப்புகள் எதுவுமின்றி- எழுத்துப் பணியில்

இயன்றவரை கரைந்துபோகவே விரும்புகிறேன்.கைகூடுமா



ஓய்வெனப்படுவது யாதெனில்

0 comments :

Post a Comment