அகத்தேடல்-4

Posted by அகத்தீ

அகத்தேடல்-4

கருப்பை வாசமும்
மண்வாசமும்
கல்லறை வரை

புழுதிவிளையாடிய
நினைவுகளை
அசைபோட்டபடி கழியும்
முதுமை

பெயர்
பிறந்த தேதி
பிறந்த ஊர்
மூன்றின் அடையாளங்களும்
உன்னோடு ஒட்டிக்கொள்ளும்
இறுதிவரை

வாழ்க்கைச் சூறாவளியில்
பிடுங்கி எங்கோ வீசப்பட்டாலும்
வேரோடு ஒட்டிவந்த
ஊரடிமண்
சொல்லிகொண்டே இருக்கும்
பிறப்பின் முகவரியை

திருமணத்தில்
திடீர்பயணத்தில்
திருவிழாக்கூட்டத்தில்
சந்தித்தவர்கள் மூலம்
சேகரித்த
ஊர்ச்செய்திகளை
இணையருக்கும்
சந்ததிக்கும்
சொல்லும்பொழுது
கண்ணில் மின்னிடும்
சந்தோஷம்

உலமயமும்
நுகர்வுவெறியும்
புரட்டிபோட்டது
உன் பண்பாட்டை

ஆயினும்

நாக்கின் ருசியும்
மொழியின் சாயலும்
முடிச்சுப்போட்டது
ஊரோடு உன்னை

உலகையே
வலம்வரினும்
உள்ளூர் தெருவில்
காலாற நடக்கும்
சுகமே தனிதான்

ஆனாலும்

ஊரும் சேரியும்
ஒற்றை அடையாளமாய்
இல்லாத
நாள்பட்ட ரணத்தை
உணரும்
ஒவ்வொரு தருணமும்
எனக்கே
பிடிக்காமல் போகிறதே
என் ஊர்...

-சு.பொ.அகத்தியலிங்கம்.0 comments :

Post a Comment