காலத்தே வந்திருக்கும் இரண்டாம் பதிப்பு

Posted by அகத்தீ Labels:


எஸ் வி வேணுகோபாலன்
சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்,
ஆசிரியர்:சு.பொ.அகத்தியலிங்கம்,
பாரதி புத்தகாலயம்,
421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,
சென்னை-600 018.
ப்க்கங்கள்:152,விலை:ரூ.60/



வங்கிப் பணியில் சேர்ந்த புதிதில் அந்தச் சிற்றூரின் தெருவில் நடக்கையில், ரு முதியவர் என்னைப் பார்த்து, நீங்க என்ன வர்ணம் என்றார். அதற்குமுன் அந்தச் சொல்லை நான் அவ்வளவு அருகில் எதிர்கொண்டிருக்கவில்லை, கருப்பு வர்ணம் தான் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். ஆனால், அது ஒரே ஊர் அல்ல, ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் ஊரின் பெயரோடு காலனி சேர்த்து இன்னொரு ஊர் இருப்பதை அறிந்து கொண்டேன். நகரத்திலிருந்து குடி பெயர்ந்த எனக்கான பண்பாட்டு அதிர்ச்சிகளை அடுத்தடுத்து அந்தச் சூழல் எனக்குக் கற்பித்துக் கொண்டே இருந்தது. அதற்குச் சில மாதங்கள் கழித்து இன்னோர் ஊழியர் கிளையில் வந்து சேர்ந்தார். அன்று மாலையே வங்கி மேலாளரிடம் வந்து, சார் மீட்டிங் போடுங்க எனக்குக் கொஞ்சம் பேசணும் என்றார். புதிதாய்ச் சேர்கிற ஒருவர் இப்படி துணிச்சலாக எப்படி கேட்க முடியும் என்ற வியப்பு இந்த நாள் வரை எனக்கு நீங்கவில்லை. மேலாளரும் அன்று மாலை ஊழியர் கூட்டம் கூட்டினார். இருந்த நான்கு பேரும் வட்டமாகச் சுற்றி உட்கார்ந்ததும், புதியவர் கேட்டார், எனக்கு வாடகைக்கு வீடு தேடணும்னு மதிய உணவு இடைவேளை நேரத்தில் கடைத் தெரு பக்கம் போனால், நீ எஸ் சி தானேன்னு ஒருத்தன் கேட்கிறான், பேங்க்ல யாராவது சொல்லாம எப்படி இந்த விஷயம் ஊருக்குள் போயிருக்க முடியும், எப்படி சொல்லலாம் என்றார். யாரும் சொல்லவில்லை என்பதை சத்தியம் செய்த போதும் அவருக்கு ஏன் கோபம் குறையவில்லை என்பது அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கியபிறகு புரியத் தொடங்கியது. தொடர்ச்சியான தேடலில் சாதி, இன, மத விவகாரங்கள் தொடர்பான பார்வை விரிவடையத் தொடங்கியது.

சாதி என்றால் என்ன, இந்தப் பாகுபாடுகளைத் தோற்றுவித்தது யார்,  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது நடைமுறையில் கடைப்பிடிக்காத வெற்றுச் சொற்றொடரா, சாதி இரண்டொழிய வேறில்லை போன்ற செய்யுள்கள் தேர்வில் மதிப்பெண் பெற மட்டுமான பாடமா, பிறப்பிலிருந்து இறப்பு வரை சுமத்தப்பட்டு விடும் இந்த அடையாளம் நாகரிக சமூகத்திலும் எப்படி விடாப்பிடியாய்த் தொடர முடியும்...சாதியத்தின் அனுசரிப்பில் தீண்டாமை என்கிற அம்சம் எப்போது எப்படி புகுந்து கொண்டு பேயாட்டம் போடத் தொடங்கியது, இதிலிருந்து மனிதர்கள் விடுதலை பெறப்போவது எப்போது..

சமூகத்தின் அடி ஆழத்தில் வேர் விட்டு நிற்கிற சாதியம் குறித்த விவாதத்தை, சு பொ அகத்தியலிங்கம் அவர்களின் "சாதியம் - வேர்கள், விளைவுகள், சவால்கள்" நூல் எளிய முறையில் நடத்துகிறது. ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை என்கிற அற்புதமான நூலில், பிரும்ம தத்துவம் குறித்து யாக்ஞவல்கியன் நிகழ்த்தும் உரையாடலில், பாட்டன் வசிட்டன், விசுவாமித்திரன் உருவாக்கிய படகுகள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும், எவராலும் நொறுக்க முடியாத உறுதியான ஒன்றாகத் தான் பிரும்ம தத்துவத்தை உருவாக்கி இருக்கிறேன், எனது பிரும்மம் கேள்விகளுக்கு அப்பாற்ப்பட்டது..என்று வரும். இப்படி பார்ப்பனிய சூழ்ச்சியோடு உருவாக்கப் பட்ட சமூக விதிகள், நிலவுடைமைச் சமூகத்தின் வருண பேதங்கள், நூற்றாண்டுகளைத் தொடர்ந்து எப்படி இன்னும் நீடிக்கிறது என்ற சிக்கலான விஷயங்களை ஆசிரியர் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விரித்தெடுத்து அடுத்தடுத்து கிடைக்கப்பெறும் விளக்கங்களோடும், கூடவே பெருகும் புதிய கேள்விகளோடும் ஓர் உள்ளார்ந்த பயணத்தைத் தொடர்கிறார்.

இனப் பிரிவா, நிறப் பிரிவா, கோத்திரப் பிரிவா என்று வெளிநாட்டோர் கேட்கும் கேள்விகளுக்கு விளக்க முடியாத சூட்சுமமான சாதியை அனுபவிப்பவரே புரிந்து கொள்ள முடியும், இன்னது என்று விளக்குவது கடினம் என்கிறார் சு பொ. "ஏற ஏணி இல்லாத இறங்க வழி இல்லாத - பல அடுக்குமாடிகளைக் கொண்ட ஒரு பெரிய கோபுரம் தான் இந்து சமுதாயம்; எந்த மாடியில் ஒருவன் பிறக்கிறானோ அந்த மாடியில் தான் அவன் வாழ்ந்து இறந்தாக வேண்டும்" என்று பாபாசாகேப் அம்பேத்கரை மேற்கோள் காட்டிவிட்டு, உலக நாடுகளில் இந்த சாதி என்ற ஏற்பாடு வேறெங்கும் உண்டா என்று தேடும் தேடலில் தெற்கு ஆசியா தவிர வேறெங்கும் இப்படியான சமூக அடுக்குகள் கிடையாது, ஆனால் சாதியம் இந்தியாவில் இருப்பது போல் வேறெங்கும் வியாபித்து இருக்க வில்லை என்று விளக்குகிறார்.  ஜப்பானில் "எட்டா" என்று கீழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் சமூகத்தவர் உண்டு, ஆனால் தீண்டாமை இல்லை என்கிறார்.

தலித் சிந்தனையாளர் பர்தீப் சிங் ஆட்ரி ஹிண்டு நாளேட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் (ஞாயிறு சிறப்பு இணைப்பு:  22 11 2009 )  ஹங்கேரி நாட்டில் ரோமா என்ற இனக்குழு மிகவும் தாழ்ந்த நிலையில் வைத்து இழிவு படுத்தப் படுவதாகவும், அவர்களது எழுச்சிப் போராட்டத்தில் ஜெய் பீம் இயக்கம் என்று அம்பேத்கர் பெயரும், புத்தகங்களும் இப்போது பெரும்பங்கு ஆற்றி வருவதாகவும் சொல்லும் அவர்,"ஜிப்ஸி என சொல்லப்படும் ரோமா இனத்தவர் பொதுவாக ஐரோப்பிய நாடோடி மனிதர்களாக - கருப்புத் தோல் கொண்டவர்களாக உள்ளனர் என்றும், உலகெங்கும் சுமார் 12 மில்லியன் (1 கோடியே 20 லட்சம்) எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் ஆதியில் வட இந்தியாவிலிருந்து சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.  80 லட்சம் பேர் ஐரோப்பாவில் வாழ்வதால், அந்தக் கண்டத்தில் சிறுபான்மை என்ற விதத்தில் மிகப்பெரிய அளவில் உள்ள சிறுபான்மைப் பிரிவினர் ரோமாக்கள்.  காலகாலமாக ஐரோப்பிய வெள்ளை இனத்தவரால் நிராகரிக்கப்பட்டும், புறந்தள்ளப்பட்டும், வெறுத்து ஒதுக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும், கொடுமைகளுக்கு ஆட்பட்டும், இழிவான முத்திரை குத்தப்பட்டும் வாழ்ந்து வருவதுதான் இவர்களது வரலாறு.  ஹங்கேரி மக்கள் தொகையில் இவர்கள் 7 சதவீதமாக உள்ளனர்..." என்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நான்கு ஊராட்சிகளில் நீண்ட காலம் நடத்த முடியாதிருந்த தேர்தல் முதன்முறை நடந்ததைப் பதிவு செய்த 'இது வேறு இதிகாசம்'   (ஜா.மாதவராஜ்) என்ற ஆவணப் படத்தில் கீரிப்பட்டியில் வெற்றி பெற்ற வாக்காளரை தலித் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கையில் அதைப் பொறாத வகுப்பினர் அடைந்த ஆத்திரமும், குறிப்பாகப் பெண்கள் 'இது அந்த சாமிக்கே அடுக்காது' என்று மண்ணள்ளித் தூற்றியதும் சாதியம் புரையோடியிருக்கும் தன்மைகளின் சாளரப் பார்வையாக இருக்கிறது.

அந்த வகையில், "சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்" என்ற பகவத் கீதை வாக்கியம் இது கடவுள் உருவாக்கி வைத்த விதி என்று அங்கீகாரம் அளிப்பதால், சாதியத்தின் வேர்களை இந்து மதத்திற்குள் தான் தேட வேண்டும் என்னும் சு பொ அவர்களின் தொடர் தேடல், சாதி எப்படி உருவானது, எங்கேயிருந்து வந்தது, சுத்தத்திற்கும் சாதி மேன்மைக்கும் தொடர்பு உண்டா, சுத்தபத்தமாக இருந்தால் சாதி தொலைந்துவிடுமா, மதமாற்ற தீர்வு அளிக்குமா, அறிவியல் யுகத்திலும் சாதி தொடர்வதேன்...என்ற விளக்கமான தலைப்புகளில் விவாதத்தை மேலும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்வது சாதாரண வாசகர்களைப் புதிரான ஒரு சமூக வழக்கத்தை இலகுவாக விளங்கிக் கொள்ளவும், அதன் மீது ஒரு கோபம் வளர்த்துக் கொள்ளவும் தோதாக செல்கிறது. 'மநு என்னும் மாபாவி' பகுதி சமூக இழிவாகக்தின் உட்கூறுகளை உயிரியல் கல்வி போல அறுத்தெடுத்துக் காண்பிக்கிறது.   சாதியத்தின் பல முகங்கள், பல முனைகள் பகுதியும் முக்கியமானதாகிறது.

சாதியம் குறித்து சமூக சீர்திருத்தவாதிகள் பலரும், போராளிகளும் சிந்தித்தவற்றை நிறைய மேற்கோள் காட்டிச் செல்லும் நூலாசிரியர் அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளின் வலுவான பார்வையில் மேலும் கேள்விகளை எழுப்பியவாறு வாசகர்களை சிந்திக்கத் தூண்டுவதும், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஆதாரமான நூல்களைத் தவறாது பட்டியல் இட்டிருப்பதும், அதனால் எந்தெந்த நூல்கள் அதிகம் பயன்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வைப்பதும் மேலும் தேடலில் ஆழ விரும்பும் வாசகர்களுக்கு மிக நேர்த்தியான உதவியாகும். சாதியத்தின் நுகத்தடியில் பெண்களே அதிகம் பாதிப்படைவது என்பதையும் ஆசிரியர் முக்கிய கவனத்தோடு விவாதிப்பது குறிப்பிடத் தக்கது.

நூலில் இட ஒதுக்கீடு குறித்த விவாதம் ஆதிக்க சக்திகளின் விஷமத் தனமான வாதங்களுக்கு நல்ல பதிலடி கொடுக்கிறது. அதன் போதாமையையும் பேசுகிறது. தலித் மக்களுக்கான சிறப்புக் கூறு திட்டம் எப்படி ஆட்சியாளர்களின் சுவாரசியமற்ற போக்கினால் போய்ச்சேரவே மறுக்கிறது என்பதையும் நூல் சுட்டிக் காட்டுகிறது. பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரை, மேல் சாதி மாணவர் போராட்டம், தூண்டிவிட்ட அருண் சோரி போன்ற அறிவுஜீவிகளின் பேச்சு ஆகியவை  போன்றவை முக்கிய இடம் பெறுகின்றன.

வர்க்கப் பார்வை மேலோங்கி நிற்கும் கம்யூனிஸ்டுகள் சாதியத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அதிகம் கவலை கொள்ளவே இல்லை என்று வைக்கப்படும் விமர்சனத்தை சுய விமர்சனத்தோடு ஆசிரியர் அணுகியிருக்கிறார். ஆணித்தரமான சான்றாதாரங்களை வைத்து மார்க்சிய இயக்கம் செய்துவருவதை பதியவும் செய்திருக்கிறார்.  புத்தகம் பேசுது இதழில் வெளிவந்திருந்த நேர்காணலில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, இயக்கத்திற்குள் புரட்சிகர சிந்தனைகளைக் கொண்டவரை இணைவோர் அரசியல், பொருளாதார இலட்சியங்களில் இடதுசாரி கருத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தாலும், சாதி விஷயத்தில் அதே இடதுசாரி தத்துவார்த்தப் பார்வையை தனது அன்றாட நடவடிக்கைகளில், வாழ்க்கையில் கைக் கொள்வதில் உள்ள பலவீனத்தைச் சுட்டிக் காட்டி, சாதிய உளப்பாங்கைக் கைவிட இயக்கம் எடுக்கும் முயற்சிகளில் தொடர் கவனம், கண்காணிப்பு தேவை என்று குறிப்பிட்டிருந்தார். மூன்றாண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டு வீச்சாக வளர்ந்து கொண்டிருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அந்த நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும். தீண்டாமை ஒழிப்பு, சாதியத்திற்கெதிரான நெடிய போராட்டத்தின் முக்கிய பகுதி என்கிற விதத்தில் அதில் முன்னணியில் இயங்கும் செயல் வீரர்களுக்கு சாதியம் குறித்த இந்த ஆய்வு நூல் பேருதவி புரியும்.

2004 ம் ஆண்டு வெளிவந்து இப்போது இரண்டாம் பதிப்பு மகிழ்ச்சியளிக்கும் நேரத்தில், ஒரு வருத்தம் உண்டு. முந்தைய பதிப்பில் கண்டிருந்த சில பிழைகள் திருத்தபடாமலே போய்விட்டது. சிறு எழுத்துப் பிழைகள் பரவாயில்லை. ஆனால் இந்திய தத்துவ மரபில் நாத்திக சிந்தனைகளை விவாதிக்கும் இடத்தில், சார்வாகர் என்பது சாவர்க்கர் என்று அச்சாகி இருப்பது பெரிய குழப்பத்தை உண்டு பண்ணும்.  ஆனால் புதிய தாராளமயம் நமது பண்பாட்டின் கூறுகளிலும் ஆபத்தான சிதைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்  தீண்டாமை, பெண்ணடிமை உள்ளிட்ட  நிலவுடைமை மதிப்பீடுகளை மேலும் கெட்டிப் படுத்துகிறது என்பதை விவாதிக்கும் நேரத்தில் இந்த இரண்டாம் பதிப்பை பாரதி புத்தகாலயம் கொண்டு வந்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. மூன்றாம் பதிப்பை தமிழ் வாசகர் உலகம் விரைவுபடுத்த இயலுமானால் நூலாசிரியர் தமது உழைப்பின் கொடையாய்க் கிடைத்த நூலை இன்னும் மேம்படுத்தவும் முடியும்.

புத்தகத்தின் நிறைவில் முந்தைய பகுதிகளின் சாராம்சத்தைத் தொகுத்தளிப்பது அருமையான விஷயம். நிறைவாக, தமது கனவு என்ற ஒன்றை பிரகடனமாக சொல்லும் இடத்தில், எதிர்காலத்தில் சாதி என்றால் என்ன என்று தெரியாத சமுதாயம் மலர வேண்டும், ஆய்வில் மட்டுமே இந்தச் சொல் இடம் பெற வேண்டும், சாதியின் கோர முகத்தை அறிய வரும்போது சாதியில் சரணடைந்த இன்றைய தலைமுறை மீது காறி உமிழ வேண்டும் என்று சு பொ சொல்வது முற்போக்காளர்கள் யாவருக்குமான கனவு என்றே கொள்ள வேண்டும்.

***********





0 comments :

Post a Comment