பொருளாதார பெருமந்தத்தின் உயிர் சித்திரம்.

Posted by அகத்தீ Labels:

 


பொருளாதார பெருமந்தத்தின் உயிர் சித்திரம்.

 

 “இயேசு எக்கச்சக்கமா பிரச்சனைகள்ள மாட்டிகிட்டார்னு தோணுது. அவரால் எதுவும் செய்ய முடியல. இதெல்லாம் என்ன நல்லதுன்னும், எதிர்த்துப் போராடுறதுலையும் , கணக்குப் போடுறதுலயும் என்ன உபயோகம்னு அவருக்கு தோணிடிச்சு . அவர் களைப்பாய் போயிட்டார் . அவர்கிட்ட இருந்த ஊக்கமெல்லாம் வடிஞ்சு போச்சு .அவர் முடிவுக்கு வர சமயத்துல நரகமாயிடிச்சு .அவர் அதனாலே காட்டுக்கு போயிட்டார்.”

 

1939 ல்  ஜான் ஸ்டீன்பெக் எழுதிய “கோபத்தின் கனிகள்” அமெரிக்க நாவல் . எண்பது ஆண்டுகள் கழித்து 2019 ல் தமிழில் வெளிவந்தது . அப்போது ஐம்பது பக்கங்கள் படித்துவிட்டு ஏனோ மூடி வைத்துவிட்டேன் .என் புத்தகக் கட்டின் அடியில் புதைந்துவிட்டது . தமிழாக்கம் செய்த தோழர் ரமேஷ் இந்த நூலுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருதைப் பெற்றார் .

 

 ‘படித்துவிட்டீர்களா ,படித்துவிட்டீர்களா?’ என பலமுறை என்னைக் கேட்டார் . நானும் , ‘படிக்கிறேன் ,படிக்கிறேன்’ என காலம் கடத்தி வந்தேன் . கடைசில் படித்துவிட்டேன். தாமதமாகப் படித்ததற்காக உள்ளபடியே மனம் வருந்தினேன். தாமதமாயினும் ஓர் பொருள் பொதிந்த நாவலைப் படித்ததற்காக  மகிழ்ந்தேன். தமிழில் தந்த ரமேஷுக்கு இனிய பாராட்டுகள் .நன்றி!

 

1929 -1939 பத்தாண்டுகள்  “பொருளாதார பெருமந்தம்”[ Great Depression]  உலகை உலுக்கி எடுத்தது . சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கையை நார்நாராய்க்  கிழித்துப் போட்டது .இதன் உயிர் சித்திரம்தான் இந்நாவல் .

 

அமெரிக்காவில் ஒக்லாஹாமாவில்  நிலத்தில் குத்தகைக்கு உழுது பயிர் செய்து பசியாற்றிவந்தது டாம் ஜோட் குடும்பம். பொருளாதார பெருமந்தமும் டிராக்டரின் வருகையும் வங்கி முதலாளித்துவமும் விவசாயிகளை வேட்டையாடத் துவங்கியது . வீடுகள் இடிக்கப்பட்டன .விவசாயிகள் வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் .

 

“குத்தகைதாரர்கள் அழுதார்கள் .தாத்தா நிலத்துக்காக இந்தியர்களைக் [ அமெரிக்க பூர்வகுடியினரைக்] கொன்றார் . அப்பா நிலத்துக்காக பாம்புகளைக் கொன்றார் . நாம் ஒரு வேளை வங்கிகளைக் கொல்லலாம் . அவை இந்தியர்களையும் பாம்புகளையும்விட மோசமானவை . நாம் நம் நிலத்தை வைத்துக் கொள்ள போராட வேண்டி இருக்கலாம் , அப்பாவும் தாத்தாவும் செய்ததைப் போல…” என எண்ணினர் .

 

டிராக்டர்கள் , எந்த அன்பும் இல்லாமல் நிலத்தை வன்புணர்ச்சி செய்து கொண்டிருந்ததாக ஓரிடத்தில் நூலாசிரியர் எழுதுகிறார் .

 

வயிற்றுப் பசியும் வாழ்க்கைப் போராட்டமும் நிர்ப்பந்திக்க ஒக்லாஹாமாவைவிட்டு குடும்பம் குடும்பமாக வேலைதேடி  சுமார் 2200  கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள கலிபோர்னியாவுக்கு பயணப்பட்டனர் . டாம் ஜோட் குடும்பமும் அதில் ஒன்று . டாம் ஜோட் தற்செயலான ஒரு கொலையால் தண்டனை பெற்று சிறையிலிருந்தவன் , நீண்ட பரோலில் வெளிவந்தவன்.

 

பயணம் புறப்படுவதற்கு முன்பே தங்கள் உடமைகளை தவிட்டு விலைக்கு விறக வேண்டிய சூழல் . எரிகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என அலையும் வியாபாரிகள் . அந்த காட்சியை நாவலாசிரியர் விவரிக்கும் போது நம் அடுத்தவீட்டில்  நிகழும் அவலக் காட்சியாய் அது விரிகிறது .

 

டாம் ,அவர் அப்பா டாம் ,அம்மா ,பாட்டி ,தாத்தா , கிறுத்துவ மதபோதகர் , மாமாஜான் , நாலு பெண்கள் , இரண்டு குழந்த்தைகள் உட்பட  மொத்தம் 13 பேர் மிகவும் மட்டமான பயணற்றுக்கு லாயக்கற்ற ஒரு டிராக்டரில் புறப்படுகின்றனர் . கலிபோர்னியாவில் ஆரஞ்சுத் தோட்டத்தில் நல்ல வேலையும் கூலியும் வாழ்க்கையும் அமையும் என்கிற பெருங்கனவோடு பயணம் துவங்குகிறது .

 

ஆனால் வழிநெடுக மெல்ல மெல்ல கனவு கலைகிறது .உண்மை உறுத்துகிறது .திரும்பிப் போகவும் முடியாது .புலம் பெயர்தலில் பெருவலி நாவல் நெடுக ஓலமாய் கேட்கிறது .ரணமாய் உறுத்துகிறது . வழியிலேயே தாத்தா இறந்து போகிறார் .பாட்டியும் இறந்து போகிறார் . கர்ப்பிணி மனைவி ஷாரன் ரோஜினை வழியிலேயே கைவிட்டுவிட்டு கணவர் கோணி தனிவழி போகிறார் .

 

வேலையில்லா பட்டாளம் பெருகப் பெருக கூலி குறைக்கப்படுவதும் ,பட்டி நாயினும் கீழாய் நடத்தப்படுவதும் , லாபவெறி கொண்ட மூலதனத்தின் மூர்க்க முகம் அணு அணுவாய் இந்நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது .கூலியைக் குறைக்க இரக்கமற்ற எந்த கொடுஞ்செயலையும் செய்ய சுரண்டும் வர்க்கம் தயங்காது . விளம்பரமும் வாழ்க்கையும் நேர் எதிரே ! ஓக்கிகள் என இழிவு படுத்தப்படுவதும் தொடர்கிறது .

 

இந்த புலம்பெயர்தலினூடே காதல் ,பிரிவு ,நட்பு ,பகை , வெறுப்பு ,மனிதம் , பக்தி ,கேள்வி ,நம்பிக்கை ,போராட்டம் ,ஊசலாட்டம் ,அடக்குமுறை ,கொலை , அடிதடி ,ஏமாற்றுதல்  அடடா ! எதுவும் விலகிப் போவதில்லை.தொடர்கிறது .

 

இந்நாவலைப் படிக்கும் போது கொரானா காலத்தில் நடந்த கொடூர பயணங்கள் நினைவில் வந்து போயின . பஞ்சம் பிழைக்கவும் ,வாழ்ந்து தொலைக்கவும் இன்னும் அகதிகளாய் புலம் பெயர்தல் நிற்கவில்லையே !

 

மத போதகர் கேஸி அறிமுகம் ஆனதிலிருந்து அவர் தன்னை போதகர் என சொல்லிக் கொள்வதையே விரும்பவில்லை . மறுதலிக்கிறார் . துவக்கத்தில் குறிப்பிட்டவை அவர் வரிகள்தாம்.  இலேசான கிண்டல் தொணியில் கிறுத்துவத்தை கேலி செய்கிறார் .மனிதத்தை நியாயத்தை பேசுகிறார் .

 

புலம் பெயர்தலினூடே சிவப்பும் போர்க்குணமும் எட்டிப் பார்ப்பதும் , போதகர் கேஸி ஓர் சிகப்பு மனிதனாய் பரிணமிப்பதும் நிகழ்கிறது .ஆனால் கேஸி கொல்லப்படுகிறார் .கேஸியைக் கொன்றவனை டாம் கொல்கிறார் .  ஏற்கனவே கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு பரோலில் இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு கொலை . முன்னது போலவே இதுவும் திட்டமிடப்படாத கொலை .

 

பின்னர் குடும்பத்திலிருந்து பிரிந்து தலைமறைவாய் செல்கிறார் டாம் . கடைசியாக தாயை சந்திக்கும் போது சொல்கிறார் , ” … அவர் [கேஸி] சட்டத்துக்கு விரோதமா எதுவும் செய்யலம்மா . நான் நிறைய யோசிச்சிக்கிட்டிருந்தேன் . நம்ம ஜனங்க பன்னி மாதிரி வாழ்றதப் பற்றி . ஒரு வேளை பத்து லட்சம் ஏக்கர் ஒரு ஆளுக்கு சொந்தமாக இருக்கலாம் .அதே சமயம் நூறாயிரம் பேர் பட்டினி கிடக்கிறாங்க .நம்ம ஆளுங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து குரல் கொடுத்தா…” டாம் சிந்தனையின் திசை சிவப்பு நோக்கி . சூழல் அவனை கைதியாய் தேடிக்கொண்டிருக்கிறது.

 

புலம்பெயர்தலின் போதும் பெண்களின்  சுமையும் வலியும் முன்பைவிட இரட்டிப்பாகிறது நாவல் நெடுக சமூகத்தின் வடுவாய் இந்த வலி பதிந்து நிற்கிறது ;அதே வேளை நெருக்கடி நேரத்தில் அவர்கள் காட்டும் வலிமையும் உறுதியும் வெளிப்படுகிறது .

 

 

சுரண்டலின் கோர நர்த்தனத்திற்கு இடையே இயற்கையும் பழிவாங்குகிறது .கடும் மழை வெள்ளம் . ஷாரன் ரோஜ் பிரசவவலியால் துடிக்கிறார் . குழந்தை இறந்து பிறக்கிறது . வெள்ளம் சூழ்கிறது. வேறு வழியின்றி ஒரு மேட்டுப் பாறைக்கு இடம் பெயர்கின்றனர் .

 

அங்குள்ள சிறுகொட்டகையில் ஷாரன் மார்பில் பால்கட்டித் தவிக்கிறார் .அங்கு ஒரு ஐம்பது வயதுக்காரரும் ஒரு சிறுவனும் ஏற்கனவே இருக்கின்றனர். அந்த ஐம்பது வயதுக்காரர் பசியால் மயங்கிக் கிடக்கிறார் .ஷாரன்  நெஞ்சில் பால் கட்டித் தவிக்கிறார் . எல்லோரும் வெளியேற ஷாரன் மார்பிலிருந்து பாலை அவர் வாயில் பீச்சுகிறார் . மாப்பசான் சிறுகதை ஒன்றிலும் இதுபோல் ஒரு முத்தாய்ப்பு படித்த ஞாபகம் .

 

மீண்டும் ஒரு பொருளாதார பெருமந்தம் உலகைச் சூழாது என முதலாளித்துவத்தால் உறுதி கூற முடியுமா ? முடியவே முடியாது . ‘கார்ப்பரேட்டே தெய்வம்’ எனத் தொழும் மோடி சர்க்கார் தொடருமாயின் இதனைவிட பேரவலத்தை இந்திய உழைப்பாளி மக்கள் சந்திப்பார்கள் .ஐயமில்லை.

 

ஜான் ஸ்டீன்பெக் 1939 ல் எழுதிய இந்நாவலுக்காக 1940 ல் புலிட்சர் விருது பெற்றார் . நூலாசிரியர் 1962 ல் நோபல் பரிசு வென்றார் . ஜான் ஃபோர்ட் இந்நாவலைத் தழுவி திரைப்படமும் 1940 ல் எடுத்தார் .

 

Steinbeck plainly stated his purpose in writing the novel: “I want to put a tag of shame on the greedy bastards who are responsible for this [the Depression and the plight of the worker].”

 

“ இந்த பெருமந்தத்துக்கும் தொழிலாளர் துயரத்துக்கும்  பேராசை பிடித்த எந்த bastards [ இந்த சொல்லை தமிழாக்க விரும்பவில்லை]காரணமோ அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்நாவலை எழுதினேன்.” என்றார்.

 

650 பக்க மொழி பெயர்ப்பு நாவலை , மாறுபட்ட பண்பாட்டு சூழலோடு பொறுமையாய் வாசித்தால் பெரிதும் விழிப்புணர்ச்சி உண்டாகும்.

 

ஒவ்வொரு சிறு நகர்வை , இயற்கையை ,சுற்றுச்சூழலை , மனிதர்களின் சின்ன சின்ன ஆசாபாச வெளிப்பாடுகளை , பொருளாதார மந்தத்தினை பயன்படுத்தி கொடும் சுரண்டலை அரங்கேற்றுவதை என எல்லாவற்றையும்  நுட்பமாக கிரகித்து துளித்துளியாக  விலாவாரியாக வர்ணித்திருக்கிறார் நூலாசிரியர் . ஒரு வேளை அன்றைய காலகட்ட நாவல்களின் பொதுப் போக்காக இந்த பாணி இருந்திருக்குமோ ?

 

ரசித்து உள்வாங்கி பொறுமையாக வாசித்தால் சுவையாக இருக்கும் . சிலருக்கு மிக அதிகமான வர்ணனை அலுப்பூட்டலாம். வாசித்தலுக்கு இடையூறாகலாம்  . இது அவரவர் அளவுகோல். பலாச்சுளையை ருசிக்க பொறுமையாய் உரிக்காமல் பலாப்பழம் சாப்பிட முடியுமா ?

 

வாசிப்பீர் ! படிப்பினை பெறுவீர் !

 

கோபத்தின் கனிகள்  GRAPES OF WRATH [ நாவல் ]

ஆசிரியர் : ஜான் ஸ்டீன்பெக், தமிழில் : கி.ரமேஷ் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு :044 24356935 /24332424  / 8778073949    www.thamizhbooks.com    ,  thamizhbooks@gmail.com

பக்கங்கள் : 630  , விலை : ரூ.595/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

1/10/2023.

 

 

 

 

 


0 comments :

Post a Comment