கடல் ஒன்று கைக்குட்டை ஆனது…..
“ நம்ம ஊர் சந்தைகள் நவீன மால்களாகும் நிகழ்வின்
சமூக விவரிப்பே” யாழ்.எஸ். ராகவன் எழுதிய “சந்தை”
நாவல் என ஒண் லைன் ஸ்டோரியாகச் சொல்லிவிடலாம்.
அபார்ட்மெண்டுகளில்
உள்ள சிசிடிவி காமேரா எந்த பரபரப்பும் இன்றி நடப்பவற்றை பதிவு செய்வதுபோல் மதுரை சந்தையை
சுற்றி எழுத முனைந்துள்ளார் நூலாசிரியர் யாழ் .எஸ்.ராகவன்.
கிராம சந்தைகள்
அருகி வருகின்ற போது அவற்றைக் குறித்து அசை போடுவது அவசியமே . இன்னும் சந்தைகள் முற்றாய் அருகிப் போய்விடவில்லை
; ஆனால் அழிவின் வேகம் அதிகரித்துவிட்டது .
சந்தை எனில்
விதவிதமான பொருட்கள் ,அவரவர் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப கொள்ள கொடுக்க வாய்ப்பு .இரைச்சல்
,கூப்பாடு ,நாற்றம் ,போட்டி ,ஏமாற்று ,கந்துவட்டி ,கண்ணீர் எல்லாம்தான் .சந்தைக்கென
அரசியலும் உண்டு .
கு.சின்னப்பபாரதியின்
“ சங்கம்” நாவலில் கொல்லிமலையில் பழங்குடி மக்களுக்கு சந்தை வேண்டுமென எழுந்த போராட்ட
அரசியல் வரும் . மறக்க முடியா சமூக யதார்த்தம் அது . சத்தியமங்கலத்தில் திங்களூரில்
பழங்குடி மக்களுக்கான சந்தை அமைக்கக் கோரி இடதுசாரிகள் போராடியது எப்போதோ அல்ல எண்பதுகளிலும்
தொண்ணூறுகளிலும் தான் . நானும் அதில் ஒரு நிகழ்வில் பங்கேற்றவன். அப்பணசாமியின் “கொடைக்கோனார் வழக்கு” நாவலும் கோவில்பட்டி சந்தை ,கடைத்தெரு பின்னணியில்தான் நிகழும்
.இன்னும் பல உண்டு .
வாரம் தோறும்
சந்தை என்பது விற்கவும் வாங்கவும் சந்திப்பு மையமான பொருள் விற்பனையின் ஒரு முகம் எனில்
; வீடு தேடி தெருத்தெருவாய் பொருள் விற்றது சந்தையின் இன்னொரு கண்ணி . இதுதான் ஆசிய
மாடல் .குறிப்பாக இந்திய மாடல் ; அங்காடி வீதிகள் சங்க இலக்கியத்திலேயே காணக் கிடைக்கும்
காட்சி . சந்தை நோக்கி மக்கள் என்பதே ஐரோப்பிய மாடல் . உலக மயமும் தாராள மயமும் ஆசிய
மாடலை உட்செரித்து ஆன் லைன் வியாபாரம் என்றும் மால் என்றும் பாகாசுர ஏகபோக முதலையாக்கிவிட்டனர்
.நம் சந்தையும் சிறுவியாபாரமும் வீழ்ச்சியை நோக்கி நகர்கிறது .உலகமயம் ,தாராளமயம்
,தனியார்மயம் செய்யும் அழிவு ; இதனை பின்னணியாகக் கொண்டே இந்நாவலும் நகர்கிறது .
நாவலில் மதுரை
சந்தைதான் கதாநாயகன் கதாநாயகி எல்லாம். பட்லர் பொன்னனையா ராணுவத்தில் இருந்தவர் .பின்னர்
சந்தையில் பூண்டு விற்பவர் .அவரின் மகன் பொறுப்பற்றவன் , அவனை திருத்த முயல்கிறார்
.திருந்தியதாக நம்பி தன் சக வியாபார நண்பர் பழநிச்சாமி வளர்க்கும் அவள் மருமகள் புஷ்பவள்ளியை
மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார் .
மகன் திருந்தாமல்
செத்துப்போக புஷ்பவள்ளி விதவையாகிறாள் . அவள் மகளே பேச்சியம்மாள் . புஷ்பவள்ளி மாயாண்டியை
விரும்பி அவனோடு பயணப்பட்டு விடுகிறார் . பேச்சியம்மாள் அந்த சந்தையின் அறிவிக்கபடாத
தலைவிபோல் எல்லோரையும் அரவணைத்து வழிநடத்துகிறாள் . அவளுக்கு நிக்கோலசோடு காதல் திருமணத்தில்
முடிகிறது . இதுபோல் வேறுபல கிளை காதல் கதைகளும் நாவலில் உண்டு .
சந்தையை ஆக்கிரமிக்க
நினைக்கும் ராம் சேட் ,செல்வா கும்பலின் திட்டமிட்ட வன்முறையில் நிக்கோலஸ் சிறை செல்கிறார்
.பேச்சியம்மாள் குடும்பத்தையும் பாதுகாத்து சந்தையையும் காக்க உழைக்கிறாள் .பேச்சியம்மாள்
–நிக்கோலஸ் பிள்ளைகள் ரவி ,லட்சுமி என வாழ்வு தொடர்கிறது .ரவி நன்கு படித்து பெங்களூருக்கு
வேலைக்கு போகிறான்,லட்சுமி டாக்டருக்கு படிக்கப் போகிறாள் ,சந்தையும் களவாடப்பட்டு
சுருங்குகிறது .
இந்நாவலில்
நான் பெரிதும் வியந்த ஓர் செய்தி பெண் பாத்திரங்களே .பொதுவாய் பெண் பாத்திரங்களை கண்ணீர்
காவியங்களாகவோ , காமப் பெட்டகங்களாகவோ , தோல்வியின் உருவங்களாகவோ காட்சிப் படுத்தும்
நாவல் உத்தியிலிருந்து விலகி நிற்கிறது இந்நாவல்.
புஷ்பவள்ளி
,பேச்சியம்மாள் , வள்ளியம்மை ஆச்சி ,கீரைப்பாட்டி ,கனகா , சாவித்திரி ,செண்பகம் ,ஸ்டெல்லா
,மானூத்து விஜயா [ முழுப்படியலும் போடவில்லை] இப்படி நிறைய பெண் பாத்திரங்கள் .ஒவ்வொருவரும் வாழ்வில்
பாதிக்கப்பட்டவர்கள் .ஆனால் எல்லோருமே தடையை உடைத்து எழுபவர்கள் . விதவை மறுமணம் நாவலில்
சமூக இயல்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது .ஆம் .உழைக்கும் மக்களின் பண்பாடு அதுவே .மத்திய
தரத்தின் மேட்டுக்குடியின் பண்பாடுதான் விதவை மறுமணத்துக்கு எதிரானது . அதிலும் தன்
சொந்தக் காலில் எழுந்து நிற்கும் பெண்கள் நாவல் நெடுக .
பட்லர் பொன்னனையன்
,ஜமால் ,நிக்கோலஸ் ,சாலமன் ,தஞ்சை பார்த்திபன் ,ஞானதாஸ் ,குமரேசன்,காளிதாஸ் ,ராமையா
,கணேஷ் ,ரவி ,பாலமுருகன் ,சன்னாசி ,மொக்கராசு,சிவா இப்படி நாவல் நெடுக உழைக்கும் மனிதர்கள்
எல்லோரும் வாழ்வை அதனதன் போக்கில் எதிர்கொள்ளும் எளிய மக்கள் .
பூ வியாபாரமும்
, கருவாட்டு வியாபாரமும், காய்கறிக்கடையும், மீன் கடையும், சந்தை மாரியம்மாள் கோயிலும்
விழாவும் , ஆட்டு சந்தையும் ,மாட்டுச் சந்தையும், துணி வியாபாரமும் ,கந்துவட்டியும்
, சுய உதவிக்குழுவும் ,இட்லிக் கடையும் ,டீ வடை வியாபாரமும் எல்லாம்தானே சந்தை .
மஞ்சுநாதன்
,ராம்சேட்,சாமியார் ,செல்வா என வில்லன்கள் . இவர்களால் சந்தை பறிபோவது நாவலில் மையச்
சரடு . முதல் பாதி பரபரப்பு ஏதும் இல்லாமல் கிராமத்தான் பாடு சொல்வது போல் கதை நகர்கிறது
.பின் பகுதி கொஞ்சம் விறுவிறுப்பு . ஆயினும் கால வர்த்தமான மூர்க்கமான மாறுதலை எளிய
மக்கள் எதிர்த்து நிற்க முடியாமல் வெவ்வேறு திசையில் ஓட வேண்டியுள்ளது.
ராம் சேட்
மொத்த சந்தையையும் விழுங்க வெறிகொள்கிறான் .கூட்டாளி செல்வா அதற்கு மாறாக மக்கள் கோபத்தை
கணக்கில் கொண்டு பாரம்பரியமான சந்தைக்கு கொஞ்சூண்டு இடம் விடும் உத்தி நாவலின் இறுதி
கிளைமாக்ஸ் மட்டுமல்ல நாட்டு நடப்பும்கூட
“ கடல் ஒன்று கைக்குட்டை ஆனது ; நீண்ட
பாரம்பரியம் காலநதியில் கரைந்து போனது .”
சந்தையின்
இரைச்சலுக்கும் கூச்சலுக்கும் மத்தியில் மென்மையாய் புல்லாங்குழலை வாசிப்பதுபோல் நாவல் நகர்கிறது .
இது ஒரு முரண் தொகைதான் .மனிதர்கள் ஆண்களும் பெண்களுமாய் மனிதம் மிளிர வலம் வருகிறார்கள்
. ஆயினும் சந்தையோடு இணைந்த விவசாயிகள் ,உற்பத்தியாளர்கள்
, நுகர்வோர்கள் உளவியல் சமூக உறவுகளோடு நாவல் விரிந்திருக்கலாமோ என ஒரு சிறு பொறி என்னுள்
. அதே போல் நாவலில் சாதி மதம் இலை மறைவு காயாக ஆங்காங்கு தலைநீட்டுகிறது . உண்மையில்
சந்தையின் செய்ல்பாட்டிலும் சாதியின் கோரக்குறுக்கீடு உண்டல்லவா ? அதுவும் மதுரைச்
சந்தையில் அது இல்லாமலா ? நூலாசிரியர் ஏனோ தவிர்த்துவிட்டார் .
சந்தைகளின்
வீழ்ச்சி ; பேச வேண்டிய களம் . இன்னும் உரக்க , இன்னும் அதிகமாகப் பேசவேண்டும்.
சந்தை [ நாவல் ],ஆசிரியர் : யாழ் .எஸ் .ராகவன் ,
வெளியீடு
: பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு :
044 – 24332924 /24332424 /8778073949 www.thamizhbooks.com
, bharathiputhakalayam@gmail.com
பக்கங்கள்
: 232 , விலை : ரூ.240/
சுபொஅ.
12/9/2023.
0 comments :
Post a Comment