வாணம் – வாணவேடிக்கை – பட்டாசு
ஆண்டுதோறும்
செப்டம்பர் மாதம் உலகப் புகழ்பெற்ற நயகர நீர்வீழ்ச்சியின் இருபக்கமும் கனடாவும் அமெரிக்காவும்
மாறிமாறி வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை தினசரி இரவு முழுக்க நடத்துமாம். இதனை வேடிக்கை
பார்க்கவே பெரும் கூட்டம் கூடுமாம் . காணக் கண்கோடி வேண்டுமாம் இவ்வாண்டு நயகரா போய்வந்தபின்
கனடாவிலிருந்து என் மகள் எழுதினாள்.சொன்னாள் .மகிழ்ச்சியின் பூரிப்பு கண்களிலும் வார்த்தைகளிலும்
தெரிந்தது .
1985 மாஸ்கோ
உலக இளைஞர் விழாவில் பங்கேற்ற போது , நிறைவு நாளன்று இரவு நடைபெற்ற வாணவேடிக்கைகளைக்
கண்டு வியந்து போனவன் நான். .என் மகள் கனடாவிலிருந்து நயகரா வாணவேடிக்கை நிகழ்வைச்
சொன்னபோது அது நினைவில் பூத்தது .
2008 ஆம்
ஆண்டு சீனாவில் பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது ; நிறைவு நாளன்று நடைபெற்ற
வாணவேடிக்கைகளைக் கண்டு உலகமே வியந்து பாராட்டியது .அது ’எலக்ட்டிரானிக் ப்ளே’ன்னு
ஒரு குற்றச்சாட்டை மேற்கு ஊடகங்கள் சொல்லிவிட்டு மூக்குடைபட்டது . சீன வாணவேடிக்கையின்
அற்புதம் உலகில் தனித்துவமானது .மிகவும் மூத்ததும் கூட.
ஆதிகாலத்தில்
இந்தியாவிற்கு பட்டாசுகள் அறிமுகமானதே சீனாவில் இருந்துதான் என்பது வரலாற்று உண்மை
. சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் உருவானதே
.சீன நாட்டிலிருந்தே தொழில் நுட்பம் கற்றனர் என்பதும் செய்தி .
இதன் பொருள்
அதற்கு முன் நமக்கு பட்டாசே கிடையாது என்பதா ? அல்ல . சில வெடி பொருட்களும் முயற்சிகளும்
நம்மிடம் உண்டு .சீனத்தின் மேம்பட்ட நுட்பம் ஒரு பெருங் கலையாக தொழிலாக பரிணமிக்க நமக்கு
உதவியது .
நான் சிறுவனாக
இருந்த போது ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையின் போது தேங்காய் குடுமியில் குங்கிலிகம்
,கரித்துள் எல்லாம் பொதிந்து ஒரு கயிற்றில் கட்டி நெருப்பு வைத்து தலைக்கு மேல் சுற்றுவோம்
பூப்போல் நெருப்புப் பொறி பறக்கும் . இருட்டு வானில் நம்மைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள்
பறப்பதுபோல் இருக்கும் .இதனை வாணம் என்போம். அது தனிக்கதை .வாணவேடிக்கை என்ற சொல் அதிலிருந்து
பிறந்ததாக இருக்குமோ ?
கோயில் திருவிழாக்களில்
இடம் பெறும் வாணவேடிக்கை மக்களை ஈர்க்கும் .கேரளாவில் திருச்சூரில் பூரம் திருவிழாவின்
போது நடக்கும் வாண வேடிக்கை புகழ்பெற்றது .சில ஆண்டுகள் முன்பு கொல்லம் மாவட்டம் புட்டிங்கல்லில்
அம்மன் கோவிலில் நடைபெற்ற வாண வேடிக்கையில் ஏற்பட்ட விபத்தில் 108 பேர் உயிர் பலியாகினர்
. கேரளாவில் கோவில்களில் போட்டியாகவே வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் இடம்பெறுவது உண்டு.விபத்துக்குப்
பிறகு இதற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவிட்டது .
வாணவேடிக்கைகளை
கொண்டாட்டத்தின் ஒரு கூறாகவே மனித குலம் கொண்டிருக்கிறது .நேற்றும் அப்படித்தான் .இன்றும்
அப்படித்தான். நாளையும் அப்படித்தான்.
தேர்தலில்
வென்றால் பட்டாசு வெடிக்கிறோம் . தலைவர் வருகையின் போது பட்டாசு வெடிக்கிறோம். கல்யாணத்தின்
போது பட்டாசு வெடிக்கிறோம். சாவையும் கொண்டாடி பட்டாசு வெடித்து விடுகிறோம் .
அப்படி இருக்க
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை ஏன் ? இதுதான் பொதுவான கேள்வி .
தீபாவளிக்கு
வெடிப்பதும் மற்ற சந்தர்ப்பங்களில் வெடிப்பதும் ஒன்றல்ல . அவை எப்போதோ எங்கோ குறிப்பிட்ட
ஒரு நேரத்தில் மட்டும் வெடிப்பவை .இதனால் பெரிய பாதிப்பு இல்லை .இதுவும் தேவை இல்லை
என்பதே என் தனிப்பட்ட கருத்து . ஊர் முழுக்க நாள் முழுக்க பட்டாசு வெடிப்பதின் மாசுகேட்டோடு
அதை ஒப்பிடவே முடியாது .கொஞ்சம் யோசிப்போர் இதனை புரிந்து கொள்வர்.
பட்டாசுக்குத்
தடை என்பது ஊடகங்களில் திரிக்கப்பட்ட
செய்தி .மதவெறியர் கூச்சல் . உண்மையில் ஒழுங்கு படுத்தல்
என்பதே சரி !
குறிப்பிட்ட
நேரம் ,குறிப்பிட்ட ஒலி அளவு ,குறிப்பிட்ட மாசு அளவு இதற்கு உட்பட்டு வெடி என்பது பிழையானது
அல்ல .மிகச்சரி ! மிகமிகச் சரி !
நாகரீக சமூகம்
அதனை ஏற்க வேண்டும் . இந்துத்துவ வெறியரிடம் அந்த நாகரீகத்தை எதிர்ப்பார்ப்பது வீண்தான்.
ஒரு நாள்
தான் ஒன்றுமாகாது என பொறுப்பில்லாமல் பேசும் அண்ணாமலைகளை என்ன சொல்வது ? மதவெறி தலைகேறினால்
இப்படித்தான் பேசச்சொல்லுமோ ?
நான் மேலே
தொடக்கத்தில் எடுத்துக் காட்டிய வாணவேடிக்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தாகும் .காதைக்
கிழிக்காது . மூக்கை நெடி துளைக்காது .புகை மூச்சுமுட்டச் செய்யாது .சுற்றுச் சூழலை
கவனத்தில் கொள்ளும் .
அப்படிப்பட்ட
வாணவேடிக்கை அற்புதங்களை ஊர்கூடி செய்யலாமே .ஊரைக் கூறுபோட நினைக்கும் மதவெறியர் சாதிவெறியர்
கூட்டத்துக்கு ஊர் ஒற்றுமை எனில் - ஊரும் சேரியும் கூடிய ஒற்றுமை எனில் கசக்கத்தானே
செய்யும் ?
எல்லோர் தூக்கத்தையும்
கெடுத்து ,பல விபத்துகளை உருவாக்கி , சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வீட்டுக்கு வீடு தெருக்கு
தெரு பட்டாசு வெடிப்பதை நாம் ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது ? ஊர்கூடி வாண வேடிக்கை
நிகழ்த்த ஏன் முன்வரக்கூடாது ? அப்போதும் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழல் மாசு காப்புக்கும்
முக்கியத்துவம் கொடுத்து செய்ய வேண்டும் .
நான் மிக
இளமையிலேயே தீபாவளிக் கொண்டாட்டத்தை பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டவன் . என் அண்ணனும்
தம்பியும் மாமனும் மச்சானும் நண்பர்களும் சுற்றியுள்ளோரும்
வெடிக்கும் பாதிப்புகள் எனக்கும்தானே ! உங்களுக்கும் தானே !
சரி ! சரி
! பட்டாசு வெடிபோர் பாதுக்காப்பு விதிகளுக்கு உட்பட்டு வெடியுங்கள் ! வேறென்ன சொல்ல….
[ இங்கு சொல்லப்பட்டிருப்பவை
முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்துகளே .]
சுபொஅ.
23/10/2022.
0 comments :
Post a Comment