சிறுகதை .6.தீபாவளியும் கிரஹணமும்

Posted by அகத்தீ Labels:

 


சிறுகதை .6.

 

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

 


 

தீபாவளியும் கிரஹணமும்

 

 

 மணி ஏழாச்சு .. துரைக்கு இன்னும் விடியலியா ? அப்படி விடிய விடிய என்னதான் போண்ல நோண்டிகிட்டு இருந்தானோ ? தீபாவளி அவனுக்கு கிடையாது ! சரி ! விட்டுத் தொலை ! கழுதையை திருத்த முடியாது ! பிள்ளைகளுக்காவது காலையில எழுந்திருக்கலாம் இல்லே …” – சிவதாணு புலம்பினார் .

 

 

 “ நல்ல நாளும் பொழுதுமாய் அவனைக் கரிச்சுக் கொட்றதே உங்க வேலையாப் போச்சு ! அவன் லேட்டாவே எழுந்திருக்கட்டும் ! நீங்கதான் மூணு மணிக்கே எழுந்திருச்சு யாரையும் தூங்கவிடாமல் அரிச்சிட்டிருக்கீங்களே “ – ஆவுடையம்மாள் பையனுக்கு வக்காலத்து வாங்கிற சாக்கில் புருஷனையும் போட்டு தாளிச்சிட்டா .

 

“ அடடா! லீவு நாள்ல கூட நிம்மதியா தூங்கவிடமாட்டீங்களே…” என சலிச்ச வாறு சுரேஷ் சோம்பல் முறித்தான் .

 

 “ அப்பா ! அப்பா ! இண்ணைக்காவது எங்ககூட எண்ணை தேய்ச்சி குளிங்க அப்பா ! “- பிள்ளைகளின் கோரஸ் கெஞ்சல் .

 

 “ உங்க அப்பா எண்ணிக்குடா எண்ணை தேய்ச்சி குளிச்சிருக்கான் … மொதல்ல காலையில குளிக்கச் சொல்லு …” சிவதாணு எரிச்சலோடு குரல் கொடுத்தார் .

 

 “ லீவு நாளில் எண்ணிக்கு நான் காலையில குளிச்சிருக்கேன் .இன்றைக்கும் அப்படித்தான்… வழக்கம் போல் மாலை 4 மணிக்குத்தான்….”- சுரேஷ்

 

 “ பல்லாவது விளக்குவானா கேளு !” _ சிவதாணு

 

 “ அப்பா ! நீங்க படுக்கையிலிருந்து எழுந்ததும் சிவசிவான்னு  சொன்னீர்களே ..எச்சில் வாயால் சிவநாமம் செப்பலாமோ …” – சுரேஷ் கேட்க .

 

“ஏண்டா ! அப்பாவ வம்பு இழுக்கிற … மொதல்ல எழுந்து போய் எச்சியை துப்பிட்டு பல் விளக்கிட்டு வந்து காபி குடி ..” –அம்மா ஆவுடையம்மாள் சத்தம் போட்டாள்.

 

 

 “வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போக என்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே ..

என சித்தர் சிவவாக்கியர் பாடலை பாடிக்கொண்டே பாத்ரூம் நோக்கி நகர்ந்தார் சுரேஷ் .

 

 “ பாட்டி ! அப்பா ஏன் எண்ணை தேய்ச்சே குளிக்க மாட்டேங்கிறார் ?” – பேரப்பிள்ளைகள் பாட்டியைக் குடைய ஆரம்பித்தன .

 

“அத்தை ! இவங்களும் நூறு முறை கேட்டுட்டாங்க ! நீங்களும் நூறுமுறை சொல்லியாச்சு” – தருமு சொன்னாள் .

 

 “ பாட்டி ! பாட்டி ! அம்மா கிடக்கிறாங்க நீங்க சொல்லுங்க பாட்டி ..”

 

 “ உங்க அப்பன் சுரேஷ் எட்டாவது படிக்கும் போதுன்னு நினைக்கிறேன் .ஒரு திபாவளி அண்ணிக்கு காலங்காத்தால எண்ணை தேய்க்க உங்க அப்பனை அவங்க அப்பா அதுதான் உங்க தாத்தா  எழுப்பினாரு இவன் வர முடியாது .. தீபாவளி தமிழன் பண்டிகை இல்லை ..பார்ப்பான் பண்டிகை ..ன்னு முரண்டு பண்ணினான்…”

 

 “ அந்த கடன் காரன் ஈவெரா பொதுக்கூட்டத்தை கேட்காதேன்னு சொன்னேன் .  மாமன் கூட்டிட்டி போய் புள்ளயையும் கெடுத்திட்டான் … சரி ! பட்டாசு வெடிப்பியா ? பட்சணம் சாப்பிடுவியா ? புது டிரெஸ் போடுவியான்னு தாத்தா கேட்க …”

 

“ உங்க அப்பனும் பதிலுக்கு பட்டாசு வெடிக்கமாட்டேன் . புது டிரெஸ்ஸை இன்னொரு நாள் போட்டுக்குவேன் … அம்மா சுட்டத சாப்பிடுவேன்ன்னு சொல்ல …”

 

”அப்புறம்”- கோரஸாக குழந்தைகள் .

 

 “ அப்புறம் உங்க தாத்தா கோவத்தில ருத்ரதாண்டவமே ஆடிட்டா .. இன்னிக்கு எண்ணை தேய்ச்சு குளிக்கலைன்னா இனி ஆயுசுக்கும் எண்ணை தேய்ச்சுக் குளிக்கக்கூடாதுன்னு உணர்ச்சி வசப்பட்டு சொல்ல ; அவனும் சத்தியமா இனி எண்ணை தேய்ச்சி குளிக்கவே மாட்டேன்னு சொன்னவன் அப்புறம் எண்ணை பக்கம் தலைவச்சே படுக்கலை ..”

 

“ அதனாலே என்ன குடியா முழுகிப் போச்சு நாற்பது வருஷமா எண்ணை தேய்க்காததால எண்ணைக்கான செலவுதான் மிச்சம்..” என்றபடியே சுரேஷ் வெளியே வந்தான் .

 

 “ எண்ணை தேய்ச்சு குளிக்கலாமா ?கூடாதா ? பட்டிமன்றத் தலைப்பு ரெடி” என்றவாறு ராமசுப்பு உள்ளே நுழைந்தான் …

 

 “ இன்றைய தீபாவளி பட்டி மன்றம் வீட்டிலேயே ஆனால் என்ன லேடீஸ மட்டம் தட்ற ஜோக் தோரணங்க இருக்காது” தருமு பந்தை இலக்கு நோக்கி வீசினாள் .

 

 “ அடராமா ! ஆளவிடுங்க ! யாருக்கு உடம்புக்கு எண்ணை குளியல் தேவையோ அவங்க குளிங்க , வேண்டாதவங்க விடுங்க ,சடங்கு ,சம்பிரதாயம் ,கலாச்சாரம் ,புண்ணாக்குன்னு பேசிக்கிட்டு வராதீங்க..” உள்ளே நுழைந்த ராமலிங்க முதலிலேயே தீர்ப்பு வழங்க பட்டிமன்றம் துவங்காமலேயே முடிந்தது .

 

 “ தங்கச்சி ! என்ன ஸ்பெஷல் ஸ்வீட்டு ..”ராமசுப்பு கேள்வி

 

 “ அண்ணா நேற்றே உங்கள எதிர்பார்த்தேன் கறித்தீபாவளி ஆச்சே ! அண்ணா ஒரு ஸ்பெஷல் நியூஸ் அவர் தீபாவளி பிடிக்காதுன்னு சொன்னாலும் கறித்தீபாவளியில்  செம கட்டுதான்…” என கணவரை கிண்டலடித்தார் .

 

 “ சரி ! பலகாரம் முடிந்ததும் சீட்டுக் கச்சேரிதானே” சிவதாணு கேட்டார் .

 

 “ இதில மட்டும் அப்பா பிள்ளை நாத்திகர் ஆத்திகர் எல்லாம் ஒண்ணாயிடுறீங்க..” அம்மா ஆவுடையம்மாள் .

 

“ எனக்கொரு சந்தேகம் கர்நாடகாவில தீபாவளி நாலாவது நாள் கொண்டாட்டமே சூதாட்டம்தானாமே … போலிஸ்கூட கண்டுக்காதாமே …” தருமு வாயைக் கிளறிவிட்டாள்.

 

 “ தீபாவளிக்கு ஊருக்கு ஊர் ஒரு கதை ,நரகாசுரன் கதை , மகாவீர வர்த்தமானர் சமாதி ஆன கதை ,ராமாயண ராமன் அயோத்திக்கு திரும்பும் கதை ,லட்சுமி கதை , மகாபாரத பாண்டவர் வனவாசம் முடித்து ஹஸ்தினாபுரம் திரும்பும் கதை .. ஆமணக்கு எண்ணெய் கண்டுபிடிச்ச கொண்டாட்டம் , இப்படி அநேக உருட்டல்கள் . ஆங்காங்கு ஜனங்க கொண்டாடிக்கிட்டு இருக்கிற பண்டிகைகள மதம் ஹைஜாக் செய்து ஊருக்கு ஒரு கதை திரிச்சிட்டான்… ’ ஒரே நாடு ,ஒரு பண்டிகை , ஒரு கதை’ன்னு மோடி சொன்னால் எவனாவது கேப்பானா ? சாத்தியமா ?” இப்படி ராமலிங்கம் லெட்சர் அடிக்க ..

 

“ கர்நாடகாவில் தீபாவளிக்கு சூதாடுறது உண்டா இல்லையா சொல்லுப்பா…” சுரேஷ் இறுக்கினான் .

 

 “ உண்டு ! கர்நாடகாவில் சில பகுதிகளிலும் மகாராஷ்டிராவில் சில பகுதிகளிலும் சூதாட்டமும் பண்டிகையின் கூறாகும் ..அது மகாபாரத்தக் கதையோட சேர்த்தி..”

 

 

 “ சூதாட்டமும் பண்டிகையா ?” பாட்டி ஆவுடையம்மாள் தலையில் அடித்துக் கொண்டார் .

 

 “ பொண்டாட்டிய வச்சு சூதாடினாலும் தருமர்தானே !” என ராமலிங்கம் வெடிவெடிக்க ராமசுப்பு கடுப்பானார் ..

 

“ பண்டிகையோ திருவிழாவோ ! ஆம்பளைகளுக்குதான் கொண்டாட்டம் .பொம்பளைகளுக்கு இரட்டை வேலை . கொண்டட்டமாவது மண்ணாங்கட்டியாவது “ என தருமு சலிக்க ஆவுடையம்மாள் ஆமாம் போட்டார்.

 

 “ சரி ! சரி ! சீக்கிரம் கச்சேரியை ஆரம்பிப்போம் … இண்ணைக்கு சாயங்காலம் சூரிய கிரஹணம் . பரிகாரமெல்லாம் இருக்குன்னு “ ராமசுப்பு சொல்ல …

 

“ ராமசுப்பு ! கச்சேரி முடிஞ்சதும் போய் கொஞ்சம் அருகம் புல் கொண்டாந்து தா ! கிரஹணத்தின் போது வீட்ல போட்டு வைக்கணும் …” சிவதாணு கேட்டுக்கொண்டார்.

 

 “ சாயங்காலம் நம்ம வீட்டுக்கு இந்த பக்கம் நிழலு விழுது ,காலையில அந்தப்பக்கம் விழுது அதுப்போல் நிலவு சூரியனுக்கு முன்புறமா செல்லும் போது பூமியில் சில பகுதியினருக்கு சூரியன் மறையும் .இதனால் மர்மக் கதிரோ விஷக் கதிரோ எதுவும் கிடையாது .அப்போது சாப்பிடலாம் . வெளிவரலாம் . சூரிய கிரஹணத்தைக் கண்டு களிக்கலாம்… கர்ப்பிணிப் பெண்களும் வெளியே வரலாம் பார்க்கலாம்” ராமலிங்கம்  லெட்சர் அடிக்க சிவதாணு கடுப்பானார் .

 

 “ அடேய் ! ரொம்ப ஓவராப் போறிங்க கர்ப்பிணிகளும் வெளிய வரலாம் திங்கலாம் .. என்னடா இதுவெல்லாம் ..”

 

“ அப்பா ! பதறாதீங்க உலகத்தில எந்த நாட்டிலாவது கர்ப்பிணி பெண்ணுங்க சூரிய கிரஹணத்தின் போது வெளியே வரக்கூடாதுன்னு இருக்கா ! திங்கக்கூடாதுன்னு இருக்கா ? அங்கெல்லாம் குழந்தைக செத்தாப் போச்சு … ஏன் விலங்கு ,புழு ,பூச்சி ,பறவை இவற்றில கர்ப்பமா இருக்குது போய் ஒளிஞ்சுக்கவா செய்யுது ? இங்கதான் அந்த முட்டாள்தனமெல்லாம்…” ராமலிங்கமும் சுரேசும் மாறி மாறி சொல்ல்..

 

 “ ராமசுப்பு ! அவங்க கிடக்காங்க தறுதலைங்க நீங்க அருகம் புல் கொண்டாங்க…” சிவதாணு கட்டளையிட்டார்.

 

 “ யார் !யாரு ! எங்கூட வந்து சூரிய கிரஹணத்தைப் பார்க்கவும் ஐஸ்கிரீம் சாப்பிடவும் வரீங்க … தமிழ்நாடு அறிவியல் இயக்கம் டெல்ஸ்கோப்பெல்லாம் ஏற்பாடு செஞ்சுருக்காங்க  “ ராமலிங்கம் கேட்க

 

பிள்ளைகள் ,சுரேஷ் ,தருமு எல்லோரும் கையை உயர்த்தினாங்க … சிவதாணு முறைக்க தருமு கையை இறக்கினாள் .

 

 “பாட்டி நீங்களும் வாங்க” எனப் பேரப்பிள்ளைகள் அடம் பிடிக்க பாட்டியும் சூரியகிரஹணத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட ரெடியானாள் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

22/10/2022.

 

 

 

 


0 comments :

Post a Comment