ஆரோக்கிய வாழ்வுக்கு இலவச ஆலோசனைகள். {சிரிங்க…. சிரிச்சுகிட்டே இருங்க….}

Posted by அகத்தீ Labels:

 ஆரோக்கிய வாழ்வுக்கு இலவச ஆலோசனைகள்.

{சிரிங்க…. சிரிச்சுகிட்டே இருங்க….}

 

குறிப்பு :

ஆட்டுகல்லில் மாவு அரைங்க ,

அம்மிக்கல்லில் கறிக்கு அரைங்க ,

விறகு அடுப்பில் சமைங்க ,

இப்படி குளிங்க ,

இதை இதை சாப்பிடுங்க

என இயற்கை ஆரோக்கிய வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் மகாபீடங்களின் ஆலோசனைகளைக் கேட்ட பின் எனக்கும்  “ஞான ஒளிவட்டம்” பின்னால் பளிச்சிட யோசித்தவையே கீழே !

 

1] யாரும் பேண்ட் சர்ட் போடாதீங்க ! அவை குளிர் மிகுந்த ஐரோப்பிய உடை . கோவணம் மட்டுமே கட்டுங்கள் .சூரிய ஒளி உடம்பில் பட்டுக்கொண்டே இருக்கட்டும் ! நோய் எதிர்ப்பு சக்தி கூடும் .நம் முன்னோர்கள் நூறாண்டு வாழ்ந்த ரகசியம் இதுதான் .[ அன்றைய சராசரி வாழ்நாள் 30 ஆண்டுகளே எனும் உண்மையை சொல்லும் மடையர்கள் சொல் கேளாதீர்]

 

2] பெண்கள் ஜாக்கெட் அணியாதீர் ! மார்புப் புற்று நோய்க்கு ஜாக்கெட்டே காரணம் . அதனால்தான் நம் முன்னோர் ஜாக்கெட் அணிய எதிர்ப்பு தெரிவித்தனர் . முன்னோர்கள் முட்டாள்களில்லை. [ ஜாக்கெட் அணிய போராடிய சமூகசீர்திருத்தவாதிகள் அந்நிய கைக்கூலிகள் . ]

 

3] காங்கிரிட் வீடுகளே நோய்க்கு மூலகாரணம் . ஓலைவேய்ந்த மண்குடிசையே ஆரோக்கியம் வாசம் செய்யும் மாளிகை .ஆகவே குடிசையில் குடியேறுங்கள் ! [ குடிசைகள் இல்லா தமிழ்நாடு என்பது கொள்ளையட்டிப்பதற்கான முழக்கமே !]

 

4] கேன் தண்ணீரோ /குழாய் தண்ணீரோ குடிக்காதீர் .இரசாயணம் கலந்தது .நோய் உருவாக்கும் ! ஐந்து கி.மீ நடந்து போயாவது குட்டையில் தேங்கி நாறும் தண்ணீரை எடுத்து வந்து அருந்துங்கள் .தாயையும் தண்ணீரையும் பழிக்கக்கூடாதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க ! [ சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்பது சுத்தமான ஏமாற்று ]

 

5] நோய் வந்தால் டாக்டரிடம் போகாதீங்க ! சுக்குக்கு மிஞ்சின மருந்துமில்லை ; சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை என்று நம்ம மூத்தோர் சொன்னது பொய்யில்லை . நோய் வந்ததும் சுக்கை அரைச்சு உடலெல்லாம் பூசுங்க . அப்புறம் கடுக்காய் ,அரளிவிதை , இஞ்சி , ஊமத்தை ,வேப்பிலை ,துளசி இப்படி பதினெட்டு மூலிகைகளை அரைத்து காய்ச்சி வேத முறைப்படி அரை மண்டலம் குடியுங்கள் ! [ எந்த முறை வைத்தியம் ஆயினும் முறையா படிச்சவங்களிடம் போகாதீங்க ! அவங்க பணம் புடுங்குவாங்க ! வாட்ஸ அப் வைத்தியமே நல்லது]

 

6] பஸ் ,ரயில் ,பைக் ,ஸ்கூட்டர் , கார் ,வேன் எதிலும் பயணம் செய்யாதீர்! மூட்டுவலி ,கால்வலிக்கு அதுதான் காரணம் . இருபது முப்பது கி.மீ ஆனாலும் நடந்தே செல்லுங்கள் . [ வாகனங்கள் கார்ப்பரேட் கொள்ளை அடிக்கவே என உணருங்கள் .வாகனங்கள் வாங்காதீர் !]

 

7 ] நீங்க இப்ப சாப்பிடுகிற அரிசி ,காய்கறி ,பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக் .ரப்பர் ,இராசயணம் இவற்றால் தொழிற்சாலைகளில் சீனாவில் செய்யப்படுபவை . எனவே செடியில் காய்த்த காய்கறிகள் , மரத்தில் பழுத்த பழங்கள் ,வயலில் விளைந்த தானியங்களை “ ஆர்கானிக்” எனக் கேட்டு வாங்குங்கள் . விலையைப் பற்றி கவலைப்படாதீங்க !நீங்களே வயலில் போய் நெல்லை உதிர்த்து உரலில் குத்தி முறத்தில் புடைத்து சோறாக்கி உண்டால் உத்தமம் . [ ஆர்கானிக்குக்கு அர்த்தம் என்னன்னு யாராவது கேட்டால் பெப்பெப்பே என சொல்லுங்க]

 

இன்னும் நிறைய   “பொன்னான” ஆலோசனைகள் கைவசமிருக்கு வேண்டுவோர் அணுகினால் தரப்படும்.

 

இவண்,

முகநூல் வாட்ஸ் அப் போதனைகளால் நொந்து நூடுல்ஸ் ஆன அப்பாவி

சுபொஅ. 6/9/2022.

0 comments :

Post a Comment