தொ.ப வை வாசிக்க ஓர் திறவுகோல்.
சுமார் இரண்டு
ஆண்டுகளுக்கு முன் தன் எழுபதாவது அகவையில் நம்மை விட்டுப் பிரிந்தார் பண்பாட்டு ஆய்வாளர்
தொ .பரமசிவன் . அவரின் சிந்தனைப் போக்கையும் எழுத்துகளையும் இளைய தலைமுறைக்கு அறிமுகம்
செய்யும் எளிய நூல் “சாதிகள்
: உண்மையுமல்ல …பொய்மையுமல்ல…,”[ நேர்காணல்கள் ].
13
நேர்காணல்களின் தொகுப்பு . தொ .பரமசிவன் என்கிற பேராளுமையை நேர்காணல் செய்த ஒவ்வொருவருமே
முத்திரை பதித்த ஆளுமைகளே .ஆகவே இந்நூல் பல கோணங்களில் தொ.பரமசிவத்தின் பண்பாட்டு நோக்கு
,திராவிட இயக்கம் , தமிழ் தேசியம் ,பெரியார் ,கோவில் , சாதி , தமிழ் பண்பாட்டு வரலாறு
இவற்றை மக்கள் வாய்மொழித் தரவுகளோடு ஆழமாகவும் அகலமாகவும் விவாதிக்கும் நூலாகிவிட்டது
.
இந்நூலை
திறக்கும் போது சிந்தனைக்கான பல புதிய வாசல்கள் திறக்கும் ; நூலாசிரியரோடு உடன்பட்டும்
முரண்பட்டும் நிறைய கேள்விகள் எழும் . அதுவே இந்நூலின் வெற்றி .
தொ.பரமசிவன்
வழக்காமான எழுத்துமொழி சார்ந்த ஆய்வினின்று விலகி வாய்மொழி வழக்காறுகள் என மக்கள் வாழ்வோடு
ஊடாடி புதுதடத்தில் பயணித்தவர் . ”எழுத்து
என்பதே அதிகாரத்தின் பிறப்பிடமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.” என திரும்பத்
திரும்பச் சொன்னவர் .அழகர்கோயில் சார்ந்து இவர் செய்த முனைவர் பட்ட ஆய்வு பெரிதும்
பேசப்பட்டது .
இவர்
பெரியாரை பெரிதும் முன்னிறுத்துகிறார் . அதே சமயம் கோயில் சமயம் நாட்டார் வழிபாடு குறித்து
பெரிதும் ஆர்வம் காட்டுகிறார் . அதேபோல் , “ நான் தமிழ் தேசியர்தான்” என்று சொல்லும்
போதே, “ நான் இந்து அல்ல” என பகீரங்கமாக அறிவிக்கிறார் . திராவிட சித்தாந்தம்
குறித்து ஓர் வித்தியாசமான பார்வையை முன் வைக்கிறார் .அதே நேரம் கம்யூனிஸ்டுகளின் மீது
சில நியாயமான விமர்சனங்களையும் சில மேலோட்டமான நியாயமற்ற விமர்சனங்களையும் வைக்கிறார்
. அவை பெரும்பாலும் பேட்டி கண்டவர்கள் இவர் வாயிலிருந்து பிடுங்கியதாகவும் உள்ளன .
பல
சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட நேர்காணல்களாக இருப்பதால் பலவற்றில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கேள்விகளும் பதிலும்
இடம் பெறுவதால் ஆரம்பத்தில் இந்நூல் சிறிது சோர்வு தட்டுகிறது . ஒவ்வொன்றிலும் மாறுபட்ட
கேள்விகளும் இருப்பது புரிதலை மேம்படுத்துகிறது . “ மொழிக்கல்வியும் மதிப்பீடுகளும்” என
வ.கீதா ,கோ .பழநி செய்த நேர்காணலும் , “ கோட்பாட்டுரீதியான
பிரச்சனைகள்” எனும் தலைப்பில் சுந்தர்
காளி மேற்கொண்ட நேர்காணலும் புதிய கோணத்தில் பார்வையை ஆழமாக விரிக்கிறது .கால்டுவெல்
குறித்த நேர்காணலும் ,ச.தமிழ்ச்ச்செல்வன் , அ.முத்துலிங்கம் ஆகியோரின் நேர்காணல்களும்
இன்னொரு கோணத்தை வெளிக்கொணர்கிறது . விரிவஞ்சி ஒவ்வொரு நேர்காணலையும் இங்கு நான் சுட்டவில்லை.
பெரியாரைப்
பற்றி பல மதிப்பீடுகளைச் சொல்லிச் செல்கிறார் ,” பார்பனியம் கோலோச்சி நின்றபோது , ‘பார்ப்பான்’
என்ற சொல்லையே இழிசொல்லாக மாற்றிக் காட்டியதுதான் பெரியாரின் சாதனை . அவருடைய வெற்றி,அதிர்ச்சி
மதிப்பீடுகளைக் கொண்டிருந்தது.” என்பது அதில் ஒன்று .
நீங்கள்
பெரியாரை போற்றுகிறீர்கள் ஆனால் கோயில்களை ஆராய்ச்சி செய்கிறீர்கள் ஏன் என்கிற கேள்விக்கு
பதில் சொல்லும் போது ,” எனக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை . அவற்றை வணங்குகிற மக்கள் மீது
கவர்ச்சி இருக்கிறது ; நம்பிக்கை இருக்கிறது . அவர்களின் அழகை நான் ரசிக்கிறேன். கோவிலுக்கு
போகும் அனைவரும் தினசரி சிவபூஜையோ விஷ்னுபூஜையோ செய்கிற மக்கள் அல்ல . கோவில் என்பதும்
திருவிழா என்பதும் நிறுவனங்கள் . திருவிழாக்களின்றி ஓர் சமூகம் இயங்க முடியாது .”
என்கிறார் .
நாட்டார்
சடங்குகள் விழாக்களில் காணப்படும் ஒரு வித ஜனநாயத்தன்மை ; நிறுவன மதங்களில் விழாக்களில்
இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார் . பல்வேறு அவைதீக மதங்களின் செல்வாக்கு ஓங்கியதையும்
தேய்ந்ததையும் வெறுமே மூடநம்பிக்கை , ஆதிக்கம் என கடந்து போகாமல் ,மக்களின் வாழ்வியல்
தேவையோடு இணைந்து பார்த்துள்ளார் .
மதம்
,கோவில் ,சடங்கு ,நாட்டார் வழிபாடு என பலவற்றை பண்பாட்டு அசைவாகக் காணும் இவரின் பார்வையில்
உடன்படவும் முரண்படவும் இடம் உண்டு .
திராவிடப்
பண்பாடென்பதை
, நான்கு மாநில பொது பண்பாடென சொல்லிச் செல்லும் போது ; 1] தாய் மாமனின் முக்கியத்துவம் ,
2] இறந்தவரை தொட்டு சடங்கு செய்தல் 3] பெண்களை பொதுவெளியில் அடிப்பதை சகிக்காமை என
சுருக்கிவிடுகிறாரோ ? சில இடங்களில் தாய் தெய்வ வழிப்பாட்டை இம்முன்றில் ஒன்றாக
வைக்கிறார் .
சாதியை
பொதுவாக எதிர்த்த போதிலும் அகமண முறையே சாதி நீடிப்பின் மையம் என்பதை போகிற போக்கில்
ஒப்புக் கொண்டாலும் தாய்மாமன் உறவு சார்ந்த பெருமிதம் சாதிக்கூட்டுக்குள் திருமண பந்தத்தை
திணிப்பதல்லவா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது .
சாதியைப்
பற்றி நிறைய பேசுகிறார் .உண்மையுமில்லை … பொய்மையும் இல்லை என ஒரு நிலை எடுக்கிறார்
.”
சாதி ஒழிப்புப் பற்றிய நம் பார்வை எல்லாம் அடிப்படையில்லாத ஆர்வக்கோளாறுகளே”
என்கிறார். மேலும்,” சாதி ஒழிப்பு என்பதை ,ஏதோ கொசு ஒழிப்பு போல சுலபமாகப் பேசமுடியாது .சாதி
என்கிற அமைப்பு அவ்வளவு எளிமையானது கிடையாது . சாதியை ஒழிக்க முடியாது ஆனால் சாதியைக்
கரைக்க முடியும்.” என்கிறார் . கொசுவையும் ஒழிக்க முடியவில்லையே , எல்லாவிதமான
கொசு அழிப்பு மருந்துக்கும் தன்னை தகவமைத்து மீண்டும் மீண்டும் புதிதுபுதிதாக உற்பத்தியாகிறதே
.கிட்டத்தட்ட சாதியும் அப்படித்தானோ ?இவை ஆழமான விவாதத்துக்கு உரியவையே !
“ ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் “ என்பதும்
பன்மைக்கு எதிரான பாசிசக் குரலே என போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் தொ.ப . “ ஒரு
நாடு ,ஒரு மொழி ,ஒரு கலாச்சாரம்” என்கிற குரல் பலமொழி பல பண்பாட்டை எதிர்ப்பதால் அதை
பாசிச முழக்கம் என்பது மிகச்சரி ; ஆயின் சாதி வேற்றுமை ,மத மோதல் இவற்றைத் தவிர்க்க
“ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்” என்பது எப்படி பாசிசமாகும் என்கிற கேள்வி என்னுள் எழுகிறது
.
“மொழித் தூய்மைவாதம் ஓர் எல்லைக்கு மேல் பாசிசமாகத்தான்
போய்முடியும்,”எனவும் , “ மொழி மாறும் தன்மையுடையது ;மாறுவதனால்தான் அது உயிரோடு இருக்கிறது,”எனவும்
சரியாகவே மதிப்பிடுகிறார் . திராவிட இயக்கம் தமிழுக்கு கொடுத்த சொற்கொடை குறித்து பெருமிதம்
கொள்ளும் தொ.ப ,பொதுவுடைமை இயக்கம் தமிழுக்கு அளித்த சொற்கொடை குறித்து பேசவில்லை
. தமிழில் அறிவியல் நூல்களை கொண்டுவந்து தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய என்சிபிஹெச் பற்றி
தொ.ப நன்கு அறிவாரே !ஏனோ தெரியவில்லை அது குறித்தெல்லாம் பேசவில்லை. “ பொதுவுடைமை
வளர்த்த தமிழ்” எனும் என் [சு.பொ.அ] நூல் இது பற்றி நிறைய பேசுகிறது .தோழர்கள்
தேடி வாசிக்கவும்.
பெரியாரை “எதிர் பண்பாட்டாளராக” தொ.ப காண்கிறார்
. ”எதிர்
பண்பாட்டின்” தேவையை வற்புறுத்துகிறார் . அனைத்து விதமான ”ஆதிக்க
பண்பாடுகளுக்கும்” எதிராக ஓர் ”மாற்றுப் பண்பாட்டை” கட்டி எழுப்ப வேண்டிய
அவசரத் தேவை இருக்கிறது . அதற்கான சிந்தனை வாசலை அகலத்திறக்கவும் ; எதிரும் புதிருமான
கேள்விகளை எழுப்பி விடைதேடவுமான காலகட்டத்தில் இந்நூல் வந்திருப்பது பாராட்டுக்குரியது
.
இன்னும்
பேசப் பேச நீளும் . இந்த நேர்காணல்களை மட்டுமே
ஆதாரமாகக் கொண்டு தொ.ப குறித்து எந்த இறுதி முடிவுக்கும் வந்துவிட முடியாது .வந்துவிடக்கூடாது
. நேர்காணல் என்பதால் கேள்வி கேட்பவரின் பார்வைக் கோணம் ; கேள்விகளிலும் பதில்களிலும்
நிச்சயம் இருக்கும் .எனவே தொ.ப வின் எழுத்துகளையும் ஆக்கங்களையும் தேடிப் படிப்பதே
சரியான விவாத களம் அமைக்க உந்தும். இந்நூல் அவற்றை தேடி வாசிக்க ஓர் திறவுகோல் .
சாதிகள்
: உண்மையுமல்ல …பொய்மையுமல்ல…,[ நேர்காணல்கள் ]
ஆளுமை : தொ.பரமசிவன்
,
வெளியீடு
: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி]லிட்., தொடர்புக்கு :044 -26251968 / 26258410
/48601884 மின்னஞ்சல் : info@ncbh.in
Online : www.ncbhpublisher.in
பக்கங்கள்
: 232 , விலை : ரூ.270 /
சு.பொ.அகத்தியலிங்கம்.
4/9/2022.
0 comments :
Post a Comment