உரைச் சித்திரம். 22.
என்
ஆடை
.என்
தேவை
.
என்
தேர்வு
.என் உரிமை.
எந்தப் பண்டிகை ஆயினும் புத்தாடை வாங்கித்தான் ஆக வேண்டுமா
? கடன் பட்டுத்தான் ஆக வேண்டுமா ? யார் அந்த விதியை திணித்தது . ஆடை என்பது அவரவர்
தேவைக்கு வாங்குவதாக ,வாய்ப்பு சார்ந்து வாங்குவதாகவே அமையும். புத்தாடையோடும்
பண்டிகை கொண்டாடலாம் .புத்தாடை இல்லாமலும் கொண்டாடலாம் .இப்பார்வையே சரி !
ஆடையில்லா மனிதன் அரைமனிதன் என்பது தமிழர் பண்பாடு .மனிதப் பண்பாடு . முழு அம்மணத்தை கும்பிட்டுப் பணியும் கும்பமேளா வடவர் பண்பாடு.
துகில் , கலிங்கம் ,அறுவை ,வம்பு [கச்சு] , படம் [சட்டை
போன்றது] சிதாஅர் [ அழுக்கேறிய கந்தலாடை] புலராக் காழகம் [அர்ச்சகர் உடை] இன்னும் இதுபோல் ஏராளமான சொற்கள் ஆடை குறித்து சங்க இலக்கியத்தில் புழங்குகின்றன .
உண்பது நாழி உடுப்பது இரண்டே என்பது புறநானூறு . உடுப்பது நான்கு முழம் என்பது சொல்வழக்கு . “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்பது மூதுரை .
செல்வச் செழிப்பு மிக்கோரின் ஆடை குறித்தும் ஏழைகளின் கந்தல் ஆடை குறித்தும் சங்க இலக்கியங்கள் ஒருங்கே பேசுகின்றன .
முடத்தாமக் கண்ணியார் எனும் புலவர் சோழன் கரிகால் பெருவளத்தானை நோக்கி பாடிய பாடல் ,பொருநரை ஆற்றுப்படுத்தும் பொருநர் ஆற்றுப்படையில் ஓர் காட்சி .
கரிகால் பெருவளத்தான் எங்களைப் பார்த்தான் . எப்படிப் பார்த்தான் ? அடங்கா
பேராசையோடு பார்த்தான் .விழுங்கிவிடுவதுபோல் பார்த்தான் . நாங்களோ வறுமையில் வாடிக்கிடந்தோம் . நாங்கள் உடுத்திருந்ததோ கந்தல் ஆடை ; அதுவும் கிழிசலை தைத்து தைத்து வேற்று நூல் எது ஆடை எது என்று காண முடியாத அளவுக்கு கந்தலாயிருந்தது . பல நாள் துவைக்காமலும் வியர்வையில் நனைந்தும் இருந்தது . எங்களுக்கு முதலில் மாற்று ஆடை தந்தான்.
அவன் தந்தது பூப்போட்ட புத்தாடை , பாம்பு தன் தோலை அடிக்கடி உரிக்கும் . அத்தோல் மிக மென்மையதாக இருக்கும் .அதுபோல் இருந்தது .ஆனாலும் உள்ளுறுப்புகளை ஊடறுத்துப் பார்க்க முடியாது . எங்களை மழைக்கால குளிர் நிலவுவது போன்ற மாடத்தில் உட்காரவைத்து ‘போக்கில்’ [கள் போன்றதாக இருக்கக்கூடும்] என்கிற உற்சாக பானத்தை அளவின்றி தந்தான் .அதுவும் அழகிய ஆபரணங்கள் அணிந்த எழில்மிகு பெண்கள் பானத்தை ஊற்றிக் கொண்டே இருந்தனர். கறியை கடித்துக் கொண்டே பானத்தைக் குடித்து குடித்து துன்பம் தொலைத்து பெருமித செருக்கோடு எழுந்து நின்றோம்.”
இதில் ஏழையின் உடையும் மேட்டுக்குடி உடையும் ஒப்புவையோடு சொல்லப்பட்டு விட்டது .
இன்னொரு காட்சி சிறுபாணாற்றுப் படையில் இருந்து ,
ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக் கோடனை நோக்கி பாணர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் இடைக்கழி நாட்டு நல்லூர் நாத்தனார் பாடியது .
பாணர்களே ! நீங்கள் நல்லியக் கோடனை நாடுங்கள் . அவன் எப்படிப் பட்டவன் தெரியுமா ? நீங்கள் அவனைக் கும்பிட கையெடுக்கும் முன்பே உங்களுக்கு ஆடை நல்குவான் .எப்படிப்பட்ட ஆடை தெரியுமா ? மூங்கிலை உரித்த தோல் போல அவ்வளவு நேர்த்தியான அழகான ஆடை .அப்புறம் பாம்பு சினந்து எழுவது போன்று எழுச்சியைத் தரும் கள்ளை குறைவின்றி ஊற்றித் தருவான். அப்புறம் அறுசுவை உணவு தருவான் .அது எப்படி இருக்கும் தெரியுமா ? அம்புகள் நிறைந்த அம்புறாதுணியையும் பூப்போட்ட கச்சணிந்த அர்ச்சுனனின் அண்ணன் வீமசேனன் எழுதிய சமையல் குறிப்பின் வழி சமைக்கப்பட்டதாகும் .
ஆடையின் நேர்த்தியை கவனீத்தீர்களா ? அடுத்து
…
மலைபடுகடாம் எனும் சங்க இலக்கியத்தில் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் எனும் குட்டிப் பெயரைக் கொண்ட புலவர் ,பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் என்கிற இன்னொரு குட்டிப் பெயர்கொண்ட மன்னனை பாடியது.
நன்னன் தன்னை நாடி வருகிறவர்களுக்கு எல்லாம் ஆடை தருவான் . எப்படிப்பட்ட ஆடை தெரியுமா ? அரைகுறையாய் ஆடை உடுத்தி வந்தோருக்கு யாரும் பழித்துச் சொல்ல முடியாத அளவு சிறந்த ஆடை . இழை மிக பெருக்கமாக பின்னப்பட்ட , மெல்லிய ,மென்மையான அதே நேரம் உடலுறுப்புகளை காட்சிப் படுத்திவிடாத அற்புதமான ஆடை தருவான் . எத்தனை நாள் தங்கினும் சலிக்காது நீண்ட நெல் அரிசியில் –[ யானைக் கொம்பன் அரிசியாக இருக்குமோ ?] விலங்குக் கறியோடு சேர்ந்து சோற்றை அள்ளி அள்ளி
கொட்டிக் கொண்டே இருப்பான்.
மேலே சுட்டிய எல்லா பாடலிலும் ஏழையின் அழுக்கேறிய கிழிந்த அரையாடை காட்சிப் படுத்தப் பட்டுள்ளதையும் ;கூடவே அழகிய நேர்த்தியான மெல்லிய ஆடை காட்சிப் படுத்தப் பட்டிருப்பதையும் ஒப்பு நோக்கி அச்சமுதாய நிலை உணர்க ! கூடவே குடிக்கக் கள் ,புசிக்க கறி சோறு ! தமிழர் பண்பாடு சிறப்போ ! சிறப்பு !
காவிரியாறு கஞ்சியாய் போனாலும் நமக்கு என்ன கிடைத்துவிடும் ? புற்நானூற்றில் பொருண்மொழிக் காஞ்சியில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் சொல்லுகிறார் ;
உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் அடக்கி ஆளும் அரசராயினும் , இரவும் பகலும் அலைந்து திரிந்து கொடிய விலங்குகளை வேட்டையாடி வாழும் ஓர் வேடனாயினும்
உண்பது நாழி[ அன்றைய முகத்தால் அளவு] அளவுதான் ; உடுப்பது மேலாடை ,கீழாடை இரண்டுதான் . ஆகவே ஒருவன் பெற்ற செல்வத்தைக் கொண்டு பிறர்க்கு உதவாமல் , தானே அனுபவிக்க எண்ணினால் அழிந்து போவான் .
மேலும் ஒளவையாரும் நல்வழி (28)யில் ஒளவையாரும்
இதனை வேறுவகையில் சொல்லிச் செல்கிறார் . யாரா இருப்பினும் உண்பது நாழி அளவே .உடுப்பது நான்கு முழம் துணியே . ஆனால் ஆசையும் கனவும் கோடியாக இருக்கிறது . அவனால் நிதானமாக சிந்திக்கவே முடிவதில்லை . இதனால் அவர் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருப்பதில்லை .எளிமையாகவும் இருப்பதில்லை .எளிதில் உடைந்து போகும் மண் கலயம் போன்றுதான் இருக்கும் .
இந்த நான்கு முழமும் ஆதியிலேயே வந்ததில்லை .
மரவுரி ,தோலாடை என பரிணாம வளர்ச்சி பெற்றதே ஆடை . தமிழர் வாழ்வியலில் நேர்த்தியான ஆடைகளின் சங்கமமாக அந்தந்த காலத்தில் இருந்துள்ளன .
ஒரு முறை மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் சென்னை பல்கலையில் ஊடக பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசும் போது ,” ஆடைகளை நேர்த்தியாக தைத்து உடுத்துவது மொகலாயர் காலத்திற்கு பின்னரே” என்றார் . ஆம் . வரலாறு அதுதான் .தையல் இயந்திரத்தின் வருகை எல்லாம் மிகவும் அண்மையில்தான் .
நம் பெண் கடவுள்கள் ஜாஜ்கெட் அணிந்ததெல்லாம் ஓவியர் ரவிவர்மாவின் கைவண்ணம் எனச் சொல்லவும் வேண்டுமோ ?
உணவு ,உடை எல்லாம் காலந்தோறும் மாறி மாறி வந்திருக்கிறது .இனியும் மாறும் .நம் பண்பாடு எனச் சொல்லி மீண்டும் நான்கு முழத்துக்கு போக முடியுமா ? முப்பாட்டன் முருகனின் உடை என கோவணத்துக்கு மாற முடியுமா ?
ஆணோ பெண்ணோ உடை என்பது அவரவரின் தேவை ,விருப்பம் ,வாய்ப்பு சார்ந்தது . அவரவர் வாழ்நிலை சார்ந்தது .
நான் என்ன உடுக்க வேண்டும் என ஆணையிட யாருக்கும் உரிமை இல்லை .
என் ஆடை .என் தேவை .என் தேர்வு .என் உரிமை.
என் ஆடையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
“உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த 80
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி
மழையென மருளும் மகிழ்செய் மாடத்து
இழையணி வனப்பி னின்னகை மகளிர் ...
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர வுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை மற்றவன்”
பாடியவர் :: முடத்தாமக் கண்ணியார்
பாடப்பட்டவன் :: சோழன் கரிகால் பெருவளத்தான்
பொருநர் ஆற்றுப்படை
“…………………………………………………… மாசில்
காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்
பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் 240
பனுவலின் வழாஅப் பல்வே றடிசில் ..”
பாடியவர் :– இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டவன் :– ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்
திணை :– பாடாண் திணை சிறுபாணாற்றுப்படை
“இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு
நெடுவெ ணெல்லின் அரிசிமுட் டாது
தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து 565
பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்”
மலைபடுகடாம், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியது.
”தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பது இரண்டே
பிறவும் இல்லாம் ஓரொக்குமே,
செல்வத்துப் பயனே ஈதல்.”
புற்நானூறு . பொருண்மொழிக் காஞ்சியில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்:
“உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.”
நல்வழி[28] .ஒளவையார் .
என் ஆடையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
சு.பொ.அகத்தியலிங்கம்.
19/10/2022.
0 comments :
Post a Comment