மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்…..

Posted by அகத்தீ Labels:


சிறுகதை .5.

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

 

மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்…..

 

 


மந்திர மாவது நீறு

வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு

துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு

சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்

திருஆல வாயான் திருநீறே.  

 

வேதத்தி லுள்ளது நீறு

வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு

புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு

உண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த

திருஆல வாயான் திருநீறே. ”

 

ஆஹா ! பேஷ் பேஷ் காந்தார ராகம் பக்தி பரவசமெடுக்கும்

திருஞானசம்மந்தர் திருப்பதிகம் .. மாமா ! எப்போ ஊரில் இருந்து வந்தேள் ?

நீங்க வந்தால்தான் இந்த தேவாரம் திருவாசகம் வீட்டில் கேட்குது …”

 

ஓம் நமச்சிவாயா ! யாரு ராமசுப்புவா ? இண்ணிக்குத்தாண்டா வந்தேன் .

வீட்ல புள்ள குட்டிகள் சவுக்கியம் தானே..”

 

எல்லோரும் சவுக்கியம் மாமா !”

 

மாமா ! உங்க மகளோ மருமகனோ பேரப்பிள்ளையோ ஒரு நாள் கூட

தேவாரம் பாடிக் கேட்டதில்லை . கோளறு பதிகமாவது பாடுங்கன்னு நானும்

வர்றப்ப போறப்ப எல்லாம் தலைப்பாடா அடிச்சுகிறேன்காதுல

போட்டுக்கவே மாட்டாங்கிறாங்க..”

 

அட போப்பா ! ‘நீறு இல்லா நெற்றி பாழ்னு பெரியவங்க சும்மாவா

சொல்லியிருக்காங்கஎங்க விபூதி பூசுறாங்க..”

 

பேஷன் மாமா பேஷன் !”

 

பேஷனாவது மண்ணாங்கட்டியாவதுவிபூதி பூசுனா தலை நீரை

உறிஞ்சிடும்மைக்கிரேண் ஹெட்டேக் ஒற்றத் தலவலின்னு டெய்லி

மாத்திர போட வேண்டாம் .. நம்ம ரிலீஜியன் மொத்தமும் சயின்ஸ் எங்க

புரிஞ்சுக்கிறாங்க…”

 

பெரியப்பா ! எப்ப வந்தீங்க ? எல்லோரும் நலமா ?” என கேட்டபடி ராமலிங்கம் உள்ளே நுழைஞ்சார் .

 

 தருமு ! ப்பிரண்ட்ஸெல்லாம் வந்திட்டா மாப்பிள்ளை இன்னும் முழிக்கலையா ?” கேள்வியைச் சத்தமாகத்தான் கேட்டார் பெரியவர்.

 

சுரேஷ் சோம்பல் முறித்தபடி ,” டேய் ! வாங்கடா ! டென் மினிட்ஸ்ல ரெடியாயிடுறேன் …”

 

 “ ராமலிங்கம் ! நான் சொன்னதுக்கு ஏதாச்சும் குதர்க்கம் பேசுவியே ! கம்முன்னு ஆயிட்டே .. ஆன்மீகத்திலேயும் அறிவியல் இருக்குன்னு புரிஞ்சிட்டியா ?”

 

 “ பெரியப்பா ! ஊர்ல இருந்து இப்பதான் வந்திருக்கீங்க ..வந்ததுமே மல்லுக்கு நின்னா எப்படி ?”

 

 “ போடா ! போ ! நீ தர்க்கம் பண்ணினாத்தான் எனக்கு பிடிக்கும் ?”

 

“ மாமா ! அவன் வாயைக் கிளறாதீங்க …இது புரட்டாசி மாசம் இறைச்சி முட்டை மீன் சாப்பிடாதேன்னு சொன்னா சண்டைக்கு வறான் …”

 

 “ பெரியப்பா ! பெருமாளுக்கு புரட்டாசி மாசம்.. சரி .. சிவனக் கும்பிடுறவனுக்கும் சாமியே கும்பிடாதவனுக்கும் எதுக்குன்னு சொல்லச் சொல்லுங்க..”

 

 “ ராமசுப்பு ! கேட்கிறான்ல பதில் சொல்லு …”

 

 “ மாமா ! பதில் சொன்னா வேற மாதிரி கேட்பான் .. நேற்று கேட்கிறான் ஏன் சுப்பு! பெருமாள் புரட்டாசி மாசம் மட்டும் சைவம்னா மற்ற மாசம்லாம் அசைவமான்னு கிண்டலடிக்கிறான்..”

 

 “ சாப்பிடுறவங்க சாப்பிட்டுட்டு போகட்டும் அத்தவிடுங்க அவங்க அவங்க நம்பிக்கை விருப்பம் “ பெரியவர் ஜகா வாங்கினார் .

 “ எனக்கொரு சந்தேகம்”ன்னு தருமு கையை உயர்த்த எல்லோர் பார்வையும் அங்கே திரும்பியது . “ கொலு எதுக்கு வைக்கிறாங்க ..”

 

முந்திகிட்டு ராமசுப்பு ,” சரஸ்வதி ஆயக்கலை அறுபதுக்கும் அம்பிகையாச்சே …அதுனாலே கலைகளை எக்சிபிசன் வைக்கத்தான்…”

 

 “ மண்ணாங்கட்டி ! கொலு படிகெட்டுல கடைசி படிகெட்ல பூணூல் போட்ட குடுமி வச்ச பாப்பான் சிலையை வைப்பாங்களா ? மாட்டாங்களே ! கீழடுக்கில் குறவன் குறத்தி , உழவன் மாடு ,அதுக்கு மேல வியாபாரி செட்டியார் பொம்மை ,அதுக்கு மேல வீரன் ,குதிரையில் சிப்பாய் ,அதுக்கும் மேல பூசாரி , அதுக்கும் மேல சாமி உற்றுப்பாருங்க படி நிலையில் வர்ணாஸ்ரமம் நன்னாத் தெரியும் … கொலு மூலமும் நம்ம மனசுல அதை நியாயப்படுத்தத்தான் … இது ஒரு பக்கம் ….  சில நூற்றாண்டுக்கு முன்பு ஆந்திராவிலதான் கொலு பேமஸ் ஆச்சு … அது ஒவ்வொரு வீட்டிலுமான அந்தக்கால கல்யாண சந்தை…” சொல்லி  சிரித்தான் ராமலிங்கம் .

 

பேச்சை மடை மாற்ற தருமு வந்தாள் .

 

“ சரி ! சரி !புரட்டசி மாசம் காபி சாப்பிடத் தடை இல்லையே ! எல்லோரும் காபி சாப்பிடுங்கோ அப்புறம் பேசலாம் … ” தருமு காபியோடு வந்து எல்லோரிடமும் கொடுத்தாள்.

 

 “ பெரியப்பா ! எனக்கொரு டவுட்டு ! வேதத்தில காபி ,டீ சொல்லப்பட்டிருக்கா ? எனக்குத் தெரிஞ்சு விஷ்கி ,பிராந்தி மாதிரி சோம பானம் , சுரா பானம்தான் சொல்லியிருக்கு …அவா ஆத்துல டிக்காஸன் காபி சாப்பிடுறாங்களே அது சாஸ்திர சம்மதமா ?”

 

 “ டேய் ! அவன ஏண்டா ! வம்புக்கு இழுக்குற ..தலைவலிக்கு காபி சாப்பிடுறான் விடு ..”

 

 “ பெரியப்பா ! தலைவலிக்கு திருநீறு மருந்துன்னு சொன்னீங்க …?”

 

“ என் வாயைக் கிளற வந்திட்டியா ? அப்படி சொல்றாங்க …”

 

“ பெரியப்பா ! அப்படி அந்த திருநீறுல நீங்க சொல்ற மாதிரி ஏதாவது இருந்தா இந்நேரம் கார்ப்பரேட் கம்பெனிக்காரன் அத பேட்டண்ட் ரைட் வாங்கி ‘ வேத முறைப்படி சுத்தமாகச் செய்த ஜியோ திருநீறை வாங்குங்கோன்னு விளம்பரம் செய்திருப்பான் .. சீனாக்காரன் மலிவு விலையில் செய்து மார்கெட்டில் குவிச்சிருப்பான்…”

 

 “ கரெக்டு டா ! ஆனால் நம்ம துளசி ,வில்வம் , வேப்பிலை ,அரசு ,ஆல் ,சுக்கு ,இஞ்சி ,இப்படி எல்லாவற்றுக்கும் மருத்துவ குணமிருக்கே …”

 

 “ இயற்கையில் கிடைக்கிற மூலிகைகள் பல மிகுந்த மருத்துவப் பயன் கொண்டவையே .. அத எந்த மதகுருவும் கண்டுபிடிக்கல … காடு மேடுன்னு திரிஞ்ச நம்ம பழங்குடியினர் அனுபவத்தில் கண்டெடுத்தனர் . எதை எதைச் சாப்பிடலாம் எதை எதை எதை சாப்பிடக்கூடாதுன்னு அனுபவிச்சு முடிவெடுக்க செத்தவங்க எத்தனை எத்தனையோ பேர் ? உலகெங்கும் இதுதான் நிலை . நோகாமல் நோம்பு கும்பிடும் நம்ம ஆன்மீக கோஷ்டிக அத தன் மதத்தோட சேர்த்து வில்லங்கம் பண்ணிட்டு இருக்காங்க ..”

 

 “ ராமலிங்கம் ! எங்க கிட்ட வசமா மாட்டிக்கிட்ட .. மூலிகைன்னு ஒத்துக்குற நீ மாற்று மருத்துவம்னா எகிறுறீயே !”

 

 “ சும்மா ! உதார் விடக்கூடாது ! மருத்துவ அறிவியல் வளர்ந்திருக்கு பிரமாண்டாமா வளர்ந்திருக்கு .. அத ஒத்துக்கணும் … நமக்கு எந்த மருத்துவமும் பகையில்லை அறிவியலா நிரூபிங்க வளர்த்தெடுங்க யாரு வேண்டான்னு சொன்னது ? வாட்ஸ் அப்பைப் பார்த்து வைத்தியம் செய்யாதீங்க … முறையா படிச்சவங்கட்ட முறையா வைத்தியம் செய்யுங்க யாரு வேண்டான்னு சொன்னது ?”

 

 “ ராமலிங்கம் கார்ப்பரேட் கொள்ளைன்னு பேசுறதும் நீதான் … அலோபதி இங்கிளீஸ் வைத்தியத்துக்கு வக்காலத்து வாங்குறதும் நீதான் …” ராமசுப்பு நக்கலாக அடிச்சுவிட்டான் .

 

 “ அப்படி போடு ராமசுப்பு!”ன்னு சுரேசும் பெரியவரும் கோரஸ் பாடினர் .

 

 “ கார்ப்பரேட் கொள்ளைய எதிர்க்கிறோம் ! அதுக்காக மருத்துவ அறிவியல புறக்கணிக்க முடியுமா ? பெரியப்பா ! கண்ணுக்கு காட்ரட் ஆப்பரேஷன் பண்ண வந்திருக்காங்க …. வேணாம்னு ஏதாவது பச்சலையைப் பிழிஞ்சு சாறுவிடலாமா ? …”

 

 “ டேய் ! டேய் ! கடைசில என் கண்ணுல கொள்ளி வச்சிராதீங்க…” என பெரியவர் குறுக்கிட்டார்.

 

 “ பெரியப்பா பேச்சுக்கு கேட்டேன். அம்புடுத்தான். ஏன் ராமசுப்பு பையன நாய் கடிச்சிடிச்சு தூக்கிட்டு போய் ஊசிதானே போட்டோம் ! பதஞ்சலி ஆயுர்வேததில கொள்ளை யடிக்கலையா ? இப்போ மாற்று மருந்துன்னு போனா அதுதான் காஸ்ட்லி ! ஒரு காலத்தில கதர் ஏழைகளின் உடை , இப்போ அது பணக்கார உடை … எல்லோருக்கும் இலவச மருத்துவத்த அரசே தற்துதான் தீர்வு ”

 

ராமலிங்கம் மூச்சுபிடிக்க பேசிக்கொண்டிருக்க குறுக்கிட்ட தருமு ,” ஆமா ! அண்ணிக்கு பக்கத்துவிட்டு பரமசிவம் பொண்டாட்டிக்கு தடுப்பூசி போடமாட்டேன் … வீட்டிலேயே பிரசவம் பாக்கப்போறேன்னு கடைசில அவரு பொண்டாட்டி சிவகாமிய துள்ளத் துடிக்க உயிரோடு பலி கொடுத்தாரு ..இப்போ அவரும் ஜெயில்ல கிடக்குறாரு ..”

 

மவுனம் அங்கே குடி கொண்டது .

 

 “ இப்போ ! இது போல் நூறு நடக்குது எல்லாம் படிச்ச முட்டாளுக ளாயிட்டானுக … கம்யூட்டர ஏற்றுக்கிறோம் .. விஞ்ஞானம் எங்கேயோ போயிட்டு இருக்கு … நாம எந்தப் பக்கம் போறதுன்னு திணறுறோம் ..” பெரியவர் இழுத்தார் .

 

தருமு டிபனோடு நுழைய பேச்சு கொஞ்சம் தடை பட்டது …

 

எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர் ..

 

பெரியவர் சாப்பிட்டுக்கொண்டே பேசலானார் , “ எனக்கு சிவன மறக்கவும் முடியல ,விடவும் முடியல கொரானா வந்ததும் எல்லா கோயிலையும் சர்ச்சையும் மசூதியையும் மூடிட்டா … சாமிங்க ஏதாவது அருள்பாலிச்சுக்காமில்ல …”

 

 “ மாமா! நீங்க நாத்திகராயிட்டேளா ?” ராமசுப்பு கதற

 

 “ இல்லடா ! நம்பிக்கை லேசா ஆடுது ‘புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதரைப் போற்றி, திருநாவுக்கரசர் பாடியருளிய,  6-ம் திருமுறையில் உள்ள தேவாரத்த.  பக்தியோடு பாடி துதிக்க நோய்களின் தாக்கம் குறையும் என்பார்கள்.அந்த வைத்தீஸ்வரன் கோவிலிலும் மூடிவைச்சாளே … சானிடைசர் அடிச்சாளே …

 “பேராயி ரம்பரவி வானோர் ஏத்தும்

பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப் பானை

மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்

திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட

போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.’ என உளமுருகிப் பாடினோமே என்ன பலன் ?”

 

 “ மோடிகூட விளக்கு புடிங்கோ ,மணியாட்டுங்கோன்னு” தமாஷ் பண்ணினாரே !” என சுரேஷ் சொல்ல …

 

 “ மாமா! சந்தேகப்படாதீங்க ! அந்த சாட்சாத் வைத்தீஸ்வரன்தான் தடுப்பூசி கண்டுபிடிக்க புத்திய கொடுத்திருக்கான்…”

 

“ ஏண்டா ! இப்படி எவன் பெத்த புள்ளைக்கோ உங்க இன்ஷியலப் போடுறீங்க … கோயிலு சர்ச் மசூதி புத்தவிஹார் எல்லாந்தான் மூடிக்கிடந்து எந்த சாமியோ கடவுளோ அல்லாவோ எதுவும் பண்ணல சயின்சுதான் தடுப்பூசி கண்டு பிடிச்சுச்சு… இல்லேன்னா அந்தக் காலத்தில பிளேக்குக்கும் காலராவுக்கும் லட்சக்கணக்கில கோடிக்கணக்கில ஊர் ஊரா வாரிக் கொடுத்தோமே அப்படி ஆயிருக்கும் ….” ராமலிங்கம் பொரிந்தார்.

 

 “ பேசிக்கிட்டே இருந்தா எப்படி இன்னும் ரெண்டு பூரி போட்டுக்கோங்க..” சுரேஷ் சொல்ல  ’ஒகே’ என சாப்பாட்டில் மும்முரம் காட்டினார்கள் .

 

தருமு கேட்டாள் , “ எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கிட்டீங்களா ?”

 

 ராமசுப்பு வேகமாகத் தலையாட்ட

 

 “ ராமசுப்பு நீ கோளறு பதிகம் படிக்காமல் துளசி வில்வம் திங்காமல் ஏன் தடுப்பூசி போட்டுக்கிட்டே  ..” ராமலிங்கம் குடைந்தான்.

 

எல்லோரும் கொல்லென்று சிரித்தனர் .

 

 “ சாமிய நம்ப வேண்டிய காலத்துல சாமிய நம்புங்க , சங்கடம் வந்தால் மனுஷாள நம்புங்க … வெள்ளத்தில தப்பிக்க எந்த தெப்பம் கிடைச்சாலும் விட்டுரக்கூடாது…” என பெரியவர் சமாதானம் சொல்ல மவுனமாக எல்லோரும் சாப்பாடுத் தட்டைக் காலி செய்யலாயினர் …

 

அந்நேரம் ,பக்கத்துவீட்டுக்காரர் கூப்பிட்டார் .அவர் பையன் பட்டாச வெடிக்கிறேன்னு விரலை பிச்சிக்கிட்டு அழுகிறான் .எல்லோரும் அவனத் தூக்கிக்கிட்டு பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு ஓடினார்கள் .

 

யாரும் பச்சிலையைத் தேடவில்லை. பகவானைக் கூப்பிடவில்லை.

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment