பெயரில்லா வண்ணங்கள் நிறைய உண்டு
எல்லா வண்ணங்களுக்கும்
பெயர் வைத்தாகி விட்டதா ?
சூரியன் மறையும்
பொழுதில் .உதிக்கும் பொழுதில்
மழை மேகத்தில் ஓடி ஒளியும் பொழுதில்
நிலவு தோன்றும்
பொழுதில் ,மறையும் பொழுதில்
நிலவு வானில் ஓடி
ஒளியும் பொழுதில்
இயற்கை தீட்டும்
சித்திரங்களின் வண்ணங்களை
பெயரிட்டு சுட்டிக்காட்ட
இயலுமா ?
பெயரில்லா வண்ணங்கள்
நிறைய உண்டு
அடர்வனத்தின் வண்ண
பேதங்கள்
நந்தவனத்தின் வண்ண
ஓவியங்களை
எந்தப் பெயரால்
சுட்டுவாய் ?
சூரியனின் வண்ண
நாட்டியத்தில்
மலர்களின் வண்ண
புன்சிரிப்புகளை
சொற்களால் சொல்லிவிடமுடியுமா
?
பெயரில்லா வண்ணங்கள்
நிறைய உண்டு
ஒற்றையாய் எதையும்
பார்ப்பவன் கோளாறு
கண்ணில் அல்ல மூளையில்
பண்மையில் மனம்
கிறங்கி ரசிப்பவன்
இதயமும் மூளையும்
ஒரே லயத்தில்
இயற்கையின் பன்முகங்களை
ரசிக்காதவனிடம்
இதயத்தை மூளையை
எதிர்பார்ப்பது சிரமம்தான்.
இயற்கை சமநிலை
குலையும் வேளை
நியாயத் தீர்ப்பு
வழங்க யாரும் மிஞ்சமாட்டார்கள் !
இயற்கையை நாள்
தோறும் உற்றுப் பாருங்கள்
உங்கள் மனசு விசாலமாகக்கூடும்
!
சுபொஅ.
18/9/2022.
0 comments :
Post a Comment