பண்பாட்டு அரசியல் உரையாடலாய் ஏழு கதைகள்
“ கதைத் தொகுப்பு என்று நான் வேண்டுமென்றேதான் குறிப்பிடுகிறேன்.
இவற்றை சிறுகதை என்றோ குறுநாவல் என்றோ அழைத்து அந்த வட்டத்துக்குள் அடக்க முடியாது.”
என இரா,இளங்கோவன் அணிந்துரையில் சொல்லி இருப்பதை நானும் வழிமொழிகிறேன் .
“அஞ்சுநாள் கிரிக்கெட்டும் ஆகம சாஸ்த்ரமும்,” எனும்
இந்நூலில் உள்ள ஏழுகதைகளும் அரசியல் பேசுபவையே . அரசியல் என்றதும் கட்சி , கொடி என்று
தேடினால் ஏமாந்து போவீர்கள் ! அரசியலின் கருத்தியல் சார்ந்த அழுத்தமான உரையாடல்கள்
.பண்பாட்டு அரசியல் என வகைப்படுத்தலாம் . சனாதன அரசியலுக்கு எதிராக ராமச்சந்திர வைத்தியநாத்
தமக்கே உரிய பாணியில் உரையாடுகிறார் .
‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவவற்றின் தோற்றம்’
குறித்த எங்கெல்ஸ் நூலில் இருந்து ஒரு மேற்கோளுடன் ‘ உபரி மதிப்பு’ என்ற கதை தொடங்குகிறது .
“ சார் வெலையப்
பார்க்காதீங்க .அதுவும் மேடம் மாதிரி வேலைக்குப் போறவங்க போட்டுண்டா க்யூட்டா இருக்கும்”
“ அதெல்லாம் ஒண்ணுமில்லே .இவங்க வீட்லே சும்மா இருக்கிறவங்கதான்
.சாதாரண சிலிப்பரே போதும்.”
பதினோரு பக்கங்களில்
சொன்னதின் கதைச்சுருக்கமாய் கடைசி நெற்றியடி வசனம் . பெண்ணின் உழைப்பை கணக்கில் கொள்ளாத
சமூகம் பற்றிய சித்திரம்.
“தொற்றுக்கிருமிகள்”
29 பக்கங்கள் கொண்டகதை கதை .கொரானா
காலத்தில் தூய்மைப் பணியாளரின் பணியின் கடுமையை , சூழலின் நெருக்கடியை கொரானா பற்றிய
தப்பான புரிதலும் மேட்டிமைதனத்தோடும் நடந்துகொள்ளும் அடுக்கக ஜென்மங்கள் , குப்பை சேகரிப்போரின்
வலி எல்லாம் பேசப்பட்டுள்ளது . வெஜ் அபார்ட்மெண்ட் என்ற எள்ளலும் ; வெளிநாட்டிலிருந்து
வந்த உறவினர் மூலமே அந்த வெஜ் அபார்ட்மெண்டில் கொரானா தொற்றும் யதார்த்தமான சித்தரிப்பு
. ஆயினும் இக்கதையில் ஏதோ ஓர் முழுமையின்மை இருப்பதாய்ப் படுவது எனக்கு மட்டும்தானா
?
கொரானா பற்றிய
இன்னொரு கதை “காலங்கடந்து
போகும்” .54 பக்கங்கள் விரிந்த கதை
. விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் நகரும் கதை நெடுக கொரானா குறித்த உரையாடல் . ஜக்கி
வசுதேவிடம் பம்மும் அரசு நிர்வாகம் சாதாரண மக்களிடம் அதிகாரத்தைக் காட்டும் அவலம்
, தீர்வு அறிவியலில்தான் ஆன்மீக ஆர்ப்பாட்டங்களும் மேலோட்டமான பஞ்சாக்கப் பேச்சுக்களும்
அல்ல என உரையாடலும் காட்சியுமாய் சாட்சி சொல்கின்றன . ஏற்கெனவே ப்ளேக ,பெரியம்மை ,போலியோ
போன்ற பல நோய்களுக்கு மருந்தும் தடுப்பூசியும் கண்டுபிடித்ததுபோல் கொரானாவுக்கும் கண்டுபிடிக்கப்படும்
என நம்பிக்கையை விதைக்கும் கதை . கதைபோக்கில் மதவெறி ,சாதிவெறி ,மோடியின் கூத்துகள்
எல்லாம் பகடி செய்யப்படுகிறது .ஓரிடத்தில் பெரியம்மா சொல்வார் , “குரோதமும் துவேஷமும்
தீயாய் எரியறச்ச்சே ,வேதமாவது வெங்காயமாவது.”
18 பக்கங்களில்
விரியும் “கர்வாப்ஸி”யும் , 32 பக்கங்களில் நீளும் “ க்யா அம்பேட்கர் நே சிர் பர் பகடி பாந்த்”
கதையும் சாதியத்தின் குரூர முகத்தை எவ்வளவு பவுடர் போட்டு மறைத்தாலும் மறையாது என்பதைச்
சொல்கிறது .
கர்வாப்ஸி செய்து
மதம் மாறிய பின்னும் காதலி என்ன சாதி ,என்ன கோத்திரம் என சாதி ஆதிக்கம் விரட்ட காதலன்
மனம் நொந்து காதலியோடு கிறுத்துவம் தளுவுவது நெற்றிப் பொட்டில் அறையும் செய்தி .
என்னதான் வசதி
வந்தாலும் ஆடம்பரமாக திருமணம் செய்தாலும் அம்பேத்கர் பிறந்த மஹர் சாதியினருக்கு திருமணத்தில்
முண்டாசு கட்டவும் ,குதிரையில் பவனி வரவும் அனுமதியில்லாத சாதி ஆதிக்கம் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது
.ஊடவே மேல் சாதியினரின் மாறிய சடங்குகள் பார்வைகள் மாறாத சாதியம் எல்லாம் உரையாடலாய்
நீள்கிறது .
“ காத்தாடி மாஞ்சாவும் ப்ரொக்டார் அண்ட் காம்பிள் திருநீறும்” 37 பக்கங்களில் குழந்தைகள் தொலைத்த உலகத்தை மீட்டெடுக்க
ஒரு தாத்தா மூலம் முயற்சிக்கிறார் . உரையாடல் ஊடே இன்றைக்கு கார்ப்பரேட் திணிக்கும்
பண்பாடு குறித்து ஊசி சொருகுகிறார் . “வேதிக்
பார்முலா விபூதி விற்றாலும் விற்பாங்க” என்கிற நையாண்டியை ரொம்ப ரசித்தேன் .
28 பக்கங்களில்
தலைப்புக் கதை “அஞ்சுநாள் கிரிக்கெட்டும் ஆகம சாஸ்த்ரமும்” கதை சாஸ்திரிகளின் வாழ்க்கையிலும்
விளையாடும் மதவெறிக்கூட்டம் குறித்த உள்ளிருந்த குரலாய் வெளிப்படுகிறது . “ வழிபாட்டை
ஜனநாயப்படுத்த வேண்டும்” என்கிற நியாயமான குரலை இக்கதை விவாதங்களூடே சொல்லுகிறது .
வெறுப்பை ,மோதலை தூண்டிவிட இப்போது வழிபாடு பயன்படுத்தப்படுவதையும் கதை போகிற போக்கிலாவது
அழுத்தமாகக் காட்சிப் படுத்தி இருக்கலாமோ ?
“ அழுக்குப் படிந்த கற்பனையில் உருவான…” என்கிற தலைப்பில் ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய முன்னுரையை
கடைசியில் படியுங்கள் .அவசியம் படியுங்கள் .கதைகளைப்போலவே கதை பிறந்த களங்களும் நம்
கவனத்துக்கு உரியன.
அனைவரும் அவசியம்
வாசிக்க வேண்டிய ரயில்வே போராட்டம் குறித்த நாவல்
‘ஸ்டிரைக்’ , ‘பூர்ணஹூதி’ [கதைகள்] ,
, ‘அஸ்வமேதம்’ , ‘சென்னப்பட்டிணம்
மண்ணும் மக்களும்’ என சிறந்த படைப்புகளைதந்த ராமச்சந்திர வைத்தியநாத்தின்
எழுத்தில் இன்னொன்றாக “அஞ்சுநாள் கிரிக்கெட்டும்
ஆகம சாஸ்த்ரமும்,” அதேசமயம் நான் மீண்டும் சொல்கிறேன் பண்பாட்டு அரசியல்
உரையாடலாகவே இக்கதைகள்.
இரா.இளங்கோவின்
அணிந்துரைக்கு தெரிந்தோ தெரியாமலோ வைத்துள்ள தலைப்பு “பொறுமை தேவை”; நூலுக்கு பொருத்தமாகத்தானே
சொல்லியிருக்கிறார் !.
அஞ்சுநாள் கிரிக்கெட்டும் ஆகம சாஸ்த்ரமும்,
ஆசிரியர் : ராமச்சந்திர வைத்தியநாத்
,
வெளியீடு : பாரதி
புத்தகாலயம் ,தொடர்புக்கு :044- 24332424 / 24332924 / 24356935 / 8778073949 ,
Email : thamizhbooks@ail.com / www.thamizhbooks.com
பக்கங்கள் :
224 . விலை : ரூ.220 /
சு.பொ.அகத்தியலிங்கம்.
12/ 9/ 2022.
0 comments :
Post a Comment