சிறுகதை .4.இந்த வயசில தெய்வ காரியம் நல்லதுதானே

Posted by அகத்தீ Labels:

 


சிறுகதை .4.

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

இந்த வயசில தெய்வ காரியம் நல்லதுதானே

 

ஞாயிற்றுக் கிழமையின் சோம்பேறித்தனமும் அரைத் தூக்கமுமாய் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் சுரேஷ் .

 

 “ சாயங்காலம் ஆயிடிச்சு இன்னும் பொழுது விடியலையா துரைக்கு ?” என குரல் கொடுத்தவாறே வந்து அமர்ந்தார் ராமசுப்பு .

 

சற்று நேரத்தில் ராமலிங்கமும் வந்து சேர்ந்தார் . சூடான டிக்காஷன் காபியும் பஜ்ஜியும் வந்து சேர்ந்தது . அரட்டைக் கச்சேரி ஆரம்பமானது .

 

இது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வாடிக்கைதான் . வானக்கூரையின் கீழ் இருக்கும் சகலதும் அங்கு அரைபடும் . அலுவலகத்தின் ஜீவன்கள் கழுவி ஊற்றப்படும் .

 

டிவி டிஸ்கஸன் மாதிரிதான் . ராமசுப்பு வலது ,ராமலிங்கம் இடது .சுரேஷ் அங்கிட்டும் இங்கிட்டும் .மூவரும் ஒரே வகுப்பு நண்பர்கள் .அலுவலகமும் ஒன்றாகப் போனது தற்செயலானது . வேடிக்கை பார்க்கவும் சமயத்தில் நக்கலடிக்கவும் அவ்வப்போது தலைநீட்டுவாள் சுரேஷின் தர்மபத்தினி தருமு என்கிற தர்மாம்பாள்.

 

நெருங்கும் பிள்ளையார் சதுர்த்தி பற்றி அன்றைய உரையாடல் நீண்டது .

 

 “ நீங்க எதையாவது பேசிக்கிட்டே இருங்க அருண் பிள்ளையார் சதுர்த்தி வசூல் அது இதுன்னு ஊர் சுற்றிகிட்டு இருக்கான் . அவன் மேல ஒரு கண்ணு வையுங்க …” தருமு குரல் கொடுத்தாள் . தன் பிள்ளையைப் பற்றிய கவலை அவளுக்கு …

 

 “ சிஸ்டர் ! அவன் என்ன பொறுக்கித்தனமாகவா ஊர் சுற்றுறான் … எல்லாம் தெய்வ காரியம் --- இந்த வயசில தெய்வ ஈடுபாடு நல்லது … கெட்ட சகவாசம் வராமல் தடுக்கும்… விநாயகன் எப்போதும் நல்ல புத்திதான் கொடுப்பான்..” ராமசுப்பு தன் அஸ்திரத்தை ஏவினார் .

 

 “ போதையும் குத்தாட்டமும் குரங்குதனமுமே பிள்ளையார் சதுர்த்தியாய் போய்க்கொண்டிருக்கிறது … இதுல பக்தி எங்கே ஒழுக்கம் எங்கே …?” ராமலிங்கம் புருவத்தை நெரித்தார் .

 

 “ காம்ரேட் ராமலிங்கம் ! உங்க அரசியல நிறுத்துங்க … இந்துக்கள புண்படுத்தாதீங்க …”

 

 “ புடிச்சா புள்ளையாரு வழிச்சா சாணின்னு இருந்தவரை ,அரசமரத்தடியில் பேசாமல் இருந்த புள்ளையாரை அரசியலில் இழுத்துவிட்டு கலவர புள்ளையாராக்கினது நீங்கதானே …”

 

“ அண்ணா ! நார்த்தில இருந்து எங்க மதினி வந்திருந்தா அங்கெல்லாம் புள்ளையாருண்ணா யாருக்குமே தெரியாதாம் கணேஷ் சதுர்த்திதானாம் … அதுமட்டுமல்ல நம்ம புள்ளையாரு மாதிரி அவரு பிரம்மச்சாரி இல்லையாம் இரண்டு பொண்டாட்டியாம்…” என சந்தேகம் கேட்கிறமாதிரி தருமு தன் பங்குக்கு கொளுத்திப் போட்டாள்.

 

 ராமசுப்பு நெளிந்தார் , “ பகவானுக்கு பல நாமங்கள் இருக்கும் ; ஒவ்வொரு ஊருலேயும் சில விஷேசம் இருக்கும் … நம்ம பகவான் அதுதான் முக்கியம்..” ராமசுப்பு சப்பைக்கட்டுக் கட்டினார் .

 

புரிந்தும் புரியாமலும் தருமு தலையாட்டினாள்.

 

 

 “ ஆமாம் அப்படியே இருந்து தொலையட்டும் ! கணபதி ஹோமம் பண்றேளே அதிலயும் புள்ளையார்னு சொல்வதில்லையே ஏன் ?” ராமலிங்கம் சும்மா கேட்டுவைத்தார் .

 

 “ அப்ப புள்ளையார் வேறு கணபதி வேறுன்னு சொல்றீங்களா ? அண்ணைக்கு முருகன் வேறு சுப்ரமணியன் வேறுன்னு நீங்க தெளிவாச் சொன்னமாதிரி இதையும் உடைச்சு சொல்லுங்க…” சுரேஷ் ஆர்வத்தைக் கிளறிவிட்டார் .

 

 “ சுகி சிவம் கூட அதையே சொன்னாரு .. யூ டியுப்ல கேட்டேன்…சுப்பிரமணியன்னா சுத்தமான பிராமணன்னு அர்த்தம்னு வேற சொன்னாரு ஆனா அவரு சமரசமா சொன்னாரு…”

 

 ராமசுப்பு மவுனம் காப்பதே நல்லதுன்னு பேசாமல் இருந்தார் !

 

“ ராமசுப்பு ! உங்க சாதில சுப்பிரமணிய ஐயர் இருக்கார் முருகய்யர் இருக்காரா ? கணபதி ஐயர் இருக்கார் .புள்ளையார் ஐயர்னு பேர் இருக்கா ? புள்ளையார்கூட சாமிதானே அந்தப் பேர ஏன் வச்சிக்கிறது இல்ல …”

 

 “ வேண்டாம் ! ராமலிங்கம் ! வேறெதாவது பேசலாமே !”

 

 “ ஏங்க பொழுது இருட்டிடிச்சு இன்னும் பையனைக் காணோம்..” தருமு அம்மாவின் வருத்தத்தை தெரிவித்தார் .

 

 “ சுரேஷ் ! உங்க பையன் இந்து முன்னணி பசங்ககூட சுத்துறது நல்லதாப் படலை .. கவனிச்சுகிட்டே இரு!” – ராமலிங்கம் அக்கறையோடு சொன்னார் .

 

 “ ஆமாம் ! ஆமாம் ! இவங்க டி ஓய் எப் ஐ ல சேர்ந்து  ‘வேலை கொடு! சோறு போடு!”ன்னு ஊர்வலத்துக்கு அனுப்பி வை ! உருப்படாம போறதுக்கு …” ராமசுப்பு எரிச்சலோடு வார்த்தைகளைக் கொட்டினார் .

 

உரையாடல் சூடாவதைக் கண்ட சுரேஷ் விவாதத்தை திசைமாற்ற எண்ணி ,  “அதை விடுங்க …நம்ம சம்சுதின் அண்ணாச்சி மகன் நிக்காஹ் எண்ணிக்கு … நல்ல பிரியாணியை விட்ரக்கூடாது …”

 

 “ ஏங்க அண்ணன பிரியாணி சாப்பிட கூப்பிடுறீங்க … நியாயமே இல்ல…” தருமு குறுக்கிட்டாள் .

 

 “ எங்களுக்கு முன்னாடி பந்தில அவருதான் இருப்பாரு !” ராமலிங்கம் உண்மையைப் போட்டுடைக்க …

 

 “ தருமு! வீட்ல போட்டுக் கொடுத்திராதே !” என ராமசுப்பு கேட்டுக்கொண்டார் .

 

அந்த நேரம் பார்த்து அருண் கையில் பிரியாணிப் பொட்டலத்தோட நுழைய வீடே சிரிப்பில் மூழ்கியது .

 

அன்றைய சபை முடிந்தது .

 

*********** ***************** ***************

 

 “ அக்கா வாங்க மாமா வாங்க !” என தருமு வரவேற்க , மருக்கொழுந்து அவ புருஷன் மலைச்சாமி ,மகன் தனுஷ்கோடி மூவரும் உள்ளே நுழைந்தனர் .

 

உள்ளே நுழைந்ததும் தனுஷ்கோடி குளித்துவிட்டு ஒரு டி ஷர்ட்டோட வந்தான் .அதில் டி ஒய் எப் ஐ இரத்ததானக் கழகம் .சென்னை என அச்சிடப்பட்டிருந்தது .

 

பேச்சு இரத்ததானம் பற்றி திரும்பியது .

 

இந்த வருஷம் அதிகம் இரத்ததானம் செஞ்சதுக்காக தமிழ்நாடு அரசு விருது வழங்கினதை ; சுனாமியின் போது நாகை சென்று பணியாற்றியதை அதற்கும் அரசு பாராட்டும் சான்றிதழ் பெற்றதை எல்லாம் தனுஷ்கோடி சொல்லிக் கொண்டிருந்தான்.

 

 “ மாமா ! நம்ம குடும்பத்திலேயே இல்லாத தனுஷ்கோடிங்கிற பேர எப்படி புடிச்சீங்க..” தருமு கேட்டாள் .

 

 “ அதுவாம்மா ! தஞ்சாவூர்ல தனுஷ்கோடின்னு ஒருத்தர் இருந்தார் .அவரு பண்ணை அடிமையா இருந்தாரு ! சாதியில மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகம் .. சாணிப்பால் சவுக்கடின்னு வதைபட்டார் .. எழுதப்படிக்கத் தெரியாதவர் … சீனிவாச ராவ்னு ஒருத்தர் வந்தார். அடித்தால் திருப்பியடின்னு சொல்லிக் கொடுத்தார். தலை நிமிர்ந்தாங்க செங்கொடி பிடிச்சாங்க .. தனுஷ்கோடி போராட்டங்களிலே முன்னுக்கு நிண்ணாரு ,ஜெயில்ல அடச்சாங்க மாறாம நிண்ணாரு .. எழுதப் படிக்க கற்றார் … தலைவர் ஆனார் எம் எல் ஏ ஆனார் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுதான் பையனுக்கு வச்சேன் … அவனும் டி ஓய் எப் ல சேர்ந்து நல்லது செய்யுறான் .”

 

“ போராட்டம் அது இதுன்னு போய் கெட்டுப் போயிர மாட்டானா ?” தருமு கேள்வி .

 

 “ தருமு ! பயமில்லை .தோழர்கள் ரொம்ப நல்லவங்க உதவியாய் இருப்பாங்க ,பையனும் புத்திசாலியாகவும் யோக்கியனாகவும் வருவான் … போன வாரம்கூட போதை பழக்கத்திற்கு எதிரா மாரத்தான் ஓடினான்..” மருக்கொழுந்து சொல்ல தருமு வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தாள் .

 

சாப்பிட்டபின் எல்லோரும் ஊருக்கு கிளம்பினார்கள் .

 

**** **** **** **** **** ***

 

 “ என்ன சார் ! லேட்டு ! நான் முழிச்ச பிறகு வர்றீங்க ..” சுரேஷ் கேள்வி .

 

 “ புள்ளையார் ஊர்வலம் … ஒரே டிராபிக் …” ராமசுப்பு சொன்னார் .

 

 “ நீங்க போகலையா ?” சுரேஷ் கேட்க,

 

 “ பூஜைக்கு போவாங்க , தூண்டிவிடப் போவாங்க… எங்காவது கலவரத்தில இவங்க செத்ததா வந்திருக்கா ? அங்கேயும் கலவரத்துக்கு சூத்திரர்களும் தலித்துகளும்தான் .. இவங்க வர்ண தர்மம் இவ்வளவுதான்.. இந்துன்னு சொல்றதெல்லாம் அவங்க வாழத்தான்…” ராமலிங்கம் சொல்லச் சொல்ல ராமசுப்பு கோவத்தில் கொதித்தார் .

 

தருமு கொண்டுவந்த சுண்டலும் பாயசமும் அங்கே சற்று அமைதியைக் கொண்டு வந்தது .

 

சற்றைக்கெல்லாம் வெளியே கூச்சல் . ஓடிப் போய் பார்த்தனர் .

 

புள்ளையார் ஊர்வலம் போயிட்டு இருக்கிறப்போ அவங்களில ஒருத்தன் பாக்கெட்டில் வைத்திருந்த கையெறி குண்டு வெடிச்சதில் அருண் உட்பட பலருக்கு காயம் . ஒரே அழுகை . கூப்பாடு .

 

இவங்க கொண்டுபோன குண்டு வெடிச்சதாலே முஸ்லீம்மேல பழி போட முடியல …

 

ஆஸ்பத்திரியில் வலதுகாலில் அறுவை சிகிட்சை முடிந்து படுத்திருந்தான் அருண் . அன்று குண்டு வெடித்தபோது அருணும் அவன் நண்பர்களும் போதையில் இருந்ததைச் சொல்லி தருமு புலம்பிக் கொண்டிருந்தார் .

 

“ தெய்வ காரியம்னு விட்டா அது எங்கேயோ கொண்டு சேர்த்திடிச்சே …” சுரேஷ் கவலையை சொல்லிக் கொண்டிருந்தார் .

 

  “அம்மா ! நான் இனி தப்பு பண்ணமாட்டேம்மா ! என்னை நம்பு ! அண்ணிக்கு போற வழியில முஸ்லீம்கள் இருக்கிற தெருவில வீசத்தான் குண்ட எடுத்துப் போனோம் .. இனி தப்பு பண்ண மாட்டேன் நம்பும்மா …”

 

 “ உன்னை நம்பாமல் வேறு யாரை நம்பப் போறோம் அருண் ?” தருமு கண்ணீரோடு சொன்னாள்.

 

காயம் ஆறிக் கொண்டிருந்தது .வாக்கரோடு நடைபயிற்சி செய்ய எக்சசைஸ் செய்ய பிசியோதெரபிஸ்ட் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் .

 

எல்லாம் முடிந்து படுக்கையில் உட்கார்ந்ததும் , “ அம்மா! தனுஷ்கோடி அண்ணிக்கு எனக்கு கொடுத்த பகத்சிங் எழுதிய “ நான் ஏன் நாத்திகனானேன் ?” புத்தகத்தைக் கொண்டுவா ! நான் படிக்கணும்..”

 

அருண் பேச்சில் தெளிவு இருந்தது .

 

காற்று திசை மாறுவதுகண்டு ராமலிங்கமும் சுரேஷும் தருமும் புன்னகைத்தனர் .

 

ராமசுப்பு மவுனமாய் வெளியேறிக் கொண்டிருந்தார் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

8/9/2022.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment