உரைச் சித்திரம் : 19.
முதுமையில் அசைபோட்டு மகிழ…
தலை முழுதும்
நரைத்து பஞ்சுப் பொதியாகி ,தாடியும் மீசையும் வெண்மையாகி,கூன் விழுந்து , நடை தளர்ந்து
, எலும்பும் தோலுமாய் மெலிந்து ,கோலூன்றி நடக்கும் தாத்தா ,பாட்டிகளை நான் சிறுவனாக
இருந்த போது நிறையப் பார்த்திருக்கிறேன். பொக்கை வாய் திறந்து அவர்கள் சிரிப்பதை பேசுவதைப்
பார்த்திருக்கிறேன்.லொக் லொக்கென அவர்கள் இருமிக்கொண்டே இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
கூன் ,ஊன்றுகோல்
,பொக்கைவாய் ,நரை , லொக் லொக்கென இருமல் ஐந்தும் அப்போது முதுமையின் அடையாளங்களென நினைத்திருந்தேன்.
இன்று அப்படிப்பட்ட அடையாளங்களோடுள்ள தாத்தா பாட்டிகளைத் தேட வேண்டியுள்ளது . நான்
சொல்லும் பழைய அடையாளங்களை என் பேரன் நம்ப மறுக்கிறான் .
இன்று மருத்துவம்
வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறது. வசதி இருந்தால் மருத்துவமும் நவீன
வசதிகளும் முதுமையின் பழைய அடையாளங்கள் பலவற்றைத் துடைத்து எறிந்துவிடும் .ஆனால் முதுமை
இல்லாமல் போவதில்லை . இன்றைய முதுமையின் துயர் , வலி வேறு .
இன்று சில அதிமேதாவிகள்
கதைக்கிறார்கள் , “ அன்று மனிதன் நூறு வயதுவரை ஆரோக்கியமாக இருந்தான் . இன்று சீக்கிரம்
செத்துவிடுகிறான் .”
இந்த வாதம் அறியாமையின்
உச்சம் . அன்று குழந்தை இறப்பு விகிதம் அதிகம் ,பேறுகால மரணம் ,தொற்றுநோய் மரணம் என
எல்லா வயதினரும் செத்துக் கொண்டிருந்தனர் .இந்தியா விடுதலை அடையும் போது தனிமனித சராசரி
வாழ்நாள் வெறுமே சுமார் 30 ஆண்டுகளே .இன்று எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் . அன்று
பிறந்ததில் பாதி செத்துப் போயின .ராஜராஜ சோழனுக்கும் அவுரங்க சீப்புக்கும் அதுதான்
நிலை . இன்றைய மருத்துவ முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடவே கூடாது . அதில்
நடக்கும் கொள்ளை மோசடி தனி .இங்கு நான் பேசப்போகிற பொருளோடு அது தொடர்பற்றது என்பதால்
தவிர்க்கிறேன்.
இன்றைய முதுமையை
நாம் நேரில் பார்க்கிறோம் .அதன் பிரச்சனைகளைப் பிறிதோர் இடத்தில் பேசுவோம் .சங்க கால
முதுமை எப்படி இருந்தது ? நாலடியார் இதுகுறித்து நிறையப் பேசி இருக்கிறது . எல்லாமே “யாக்கை நிலையாமை” எனும் தத்துவ நோக்கின்பால்
பட்டதே
“ மூப்பு நிச்சயமாக வரும் .நாம் முதுமை எய்துவிடுவோம்
. என்பதை நன்குணர்ந்த நல்லறிவாளர்கள் இளமையிலேயே
துறவு பூண்டுவிடுவாராம் ; ஆனால் இன்னொருசாரார் என்ன செய்வாராம் ? இளைமைக் காலம் நெடுநாள்
நீடிக்காது என்பதைப் பற்றி கவலைப்படாமல் இளமைப் பருவத்தில் தடுப்பாரின்றி மகிழ்ந்து
கூத்தாடுவாராம் ; ஆயின் முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் திரிவாராம்..”
அந்த முதுமைக்
காலம் எப்படி இருக்குமாம் ?
“ நண்பர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுவிட நட்பெனும்
கயிறு அறுந்து போகுமாம் ; உற்றார் உறவுகள் சுற்றத்தார் அன்பும் அப்படித்தான் இற்றுப்
போகுமாம் ; [ ஆணாதிக்க மனோ நிலையிலிருந்து நாலடியார் சொல்கிறது ] பெண்களும் அன்பு குறைந்து
ஒதுங்கிச் சென்றுவிடுவாராம் ; இதை எல்லாம் யோசித்துப் பாரப்பா ! கடலில் மூழ்கும் கப்பலில்
இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் முதுமைத் துன்பம் வந்து விடும்! அதற்குப் பிறகும்
உயிரோடு இருப்பதில் என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை.”
என சலித்துக் கொள்கிறது
நாலடியார்.அதன் பின் கேட்கிறது…
“வாய் பேச முடியாது நாக்கு குழற , பற்களெல்லாம் கொட்டிவிழ
, பொக்கை வாயாக ,கோல் ஊன்றித் தள்ளாடி தடுமாற அப்படிப்பட்ட முதுமையிலும் சிற்றின்ப
வேட்கையோடு அலைகிறவரைக் கண்டு பிறர் எள்ளி நகையாட மாட்டாரா ? இது தேவையா ? இப்படி வெட்கம்
கெட்டு அலைவோர் பேரின்ப வீடுபேற்று நெறியில் செல்லும் வாய்ப்பேதும் இல்லையே !”
சுற்றி சுற்றி
நாலடியார் எங்கே வருது பாருங்கள் ?
“முதுகு வளைந்து கூன் விழுந்து , உடல் தளர்ந்து,
தலை நடுங்கி, தடியை ஊன்றி நடக்கவும் இயலாமல் தள்ளாடி வீழ்ந்து கிடக்கும் இவள் மீது
;எந்த நொடியிலும் சாவை எதிர்பார்த்து கிடக்கும் இவள் மீது காம மயக்கம் கொண்ட மனிதா ! இவள் தாய் இப்படி தடியூன்றி
நின்ற பொழுது இவள் இளமை பூத்து நின்றிருக்கக்கூடும் ; ஆனால் இன்று எண்ணிப்பார் ! இந்த
நிலையில்லா யாக்கை மீது மயக்கம் கொள்ளலாமோ ?”
யாக்கை நிலையாமையைச்
சொன்னது சரி ! ஆயின் அதற்காக எல்லாவற்றையும் இளமையிலேயே விட்டொழி என்பது என்ன நியாயம்
?
புறநானூறு [பாடல்
: 243.] வேறொரு காட்சியை வரைந்து காட்டுகிறது . இப்பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை
.தொகுத்தவர் சூட்டிய பெயர் தொடித்தலை விழுத்தண்டினார்.
“ நான் சிறுவனாய் ஓடி விளையாடிக் களிப்புற்றிருந்த
அந்தக்காலம் மீண்டும் வருமா ? பூமியைக் கிளறி மண்ணை எடுத்து அதில் அளவாகத் தண்ணீரை
ஊற்றி நன்கு இறுகப் பிசைந்து அழகு அழகாக பொம்மைகள் செய்வேன் .அதுவும் பெண் பொம்மைகளாய்ச்
செய்வேன் . நந்தவனத்துக்கு ஓடிப்போய் அழகு அழகாய் வண்ண நறுமலர் கொய்து பொம்மைக்கு சூட்டி
மகிழ்வேன் .ஒற்றை மலராகவும் அணிவிப்பேன் .மாலையாகத் தொடுத்தும் மகிழ்விப்பேன் . அந்த
பொம்மைப் பாவையின் பேரழகு என்னை ஈர்க்கும் ; வசீகரிக்கும் ;அது என்னைப் பார்த்து சிரிக்கும்
; புன்னகைவீசும் ; என்னோடு பேசி மகிழ்விக்கும் . அது எனக்கு மட்டுமே தெரியும் .”
“ நானும் என்னொத்த சிறுவர் சிறுமியரும் நீராடச் செல்வோம் ; ஆம் ,வெறுமே குளிப்பதல்ல ;நீரில் ஆட்டம்
போடச் செல்வோம் . எங்களுக்குள் பால் வேறுபாடு தலைநீட்டாது ; ஒருவரை ஒருவர் கட்டியணைத்து
குதித்து விளையாடுவோம் .மேலிருந்து பொத்துபொத்தென குதிப்போம். மகிழ்ச்சி கூச்சலிடுவோம்
.கத்துவோம். தண்ணீரில் விழுந்து நீச்சலடித்து மூழ்கி முக்குளித்து எழுந்து ஆரவாரம்
செய்து களித்திருப்போம் .எங்கள் அன்பும் களிப்பும் அந்த நீரைப்போல் தூய்மையானது ; குற்றம்
குறை காண முடியாது. எங்களின் பூரிப்பும் களிப்பும் அளவிட முடியாதது .”
என் வயதொத்தவர்
மேற்கண்டவாறு ஆடிக் களித்திருக்க முடியும் ? எம் பேரப்பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பு
அருகிவிட்டதே ! இப்பாடல் தொடர்ந்து வரையும் காட்சி என்னை இளம்பருவத்துக்கே கூட்டிச்
சென்றுவிட்டது .
“ அந்த குளத்தங்கரையில் பழைய மருத மரம்
ஒன்று செழித்து ஓங்கி நின்றது. அதன்
கிளைகளில் ஒன்று குளத்து நீரை
காதலித்ததோ என்னவோ ? குறுக்கே நீரை நோக்கி தாழ்ந்து
நீண்டு திரண்டு கிடந்தது .” ஆஹா ! திரைப்பட காட்சி அல்ல, நேற்றைய தலைமுறை கண்டு
களித்த காட்சி .
“ உள்ளொன்று
வைத்து புறமொன்று பேசும் கள்ளத்தனத்தை கல்லாத,
அறியாத வயது எங்களுக்கு .என்னொத்த அந்தச் சிறுவர்களுடன், அந்த
மரத்தில் ஏறி நடந்து குளத்தின் ஆழமான இடத்திலே
குதிப்போம் . பார்ப்பவர்கள் வியப்பாரென்று எண்ணி, தண்ணீர் தெறித்துச்
சிதறுமாறு, பொத்துபொத்தென்று குதிப்போம் .குளத்தின் அடிச்சென்று மண்ணள்ளி வந்து மேலே உள்ளோரிடம் காட்டும்
போது அடைந்த களிப்பிற்கு இணையாய்
இன்னொன்றைச் சொல்ல முடியாது.அடடாவோ ! அடடா !.”
“கள்ளம் கபடுமில்லாத பெருநட்பும், மகிழ்ச்சியும், [ அன்றையச் சூழலில்]கல்வி கற்றிராத அந்த இளமையில் இயற்கை
எமக்குத் தந்த கொடை அல்லவா ? அஃது
வாழ்வில் ஒருபோதும் திரும்பி வாராது . தலைப்பகுதியில் அழகிய வேலைப்பாடு செய்த
நீண்ட ஊன்றுகோலை ஊன்றிவாறு
நடுங்கிக்கொண்டே
நடக்கின்ற இந்த முதுமையில், அவ்வப்போது
இருமல் வருகிறது. சிறிதே பேச முடிகின்றது.
என்ன செய்ய ? இதுதானே முதுமை ! எனது
முதுமையைக் கண்டு நானே இரங்குகிறேன்.
ஆயினும் கண்கள் கலங்க வருத்தப்பட ஏதுமில்லை .இது
இயற்கையானது. இளமை நிலையாமையை இளமையில் அறிந்தவர் யார்?” என அப்பாடல் முடியும் .
இளமை நிலைக்காது
என தத்துவம் சொன்னாலும் இளமையை வெறுத்தொதுக்கச் சொல்லாமல் இளமையைக் கொண்டாட்டமாய் வர்ணித்துள்ளதே
புறநானூற்றின் சிறப்பு . நாலடியார் சமணம் சார்ந்த நூல் ஆதலால் துறவு நோக்கி உந்தித்தள்ள
முயல்கிறது .புறநானூறோ இயற்கையோடு இயைந்து வாழ்வதை விதந்தோதுகிறது .
பருவங்களை வகுத்த
தமிழ் இலக்கண நூல்கள் , பேதை .பெதும்பை, மங்கை ,மடந்தை ,அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
என பெண்ணுக்கு ஏழு பருவங்களை முப்பது வயதுக்குள்ளேயே பகுத்து பிரித்துவிட்டது . பாலன்
,மீளி , மறவோன் ,திறவோன்,விடலை ,காளை ,முதுமகன் என ஏழு பருவங்களை அதே முப்பதுக்குள்
ஆணுக்கும் வகுத்துக் கொடுத்தது .ஆயின் இதனை 72 வயதுவரை என நீட்டித்து இன்று கயிறு திரிப்போர்
உண்டு . அன்றைக்கு முப்பது வயதைத் தாண்டுவதே பெரும்பாடாய் இருந்திருக்கிறது போலும்.
போகட்டும் ! எல்லா
வயதும் எல்லா பருவமும் வாழ்வதற்கே ! அந்தந்த வயதில் அததற்குரிய வாழ்வை வாழ்வதே நன்று
.கழிவிரக்கமும் தேவையில்லை . மூப்பை எண்ணி இப்போதே கலங்கவும் வேண்டாம் !அறிவுபூர்வாய்
யோசித்து திட்டமிட்டு வாழ்வீர் !
வாசிக்க முடியும்
வரை – எழுத முடியும் வரை – பேச முடியும் வரையே வாழவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.
முடிவு என் கையில் இல்லையே !
முதுமையில் அசைபோட்டு மகிழ…
இளமையில் மானுடம் பயனுற வாழ்க !
நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார். [ நாலடியார்.11]
நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி. [நாலடியார் .12]
சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு. [நாலடியார்.13]
தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. [நாலடியார்.14]
“இனிநினைந்து
இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே.”
புறநானூறு-243,
பாடியவர் பெயரில்லை.
முதுமையில் அசைபோட்டு மகிழ…
இளமையில் மானுடம் பயனுற வாழ்க !
சு.பொ.அகத்தியலிங்கம்.
16/9/2022.
0 comments :
Post a Comment