பார்வையும் பரப்பும் விசாலமானது .அடத்தியானது .

Posted by அகத்தீ Labels:

 

பார்வையும் பரப்பும் விசாலமானது .அடத்தியானது .

 


ஆறெழு மாதங்களுக்கு முன் , ஓர் ஆய்வு மாணவி என்னை அலைபேசியில் அழைத்தாள் , சிறைவாழ்வு சம்மந்தமாக வெளிவந்துள்ள நூல்கள் குறித்து தாம் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் அது தொடர்பான நூல்களை சொல்ல முடியுமா எனக் கேட்டாள் . தொடர்ந்து அவை குறித்து உரையாடிக் கொண்டுமிருக்கிறாள் . சி ஏ பாலனின் தூக்குமர நிழலில் தொடங்கி பகத்சிங்க் ,ஜீலியஸ் பூசிக் , அண்டோனியா கிராம்ஸி ,தியாகு , ஹென்றி ஷாரியரின் பட்டாம் பூச்சி [ ரா கி ரங்கராஜன் மொழியாக்கம்] , கொரி டென் பூம்ஸ்சின் சிறைக் கடிதக்கள் என நினைவில் வந்தவர்களைச் சொன்னேன் . இப்போது மதுரை நம்பியின் “ சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” என்ற நூலையும் சேர்த்துக் கொள்ள சொல்லி குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன்.

 

கொடூரமான சித்திரவதைக் கதைகளை மட்டுமல்ல , மனிதம் பொங்கும் இதயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதுதான் சிறை .சிறைக்காவலர்கள் கடுமையானவர்கள்தாம் ,அவருள்ளும் இரத்தம் கசியும் இதயம் உள்ளோர் இருப்பர் ; இல்லாவிடில் ஜூலியஸ் பூசிக்கின் சிறைக்குறிப்புகளும் ,கிராம்சியின் சிந்தனைகளும் நமக்குக் கிடைத்திருக்குமா ?

 

மதுரை நம்பி நாற்பதாண்டுகள் சிறைக்காவலராய் பணியாற்றியவர் .தன் பணிக்காலத்தில் சந்தித்த சில காட்சிகளை உயிரோவியமாய்த் தீட்டிக் காட்டியுள்ளார் . பொதுவாய் கைதிகளின் கண் வழியே சிறையை அறிமுகம் செய்த நூல்களைப் பார்த்திருப்போம். ஓர் அதிகாரியின் பார்வைவை வழி பார்த்திருப்பதுதான் இந்நூலின் சிறப்பு .

 

பணியில் சேர்ந்த முதல்நாளே தப்பி ஓடிய கைதியுடனான அனுபவத்துடன் நூல் தொடங்குகிறது . மைனாக்களுடனும் கிளிகளுடனும் மட்டுமே பேசிப்பேசி வாழ்ந்த நாகுக்கோனார் சிறையிலிருந்து விடுதலை பெறும் நாளில் அப்பறவைகளை ஓர் அட்டைப் பெட்டியில் அழைத்துச் சென்றது சிலிர்க்க வைக்கிறது .

 

சின்ன சின்ன திருட்டில் அடிக்கடி ஜெயிலுக்கு வரும் ஐயப்பன் , சிறைக்குள் இரண்டு ஈர்குச்சி ஓர் உடைந்த பிளேடு இவற்றைக் கொண்டு ,ரகசியமாக எல்லோருக்கும் முடிதிருத்துவான் . மிகப்பெரிய முடிதிருத்தும் கலைஞனாக ஜொலித்தான் அதிகாரிகள் கூட அவனிடம் முடிதிருத்திக் கொள்வதுண்டு . “ நீ திருடனா இருந்தாக்கூட பரவாயில்லை,நம்ம சாதியக் கேவலப்படுத்திடாதடா !” என சக சாதிக்காரர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வெளியே அவ்வேலை செய்வதில்லையாம். சாதியம் எப்படி நீள்கிறது ? அதிகாரியின் பங்களா வேலை பிடிக்காமல் அங்கே வேண்டுமென்றே சைக்கிளைத் திருடி மாட்டிக்கொள்ளும் ஐயப்பன் தன்னால் சிறைக்காவலர் பாதிக்கக்கூடாது என நடந்துகொண்டது செத்துப் போகாத மனிதத்தின் சாட்சி .

 

சிறைக்குள் நடந்த போராட்டங்களும் , அதில் கம்யூனிஸ்டுகள் வகித்த பாத்திரமும் , அதனால் அவர்கள் பட்ட அடியும் தண்டனையும், போராட்டத்தின்  விளைவாகக் கிடைத்த வெற்றிகளும் நூல் நெடுக விரவிக்கிடக்கிறது . கம்யூனிஸ்ட் அதிகாரியாய் இருப்பினும் கைதியாக இருப்பினும் தோழர் தோழர்தான் . தோழமையின் இலக்கணம் அதுதான். நூலில் அதுவே கைபிடித்து வழிநடத்துகிறது.

 

தீக்கதிர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் தோழர் கணேசனிடம் பலமுறை உரையாடி தண்டனைக் கைதியாய் அவரின் சிறைப் போராட்ட அனுபவங்களைத் தெரிந்துகொண்டதுண்டு . பெண்களின் மானத்தைக் காக்கப் போராடி கொலை வழக்கில் சிறைபட்டார் .சிறையில் உரிமைக்காகப் போராடி அடிபட்டார் .  வந்து பார்வையிட்ட தோழர் பி .மோகனின் அறச்சீற்றம் கம்யூனிஸ்டுகளின் குருதியில் கலந்தது .இந்நூலில் வாசித்த போது ,  பட்டை பட்டையாக அடியால் தோலுரிந்து வீங்கிய கணேசனின் முதுகு என்னைக் கனவிலும் திடுக்கிட வைத்தது. இன்றைக்கும் அவர் உறுதியான கம்யூனிஸ்ட் . உளறும் சினிமாக்காரர்களுக்கு  “நட்சத்திரங்கள் நகரலாம்” ; ஆனால் மெய்யான நட்சத்திரத்தின் ஜொலிப்பை உணரவே முடியாது .

 

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுடனான அனுபவம் , திமுகவின் சிறை நிறைப்பும் போரட்டம் , சிறையிலிருந்து விடுதலையானதும்  சிறைத்துறை அமைச்சரான கே .ஏ .கிருஷ்ணசாமி , சிறைக் கைதிகள் போராடிய போது வரமறுத்து பெரிய தாக்குதலுக்கு காரணமான கலெக்டர் சம்பத் ஊழல் வழக்கில் அதே சிறைக்கு வந்தது ,ஆட்டோ சங்கர் வழக்கு இப்படி வரலாறும் செய்தியுமாய் இந்நூல் விரிந்த தளத்தில் பயணிக்கிறது .

 

முஸ்லீம் கைதிகளுக்கு சலுகை கொடுத்ததே அவர்களை மற்ற கைதிகள் வெறுக்க வைத்து பெரும் தாக்குதல் நடத்தத்தான் என்பதை முன்னுணர்ந்த சிறைக்காவலர் நல்லதம்பி அவர்களை எச்சரிப்பது ; நுட்பமாய் படித்தறிய வேண்டிய ஓர் அத்தியாயம் . நட்பென்பது நகுதற் பொருட்டன்று தேவையான இடத்தில் தவறைச் சுட்டிக்காட்டலும்தான் .கசக்கும் மருந்தைப் புகட்டும் தாயாக சில நேரங்களில் இருந்தாக வேண்டும் .

 

தோழர் ஹர் கிஷன்சிங் சுர்ஜித் மறைவின் போது திருச்சி லைன்ஸ் கிளப்பில் சுர்ஜித் குறித்து இரங்கலுரை நிகழ்த்த அழைத்தனர் .நான் சென்றிருந்தேன் . கூட்டத்திற்கு பிறகு உணவோடு உரையாடிக் கொண்டிருந்த போது பிரபல கிரிமினல் வழக்கறிஞர் சொன்னார் , “ திட்டமிட்டு கொலையோ கொள்ளையோ செய்கிற எவனும் பெரும் தண்டனை பெறுவதில்லை .முக்கிய காரணம் சாட்சிகள் பயந்துவிடுவர் ,முடங்கிவிடுவர் , அல்லது வாங்கப்பட்டுவிடுவர் . உணர்ச்சி வசப்பட்டு அண்ணனையோ பொண்டாட்டியையோ காதலியையோ கொலை செய்கிறவன் குற்ற உணர்ச்சி மேலிட உண்மையச் சொல்லி மாட்டிக் கொள்வார் . சிறு குற்றங்கள் செய்பவனும் , கேட்ட போது போலீஸுக்கு கேஸ் கொடுப்பவனுமே தண்டனை பெறுகிறான். சிறையில் கிடக்கிறான்.”

 

இந்த நூலைப் படித்த போது அது மெய்தான் என்பதை சித்தரிக்கப்பட்ட காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது . பல ஆண்டுகளாய் வெறும் விசாரணைக் கைதியாகவே இருப்போர் கதை கொடிதினும் கொடிது .

 

இந்நூலில் இடம் பெற்றுள்ள வெட்டுகருப்பனின்  “ஒரு நாள் பரோல்” உருக்கமான நிகழ்வு . கார்மேகம் இளங்கோவின் யூ டியூப்பில் கேட்கலாம் .

 

 “ஆர்டர்லி அழக்கப்பன்” அத்தியாயம் வித்தியாசமானது .அதிகாரியின் மகளின் பாலியல் நாட்டமும் அது சார்ந்த பிரச்சனைகளுமாய் நகரும்.அங்கு குற்றேவல் புரிந்த ஒரு கைதி இந்த சம்பவத்தில் சம்பந்தப்படு ரத்த காயத்தோடு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவார் .

 

ஓரிடத்தில் அழகப்பன் அதிகாரி மகளிடம் சொல்லுவார் , “ இப்படிச் சொன்ன அதிகாரிகளோட மனைவிகளையும் பார்த்துட்டேன் ,அவங்க பிள்ளைகளையும் பார்த்துட்டேன் . எத்தனை பேருக்கு வயிற்றைக் கழுவ மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்திருக்கேன் தெரியுமா ?”  

 

இது சிறையின் இன்னொரு முகத்தை இது காட்டும்.

 

செளபா எழுதிய கதையும் செளபாவின் கதையும் வாசிக்க நெஞ்சம் பதறுகிறது .அவன் சிறைபடுவதற்கு சில நாள் முன்பு போணில் அழைத்து என்னிடம் பலவற்றைப் பேசிக்கொண்டிருந்தான் . பலமுறை அவன் அழைத்தும் நான் அவன் பண்ணை வீட்டுக்கு வரமால் இருப்பது குறித்து வருந்தினான் . நான் வருவதாக வாக்குக் கொடுத்தேன் . காலம் வேறு மாதிரி முடிவெடுத்துவிட்டது .

 

 “வாசிப்பு பழக்கம் வசப்படுத்தும்” என்கிற அத்தியாயம் சிறைக்காவலர் மட்டுமல்ல ,சிறை அதிகாரியும் வாசிக்க வாசிக்க பண்படுவதும் மேம்படுவதுமாய் விரிகிறது . சிறை நூலகங்கள் மேம்படுத்தப்படும் போது சிறையிலிருந்து நேரு எழுதியது போல் சிறையிலிருந்து அறிவுபூர்வமான நூல்கள் பல வரக்கூடும் .

 

சாதி ,மதம் ,கட்சி ,அரசியல் , ஆன்மிகம் ,நாத்திகம் கலை இலக்கியம் எல்லாம் சிறையிலும் எதிரொலிக்கத்தானே செய்யும் ? ஆடலும் பாடலும் எங்கும் எப்போதும் மனிதனின் தேவை .சிறை என்ன விதிவிலக்கா ? சிறையின் ஆத்மா குதுகலிக்கும் நேரமல்லவா அது ? அதனை இந்நூல் நன்கு பதிவு செய்துள்ளது .

 

சிறையில் அளவுக்கு மீறி கைதிகளை அடைத்தால் அதுவும் மனித உரிமை மீறலே . ஆனால் சிறை அதிகாரிகளுக்கோ அது பணம் கொழிக்கும் காலம் . .“தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தப் பணித்துறை” என பெயர் மாறி இருக்கிறது . சில மாற்றங்களும் வந்துள்ளன .ஆயினும் மனித உரிமை இன்னும் சரியாக உள்வாங்கப்படாமலே இருக்கின்றது .இந்நூல் சிந்திக்கத் தூண்டும்.

 

இந்நூல் மதுரைச் சிறையை மையங்கொண்டே நகர்கிறது .வேலூர் ,கடலூர் ,பூந்தமல்லி போல் பிற சிறை அனுபவங்களும் உண்டு . சிறைக் காவலராகவும் கம்யூனிஸ்டாகவும் நல்லதம்பி என்கிற மதுரைத் தம்பியின் பார்வையும் பரப்பும் விசாலமானது .விவரமானது .வாசிக்க உள்வாங்க நிறைய அடர்த்தி உள்ள நூல் . “ ஒரு நாவலைப் போல் விரிகிறது” என எஸ் ஏ பெருமாள் சொல்வதும் , “ சுயசரிதை தன்மை கொண்ட வரலாற்று ஆவணம்” என ச.தமிழ்ச்செல்வன் இந்நூல் பற்றி சொல்வதும் மிகை அல்ல.

 

 

இறுதியாக ஒரு கேள்வி , இதுவரை வந்த நூல்களெல்லாம் இந்நூல் உட்பட ஆண்களின் சிறை சார்ந்தே பேசுகிறது . இந்நூலில் 90 ஆம் பக்கத்தின் பெண் கைதிகள் குறித்து ஒரு செய்தி லேசாக தலை நீட்டுகிறது . “ பெண் கைதிகளின் அலறல் அடிக்கடி  கேட்டுக்கொண்டே இருக்கும் ?” என்ற வரி சொல்ல எவ்வளவோ இருக்கிறது என சொல்லி நிற்கிறது . பெண்களின் சிறையும் துயரமும் எப்போது யாரல் பேசப்படுமோ ? சொல்லில் அடங்குமோ அக்கண்ணீரும் வலியும் ….

 

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் , ஓரு சிறைக்காவலரின் அனுபவப் பதிவுகள் , ஆசிரியர் : மதுரை நம்பி ,

வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷ்ன்ஸ் ,தொடர்புக்கு : 99404 46650

பக்கங்கள் : 312 . விலை : ரூ.360 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

 

 

0 comments :

Post a Comment