உரைச் சித்திரம் : 18. அறிவு சோர்வு உடைமையின் பிறிது சோர்வும் அறிப.

Posted by அகத்தீ Labels:

 


உரைச் சித்திரம் : 18.

 



அறிவு சோர்வு உடைமையின் பிறிது சோர்வும் அறிப.

 

 

நான் தீக்கதிரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது , சில தொலைகாட்சி ஊடக விவாதங்களுக்கு செல்வதுண்டு . ஒரு முறை அவ்வாறு சென்ற போது ஒரு மூத்த பத்திரிகையாளருடனான நிகழ்வுக்கு வெளியிலான உரையாடலின் ஒரு கட்டத்தில் , “ காம்ரேட் ! நீங்க என்ன வேணுமிண்ணாலும் சொல்லிக்கோங்க ‘டாப் டென் சினிமா’ , ‘டாப் டென் புக்ஸ்’ எனச் சொல்வதில் இருக்கும் கம்பீரத்தை தமிழில் வரவைக்க என்ன வார்த்தை இருக்கிறது ? அந்த கான்செப்ட்டே ஐரோப்பியன் கான்செப்ட்” என ஒரே போடாய் போட்டார் .

 

 மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய  முதுமொழிக்காஞ்சி என்கிற நூலை வாசித்ததுண்டா ?” என அவரிடம் கேட்டேன் .

 

அவருக்கு கோபம் வந்தது , அடக்கிக்கொண்டு  “நானும் இலக்கியம் படிச்சிருக்கேன் காம்ரேட் , என் கேள்வியை சரியா புரிஞ்சுக்கோங்க” என்றார். நிகழ்வு தொடங்கியதால் எங்கள் உரையாடல் அத்துடன் முற்றுப்பெற்றது .

 

இன்று முதுமொழிக் காஞ்சியைப் புரட்டிய போது பழைய நினைவுகள் வந்து போயின .

 

எல்லாவற்றிலும் சிறந்த பத்தைத் தேர்ந்தெடுப்பது ஓர் மானுட விழைவு போலும் .தமிழ்ச் சமூகமும் அந்த உயரிய மாண்பை ஐந்தாம் நூற்றாண்டிலேயே தனதாக்கிக் கொண்டிருப்பது வியப்புக்குரியது .

 

முதல் பரிசு ,இரண்டாம் பரிசு ,மூன்றாம் பரிசு என குறுகத்தறித்து இறுக்க வடித்து செய்யும் கொடுமையைக் காட்டிலும் முதல் பத்து மேலானது அல்லவா ? ஜனநாயக பூர்வமானதல்லவா ?

 

அது இருக்கட்டும் காஞ்சிபுரத்து மக்கள் இதை எல்லாம் படிச்சிருப்பாங்களா ?

 

ஐயையோ ! இந்நூலில் காஞ்சி என்பது காஞ்சிபுரத்தை குறித்ததல்ல .தொல்காப்பியம் குறிப்பிடும் காஞ்சித்திணை வகைப் பாடல்கள் .அதாவது வாழ்க்கை என்பது நிலையற்றது , நிலையாமையைச் சுட்டி நீடித்த புகழ்தரும் செயல்களைச் செய்ய வழிகாட்டும் நூல் .

 

முதுமொழிக் காஞ்சி எனும் இந்நூலில் பெண்கள் குறித்தும் குலம் குறித்தும் மனுதர்மம் சார்ந்தும் வருகின்றவற்றை நான் ஏற்கவில்லை .நிராகரிக்கிறேன் . சொல்லப்பட்ட நல்ல செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் .  சொல் நேர்த்தியை , சொல் சிக்கனத்தை இதில் கற்றுத் தேறுங்கள்!

 

சரி ! அப்படி முதுமொழிக் காஞ்சி என்னதான் சொல்லியிருக்கிறது ?

 

முதுமொழி எனில் பழமொழி , மூதுரை எனப்படும் . அந்த மூதுரை வடிவில் வாழ்விற்குத் தேவையான பத்து பத்துகளை அடுக்கிக் கோர்த்திருக்கிறார் புலவர் . அவற்றில் ஒரிரு வரிகளோ ,சில செய்திகளோ இன்றைய சமூகச் சிந்தனைக்கு ஒத்துவராதவையாக இருக்கலாம் ; ஆயினும் புலவர் வாழ்ந்த காலத்து சமூக உளவியல் எனப் புரிந்து கொள்வோம்.

 

சிறந்த பத்து ,அறிவுப் பத்து ,பழியாப் பத்து ,துவ்வாப் பத்து ,அல்ல பத்து ,இல்லைப் பத்து,பொய்ப் பத்து ,எளிய பத்து ,நல்கூர்ந்த பத்து ,தண்டாப் பத்து எனப் பத்து பத்துதாய் பத்து பாடல் . துவ்வா எனில் வேண்டா என்றும் நல்கூர்ந்த எனில் வறிய என்றும் இங்கு நம் வசதிக்காகப் பொருள் கொள்ளலாம் .

 

  “ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்” அதாவது கடல் சூழ்ந்த இந்த உலகத்து மக்களுக்கெல்லாம் என்றே ஒவ்வொரு பாடலும் ஆரம்பிக்கும் , அடுத்த பத்துவரிகள் நெற்றியடியாய் பழமொழியாய் வந்திறங்கும் . கவிதைக்கு அழகு சொற்களின் சிக்கனம் . ஒற்றை வரியில் இவ்வளவு திணிவா ? படித்தால் வியப்பீர் .

 

அது இருக்கட்டும் , ஓரிரு பத்துகளில் நுழைந்து பார்ப்போம் !

 

முதல் பத்தே சிறந்த பத்தென்று வருகிறது .  கடல் சூழ் உலகில் வாழும் மானிடர்க்கெல்லாம் எனத் துவங்கி “சிறந்த பத்து” அடுக்கப்படுகிறது;

 

1] சும்மா, ஓதுவதைவிட ஒழுக்கம்தான் சிறந்ததப்பா !

2] அன்பாய் இருத்தல் நல்லதுதான் ,அதனினும் நன்று அவர் துன்பம் கண்டு வருந்துதல் .உதவுதல் .

3] எவ்வளவு படித்தாய் என்பதைவிட ! எவ்வளவை நினைவில் வைத்திருக்கிறாய் என்பது மிக முக்கியம்.

4] கொடைவள்ளல் என காட்டிக்கொள்வதைவிட , உண்மையாய் இருந்தல் நல்லது.

5] இளமையாய் இருப்பது பெரிதல்ல நோய்நொடி இல்லாதிருப்பதே முக்கியம்.

6] ஒருவன் அழகா இருப்பது முக்கியமல்ல ;பழிபாவங்களுக்கு அஞ்சி நடத்தலே முக்கியம் .

7] பிறந்த குலமல்ல ;பெற்ற கல்வியே சிறப்பு

8] கற்றல் நல்லதே ,ஆயின் நன்கு கற்றோரை சார்ந்து மேலும் ஞானம் பெறல் அதனினும் நன்று .

9] பகைவரைத் தண்டிப்பதைவிட ; பகைவரைவிட நம்மை வளப்படுத்திக் கொள்வதே நன்று .

10] செல்வத்தை சேர்த்துக் கொண்டே போவதைவிட ; சேர்த்த செல்வத்தை குறையாமல் காத்தல் நன்று .

 

எல்லா பத்தையும் இங்கே சொல்லிவிடப் போவதில்லை .அறிவுப் பத்தையும் ,பொய்ப் பத்தையும் மட்டும் பார்ப்போம் !

 

இங்கும் ,கடல் சூழ் உலகில் வாழும் மானிடர்க்கெல்லாம் எனத் துவங்கி  “அறிவுப் பத்து”  அடுக்கப்படுகிறது;

 

1] ஒருவன் சிறந்த குடியில் பிறந்தவன் என்பது அவனின் இரக்கத்தன்மை மூலம் அறியலாம். [ குலம் / குடி  கருத்தோடு இன்று உடன்பட முடியாது ]

2] ஒருவன் செய்யும் கொடையால் அவன் இரக்க குணத்தை அறியலாம்.

3] நல்ல நண்பன் என்பதை ஆபத்தில் உதவுவதைக் கொண்டறியலாம்.

4] ஒருவன் கற்ற கல்வி அவன் அறிவால் வெளிப்படும்.

5] ஒருவர் செய்துள்ள முன் ஏற்பாடுகளே அவர் எவ்வளவு தூரம் ஆய்ந்துள்ளார் எனக் காட்டிவிடும்.

6] ஒருவன் செருக்குடையவன் எனில் இழிந்த குடியில் பிறந்தவன் என அறிக          [இக்கருத்தோடும் முதல் கருத்தைப் போலவே இன்று உடன்பட முடியாது]

7] ஒருவன் வஞ்சகமாக நடந்துகொண்டால் அவன் திருடனென்று அறிக !

8] ஒருவன் சொல்லில் பிழை ஏற்படின் ; அவனின் எல்லா தவறுகளும் அம்பலமாகும் .

9] அறிவுத் தளர்ச்சி செயல் தளர்ச்சியாகிவிடும் .

10] ஒருவன் செய்து முடித்த செயலே அவனது முயற்சியினைச் சொல்லும்.

 

இங்கும் ,கடல் சூழ் உலகில் வாழும் மானிடர்க்கெல்லாம் எனத் துவங்கி  “பொய்ப் பத்து”  அடுக்கப்படுகிறது;

1] அறிவு இல்லாதவன் இனியையாக வாழ்ந்தேன் என்பது பொய் .

2] செல்வம் குவித்து வைத்திருப்போன் கோபப்படாமல் இருக்கிறேன் என்பது பொய்.

3] கள் குடித்தவன் சோர்வு இல்லாது உற்சாகமாக இருக்கிறேன் என்பது பொய் .

4] தக்க காலம் எதுவென உணராமல்  செயலில் இறங்கிவிட்டு வெற்றி காண்பேன் என்பது பொய்.

5] எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சனை முளைக்கும் என அறியாமல் இருப்பவன் தன்னைக் காத்துக் கொள்வேன் என்பது பொய் .

6] கடுமையாக உழைக்காமல் சோம்பலில் கிடந்துவிட்டு வெற்றி பெறுவேன் என்பது பொய்.

7] அடக்கம் இல்லாதவன் பெருமைக்குரியவனா இருக்கிறான் என்பது பொய் .

8 ] தற்பெருமை ,செருக்கு அண்டாதவருக்கு இழிகுணம் வந்துவிட்டது என்பது பொய்.

9] பொருளாசை பணத்தாசை கொண்டவன் நடுவுநிலையோடு இருப்பான் என்பது பொய் .

10] உள்ளத்தில் தூய்மை இல்லாதவன் செய்யும் தவம் பொய் .

 

இப்போது மீண்டும் தொடக்கத்திற்கு வருகிறேன் . “ நண்பரே  “டாப் டென் கான்செப்ட்” சொன்னவனய்யா தமிழன் .ஆனால் அங்கேயே நின்றால் போதும் என்பது மடமை . மேலே மேலே முன்னேற வேண்டும் .பழமையைச் சுட்டுவது முன்னேற்றத்தை முடக்க அல்ல ;உந்துவிசை கொடுக்கவே என அறிக !”

 

அறிவுச் சோர்வு உடைமையின், பிறிது சோர்வும் அறிப.

அறிவு என்பது குடை ராட்டின சவாரி அல்ல ; சுழல் ஏணி ஏற்றம் .

 

 

 

 

 சிறந்த பத்து

 

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
   
ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை.
2.
காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.
3.
மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை.
4.
வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை.
5.
இளமையின் சிறந்தன்று மெய்பிணி இன்மை.
6.
நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
7.
குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
8.
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
9.
செற்றாரைச் செறுத்தலின் தன் செய்கை சிறந்தன்று.
10.
முன்பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.

 

அறிவுப் பத்து

1]ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -

 

பேர் இல் பிறந்தமை ஈரத்தின் அறிப.

 

 2. ஈரம் உடைமை ஈகையின் அறிப.

 

3. சோரா நல் நட்பு உதவியின் அறிப.

 

4. கற்றது உடைமை காட்சியின் அறிப.

 

5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப.

 

6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப.

 

7. சூத்திரம் செய்தலின், கள்வன் ஆதல் அறிப.

 

8. சொற்சோர்வு உடைமையின், எச் சோர்வும் அறிப.

 

9. அறிவுச் சோர்வு உடைமையின், பிறிது சோர்வும் அறிப.

 

10. சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.

 

 

பொய்ப் பத்து

 

1] ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -

 

   பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய்.

 

2. பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய்.

 

3. கள் உண்போன் சோர்வு இன்மை பொய்.

 

4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.

 

5. மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய்.

 

6. உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்.

 

7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.

 

8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.

 

9. பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்.

 

10. வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய்.

 

 

மதுரைக் கூடலூர் கிழார்  இயற்றிய  முதுமொழிக்காஞ்சி

காஞ்சித்திணை

 

 

அறிவு என்பது குடை ராட்டின சவாரி அல்ல ; சுழல் ஏணி ஏற்றம் .

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

1.செப்டம்பர் 2022.


0 comments :

Post a Comment