சிறுகதை .3.சாவித்திரி புத்தி சேகர யாகம்.

Posted by அகத்தீ Labels:

 


சிறுகதை .3.

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 


சாவித்திரி புத்தி சேகர யாகம்.

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

முதல் மந்திரம்:

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கலீம் க்ளெம்

தேவகி ஸுத கோவிந்தா : வாசுதேவா

தேஹிமே தனயம் கிருஷ்ணா

த்வாமஹம் சரணம் கத :”

 

இரண்டாவது மந்திரம் :

 “ தேவதேவ ஜகந்நாதா

கோத்ர வ்ருத்திகர ப்ரபோ

தேஹிமே தனயம் சீக்ரம்

ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்”

 

இந்த மந்திரங்களை எழுதிய பேப்பரை சாவித்திரி எத்தனை முறை படித்தாளோ ! அவளுக்கே தெரியாது .

 

ராமசுப்பு சார் தன் ஜாதகத்தை திருப்பிக் கொடுத்த போது அதனுள் இருந்த துண்டு காகிதத்தில் இந்த மந்திரம் எழுதப்பட்டிருந்தது .

 

சாவித்திரிக்கு திருமணம் ஆகி மூன்றுவருடங்கள் ஆயிற்று .வயிற்றில் புழு பூச்சி இல்லை . மாமியார் ஆடாத ஆட்டம் இல்லை. இவர் வேண்டாத தெய்வம் இல்லை ; செய்யாத பூஜை இல்லை .பகவான் புத்திர பாக்கியம் மட்டும் தரவே இல்லை . என்ன தோஷமோ ? யார் விட்ட சாபமோ ? மனசொடிந்து கிடந்தாள் சாவித்திரி .

 

கணவர் ராஜேந்திரன் தன்னோடு வேலைபார்க்கும் ராமசுப்பு ஜோதிடம் பரிகாரம் இவைகளில் புலி என சொல்லி அவரிடம் கொடுக்க  இருவர் ஜாதகத்தையும் எடுத்துப் போனார் . அவர் ஜாதகத்தை நேற்று மாலை திருப்பி  கொடுத்த போது அதனுள் இந்த மந்திரம் எழுதிய துண்டு சீட்டு  இருந்தது .

 

சாவித்திரி மனம் நிலை கொள்ளாமல் தவித்தார் .அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ராஜேந்திரன் கைகால் முகம் கழுவி கூடத்தில் ஆடுபலகையில் உட்கார்ந்தார் .

 

சாவித்திரி ஆவி பறக்க டிக்காஷன் காபியையும் வெங்காய பக்கோடாவையும் முன் வைத்துவிட்டு மெல்ல தன் சந்தேகத்தைக் கேட்டார் . “ அந்த ஜாதகத்துக்குள் ஏதோ மந்திரம் எழுதி வச்சிருக்கு.. ?”

 

 “ அவசரக் குடுக்கை அதை பார்த்திட்டியா ? ராமசுப்பு ஞாயிற்றுக்கிழமை காலையிலே வந்து விவரமா சொல்றேன்னு சொல்லி இருக்கார் .. இன்னிக்கு வெள்ளி , ஒரு நாள் பொறுத்துக்கோ … எல்லாம் நல்லபடியாகும்…”

 

 “ ஈஸ்வரா ! நெய்பந்தம் பிடிக்க ஒரு பேரனை கொடுக்கக்கூடாதா ? சீக்கிரம் ஒரு பேரனையோ பேத்தியையோ பார்த்திட்டு போணும்னு ஆசைப்படுறேன் … நீ என் தலையில என்ன எழுதியிருக்கியோ ..” என மாமியார் அம்புஜம்மாள் வழக்கமான பிலாக்கணம் பாடினாள்.

 

அங்கு ஓர் கனத்த அமைதி நிலவியது .

 

ஞாயிற்றுக் கிழமை ராமசுப்பு வருகையை தேவதூதனைப் போல் எதிர்பார்த்து இருந்தனர் . நெற்றிப்பட்டையில் சந்தனம் குங்குமம் துலங்க “சிவாய நம ஓம்!” எனச் சொல்லியபடியே உள்ளே நுழைந்தார் . “ ஓம் நமச்சிவாயா” என கோரஸாகக் கூறி வரவேற்று நாற்காலியில் உட்காரவைத்து எல்லோரும் பயபக்தியோடு தரையில் உட்கார்ந்தனர் . “ அம்மா ! எல்லோரும் நாற்காலியிலேயே உட்காரலாமே !” என ராமசுப்பு சொல்ல , பரவாவில்லை பரவாயில்லை என கீழேயே உட்கார்ந்தனர் .

 

இதற்கிடையில் சாவித்திரி பரிமாறிய முறுக்கு அதிரசத்தை மென்றபடியே “ ஆத்துல செஞ்சதா ?” என ஆரம்பித்தார் . “ ஆமாம்” என தலையாட்ட “ அதுதான் ருசி இழுக்குது” என சபாஷ் போட்டுவிட்டு டிக்காஷன் காப்பியை பல்படாமல் குடித்தார் .

 

 “ நான் ரெண்டு பேர் ஜாதகத்தையும் நல்லா பார்த்திட்டேன் , ராசி மண்டலத்தில் ஐந்தாம் ஸ்தானமாக அமைவது சிம்மம் , அதன் அதிபதி சூரியன் .ஒன்பதாவது ஸ்தானமாக அமைவது குரு .அவன் புத்திக்காரன் . இரண்டும்தான் தந்தைக்கான காரகனாக அமைகிறான் .ராஜேந்திரனுக்கு இரண்டும் பேஷா இருக்கு ! புத்திர பாக்கியம் நிச்சயம் .”

 

“ அப்பாடா..” என பெருமூச்சுவிட்டார் அம்புஜம்மாள்.

 

 “ சாவித்திரிக்குதான் கொஞ்சம் கிரக தோஷம் இருக்கு . ஆம்படையான் ஜாதகம் ஸ்டாங்கா இருக்கச்சே பொம்மனாட்டி ஜாதகம் கணக்கில் இல்லை .ஆனாலும் ஒரு சின்ன பரிகாரம் பண்ணினால் போதும் . புத்திர பாக்கியம் கன்பார்ம் நோ டவுட்.. .”

 

 “ கேட்கவே சந்தோஷமா இருக்கு ! எனக்கு நெய்பந்தம் பிடிக்க பேரன் வந்திருவான்ல…” அம்புஜம்மாள் கேட்டாள்.

 

 பும் நாம நரகாது த்ராயதே இதி புத்ரா…. அதாவது தன் தகப்பனின் ஆத்மா புற்றில் விழாது காப்பாற்றுபவனே புத்திரன்.. புத்திரன்னு சொன்னவுடனே பாட்டி பேரன்னு கன்பார்ம் பண்ணிட்டா அப்படி இல்ல பிருஹத் ஜாதகம் என்ன சொல்லுதுன்னா ஆண் பெண் இருவரையும் குறிப்பதே புத்திரன்…’

 

 “இப்படி கேள்விப்பட்டதே இல்லையே!” ராஜேந்திரனும் பங்கஜம்மாளும் கோரஸாகக் கேட்க

 

 “ எனகே இப்போ சமீபத்திலேதான் இந்த விளக்கம் கிடைச்சது .

 

 “ நீங்க பிருஹத் ஜாதகம் படிச்சேளா ?”

 

 “ படிச்சவர் அயோத்தி மண்டபத்திலே பண்ணிய உபன்யாசத்திலே  சொன்னார் …

 

 “ மண்டபத்திலே சொன்னதா ?” என சாவித்திரி இழுக்க ராமசுப்பு முகம் கோணலாக அம்புஜம் முறைக்க சாவித்திரி அமைதியானாள் .

 

 “ நான் கிரக தோஷம்னு சொன்னேனோ இல்லியோ அதுதான் சாவித்திரி நாக்கிலே விளையாடுது .

 

 “புத்திர காமேஷ்டி யாகம்” செய்யணுமோ” அம்புஜம்மாள் படபடக்க…

 

ராமசுப்பு தலையை ஆட்டி ,  “நோ நோ ! கிரக தோஷம் அந்த அளவு இல்லை , செய்யலாம் இப்போதைக்கு தேவைப்படலை ,பின்னால் பார்ப்போம்…  நான் நேற்று எழுதி அனுப்பினேனே அந்த மந்திரத்தை தம்பதிகள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு மண்டலம் காலையும் மாலையும் 101 முறை இஷ்ட தெய்வத்துக்கு முன்னால் ஜெபம் பண்ணினால் போதும் , குளிச்சு சுத்தபத்தமா ஸ்பஷ்டமா ஜெபிக்கணும் … இரண்டாம் மாதம் கரு டாண்ணு தங்கிடும்…”

 

இவ்வளவு எளிய வழியைச் சொல்லிய அவரை கையெடுத்துக் கும்பிட்டனர் .

 

 “ தூரமான நாளிலே ஜெபிக்கலாமோ ?” என அம்புஜம்மாள் கேட்க .

 

 “நோ !நோ!” என வேகமாகத் தலையாட்டி அப்பம் பிள்ளையாண்டன் மட்டும் ஜெபிச்சா போதும் சாமிக்கு இதெல்லாம் புரியும் …”

 

அதன் பின் பொதுவான உரையாடலுடன் ராமசுப்பு விடை பெற்றார் .

 

ராமசுப்பு குறித்துக் கொடுத்த தேதியில் மந்திர உச்சாடனம் தொடங்கினர் . ஒரு மண்டலம் அல்ல ; மூன்று மண்டலம் ஜெபித்துப் பார்த்தாயிற்று . அப்புறம் அவர் சொன்னபடி  “புத்திர காமேஷ்டி யாகம்” செய்தாயிற்று , மாதங்கள் உருண்டோடின ,வருடமும் இரண்டாச்சு ஒண்ணும் நடக்கலை .

 

யார் யாரோ சொன்ன பூஜைகள் ,வேளாங்கண்ணி ,நாகூர் ,தர்க்கா , கருமாரியம்மன் கோவில் அது இது என சுற்றி அடித்தும் எந்தப் பயனும் இல்லை . ராஜேந்திரன் கிட்டத்தட்ட பிரம்மை பிடித்தவன் போல் ஆனான் . சாவித்திரி மனம்நைந்து வெந்து கிடந்தாள்.

 

அலுவலகத்தில் இதுவும் பேசு பொருளானது .ராமசுப்பு சொன்னதைக் கேட்டதோடு மருத்துவரையும் பார்த்திருக்கணும்னு ஆளுக்கு ஆள் யோசனை சொல்ல ஆரம்பித்தனர் .

 

அன்று அலுவலக நேரம் முடிந்தபின்னும் ராஜேந்திரன் அப்படியே மனச்சோர்வோடு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் . யூனியன் செகரட்டிரி கருப்புராஜா மெல்ல ராஜேந்திரன் அருகில் போய் தோளைத் தொட்டு உலுக்கி எழுப்பி வெளியே அழைத்துப் போனார் . டீக்கடையில் டீ குடித்தபின்னர் ராஜேந்திரன் பைக்கை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு ; தன் பைக்கில் அழைத்துக் கொண்டு ராஜேந்திரன் வீட்டுக்கு போனார் .

 

டீ பிஸ்கட்டோடு உரையாடல் தொடங்கியது .

 

 “ சிஸ்டர் ! தப்பா நினைக்காதீங்க சார் ! நீங்க ஒரு நம்பிக்கையோடு ஒரு ரூட்ல போயிட்டு இருந்தப்ப நாம் ஏதேனும் சொன்னா அது நெகட்டிவா தெரியும்… அதுதான் பேசாமல் இருந்தேன் .”

 

 “ அண்ணன்னு சொல்லவா தோழர்ன்னு சொல்லவா தெரியலை .. எனக்கு கூடப்பொறக்காத அண்ணனா நினைக்கிறேன் சொல்லுங்க ..” சாவித்திரி கண்ணைத் துடைத்தபடி சொன்னாள் .

 

 “கடவுள நம்புறதும் நம்பாமல் இருக்குறதும் உங்க விருப்பம் ,மெடிக்கல் சயின்ஸ் ரொம்ப முன்னேறி இருக்குங்கிறத ஒத்துக்கணும் மூடநம்பிக்கையில் வாழ்வைத் தொலைச்சிரக்கூடாது.. ”

 

 “ நீங்க சொல்றதும் சரிதான்னு படுது … நீங்க சொல்றபடியும் டிரை பண்ணி பார்த்திடுவோம்…” இருவரும் அரைகுறை மனசோடு ஒப்புதல் சொல்லி தலையாட்டினர்.

 

நீண்ட உரையாடலுக்குப் பின் அங்கிருந்த படியே டாக்டருக்கு போண் செய்து மறுநாள் மாலை சந்திக்க நேரம் பிக்ஸ் செய்தார் கருப்புராஜா .

 

“டாக்டர் நமக்கு ரொம்ப நெருக்கமானவர் . தைரியமாய் போய் வாங்க ..”

 

 “ முதல் நாள்ல நீங்க வந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும் ..” என சாவித்திரி கேட்க , “சரி” என கருப்புராஜா தலையாட்டினார் .

 

அதன் பிறகு இருவரும் தொடர்ச்சியாக பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு சென்றுவந்தனர் . டாக்டர் இருவரிடமும் சில அறிவியல் பூர்வமான செய்திகளை விவரமாக எடுத்துச் சொன்னார்கள் . சோதனை முடிவுகளுக்காக காத்திருந்தனர் .

 

கருப்புராஜா அடிக்கடி வந்து இருவரிடமும் பல விஷயங்களைப் பற்றி பேசிவந்தார் .

 

 “ நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது .பொதுவா குழந்தை இல்லேண்ணா பெண்களை மலடின்னு சொல்றாங்க ; ஆண்கள மலடன்னு சொல்றாங்களா ?”

 

 “ஆமான்னா ! என் மாமியார் சாகிறதுக்கு சில நாள் முன்னாடிகூட இந்த மலடிய தலமுழுகிட்டு நீ இன்னொரு கண்ணாலம் பண்ணிக்கோன்னு இவருட்ட சொன்னாங்க…இவரு அம்மாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திருதிருன்னு முழிச்சாரு..”

 

 “ பொம்பளட்ட குத்தம்னா ஆம்பள இன்னொரு கண்ணாலம் பண்ணிக்கலாம் சரி ; ஆம்பளேட்ட குத்தம்னா …”

 

 “ மூடி மறைச்சு ஆயுசு முழுக்கும் பொம்பளய வதைப்பாங்க …” என சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார் சாவித்திரி . ராஜேந்திரன் நெளிந்தான் .

 

 “ கரெக்ட்டு சிஸ்டர் ! நான் என்ன சொல்றேன்னா வேற வழி பல இருக்கே அதை யோசிக்கலாமே அதைவிட்டுட்டு இப்படி பெண்களை வதைக்கணுமா ? …”

 

 “ அதென்ன வழி …”

 

 “ முதல்ல டாக்டர் கிட்டே பேசி சோதனை செஞ்சி உண்மையைத் தெரிஞ்சக்கணும் . அதுக்கு அப்புறம் இரண்டு பேரும் மனம் விட்டுப் பேசணும் …. உண்மையை இருவரும் ஏற்றுக்கணும்..”

 

 “ அப்புறம்..?”

 

 “ சில சிகிட்சைகள் மூலம் குழந்தை பெற வாய்ப்பிருந்தா அதைச் செய்யலாம் . வாய்ப்பில்லை என கைவிரித்தால்…”

 

 “ என்ன என்ன ?” என பதட்டத்தோடு சாவித்திரி கேட்க..

 

 “ சும்மா பேச்சுக்கு சொன்னேன் … முதல்ல பொதுவா பேசுறோம்னு புரிஞ்சுக்கோங்க… நாம அப்புறம் பேசலாம்…” கருப்புராஜா மெல்ல கொஞ்சம் பின் வாங்கினார்…

 

 “ பிரச்சனையைப் புரிஞ்சுக்கோவோமே … நீங்க சொல்லுங்க..” சாவித்திரியும் ராஜேந்திரனும் இயல்புக்குத் திரும்பி சொல்ல , கருப்புராஜா தொடர்ந்தார் ;

 

 “ முதல்ல குழந்தை பாக்கியம் கட்டாயம் வேணுமா வேண்டாமன்னு முடிவு செய்யணும் .. வேண்டாம்னு உறுதியாக முடிவெடுத்தால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் குழந்தையாய்க் கருதி ஒருவர் மடியில் ஒருவர் குழந்தையடி என வாழ்ந்து முடியலாம் ; குழந்தையின்மை பாவமோ குற்றமோ அல்ல ; பெற்றுக்கொள்வது போலவே பெறாமல் இருப்பதும் அவரவர் உரிமை …”

 

 “ வேணுமின்னு நினைச்சா ..?” சாவித்திரி கொக்கி போட்டாள்.

 

 “ அதுக்கும் வழி இருக்கு ஆம்பளைக்கு பிரச்சனைன்னா விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கலாம் ; பொம்பளைக்கு பிரச்சனைன்னா வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கலாம் .. இப்படி நிறைய வழி இருக்கு .. இது எதுவுமே பிடிக்கலைன்னே தத்து எடுத்துக்கலாம் .அது மிகப்பெரிய தொண்டுமாகும்  …”

 

 “ மனசு இருந்தால் மார்க்கம் உண்டு அப்படித்தானே ..” ராஜேந்திரன் இழுத்தான்.

 

 “ ஆனாலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பயங்கரமா காசு கேட்குமே … டிவில பார்க்குறேனே ..

 

 “ குழந்தைகளை கணக்கின்றி பெற்றுக்கொள்வதும் பிரச்சனைதான் …குழந்தையின்மையும் பிரச்சனைதான் ..இதைப் பயன்படுத்தி கார்ப்பரேட் மருத்துவ மனைகள் கொள்ளை அடிப்பதும் நடக்கத்தான் செய்யுது.. எனக்கு தெரிஞ்ச ஒரு சினிமா பிரபலம் [ பெயரை அவர் சொன்னாலும் இங்கு எழுத்தில் தவிர்க்கப்படுகிறது] பெரிய கடவுள் நம்பிக்கையாளர் ஆனாலும் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் ரகசியமாய் சிகிட்சை எடுத்து குழந்தை பெற்றுக்கொண்டார் .பலலட்சம் கட்டணமாகக் கொடுத்ததும் அல்லாமல் குழந்தை பிறந்ததும் டாக்டருக்கு தட்டு நிறைய தங்கக் கட்டிகள் வேறு அன்பளிப்பாகக் கொடுத்தார்…”

 

 “ இதையே பேசிப் பேசி மனசு வலிக்குது வேறெதையாவது பேசலாமே ..” என சாவித்திரி கொஞ்ச … சட்டென பேச்சு சினிமா பக்கமாக நகர்ந்து அரசியலைத் தொட்டு செல்ல நேரம் கடந்து போனது .கருப்புராஜா விடை பெற்றார் .

 

காலம் எவ்வளவு வேகமாய் கேலண்டர்களை கழற்றி வீசிக்கொண்டே செல்கிறது . ஆறெழு  வருடங்கள் உருண்டோடி விட்டன .

 

அலுவலகத்தில் மார்ச் 8 சர்வதேச  பெண்கள் தினம் . பெண்கள் குவிந்திருந்தனர் .

 

 “ இன்று நம்மிடையே பேசுபவர் சமூக சேவகர் சாவித்திரி .இவரை உங்களுக்கு நம்முடன் பணியாற்றும் ராஜேந்திரன் மனைவியாகத் தெரியும் .அவர் இப்போது சமூக சேவகர் ,சமூகப் போராளி .” என அறிமுகம் செய்துவிட்டு கருப்புராஜா அமர்ந்துவிட்டார்.

 

  பேச்சைத் தொடங்கிய சாவித்திரி ,சகோதரிகளே ! என விழித்து தன் கதையைக்கூறலானாள் . [ தான் பயணித்த தவறான பாதையை விளக்கிச் சொன்னபின் ] டாக்டர் தங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை என்றதும் முதலில் இடிந்து போனோம் .ஆனாலும் தோழர் கருப்புராஜா முன்கூட்டியே ஊட்டிய விழிப்புணர்வு எங்களை தற்கொலை செய்யவிடாமல் தடுத்தது. தோழர் யோசனைப்படி சில நாட்கள் டூர் போனோம் .யோசித்தோம் .சண்டை போட்டோம் .சமாதானம் ஆனோம் .பேசினோம்.பேசினோம். குழந்தை நமக்கு இல்லை .அது ஒரு பிரச்சனை இல்லை .ஊரார் வார்த்தைகளை புறந்தள்ளுவோம் . இப்படி முடிவெடுத்தோம் .

 

ஆனாலும் மன அழுத்தம் தொடரவே செய்தது . ஏற்கெனவே எம் எஸ் சி படித்திருந்த நான் தோழர் வழி காட்டியபடி எங்கள் தெரு பத்தாம் வகுப்பு +2  பிள்ளைகளுக்கு சயின்ஸூம் மேத்ஸும் இலவச டியூசன் எடுக்க ஆரம்பித்தேன் .அவர் ஆங்கிலமும் தமிழும் சொல்லிக் கொடுத்தார் .எங்களிடம் படித்த பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற்றனர் . எங்க வார்டு முழுக்க இதுவே செய்தியானது . நான் இப்போ மலடி அல்ல ; எங்க தெருப் பிள்ளைகள் எல்லோருக்கும் அம்மா . நான் பிள்ளை பெற்றிருந்தால் அந்த பிள்ளைக்கு மட்டும் அம்மாவாக இருந்திருப்பேன் .இப்போது ஊருக்கே அம்மா .ஓய்வு நேரங்களில் மாதர் சங்கப் பணிகள் .எனக்கு அவர் துணை .அவருக்கு நான் துணை .

 

முன்பு எத்தனை பூஜை செய்தோம் . மசூதி ,சர்ச் ,கோயில் ஒன்றுவிடாமல் சுற்றினோம் . ஜோதிடம் ஜாதகம் பரிகாரம்னு அலைஞ்சோம் .எந்த மன நிம்மதியும் கிடைக்கவில்லை . “புத்திர காமேஷ்டி யாகம்” எந்த பலனையும் மன நிம்மதியையும் தரவில்லை , தோழர் காட்டிய  “புத்தி சேகர யாகம்” தான் மன நிறைவைத் தந்தது .  அறிவியலாய் யோசிக்க தோழர் கற்றுக் கொடுத்தார் .சமூகப் போராளியாய் எங்களை மாற்றினார் ,மனநிறைவோடு உங்கள் முன் நிற்கிறோம் .

 

அறிவியல் சும்மா படிக்கவும் வேலை செய்யவும் ஆராய்ச்சி செய்யவும் மட்டும் அல்ல ; சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சொன்னது போல் அரசியலுக்கு மட்டுமல்ல குடும்பம் நடத்தவும் அறிவியல் தேவை . மதம் ,சாதி ,மூடநம்பிக்கைகளில் ,சோதிடத்தில் , சடங்குகளில் , பாலின சமத்துவமின்மையில் ,ஒடுக்குமுறையில் வாழ்வைத் தொலைத்துவிடாதீர் . நொடிகளுக்கு இடை வாழ்ந்தாலும் கோடி மின்னலைப்போல் வாழ்வோம்….”

 

சாவித்திரி சர்வதேச பெண்கள் தினம் ,பாலின சமத்துவம் ,தன்கதை எல்லாம் கலந்து பேசி முடிந்ததும் பெண்களின் வலுவான இடைவிடா கரவொலி அவர்களில் மன ஏற்பைச் சொல்லியது .

 

அலுவலுகத்துக்கே இலவச ஆன்மீக சோதிட வழிகாட்டியாய் தன்னை காட்டிக் கொண்டிருந்த ராமசுப்பு பேச்சற்று மவுனம் ஆனார் .

 

 

 

 


0 comments :

Post a Comment