சிட்டுக்குருவியை கொஞ்சத் தோன்றுதே !
“ ஊரோடும் உறவோடும்
பொழுதளந்த காலமது
பேரின்ப மகிழ்வினிலே
மனமெழுந்த சொர்க்கமது
கிராமத்து வாழ்வு.”
இப்படி தன் கிராமத்து
வாழ்வைக் கொண்டாடும் கவிஞர் ஓசூர் சிபிஜெ.
கிராமத்தில் கடன்வாங்கி
வாழை நட்டவன் படும்பாட்டை முதல் கவிதையிலே
பாடுகிறார் .பேரறிஞர் அண்ணாவின் செவ்வாழை , அதற்கு முன்பு எழுத்தச்சனின் வாழக்குல
[மலையாளம் ] , நவகவியின் ஊரோரம் தோட்டத்தில .. என்கிற பாடல் இவற்றின் வாரிசாய் “ நெருப்பைக்
கட்டி” என்கிற முதல் கவிதை . அதன் முடிவு இன்னும் அழுத்தமாய் யதார்தத்தோடு நெருங்கிவிட்டது.
“…… …… ……
…… …… …..
அத்தக்கூலிக்கு
செங்கலறுக்க
கிராமத்தவிட்டு
குடும்பத்தோட
!”
இந்தியா இரண்டாய்
இருப்பதை பலர் பாடி இருக்கின்றனர் .சிபிஜெ சற்று வித்தியாசமாய் காண்கிறார் ;
“…. …. ….
அத்துக்கூலியால்
வாழ்வு நகர்த்த
வயிற்றை நிரப்பும்
கோவிட் இந்தியா
…. … … … … ….
சட்டவிதியை
முழுங்கி
எக்காளமிடும்
நவஇந்தியா.”
இவரின் முதல் கவிதைத்
தொகுப்பான “ இருந்தும்… இல்லாமலும்” நூலை தொகுத்து முன்னுரை தந்தவன் எந்த அடிப்படையில் “ குரங்கின் வால்பிரிய,” எனும் இக்கவிதை நூலில்
ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கண்டு மகிழ்கிறேன்.பாராட்டுகிறேன் .இன்னும் செல்ல வேண்டியது
நெடுந்தூரம் என சுட்டிக்காட்டுகிறேன்.
“ பனிபொழியும்
காலமாகினும்
அனல் பறக்கும்
காலமாகினும்
சிட்டுக்குருவிகள்
வட்டமடித்து
சிறுதுரும்பை
அலகில் கோர்த்து
உணவூட்டும்
அழகைப் பார்த்து
கொஞ்சத் தோணுதே
பாடம் கற்கத் தோணுதே
மகிழ்ச்சி அள்ளி
வீசுதே “
என கொஞ்சி மகிழும்
“சிட்டுக்குருவி” கவிதை , பட்டுக்கோட்டையை நினைவூட்டுகிறது .
“ உச்சி வகுந்தெடுத்து
ஒத்தச்சட பின்னிக்கிட்டு
ஓரப்பார்வை பார்க்கையிலே
வெட்கம் வந்து
மோதுதடி
வெள்ளி மலை குயிலே
“
எனத் தொடங்கும் “காப்பான்” எனும் பாடல் அருமை .நாட்டுப்புற இசையின்
துடிப்பு அதில் உள்ளது .
“ தொற்று படரா
நிலமேதுமில்லை
வேலியற்ற காற்றின்
திசைவழியில் மிதக்கும்
வாழ்க்கை படகு
வற்றாக் கடல் மேலே
வானக்குடை கீழே
தத்தளிக்கும் அலையில்
நித்திய கண்டமாய்
மீனவன் உயிர்.”
கொரானா இவரின்
பலகவிதைகளில் இடம் பிடித்துவிட்டது .இதை காலத்தின் கோலம் என்பதா ? கவிஞரின் மனிதம்
என்பதா ?
“ லாக்டவுன் இந்தியா”, “டிராமா கம்பெனி” “தொடப்படா
சவங்கள்”. “கொரானா” உட்பட பலகவிதைகள் அரசியல் சவுக்கடி .
“குரங்கின் வால்பிரிய” எனத் தொடங்கும் “நூல் ஏணி” கவிதை படிமலர்ச்சியைச் சொல்லி பாடுபொருள்
எதுவாயினும் என அழுத்தி பார்வையைச் சொல்கிறார் .
பேரப்பிள்ளைகளைப்
பார்க்க அரபுநாடு சென்ற சிபிஜெ அங்கும் சமூகப்பார்வையை தொலைக்காமல் கவிதை எழுதுவது
நன்று .
“ எழுத்தாயுத விழிப்பில் எழுவதானதே எழுத்து” எனும்
கவிஞர் நூல் நெடுக்க இவ்வழியில் பயணிக்க முயன்றுள்ளார் .
இன்னும் நிறைய
கவிஞரிடம் எதிர்பார்த்து ,வாழ்த்துகிறேன்.
குரங்கில் வால்பிரிய
, [கவிதை நூல்] , ஆசிரியர் : ஓசூர் சிபிஜெ ,
வெளியீடு :
KRIDISW , தொடர்புக்கு : 9994729943. பக்கங்கள் : 72 ,விலை : ரூ.90/
சுபொஅ.
26/8/2022.
0 comments :
Post a Comment