ஏலக்காட்டின் வாழ்க்கை ஸ்கேன்: நேற்றும் இன்றும் .

Posted by அகத்தீ Labels:

 


ஏலக்காட்டின் வாழ்க்கை ஸ்கேன்: நேற்றும் இன்றும் .




 

“ என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம் ? பள்ளு , பறைக, மாதாரி , கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல ,விலகி நிக்கல ! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க ! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல …அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல ? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு !........

லக்காய் டீ யின் மணம் மூக்கைத் துளைக்கும் . ருசி நாக்கை ஈர்க்கும் பாயாசம், பிரியாணி என பல்வேறு சமையல்களில் ஏலக்காயைப் பயன்படுத்தி மகிழ்வோம் ! ஆயின் அந்த ஏலக்காயின் பின்னிருக்கும் வலியை அறிவோமா ?

 

மலைக் காடுகளில் காபி ,தேயிலை ,ஏலக்காய் தோட்டங்களில் செடியின் மரத்தின் தூரில் உறைந்திருக்கும் இரத்தத்தை ,கண்ணீரை பேசும் புதினங்கள் சிலவேனும் வாசித்திருக்கிறீர்களா?.

 

என் நினைவுக்கு எட்டிய சிலவற்றின் பெயர்களை கீழே நினைவூட்டுகிறேன். வாசித்தவர்கள் அசைபோடுவீர் ! வாசிக்காதவர்கள் தேடி வாசிப்பீர் !

 

டி.செல்வராஜின்  ‘தேநீர்’ , இரா. முருகவேள் மொழியாக்கத்தில் பி.எச்.டேனியலின்  ‘எரியும் பனிக்காடு’, கொ மா கோதண்டம் எழுதிய  ஏலச்சிகரம்’,  குறிஞ்சாம் பூ’,  ஜன்ம பூமிகள்’கு.சின்னப்பபாரதியின்  ‘சங்கம்’ , ஜானகி ராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில் கோதாவரி பாருலேகர் எழுதிய  ‘மனிதர்கள் விழித்துக்கொள்ளும் போது’ , இரா சடகோபனின் மொழிபெயர்ப்பில் கிறொஸ்டின் வில்சன் எழுதிய  ‘கசந்த கோப்பி’ [ bitter berry] , அமல்ராஜின்  ‘தேரிக்காடு’ உள்ளிட்ட புதினங்கள் மலைக்காடுகளில் பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் படும்பாட்டை ,வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் விவரித்திருக்கும் ; ஆயின் அடிநாதமாய் சுரண்டலும் ஒடுக்குமுறையும் பேசப்பட்டிருக்கும் ,அவரவர் அரசியல் சமூகப் புரிதலுக்கு ஏற்ப. [ நான் சொல்ல மறந்த நூல்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்க ]

 

அந்த வரிசையில் இடம் பிடிக்க வந்திருக்கிறது “ஏலோ…லம்”. ஆசிரியர் ஜனநேசன் . ஏலத்தோட்டங்களின் வாழ்க்கைப் பாட்டை மையம் கொண்டு எழுதப் பட்டிருப்பதுதான் இப்புதினத்தின் சிறப்பு .

 

 “ இப்புதினத்தின் நிகழ்வுகள் எண்பது விழுக்காடு உண்மையானவை.இவர்களை ஒருங்கிணைக்கவே இருபது விழுக்காடு புனைவைக் கொண்டு நெய்தேன்.” என வாக்கு மூலம் தருகிறார் ஜனநேசன். ஏற்கனவே சிறுகதைகள் ,குறுநாவல்கள் தந்துள்ளார். இரா .வீரராகவன் என்பது இயற்பெயர். ஓய்வுபெற்ற அரசு கல்லூரி நூலகர் .

 

இந்நாவலில் சுமார் அறுபது அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலக்காட்டு வாழ்க்கையையும் , 2019 -20 பணமதிப்பீட்டு கால வாழ்க்கையையும் இரண்டு பாகங்களாய் இரண்டு ஸ்கேன் ரிப்போர்ட்டுகளாய் 384 பக்கங்களில் தந்துள்ளார் .

 

பொதுவாய் தேயிலை ,காப்பி ,ஏலக்காய் என எதைத் தொட்டு எழுதினாலும் அட்டைக்கடியையும் , சீட்டுகட்டுக் கணக்கான டப்பா போன்ற வீடுகளையும் சொல்லாமல் கதை நகராது ; பெரும்பாலும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே இங்கே வயிற்றுப்பாட்டுக்காய் அட்டைக்கடியுடனும் கடினமான பணிச்சூழலிலும் மல்லுக்கட்டி கிடப்பார்கள் .ஆம் , வாழ்ந்தார்கள் எனச் சொல்லவே முடியாது .ஆயினும் அச்சூழலிலும் காதலும் காமமும் சாதியும் மதமும் அறிவும் அறியாமையும் என வாழ்வின் எல்லா கூறுகளும் அங்கே விரவியே கிடக்கும் . இப்புதினமும் அந்த வரையறைக்கு விதிவிலக்கல்ல.

 

கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டப்பாறை ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க தந்தையை இழந்த தன் மகன் ரவியை ஒண்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பே பொன்னுத்தாய் அழைத்துச் செல்லும் காட்சியில் நாவல் தொடங்குகிறது . ரவி வழியே புதினம் விரிகிறது .

 

அந்த தோட்டம் கிருஷ்ணராஜா என்பவருக்குச் சொந்தம் ; அவர் எப்போதாவது வந்து போகிறவர் . மேனஜர் வைரம் செட்டியார் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வருபவர் ,கணக்குப் பிள்ளை துரைசாமி கிட்டத்தட்ட ஆல் இன் அழகுராஜாவாய் ஆட்டம் காட்டுபவர் . அவரின் உதவிக்கு குப்பய்யா .

 

இங்கே கங்காணிகள் பழனிச்சாமி கவுண்டர் , சீனி மாதாரி , பரமன் ,சின்னாத்தேவர் , இராமர் ,குரங்கு விரட்டி ரெங்கசாமி ஆகியோரின் கீழ் பொன்னுத்தாய் , சிவனம்மா ,மாரியம்மா உள்ளிட்ட பெண்கள் , கோட்டி நாய்க்கர் ,மாரிமுத்து ,முனுசாமி என ஒரு பட்டாளம் ஏலத்தோட்டத்தின் வேரில் தம் செந்நீரைப் பொழிந்து கொண்டிருந்தனர் .

 

 “இல்லம்மா ! என் கணுக்கால்ல அட்டைகள் ரத்தம் குடிச்சப்போ ,சக்கிலிய வீட்டுப் பழனிதான் அட்டையைப் புடுங்கிப் போட்டான் ; அண்ணாந்து காபி பழம் பறிக்கையில் நான் கீழே விழ இருந்தப்போ பள்ளவீட்டு செத்த குழலு இருளன்தான் காப்பாற்றினான் .! ஏம்மா ,சக்கிலி பறையன்னா என்னம்மா ?” என சிறுவன் ரவியின் வெள்ளந்தியான கேள்வி , நிலவிய யதார்த்தத்தைச் சொல்லும் . ரவி மாடு மேய்க்கப் போன இடத்தில் அறிமுகமாகும் சித்திரன் எனும் ஓர் முதியவர் மூலம் மேலும் பல செய்திகளையும் பொது விஷயங்களையும் ரவி அறிந்தான். .

 

கள்ளர் ,தேவர் ,சக்கிலியர்,பள்ளர் ,பறையர் ,நாய்க்கர் ,செட்டி இன்னும் பல சாதியாகத்தான் ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்தார்கள் . சாதி அவ்வளவு சீக்கிரம் தலைமுழுகுகிற சமாச்சாரமா ? இல்லையே ! ஆனால் வாழ்க்கைப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் சாதியை மீறி அவர்களை ஒன்றுபட வைத்ததை இப்புதினம் வலுவாகவே பதிவு செய்கிறது.

 

“கங்காணிகள் செய்கிற அட்டூழியத்தை சிவனம்மா சாமியாடுகிற மாதிரி முதலாளி காதில் போட்டிருச்சு ! முதலாளி என்ன நடவடிக்கை எடுப்பார்னு பார்ப்போம் !” என்று பெண்கள் பேசிக்கொண்டனர் .

 

லட்சுமி அம்மன் ஒரு கடவுளாய் வழிபடும் கோயிலாய் மட்டுமில்லை .அவர்களின் ஆற்றாமையை ,கோபத்தை , எரிச்சலை ,அன்பை ,வெறுப்பை கொட்டும் இடமாகவும் இருந்தது . “ இதயமற்றவர்களின் இதயமாக ,ஏக்கப் பெருமூச்சாக” என மார்க்ஸ் சொன்னது போல் இருந்தது .

 

தோட்டத்தில் பிரச்சனை முற்றிய ஓர் நாளில் , கணக்குப் பிள்ளை துரைசாமி சாதிக்கலவரத்தைத் தூண்ட பயன்படுவார் என கணக்குப் போட்டு தன் சக ஊழியராய் ஏற்கெனவே சேர்த்துக் கொண்ட குப்பய்யாவிடம் , லட்சுமி அம்மன் பூஜை முடிந்ததும் கடுகடுப்புடன்  வார்த்தைகளைக் கொட்டினார்..

 

 “ என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம் ? பள்ளு , பறைக, மாதாரி , கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல ,விலகி நிக்கல ! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க ! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல …அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல ? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு ! எம் முப்பது வருஷ அனுபவத்தில் இம்புட்டு திமிர் பிடிச்ச ஆளுகளைப் பார்த்ததில்லை ! இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான்… … மக்கா மக்கான்னு அவங்களோடு ராத்திரி பகலா இணையுறீங்களே… அவங்கள வைக்கிற இடத்தில் வைக்கணும் ..” என்று பேசி கிழட்டு மாடு போல் புஸ் புஸ்ஸுன்னு மூச்சுவிட்டார் துரைச்சாமி .

 

வில்லனாக காட்டப்பட்டிருக்கும் இதே துரைச்சாமி செத்த பிறகு எடுக்கப்பட்ட அவரின் கடிதம் அவருக்குள்ளும் ஈரம் இருந்ததை காட்டுகிறது .நூலாசிரியரின் இப்பதிவு நுட்பமானது .

 

யானை மிதித்து செத்த கோட்டி நாய்க்கர் ,பாம்பு கடித்து செத்த மாரியக்கா மரணங்கள் பல கேள்விகளை எழுப்பின ; முளைவிட்டிருந்த சங்கத்தை போராடுகிற சங்கமாக மாற்றியது ; வீரமிக்க போராட்டம் மூன்று உயிர்களைப் பலி வாங்கியது . போராட்டம் வென்றது . அடியாள் , வஞ்சகம் ,சதி எல்லாம் காட்சியாகிறது .ஆனால் முதலாளியின் போக்காலும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளாலும்  எல்லாம் பறிபோனது. தலைகீழானது .

 

51 அத்தியாயங்களைக் கொண்ட முதல் பாகத்தில் சுமார் அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலத்தோட்டத்தின் சமூக ,அரசியல் ,பொருளாதார சித்திரம் கதையாக்கப்பட்டிருக்கிறது .இதைத்தான் என்னுரையில் நூலாசிரியரும் ஒப்புக் கொண்டிருக்கிறார் . கதா பாத்திரங்கள் பெரும்பாலும் நிஜத்தை சார்ந்து இருப்பதால் நாவலுக்கு உயிர்துடிப்பு தானே வந்துவிடுகிறது.

 

ஆயினும் ,எனக்கு சில ஐயங்கள் இங்கே வருவதை தவிர்க்கவே முடியவில்லை . ஒன்று  மலைக்காடுகளில் நான் இதுவரை வாசித்தது போல் கேட்டறிந்தது போல் கங்காணிகள் கொடூரமானார்களாய் பொதுவாய்ச் சித்தரிப்பு இல்லையே விதிவிலக்குகள் தவிர ! இது என் புரிதல் கோளாறா ? இடதுசாரி போராட்டங்கள் விளைவாக ஏற்பட்ட சூழல் மாற்றமெனில் அதுகுறித்த தகவல்கூட போகிற போக்கில்கூட சொல்லப்படவில்லையே ! ஏன் ? அல்லது எழுத்தாளர் கண்டறிந்த உண்மை எனில் கேள்வி வாபஸ் !

 

இரண்டு ,போலீசும் ,அரசு நிர்வாகமும் யார் ஆட்சியிலும் ஒடுக்குமுறைக் கருவிதானே ! இடதுசாரி அரசு இருந்ததால் கொஞ்சம் வித்தியாசமாக பிரச்சனையைக் கையாண்டு இருக்கலாம் . ஆயின் இப்புதினத்தில் விவரிப்பதுபோல் நேர்மையும் கண்ணியமும் உள்ளவர்களாக இருப்பார்களா ?

 

மூன்று , ஐஎன்டியுசியிலிருந்து சிஐடியுக்கு கைமாற்றிவிட்டது போல் இப்புதினத்தில் சொல்லப்பட்டிருப்பது யதார்த்ததுக்கு நெருக்கமானதா ?

 

11 அத்தியாயம் கொண்ட இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட ஓர் அரசியல் சமூக அறிக்கையே . தோட்டங்களின் குவிமையம் உடைந்து சிறு உடைமையாளர்கள் தோற்றம் , வட இந்திய தொழிலாளர் வருகை ,அவர்கள் படும்பாடு அவர்களின் பலம் ,பலவீனம் , அரசு கொள்கையால் ஏற்பட்ட சரிவு ,பண்வீக்கம் தொடுத்த தாக்குதல் என எல்லாம் பாத்திரங்கள் வழி சொல்லப்பட்டிருக்கிறது .

 

 “காலையில ரொட்டி சுட்டு சாப்பிட்டுக்கிறாங்க .உப்பை தொட்டு பச்சை மிளகாய் வெங்காயத்தை கடிச்சுகிட்டு திங்கிறாங்க ..அதில் என்ன ருசியோ என்ன சத்தோ தெரியலை !கருமாயப்பட்ட பொழப்பு ….. சாயந்திரத்தில குடிக்கிற பெண்ணுகளும் இருக்காங்க …” இப்படி அவர்களின் வாழ்க்கைப் பாட்டையும் அரசியல் சமூக விழிப்புணர்வற்ற அவர்களின் அறியாமையையும் ஆங்காங்கு நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார் .

 

புலம் பெயரும் தொழிலாளர்களுக்காய் அரசு என்ன பாதுகாப்பு வைத்திருக்கிறது .ஒன்றுமில்லை .மாறாக கூலியைக் குறைக்க நேரம் காலமின்றி சுரண்ட சட்டத்தை காலில் போட்டு மிதிக்க முதலாளிக்கு சர்வசுதந்திரத்தை தந்துள்ளது.அது இப்புதினத்தில் சாத்தியமான அளவு சொல்லப்பட்டிருக்கு .

 

பணவீக்க நடவடிக்கையின் போது நோட்டை மாற்ற கமிஷன் பெற்ற பாஜகவினர் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது . அது பெரும் உண்மை .

 

சிறுகதை எழுதுவதில் கொடிகட்டியவர் ஜனநேசன் ,நெடுங்கதை எழுத 2004ல் தொடங்கி அப்போது ஓர் கள ஆய்வு ,2019 ல் ஓர் கள ஆய்வு என இரண்டு கள ஆய்வுகள் செய்து இந்நாவலை 15 ஆண்டுகாலமாக நெய்துள்ளார் . கதைக் களத்திற்கு ஏற்ப தேவையான மலையாளம் கலந்த தமிழ் நடையும் ,புரிகிற மாதிரியான உரையாடலுமாய் கதையை நகர்த்துவதில் ஜனநேசன் வெற்றி பெற்றுள்ளார்

 

கள ஆய்வு செய்து புதினம் எழுதுவது மேற்கத்திய உலகில் அதிகம் .தமிழில் மிகக்குறைவு .ராஜம் கிருஷ்ணன் இதில் கிட்டத்தட்ட முன்னத்தி ஏராய் தடம் பதித்தார் .அவ்வழியில் ஜனநேசனும் பயணப்பட்டிருப்பது மிக நன்று .பாராட்டுக்கள்.தொடரட்டும் இப்பணி !

 

ஏலோ…லம் [ புதினம் ], ஆசிரியர் : ஜனநேசன் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு :044 -24332424 ,24332924 ,24356935 , 8778073949 Email : bharathiputhakalayam@gmail.com  //  thamizhbooks .com

பக்கங்கள் :384 , விலை :ரூபாய்  360/

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

20/8/2022.

 

 


0 comments :

Post a Comment