உரைச் சித்திரம் : 17. 'அத்தத்தா' என்னும் நின் தேமொழி கேட்டல் இனிது….

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 17.

 

'அத்தத்தா' என்னும் நின் தேமொழி கேட்டல் இனிது….

 


 

 “புத்திர பாக்கியம்” என ஆண் பிள்ளை பேற்றையே கொண்டாடும் ஆணாதிக்க மனோபாவம் , ஆரிய மரபு சமஸ்கிருத மரபு எனில் பிழையில்லை . மக்கள் பேறு என ஆண் பெண் இரு பாலரையும் கொண்டாடுவதே தமிழர் மரபு .

 

“மக்கட் பேறு” என பத்து குறளைத் தந்தவர் நம் வாழ்வியல் ஞானி திருவள்ளுவர் .அதே சமயம் ஆணாதிக்க நஞ்சு சங்க இலக்கியங்களிலேயே ஊடுருவி விட்டதும் ,ஆண் மகவையே கொண்டாடியதும் நடந்திருக்கிறது .

 

மக்கள் பேறு வாய்க்கப்பெறாதார் - மக்களை இல்லோர் வாழ்வை பயனற்ற வாழ்வு என சொல்லும் அளவுக்கு மக்கள் பேற்றைக் கொண்டாடி இருக்கின்றனர் . புறநானூற்றில் பாண்டியன் அறிவுடை நம்பி பாடிய பாடல் கொண்டாடுவதை பார்ப்போமா ? பிசிராந்தையாரால் பாடப்பட்ட பாண்டிய மன்னர் இவர் என்பது கூடுதல் செய்தி .இனி பாடலுக்குள் நுழைவோம் .

 

 “ஒருவர் பெரும் செல்வர் . எத்தகு செல்வரெனில் , பலரை ஒருசேர விருந்துக்கு அழைத்து பல்சுவை விருந்து படைத்து மகிழும் இயல்பினர் .

 

அவர் விருந்து பரிமாறி மகிழும் போது , மெல்ல அடியெடுத்து மென்பாதம் நோக குறுகுறுவென நடந்து வந்த குழ்ந்தை , உணவு கலயத்தில் கையை விட்டு துளாவி ,சிறுகையால் நெய்சோற்றை அள்ளி வாயில் போட்டும் போடாமலும் , மிச்சத்தை கையில் வைத்துக் கொண்டு மீண்டும் குறுகுறுவென ஓடுகிறது . அப்படியே எங்கு செல்கிறது அக்குழந்தை ?

 

 

அப்படியே பெற்றோரிடம் செல்கிறது . அங்கே போய் என்ன செய்கிறது ? பெற்றோரைக் கட்டி அணைத்து , வாயால் முத்தமிட்டு , கையில் இருப்பதை பெற்றோர் வாயில் ஊட்டியும் , உடம்பெல்லாம் பூசியும் பெற்றோரை மயக்குகிறது அக்குழந்தை .

 

இப்படிப்பட்ட குறும்பான சுறுசுறுப்பான மக்களைப் பெறாதவர் வாழ்ந்த நாளெல்லாம் வீண்நாளே !” என்கிறார் புலவர் அந்த புறநானூற்றுப் பாடலில்.

 

கவிதையின் அழகு சொல்வதில் மட்டும் இல்லை ; சொல்லாமல் விடுவதிலும் இருக்கிறது . Read between lines வரிகளுக்கு இடையே வாசிக்கச் சொல்லும் மரபு மேலை நாட்டில் உண்டு ; சொற்களுக் கிடையேயும் வாசிப்பது தமிழ் மரபு .

 

காதலுக்கும் குழந்தை தேர் விளையாடுவதற்கும் முடிச்சுப் போட்டு நுட்பமாக காதலர் உளவியலைப் பேசுகிறது குறுந்தொகைப் பாடல் . பாடியவர் தும்பிசேர் கீரனார் .

 

சிறு தேரை இன்றைய நிலையில் பொம்மைக் காரை என கொள்ளலாம் கையால் இழுத்து இன்புறும் சிறுவர்கள் போல் ; எம் காதலரோடு நான் மகிழ்ந்திருந்ததால் ,உடல் மெலிந்து என் வளையல் கழலவில்லை என்கிறாள் காதலி .

 

தேர் அல்லது கார்தான் மனிதனைச் சுமக்கும் ; அதை ஓட்டிக்கொண்டு விரும்பிய இடம் போய்ச் சேரலாம் . ஆனால் சிறுவர்களோ தம் தேரை / காரை இழுத்துக் கொண்டு ஓடுவார்கள் .அதில் மகிழ்ச்சியும் காண்பார்கள் . அது குழந்தைத்தனம்,

 

அதுபோலவே காதலரோடு நான் மகிழ்ந்திருக்கவில்லை எனினும் அந்த நினைவை இழுத்துக்கொண்டு ஓடுவதால் மகிழ்ந்திருக்கிறேன் .ஆகவே உடல் மெலிந்து கைவளை கழலவில்லை என்கிறாள் . போலச்செய்வதில் குழந்தைகள் காணும் இன்பத்தை, காதலிலும் அனுபவிப்பதாய்ச் சொல்வது தேர்ந்த உளவியலாகும். போலச்செயவது குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலையில் ஒன்று .அதுபோல் நினைவோடு உழல்வதும் காதலின் படிநிலை அல்லவா ?

 

இன்னொரு நெடிய காட்சி , மருதன் இளநாகனார் பாடிய காட்சியை
கலித்தொகை யில் காணலாம் ; மருதக் கலியில் 26 வரிப் பாடலில் நாம் காணும் காட்சியைப் பார்ப்போமா ? ….

அன்றைய சொல்லாட்சிப்படி பரத்தையிடம் இன்பம் துய்த்து முயங்கிக் கிடந்த ­- இன்றைய சொல்லாட்சிப்படி பாலியல் தொழிலாளியிடம் இன்பம் துய்த்து முயங்கிக் கிடந்த கணவன் வீடு திரும்புகிறான் .

 

மனைவிக்கு சேதி தெரிந்துவிட்டதால் தயங்கித் தயங்கி வாசலிலேயே நிற்கிறான் . மனைவி அவனை வா எனச் சொல்லவும் இல்லை ; போ என விரட்டவும் இல்லை ; தம் மகவைக் கொஞ்சுகிறார் .அதில் குழந்தையின் மீதான எல்லையற்ற பாசமும் காதலன் உருவாக்கிய ஏக்கமும் ஒருங்கே பின்னிப் பிணைந்திருக்கிறது , சுடுசொல்லும் பிசைந்திருக்கிறது . அதனைக் கொஞ்சம் பார்ப்போமா ?

 

 “ நாகரீகம் தெரிந்து நடந்து கொள்ளாதவர் எப்படியேனும் போகட்டும் ! எப்போதும் பாசம் கொஞ்சும் என் குட்டி யானையே வா ! சுடர் விட்டு மின்னும் மும்மணி மாலை அணிந்தே என் கண்ணே வா ! நான் கண்ணால் ஆசை தீர பார்த்து மகிழ நடந்து காட்ட வா ! உன் கையிலே உள்ள யானை பொம்மை சாதாரணமானதா ? முத்தும் பவளமும் பொறித்து செய்த யானை பொம்மை அல்லவா ? ஒரு கவளம் சோற்றைக்கூட உண்ணாத , அந்த யானையை கயிற்றில் கட்டி இழுத்துவா ! என் வெல்லக்கட்டியே ! உன்னிடமுள்ள [அம்புகள் வைக்கும்] அம்புறாத் துணி பையில் யானையைக் கட்டி இழுத்து வா!

 

 “நீ காலில் கட்டி இருக்கும் கொலுசு ஒளி உமிழ்கிறது  ! மணியொலி எழுப்புகிறது ! சாய்ந்து சாய்ந்து நடக்கும் பேரழகே வா! உன்னைக் காண என் நெஞ்சம் பூரிக்கிறது ! ஆனால் இதயமே இல்லாமல் நடந்துகொள்ளும் உன் தந்தையால் நான் வேதனைப்பட்டு வேதனைப்பட்டு உடல் மெலிந்து கைவளை கழன்றதுதான் மிச்சம்..”

 

 “ என் ஐயனே வா ! அன்பு கொப்பளிக்க நீ என்னை பார்க்கிறாய் .என் நெஞ்சம் கூத்தாடுகிறது .  ‘அத்தா! அத்தா!’ என கொஞ்சி அழைக்கும் போது உன் தேன்மொழி என் நெஞ்சில் இன்ப ஊற்றாகிறது ! ஆனால் உன் தந்தையோ என்னை உயிருடன் வதைக்கிறார் , இன்னொரு பெண்ணுடன் கொஞ்சிக் குலவி கிடக்கிறார் ! என உடல் நலம் சீர் கெடுவதைப் பற்றி அவர் கவலைப்பட வில்லை .அதுதான் என்னை வருத்துகிறது.”

 

 “ என் ஐயனே வா! பிறை நிலவே என் ஐயன் மகிழ வா ! இப்படி  உன்னை அழைத்து அம்புலி காட்டுவது எனக்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியமா ? ஆனால் என் செய்ய ? உன் தந்தை எனக்கு இன்பம் அளிக்காமல் எங்கோ யாரிடமோ மயங்கிக் கிடக்கிறாரே , ஆதலால் என் அல்குல் வாடுகிறதே !”

 

[ அறியாத பாலகன் என்பதால் அன்னை அதிகமாய் சொற்களைச் சிந்துகிறாரோ அல்லது வாசலில் காத்துக்கிடக்கும் கணவன் காதில்படட்டும் என சாடையாக சொல்லுகிறாரோ !]

 

 “ என் ஐயனே ! தேரோட்டி விளையாடும் ஐயனே ! நீ விளையாட்டாக என் காதில் தொங்கும் குழையை தொங்கட்டானை ஆட்டிவிட்டுவிடு ஓடுகிறாய் ! மகிழ்ச்சியாக இருக்கிறது ! என் தலையைப் பார் ! பூச்சூடி வெகுநாளாயிற்று ! எந்த உறவும் இல்லாத யார்யாரோ என்னை வெறித்துப் பார்க்கிறார்கள்! ஆனால் உன் தந்தையோ எந்த அக்கறையுமின்றி தன் மார்பில் வண்டுகள் ஆடும் பூ மாலை அணிந்து திரிகிறார் ! அதையும் நான் கண்ணால் பார்த்து தொலைக்க வேண்டியுள்ளது ! என் நிலைமை இப்படி ஆகிவிட்டதே !”

 

கொஞ்சி விளையாடும் பிள்ளை , கொஞ்ச மறந்த கணவன் ; இரண்டையும் ஒரு சேர எண்ணும் கோதை . கலித்தொகையின் வித்தியாசமான இக்காட்சி இவை . தாய்மையின் குழைவையும், ஆணாதிக்க இறுக்கத்தையும் ஒருசேர சொல்லியிருக்கிற பாங்கு வியக்க வைக்கிறது .

 

சரி ! சரி ! பிள்ளைகளுக்கு பெற்றோர் என்ன செய்ய வேண்டும் ? பெற்றோருக்கு பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும் ?

 

வள்ளுவனைவிட இதற்கு சரியாய் வேறு எவன் சொல்லிவிட முடியும் ?

 

பெற்றோர்  தன் பிள்ளைகளுக்குச்  செய்யவேண்டிய நல்லுதவி  ஒன்றே ஒன்றுதான் .அவர்களை அறிஞர்கள் நிறைந்த அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதல் மட்டுமே ஆகும் .

 

அந்த பிள்ளைகள் பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் ?

 

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து ஓங்கி விளங்கினால் போதும் . அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாக அமைந்துவிடும் .

 

'அத்தத்தா' என்னும் நின் தேமொழி கேட்டல் இனிது….

 

இனிது இனிது குழந்தை இனிது ; அதனினும் இனிது

அகிலம் போற்ற அதனை வளர்த்தல் இனிது !

 


“ படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,

இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,  

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.”

 

புறநானூறு 188. மக்களை இல்லோர்! பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி. திணை: பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி.

 

 “தச்சன் செய்த சிறு மாவையம்      
ஊர்ந்து இன்பம் உராராயினும் கையின்     
ஈர்த்து இன்பம் உறும் இளையோர்     
உற்று இன்பம் உறேமாயினும்  நற்றேர்ப் 
பொய்கை ஊரன்  கேண்மை     
செய்து இன்புற்ற என் நெஞ்சு செறிந்தன வளையே.” 

 

பாடியவர்  தும்பிசேர் கீரனார் குறுந்தொகை 61

 

 

“நயம் தலை மாறுவார் மாறுக; மாறா,
கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்,
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப்
பவழம் புனைந்த பருதி சுமப்ப,

 
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே
வருக! எம் பாக மகன்!”
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்  
தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே,
'
உளம்' என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணுங்கால்”



“ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின்
தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே,  
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார்
எவ்வ நோய் யாம் காணுங்கால்”



“ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே,
நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர்  
அல்குல் வரி யாம் காணுங்கால்”




“ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும்,
போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய  
கோதை பரிபு ஆட; காண்கும்”


கலித்தொகைமருதக் கலி , பாடியவர்மருதன் இளநாகனார்

 

 தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.”   ( குறள் : 67)
 

 

 

 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.”   ( குறள் : 68)
 

 

'அத்தத்தா' என்னும் நின் தேமொழி கேட்டல் இனிது….

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

25/8/2022.

 

 

 

 


0 comments :

Post a Comment