ஜீவா பாடல்களை மீண்டும் மீண்டும் இசைப்போம்

Posted by அகத்தீ Labels:

 

 ஜீவா பாடல்களை மீண்டும் மீண்டும் இசைப்போம்

 

 


 “ காதல் மணம் பேண வேண்டுமடி – பொய்மைக்

கட்டுடைத் தோங்கிட வேண்டுமடி

சாதலை வேண்டி நாம் வாழவில்லை – இங்கு

சங்கடம் வேண்டியும் வாழ்வில்லை .

…… …… …… …… ……

கற்பென மாதரை நிர்ப்பந்தஞ் – செய்வதைக்

கட்டோடு குப்பையில் விட்டெறிவோம்.”

 

இப்படி ஆவேசமாகப் பெண் விடுதலைக்கு கும்மி அடித்தவர் ஜீவா . அவர் காலத்தில் வாழ்ந்த கம்யூனிஸ்டுகளில் பெண் விடுதலைக்காக இவ்வளவு ஆழமாய்க் குரல் கொடுத்தவர் வேறு யார் ? அவர் மொத்தம் எழுதிய 122 பாடல்களில் 25 பாலின சமத்துவம் பேசும்.

 

அது சரி ! இன்றைக்கும் பொருந்தும் அவரது பாடல்களை இன்றைக்கு அறிந்தவர் எத்தனை பேர் ? மேடையில் சொல்வோர் எத்தனை பேர் ?

 

அவர் குறித்து மேலும் சில செய்திகளை அசை போடுவோம்.

 

“கண்ணாடிக்கு முன்போய் நின்ற மூக்கரையன் கண்ணாடியில் தன் கோரமான முகத்தைப் பார்த்துக் கொண்ட போது தன் உருவம் எவ்வளவு கோரமானது என்று சிந்தித்துப் பார்க்காது, கண்ணாடியை உடைத்தெறிந்தது போல, புராணங்களில் உள்ள ஆபாசத்தை எடுத்துச் சொன்னால், இதிகாசங்களில் உள்ள ஊழல்களை எடுத்துக் காட்டினால் காட்டுபவர்களின் மேல் சீற்றப்படுகிறார்கள் சிலர். (சிரிப்பு) காரணம், அவர்கள் மனம் புண்படுகிறதாம். வாஸ்தவம். புண்படத்தானே செய்யும். ஆனால், எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா? இவ்வளவு ஆபாசமானவைகள் எல்லாம் எங்கள் மதத்தில் இருக்கின்றனவே என்று எண்ணும்போது எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா என்று கேட்கிறேன்.”

 

[ மாற்றுத் திறனாளிகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாத அந்தக் காலத்தில் பேசியது என்பதைக் கவனத்தில் கொள்க ]

 

சட்டப் பேரவையில் ஜீவா பேசியது இது.

 

 

சரி ! ஏன் பேசினார் ? எப்போது பேசினார் ? யாருக்காகப் பேசினார் என்பது முக்கியமாகும்.

 

 

1954 ஏப்ரலில் காமராஜர் முதலமைச்சர் ஆனார். அந்த ஆண்டு இறுதியில் நாடகங்களை நெறிப்படுத்துவது என்கிற பெயரில் அரசு ஒரு சட்ட முன்வடிவை சட்ட சபையில் தாக்கல் செய்தது .

 

 

புனிதம் , தெய்வாம்சம் என்றும்  நெடுங்காலமாகப் போற்றப்பட்ட புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை , மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தடுப்பதே சட்டமுன்வடிவின் நோக்கம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது . 

 

 

குறிப்பாக நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது ஊருக்கே தெரிந்த ரகசியம் . இதற்கு மிக நுணுக்கமாக ஜீவா தந்த பதிலடிதான் மேலே உள்ளது .

 

 

நான் ஏன் நாத்திகன் ஆனேன் ?” எனும் நூல் பகத்சிங் எழுதியது .தூக்கிலிடுமுன் லாகூர் சிறையிலிருந்து எழுதியது . 1931 ஆண்டில் எழுதப்பட்டது . 1934 ல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது .முதன் முதல் தமிழில்தாம் மொழியாக்கம் வெளியானது . பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது இதன் பின்னரே .

 

 

இதில் முக்கியமானது என்னவெனில் இதனை மொழி பெயர்த்தவர் ஜீவானந்தம் .இவரும் சிறையிலிருந்த போதே மொழிபெயர்த்தார் .இந்நூலை மொழி பெயர்த்தற்காக ஜீவாவையும் வெளியிட்டதற்காக ஈ .வெ. கிருஷ்ண்சாமியையும் [ சுயமரியாதை பிரச்சார நிறுவனம் ,பெரியாரின் தம்பி ] ஈரோட்டிலிருந்து கோவை வரை கையில் விலங்கோடு நடத்திச் சென்றனர் .

 

ஆக .எழுதியவர் சிறையில் எழுதினார் . மொழி பெயர்த்தவரும் சிறையில்தான் மொழி பெயர்த்தார் . மொழிபெயார்த்ததற்காக சிறையும்பட்டார் . மதவெறியரை இன்றும் குத்திக்குடையும் நூல் இது . ஜீவாவின் வாழ்வில் இந்நூல் ஆக்கம் ஓர் அழுத்தமான முத்திரையாகும். இன்னும் இந்நூலைப் படிக்காதோர் இக்கணமேனும் படிப்பீர் !

 

 

தோழர் .ப.ஜீவானந்தம் இப்பெயரை அறியாதோர் குமரி மாவட்டத்திலும் இருக்க முடியாது .தமிழ்நாட்டிலும் இருக்க முடியாது . அவரைப் பற்றி ஒவ்வொருவிதமாக ஒவ்வொருவரும் அறிந்திருப்பார்கள் . முழுமையாக அறிய அவர் வாழ்வோடும் பேச்சோடும் எழுத்தோடும் நெடும்பயனம் செய்தாக வேண்டும் . அது இந்த கட்டுரையின் பரப்புக்குள் சாத்திய மில்லை . ஜீவா குறித்த ஒரு மாபெரும் சித்திரம்  விழைவோர் பொன்னீலன் எழுதிய “ஜீவா என்றொரு மானுடன்” நூலைப் படியுங்கள் . ஓரளவு வசப்படும்.

 

பூதப்பாண்டியில் 1906 ஆகஸ்ட் 21 ஆம் நாள் பூதப்பாண்டியில் பட்டம்பிள்ளை – உமையம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . சொரிமுத்து என்பது பெற்றோர் இட்ட பெயர் .உயிர் அன்பன் ,சீவானந்தன் ,ஜீவானந்தம் ,ஜீவா என அவர் பெயர் பரிணாமம் பெற்றது .

 

சிறு வயதிலேயே சமூகக் கேடுகளை எதிர்த்த மனோநிலை கொண்டவர் .ஒரு நிகழ்வைச் சுட்டாமல் கடக்க முடியாது .

 

   அன்றைய வழக்கப்படி பள்ளிபருவத்தில்  பக்திப் பழமாக தன்னொத்த சிறுவர்களோடு அதிகாலை 4 மணிக்கு எழுந்து நீராடி, திருநீறு பூசி பூதலிங்கேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி வருவார் .பஜனையும் செய்வார் .

 


அக்காலகட்டத்தில், “அவர் 3 ஆம் படிவம் படித்துக் கொண்டிருந்தபோது, அவரோடு படித்த தோழனாகிய மாணிக்கம் என்ற ஆதிதிராவிட வாலிபப் பையனை எங்கள் ஊர் சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வெளியே வரும் போது கோவில் நிர்வாகஸ்தர்கள் விஷயத்தைத் தெரிந்து அவரை அணுகிக் கேட்க, இவன் என் சகோதரன்தான் என்று முழங்கினார். நிர்வாகஸ்தர்களுக்கு உண்மை புலனாயிற்று.பறையனைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று தீட்டுச் செய்த குற்றத்திற்காக, என் தந்தைக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போது அவர் உள்ளத்தில் எழுந்ததுதான்,

வாயற்ற நாய்,கழுதை, மலம் தின்னும்

பன்றியும் வழியோடு செல்லலாமாம்-

மனிதர்நாம் சென்றிடில் புனிதமற்றுத் தீட்டு

வந்துலகு முழுகிப் போமாம்

என்ற பாடல்.

 

என்கிறார்  ஜீவாவின் தம்பி, .நடராஜன்.

(நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா, .54)

 

தந்தை மன்னிப்பு கேட்ட விஷயம் ஜீவாவுக்கு உடன்பாடில்லை .எதிர்ப்பையும் வருத்ததையும் அப்போதே தெரிவித்துள்ளார் .

 

இளம் வயதிலேயே காந்தியால் ஈர்க்கப்பட்டார் . ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார் .கதர் அணியத் தொடங்கினார் .நாடகக் கலைஞர் விஸ்வநாத தாஸின் நாடகங்களில் ஈடுப்பாடு காட்டினார் ,கதர் விற்றார் . கதர் பற்றி பாட்டு நாடகம் எல்லாம் எழுதலானார் . ஆயினும் பகத்சிங்கிற்கு தூக்குத் தண்டனை அறிவித்தபோது குமுறி அவர் ஆற்றிய உரை கனல் மணத்தது .

 

ஜீவா 1930களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப்போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்என்று ஜீவா எழுதுகிறார். இடையில் காங்கிரஸ் கட்ட்சிக்குள் இயங்கிய சோஷலிஸ்ட் கட்சியிலும் செயல்பட்டுள்ளார் . பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக மாறினார் .

 

நாஞ்சில் நாட்டை தமிழ்நாட்டுடன் இணைக்க நடந்த போரில் முன்நின்றவர் .இவர் எழுதிய “ ஐக்கிய தமிழகம்” எனும் சிறு நூல் பெரும் காட்டுத்தீயானது குறிப்பிடத்தக்கது . மொழிவழி மாநிலம் பிரிந்ததை ஆனந்தக் கூத்தாடிக் கொண்டாடியவர் .

 

ஜீவா என் தந்தையின் ஊரான புத்தேரியை அடுத்துள்ள பூதப்பாண்டியில் பிறந்தவர் என்பதால் என்னுள் அவரைப் பற்றி அறிய ஆர்வம் அதிகம் . என் தந்தையும் அவர் மீது பெரும் பற்று கொண்டவர் .நான் கம்யூனிஸ்ட் இயக்க முழுநேர ஊழியனான பின் ஓர் நாள் என் தந்தை என்னிடம் ஜீவா பற்றி நினைவுகூர்ந்தார் .

 

ஒரு நினைவை இங்கே பகிர்வது பொருந்தும் ,“ என் தந்தையும் [அப்போது அவர் இளைஞர் ] வேறுசில இளைஞர்களும் ஜீவாவை புத்தேரியில் ஒரு கூட்டத்தில் பேச அழைத்தார்களாம் , தலைப்பு என்ன வைக்கலாம் என அவரிடமே கேட்டார்களாம் , அதற்கு அவர் சொன்னாராம் , “ நீங்க எந்த தலைப்பு வச்சாலும் , வெங்காயம் வெண்டைக்காய்ன்னு வச்சாலும் நான் சோஷலிசத்தைப் பற்றித்தான் பேசுவேன் . வெங்காயமும் வெண்டைக்காயும் எல்லோருக்கும் கிடைக்க சோஷலிசமே வழின்னு பேசுவேன்னு சொல்லி சிரிச்சாராம் . தலைப்பே போடாமல் சிறப்புரை எனப் போட்டார்களாம்.”

 

கம்யூனிஸ்ட் முகமாக ,குரலாக ,அடையாளமாக வாழ்ந்த ஜீவாவை பேசபேச நீளும். சொல்லி முடியாது. இங்கே கலை இலக்கியம் சார்ந்து கொஞ்சம் பேச முயல்கிறேன்.

 

ஜீவா ஐந்தாம் வகுப்பு வரையே படித்தவர் .சுயகல்வி மூலம் விருட்சமாய் வளர்ந்தவர் . அவருக்குச் சங்க இலக்கியமும் தெரியும்; சமய இலக்கியமும் தெரியும்; சமகால இலக்கியமும் தெரியும். உள்ளூர் தொடங்கி உலகம் வரை எழுந்த இலக்கியங்கள் எல்லாவற்றையும் ஆழ உள்வாங்கி, தம் எழுத்திலும் பேச்சிலும் எடுத்துக்காட்டியவர் ஜீவா .

 

அவரின் பாடல்கள் கவிதைகளில் சுயமரியாதை ,பெண்ணுரிமை ,உழைப்பாளர் நலன் , மானுடக் காதல் எல்லாம் எளிமையாய் ஆயின் வலிமையாய் மனதைத் தொடும் தாள லயத்துடன் ஒலிக்கும் .

 

 “ தன்மதிப் பென்றுந் தலைப்பட வேண்டி / நன்மதிப்புண்மை நாம் விளக்குதுமே” என ஆரம்பம் செய்து ஆத்திசூடி போல்  102 வரிகளை “ சுயமரியாதைச் சொன்மாலை” என்கிற பெயரில் தந்துள்ளார் . சில சோற்றுப் பருக்கைகளை சுவை பார்க்கத் தருகிறேன் .

 

“ அனைத்துயி ரொன்றென் றறிவதுன் கடமை”

 “ ஆரியர் சூழ்ச்சியில் ஆழ்ந்துழலாதே”

 “ கொடுங்கோல் வீழக் கடும்போர் புரிக “

 “ சூத்திரர் என்பாற் கூத்தியார் மக்கள்”

 “ தொழிலாளருலகத் தோழர்களாவார்.”

 “ பெண்ணும் ஆணும் எண்ணில் நிகரே”

 “ கற்பெனப் பெண்களை அற்பரே குலைத்தார்”

 “வருணாச்சிரம் வைதீகமுங்கொல்”

 

ஒவ்வொன்றும் காரமும் உப்பும் மிகுந்த வரிகள்.

 

நாங்கள் போகும் ஊர்களுக்கெல்லாம் ஜீவா அடிக்கடி கூட்டங்களுக்காக வருவார்; பெரும்பாலும் எங்களுடனேயே தங்கியிருப்பார்... ஜீவா எங்களோடு தங்கியிருந்த நாட்களில், புதிதுபுதிதாகப் பல பாடல் களை இயற்றியதுண்டு. எல்லோரும் பாடும்படி எளிய மெட்டுக்களிலேயே பாடல்கள் அமைய வேண்டும் என்பது அவர் ஆசை. எங்கள் நாடகங்களிலுள்ள சில புதிய மெட்டுக்களை நான் பாடுவேன்.கோவை தோழர் ராமதாஸ் திரைப்படப் பாடல்கள் சிலவற்றைப் பாடுவார். அந்த மெட்டுக்களில் எல்லாம் ஜீவா உடனுக்குடன் பிரச்சாரப் பாடல்கள் புனைந்து தருவார். அப்படி ஜீவா பாடிய பாடல்கள் எத்தனை எத்தனையோ!” என்கிறார்  நாடகக் கலைஞர் அவ்வை. தி..சண்முகம்.

 

1935 கோவை ஸ்டேன்ஸ்மில் போராட்ட களத்தில் பிறந்த கவிதை .காலை 5 மணிக்கு எழுதி ஆறு மணிக்கு ஆலைவாயிலில் கம்பீரமாக ஜீவா பாடிய பாடலே ,இன்றும் சாகாவரம் பெற்று எங்கும் மேற்கோளாகும் ;

 

 “காலுக்கு செருப்புமில்லை

கால்வயிற்றுக் கூழுமில்லை

பாழுக்கு குழைத்தோமடா – என் தோழனே

பசையற்றுப் போனோ மடா !

 

அதுபோல் “ புரட்சி” ஏட்டில் 1934 மேயில் எழுதிய மேதினப் பாடல் .ஜெர்மனியைச் சார்ந்த ரெணிபுலா மில்லர் எழுதி போல்ஸ்விசம் அகமும் புறமும் நூலில் இடம் பெற்ற பாடலைத் தழுவி எழுதிய 40 வரிப் பாடல் ;

 

 “கோடிக்கால் பூதமடா – தொழிலாளி

கோபத்தின் ரூபமடா

நாடி எழுந்தது பார் – குவலயம்

நாற்றிசையும் அதிர..”

 

ஜீவாவின் பேச்சும் எழுத்தும் ஆவேசமானவை . ஒவ்வொரு பாடலும் உணர்ச்சிப் பெரும் கங்கு .

 

ஏங்கா தெழுந்திரடா-தோழனே

இல்லாமையை நசுக்கு



கொசுவை நசுக்குவதுபோல, ஈர்ப்பேன்களை இருவிரல்களுக் கிடையில் இட்டு நசுக்குவதுபோல, இல்லாமையை நசுக்க ஏவுகிறார். அவர் கோவம் சமூக அமைப்பை முழுவதும் உள்வாங்கிய கோபம்.



தொல்லைப் புரோகிதமும்- பணக்காரச்

சூழ்ச்சிச் செருக்குகளும்

இல்லை என்றடிக்கவே - தோழனே

இக்கணமே துணிவாய்

 

இப்படி எல்லாம் முழங்கிய ஜீவா பாடல்களில் 122 கிடைத்துள்ளது , இதில் பெண்விடுதலை பேசுவன 25 ; தொழிலாளர் வர்க்க எழுச்சி ,சோஷலிசம் பற்றியன 48 ; கட்சி ,தியாகம் சார்ந்து 7 ; புரட்சியைப் பாடுவன 5 ; பாசிசம் ,யுத்தம் 6 ; சுயமரியாதை ,பகுத்தறிவு 11 ; தேசியம் 15 ; பாப்பா பாடல் 2 , தமிழகம் 1. இவையே கவிதையின் உள்ளுறை .

 

அவரது கவிதைகளும் பாடல்களும் போதுமான அளவு இன்னும் பேசப்படவில்லையே . தமுஎகச மாநாட்டில் இதுகுறித்த உரக்கப் பேசட்டும்.

 

1937 ல் ஜனசக்தி ஏட்டையும் , 1959 ல் தாமரை என்ற இலக்கிய ஏட்டையும் துவக்கி ஆசியரானார் .அது முதல் இறுதி மூச்சை 1964 ல் நிறுத்தும் வரை அதில் எழுதியவை அரசியல் சார்தவையாயின் அதிலும் இலக்கியம் கொஞ்சும் ,இலக்கியம் சார்ந்தது ஆயின் அங்கு மானுடம் புன்னகைக்கும் .

 

“1930களில் நிலவிய பண்பாட்டு அரசியலின் செல்வாக்கை ஏற்றுச் சுயமரியாதைச் சொன்மாலை, பெண்ணுரிமைக் கீதங்கள் போன்ற கவிதைகளோடு தோழர் ஜீவா தமிழ்ப்பண்பாட்டு அரசியலினுள் நுழை கிறார். சாதிய விமர்சனம், சுயமரியாதை, பெண்ணுரிமை போன்ற விஷயங்கள் இப்பாடல்களில் பொதுவுடைமை, மார்க்சியம் அல்லது பொருளாதாரம் சார்ந்த விஷயங்களாக இல்லாமல் முழுக்கப் பண்பாட்டுப் பிரச்சினைகளாகவே அவரால் அணுகப்பட்டுள்ளன.”



 “சமதர்மம் என்ற சொற் பயன்பாடு ஜீவாவின் எழுத்துக்களில் பொது வுடைமை, சுரண்டல் போன்ற சொற்களுக்கு மூத்ததாகவே இடம் பெறுகிறது. நாடு அடிமைப்பட்டுள்ளது, தாழ்த்தப்பட்ட சாதியினர் அடிமைப்பட்டுள்ளனர், பெண்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர் என்பது போன்ற அப்பட்டமான காட்சி உண்மைகளிலிருந்து தோழர் ஜீவாவின் இக்கால எழுத்துக்கள் பிறந்தன போலுள்ளது. வைதீகம், மதப்பழமை, மூடப்பழக்கங்கள், சாதியம் ஆகியவை ஜீவாவால் இப்பாடல்களில் தீவிரமாக விமர்சிக்கப்பட்டுள்ளன”. என்பார் முத்துமோகன் .


இறுதியாக ஜீவா ஒரு முறைக் குறிப்பிட்ட ரஷ்ய மேற்கோளுடன் நிறைவு செய்கிறேன்;

 

“எனவே இன்றைய எழுத்துக் கலைஞனின் புனிதத்தின் புனிதமான ,நன் மதிப்பிலும் நன்மதிப்பிற்குரிய பணி எது ? முன்னேற்றப் பாதையில் போராடும் பொதுமக்களின் வாழ்க்கைச் சித்திரங்களுக்கு எதார்த்தவாத கலைவடிவம் தீட்டுவதும் ; இதர பகுதி மக்கள் அம்மாதிரியான நன்முயற்சியில் ஈடுபட உணர்ச்சி ஊட்டுவதும் ; மனிதவர்க்கம் முழுவதும் அமைதியின் மன மகிழ்ச்சியில் திளைத்து இன்பக் கடலாடப் பணிபுரிவதும் ஆகும்”.

 

போராற்ற உலகம் சமையும் வரை,

சுரண்டலற்ற சமூகம் சமையும் வரை ,

எல்லோரும் சரிநிகர் சமமாய் ஆகும்வரை ,

மீண்டும் மீண்டும் இசைப்போம்

ஜீவா பாடல்களை .

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

4/8/2022.

 

ஓர் பெட்டிச் செய்தி :

************

2011 செம்மலர் ஏட்டில் இடம் பெற்ற  எனது நூல் குறித்த விமர்சனத்தில் இருந்து ….

 

 “ தோழர் ஜீவா மிகச்சிறந்த பேச்சாளர் என்பது அவரது காலத்தில் வாழ்ந்த காதுள்ள அனைவரும் அறிவார்கள்.

 

"பேச்சுக்கலையை விளக்கும் பாடப்புத்தகங்கள் எத்தனையோ விதிகள் கூறும்; ஜீவா அவற்றை காலடியில் போட்டு மிதித்தவர். அவருடைய பாணி இரவல் பாணியல்ல. இந்த தேசத்தில் பேச்சு, அதற்குரிய பலனை தரவேண்டுமென்றால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்" என்று வியப்பார் எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

ஜீவா பன்முகம் கொண்ட ஒரு தலைவர். எனினும் நான்முகன் என்றழைக்கப்படுகிற பிரமன் சிலையின் நான்காவது முகம் சரியாக அறியப்படாதது போலவே ஜீவா என்கிற ஜீவ ஒளிமிக்க கவிஞனின் முகமும் தேவையான அளவுக்கு அறியப்படவில்லை.

 

விடுதலைப்போராட்ட இயக்கத்தில் துவங்கி சுயமரியாதை இயக்கத்தில் வியந்து நின்று பொதுவுடைமை இயக்கத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழர் ஜீவாவின் கவிதைப் பயணத்தை விளக்கும் வகையில் தோழர் சு. பொ. அகத்தியலிங்கம் எழுதியுள்ள நூல் " கோடிக்கால் பூதமடா :ஜீவாவின் கவிதைப் பயணம்”.

------ --------------------------- ---------------------------- ------------------------------- ---------------------------- ----------------

--------------------------- -------------------------- ----------------------------------- ----------------------------- --------------------

பாலின்றி பிள்ளை அழும், கோடிக்கால் பூதமடா என்ற ஜீவாவின் கவிதை வரிகள் இன்றைக்கும் அனலடிக்கும் அணையா நெருப்பு வரிகள். இவை சோலையில் அமர்ந்து எழுதியவை அல்ல. போராட்ட உலைக் களத்தில் வார்த்தெடுக்கப்பட்ட ஆயுதங்கள்.

இன்றைய தமிழ்ச் சூழலில் புரட்சி என்பது ஒரு கொச்சைப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. ஆனால் புரட்சி என்பது என்ன என்று ஜீவா கவிதையில் அடுக்கிக் கொண்டே போவதைப் படித்தால் நரம்புகள் நாணேறும்.

 

 ஜீவாவின் பாடல்களில் பெண் விடுதலை, தொழிலாளர் வர்க்க எழுச்சி, சுயமரியாதை, பகுத்தறிவு, யுத்தம், பாசிசம், தேசியம் என காலத்தின் தேவையையொட்டிய பல்வேறு பாடல்கள் இடம் பெற்றிருப்பதை ஆய்வுநோக்கி மட்டுமின்றி, அந்த வரிகளில் உள்ள இலக்கிய நயம், சந்த லயம் ஆகியவற்றையும் எடுத்துரைத்துள்ளார் சு. பொ. .

தனக்கே உரிய பாணியில்இந்நூலில் சு. பொ. . பலகேள்விகளை எழுப்பியுள்ளார். சமூக உள்ளடக்கம் சார் இலக்கியங்களை பிரச்சாரம் என்று ஒதுக்கி விடுவார்கள் கலைசார் இலக்கிய கோஷ்டிகள். ஆனால் தனது சொந்தக் கவிஞனை பாட்டாளி வர்க்கம் மறக்கலாகுமா? என்ற கேள்வியும் அதில் ஒன்று.

 

ஜீவா என்கிற ஜீவ நதியின் ஆழ, அகலங்களை, உணர படகாய் உதவும் இந்த நூல். படகில் ஏறுங்கள். பயணம் துவங்கட்டும்.

 


கோடிக்கால் பூதமடா :ஜீவாவின் கவிதைப் பயணம் ,

ஆசிரியர் : சு.பொ.அகத்தியலிங்கம்.

வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம் / கெளரா பதிப்பகம் ,

10/14 தோப்பு வெங்கடாச்சலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை- 5

பக்கங்கள்: 104 ,விலை, ரூ. 50/-

*********

முக்கிய குறிப்பு :

இங்கே நான் எழுதிய மூவர் மட்டுமே நாஞ்சில் நாட்டு ஆளுமைகள் அல்ல .நான் எழுத எடுத்துக் கொண்ட ஆளுமைகளே.மேலும் வைகுண்டர் ,கலைவாணர் , பீர் முகமது அப்பா உள்ளிட்ட மேலும் பல ஆளுமைகள் நினைவு கூரப்பட வேண்டும் . இவர்களை என்னைவிட அதிகம் வாசித்தவர் அமைப்பில் இருக்கின்றனர் ; அவர்களிடம் எதிர்பார்க்கிறேன் :சுபொஅ.

 

[[ நாஞ்சில் மண்ணில் தனித்துவம் நமது உரிமை .பன்மைத்துவம் நமது வலிமை.” என்ற முழக்கத்துடன் தமுஎகச மாநில மாநாடு 2022 ஆகஸ்ட் 13 -15 தேதிகளில் நடைபெறும் வேளையில் தோழர் ப.ஜீவானந்தத்தை நினைவு கூர்வது நம் காலத்தின் தேவையன்றோ ! இத்துடன் நான் [சுபொஅ] எழுதிய முப்பெரும் ஆளுமைகளை நினைவுகூர்வது நிறைகிறது .]

 

 


 

 

 

 

 

 

 

 

0 comments :

Post a Comment