கைரதி377 :மாறிய பாலினரின் மாறா வலிகள்.

Posted by அகத்தீ Labels:

 



கைரதி377 :மாறிய பாலினரின் மாறா வலிகள்.
மு.ஆனந்தனின் படைப்பு கைக்கு கிடைத்தது. உடன் வாசித்தேன். அதிர்விலிருந்து மீள இரண்டு நாள் தேவைப்பட்டது.
சு.சமுத்திரம் தன் நாவல் வாடாமல்லியில்
சொன்னதைவிட அதிகம் என்னிடம் நேரில்
பகிர்ந்துள்ளார். மாற்றுப் பாலினம்
குறித்து அவர் எழுதிய போது இருந்தைவிட இன்றைக்கு பலமடங்கு பார்வை விரிந்திருக்கிறது. மாறிய பாலினர் என்ற சொல்லோ அதனைச் சொல்லும்.
லிவிங் ஸ்மைல் வித்தியா ,கல்கி உள்ளிட்ட பலரின் பார்வை நம்மை அத்திக்கில் மேலும் கவனம் செலுத்தத் தூண்டின.
ஆனந்தன் பார்வை விசாலமாகவும் ஆழமாகவும் வேர்விட்டு மேலும் முன்நகர்த்துகிறது.
திருநங்கையை உணர்ந்த அளவு திருநம்பியை உணர்ந்தோமா என்பது ஐயமே ! இருபாலினர் ,இண்டர்செக்ஸ்,திரினர்,பாலிலி உள்ளிட்ட பிரிவுகள் இன்னும் தமிழ் சமூகத்தின் பொது பார்வைப் பரப்புக்குள் வரவே இல்லை.
மேல்நாடுகளில் LGBTQ இயக்கமாகி பாலியல் பார்வை மேலும் மேலும் ஜனநாயகமாகி வருகிறது. இங்கு அதுபற்றி பேசவே இன்னும் கூச்சம் நிலவுகிறது.
இச்சூழலில் இறுக்கத்தை தளர்த்தி பார்வையை விசாலப்படுத்த 11 கதைகளும் முயல்கின்றன. எந்த கதையையும் சும்மா படித்துவிட்டு நகரவே முடியாது.
ஓலையக்கா ,377ஆம் பிரிவின் கீழ் கைரதி ஆகியவை போலிஸின் கோரமுகத்தை சட்ட சங்கிலியை தோலுரிக்கும். இதர்களும் .இலாவும் இன்னொரு வலியைச் சொல்லும் ,
பாவசங்கீர்த்தனம் மதங்களின் மூஞ்சியில் குத்துவிடும் ,கூடுதலாய் ஒரு நாபகின்னும் ,அடையாளங்களின் அவஸ்தையும் வலியின் மகிழ்ச்சியின் இன்னொரு முகத்தைக் காட்டும்.
வாசித்து வலியை பிரச்சனையை நீங்களே உணர வேண்டுமே தவிர இங்கு ஓரிரு வரிகளில் சொல்லிவிட இயலாது.
பாலின மாறுபாடுகள் அசிங்கமோ அருவருப்போ அல்ல மனித உரிமையின் இன்னொரு கூறே !
வாசிப்பீர் !
கைரதி 377
ஆசிரியர்: மு.ஆனந்தன்.
வெளியீடு :பாரதி புத்தகாலயம்.
120 பக்கங்கள்.விலை..ரூ.110/
சு.பொ.அகத்தியலிங்கம்.
28/8/2022.
பின்னூட்டத்தில் நான் இணைத்ததைக் காண்பீர் !

0 comments :

Post a Comment