ஈகியர்களுக்கு நட்ட நடுகல்லே அழகின் உச்சம் !

Posted by அகத்தீ Labels:

 





 

 

 


 “நீ மிகப் பெரிய எழுத்தாளர் ஆவது எப்படி ?”

 

உரைச் சித்திரம் : 20.

 

ஈகியர்களுக்கு நட்ட நடுகல்லே

அழகின் உச்சம் !

 

 

நீ மிகப் பெரிய எழுத்தாளர் ஆவது எப்படி ?

 

முதல் நிபந்தனை , உன்னை புகழ்ந்து துதிபாட அதுதான் ஜால்ரா அடிக்க இரண்டு மூணு பேரை சீடர்களாக வைத்துக் கொள்ள வேண்டும் ,

இரண்டாவது நிபந்தனை , விரல்களில் மோதிரம் மின்ன வேண்டும் , நடை உடை பாவனை தனித்து இருக்க வேண்டும் ,

மூன்றாவதாக , பஞ்சு மெத்தையோ பட்டோ விரித்து அதன் மேல் உட்கார்ந்திருக்க வேண்டும் ; இன்றைய சூழலுக்குச் சொல்வதாயின் சொகுசான பீடத்தில் அதாவது அதிகார பீடத்தின் நிழலில் இருக்க வேண்டும் ,

இப்படி இருந்து கொண்டு நீ எதைச் சொன்னாலும் உலகம் உன்னைக் கொண்டாடும் . அது நஞ்சோ வேம்போ எதுவாயினும் உலகம் உன்னை வியந்தோதும் .

 

ஐயா ! இதை எந்த ஆசானுக்கு எதிராகவும் நான் சொல்லவில்லை . ஒளவையார் தனிப்பாடல் ஒன்று கண்ணில் பட்டது . அவர் சொன்னதைச் சொன்னேன் .அவ்வளவுதான். ஒளவை காலத்திலும்  ஜால்ராக்களும் பீடங்களும் ஆட்டம் போட்டது போலும் அப்படிப் பொரிந்துள்ளார் .

 

ஒளவை தன் பாடல் மீது மிகுந்த நம்பிக்கையும் சுயமரியாதையும் மிக்கவர் போலும் . அவர் இன்னொரு பாடலில் சொல்கிறார் ;

 

 “நூற்று பத்தாயிரம்  அதாவது பத்து லட்சம் ரூபாய் கொடுத்து நூல்புடவை வாங்கினாலும் ; நாலே மாதத்தில் சாயம் போய்விடும் .நைந்து கிழிந்துவிடும் . ஆனால் போர்வீரா ! என் பாட்டு [பட்டல்ல தமிழ்ப் பாட்டு] ஒரு போதும் கிழியாதப்பா ! சாயம் போகாதப்பா!” என அகங்களங்கா எனும் போர்வீரனிடம் சொல்லுகிறார் . ஒரு வேளை அந்த போர்வீரன் ஒளவையின் பாட்டை மட்டம் தட்டியதற்கு பதிலடியாகச் சொல்லியிருப்பாரோ ?

 

கால்கடுக்க ஒளவை நடந்து போனாள் .சோழமன்னனோ இருக்க இடம் கொடுக்க வில்லை . ஒளவை விடுவாளா ? அதையும் ஓர் பாட்டாக்கி விட்டாள்.  “காவிரி வள நாட்டை ஆளும் சோழ மன்னனே ! கூனன் [ மாற்றுத் திறனாளி என்ற சொல் ஒளவை காலத்தில் இல்லை ] கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல ; அதாவது உடலில் கூனுடையவன் மரம் ஏற முடியாது , அவன் எப்படி கொம்புத் தேன் சாப்பிட முடியும் ? அதுபோல் நானும் தெரியாமல் ஆசைப்பட்டு கால்கடுக்க வெகுதூரம் நடந்து வந்துவிட்டேன் . நான் எங்கே அப்பா தங்குறது ?”

 

மேலே ஒருபடி போய் நையாண்டி செய்கிறாள் , “ அப்பா ! சோழமன்னா ! பலாமரம் செழித்து தழைத்து நிற்கிறது .அங்கு நான் கண்ட குறமகள் உள்ளன்போடு மகிழ்ச்சியோடு அகப்பையால்  திணைச் சோறு அள்ளித் தந்தாள் . அது மட்டுமா ? நான் பொங்கிச் சாப்பிட  உழக்கு திணை அரிசியும் கட்டித் தந்தாள் . நான் உப்பிட்டு உணவு அளித்தவரையும் பாடுவேன் .எதுவும் தராமல் மனதை புளிக்கச் செய்பவரையும் பாடுவேன் .”

 

இப்படி நெற்றிப் பொட்டில் அடித்த பின்பு தராமல் இருந்திருப்பானோ ?

 

ஆனாலும் வாழ்வின் அனுபவ கசப்பில் சில உண்மைகள் உறுத்த ஒளவை சொன்னவை இன்றைக்கும் அனுபவமாகுதே . அவர் சொல்கிறார்;

 

பூணூல் அணிந்த பார்ப்பனரெனில் நீதிமன்றமும் தடுமாறுகிறது ,குற்றமே செய்திருந்தாலும் தீர்ப்பை அவர்களுக்கு சாதகமாக்கி விடுகிறது.

நான் சத்திரியன் சத்திரியனுக்கு சொந்தக்காரன் எனச் சொல்லி நெஞ்சை நிமிர்த்தி திரிந்தால் சண்டை வரத்தானே செய்யும் ?

வைசியன் இன்றைக்கு  சொல்வதாயின் அதானி ,அம்பானி என்றால் மக்களுக்கு துன்பம் வரத்தானே செய்யும் .

நான்காம் வர்ணத்தில் பிறந்த சூத்திரனே நல்ல மந்திரியும் நல்ல வழித்துணையும் ஆவார் .

 

தமிழன் தமிழச்சி எல்லோரும் எல்லா காலத்திலும் ஒரே மாதிரிதான் யோசித்திரிப்பார்கள் போலும் .இன்று அதன் தொடர்ச்சிதானே !

 

எது அழகு ? பலரும் பலதைச் சுட்டுவார் .ஒளவை அதனை சொல்லும் அழகும் ஆழமும் வேறெங்கும் காணக்கிடைக்காதது . ஒளைவை விவரிக்கிறார் ;

 

காதலனோடு கொஞ்சிக் குலவி  , உடலின்பம் துய்த்து உடல் களைத்து சோர்ந்து படுத்திருக்கிற பெண் அழகு ; கடும் தவம் இருந்து உண்ணா நோன்பு இயற்றிய துறவியின் மெலிந்த உடம்பு அழகு ; பிறருக்கு பொன்னும் பொருளும் அளவின்றி அள்ளிக்கொடுத்து களைத்த கொடையாளி [வள்ளல்] அழகு ; கொடுமையான போரில் வீரன் பட்ட காயம் விழுப்புண் அழகு ; அவை எல்லாவற்றையும்விட போரில் இறந்த வீரர்களின் ஈகியர்களின் பெயரையும் புகழையும் பொறித்து நடப்பட்ட நடுக்கல்லே பேரழகு .

 

அடடா ! அடடா ! இதுவல்லவோ பேரழிகின் இலக்கணம் .

 

சரி !இந்த ஒளவை யார் ?

.

அவ்வா” என பாட்டியை ,வயது முதிர்ந்த பெண்களை உறவின் முறையில் பாசம் பொங்க அழைக்கும் மரபு தமிழ்நாட்டில் பலபகுதிகளில் இன்னும் உண்டு . அவ்வா எனும் சொல்லில் இருந்து ஒளைவை என வந்தததா ? இல்லை ஒளைவை எனும் சொல்லே பேச்சு வழக்கில் திரிந்து அவ்வா என்றானதா ? இதெல்லாம் நம் கவலை இல்லை . தமிழறிஞர்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்ளட்டும் .சங்க கால ஒளவையார் மிகவும் இளையவர் .அழகிய இளம் விறலி. அதாவது ஆடல் பாடலில் தேர்ந்தவர் என்ற கருத்தும் வலுவாக உள்ளது .

 

ஒளவையார் என்பது ஒரே புலவரல்ல . பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நூற்றாண்டுகளாய் தொடர்ந்த பெண்பால் புலவரின் பெயர்ச் சொல் . சங்க இலக்கியத்தில் வாழ்ந்த ஒளவையும் ,நீதிநூல் சொன்ன ஒளவையும் ,சிற்றிலக்கியங்களில் பாடிய ஒளைவையும் ,தனிப்பாடல்களில் வரும் பல்வேறு ஒளவையும் ஒன்றல்ல .

 

ஒளவையின் தனிப்பாடல்கள் சிலவற்றில் பெண்ணைப் பழித்திருப்பார் .சிலவற்றில் புகழ்ந்திருப்பார் எது ஒரிஜினல் ஒளவை எனத் தேடுவது வீண் . ஒளவை என பலர் இருந்தனர் எனவே குரலும் பலவாகவே இருக்கும் . “ஏகம்” எனும் ஒற்றைச் சிந்தனை ஆதிக்கக் குரல் ; “ அநேகம்” எனும் பன்மையே ஜனநாயக் குரல் .

 

இங்கே நாம் ஒளவையின் சில தனிப்பாடல்களூடே வரைந்து காட்டிய சித்திரம் தமிழர் வாழ்வின் மீதான ஓர் பருந்துப் பார்வையே .இன்னும் தேடிச் சலித்து ,இன்னும் வாசித்து , இன்னும் வெகுதூரம் போவோம் .

 

கிழியாத பட்டே ஒளவையின் பாட்டு

ஈகியர்களுக்கு நட்ட நடுகல்லே அழகின் உச்சம் !

 

 

 

 

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்

விரல்நிறை மோதிரங்கள் வேண்டும்அரையதனில்

பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்வித்தை

நஞ்சேனும் வேம்பேனும் நன்று.[ 2]

 

நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினும் நூற்சீலை

நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும்மாற்றலரைப்

பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா

என்றும் கிழியாதென் பாட்டு. [34]

 

கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்

யான்வந்த தூரம் எளிதன்றுகூனன்

கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா

இருந்தேனுக் கெங்கே இடம். [21]

 

கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும்

மூழைக் குழக்குத் தினைதந்தாள்சோழாகேள்

உப்புக்கும் பாடி புளிக்கும் ஒருகவிதை

ஒப்பிக்கும் என்றன் உளம். [16]

 

 

             நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்

கோலெனிலோ ஆங்கே குடிசாயும்நாலாவான்

மந்திரியும் ஆவான் வழிக்கும் துணையாவான்

அந்த அரசே அரசு. [41]

 

            சுரதம் தனில்இளைத்த தோகை; சுகிர்த

விரதம் தனில்இளைத்த மேனிநிரதம்

கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட

வடுத்துளைத்த கல்லபி ராமம். [8]

 

 

 

ஈகியர்களுக்கு நட்ட நடுகல்லே அழகின் உச்சம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

3/9/2022.

 

 

 

 

 


0 comments :

Post a Comment