பண்டிகைகள் தோறும் பல்லிளிக்கும் “ ஒற்றைப்பண்பாடு”
பண்டிகைகள் கும்பிட அல்ல ; கொண்டாடி மகிழவே …
1] பண்டிகைகள் தேவையா ?
2] பண்டிகைகள்
வீண்செலவா ?
3] பண்டிகைகள்
நம்பிக்கையா ?
4] பண்டிகைகள்
கொண்டாட்டமா ?
5] பண்டிகைகளின்
வேர் எது ?
இன்னும் ஏராளமான
கேள்விகள் ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஏதோ ஒரு வகையில் விவாதமாகிவிடுகின்றன .
முதலாவது
தலைப்பு சார்ந்த ஓர் உரையாடலுக்குள் நுழைவோம்.
நேற்று
[4/9/2022] காலையில் என் நீண்டகால நண்பர் ஊடகவியலாளர் பா.கிருஷணன் ஓர் பதிவு போட்டார்
,” சரஸ்வதி பூசை நாளை ஆயுத பூசை எனவும் கொண்டாடுவதன் நோக்கம் கல்வியே ஆயுதம் என்பதே!”
“ஆம். இது தமிழகம் கேரளம் மட்டிலுமே. பிற மாநிலங்களில்
வேறுவேறு கதைகள் அல்லவா ?” – இப்படி என் பதிலாக பதிவு செய்தேன்.
சரஸ்வதி பூஜை
,ஆயுத பூஜை ,துர்க்கா பூஜை , தசரா , ராம்லீலா என மாநிலத்துக்கு மாநிலம் புராணக் கதையும்
கொண்டாட்டமும் வேறு வேறு . வழிபாடு ,படையல் , சடங்கு, பார்வை எல்லாமே வேறு வேறு . நம்பிக்கையும்
பல்வகைப்பட்டவை.பழகுடியினர் பார்வை முற்றிலும் வேறு .
கல்வியை தமிழகமும்
கேரளமும் கொண்டாடின வடக்கே ஏன் கொண்டாடவில்லை ? வடக்கே ராம் லீலாதானே ! ராவணன் மீது
ராமன் அம்பெறிவதுதானே ! வங்கத்தில் மகிஷாசனை துர்க்கா வதம் செய்வதுதானே ! கர்நாடகாவில்
தசராதானே ! ஆந்திராவில் கொலு கல்யாண சந்தைதானே ! வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்கும்
வேறுவேறுதானே !
தீபாவளிக்கும்
இதுவேதான் . நரகாசுரன் கதை தமிழகத்துக்கு வெளியே இல்லை . கேரளாவில் பார்ப்பனர் தவிர
வேறுயாரும் தீபாவளி கொண்டாடுவதே இல்லை . கொண்டாட்டம் சடங்கு பூஜை உணவு நாள் உட்பட எல்லாம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்
. சைவம் ஓர் நாள் .அசைவம் ஓர் நாள் . இப்படிகூட அவதாரமெடுக்கும்.
என் கேள்வி
, “ ஒரு நாடு ,ஒரு மொழி ,ஒரு பண்பாடு “ என வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் இந்துத்துவ
வெறிக்கூட்டம் ,ஆர் எஸ் எஸ் பாஜக வகையறாக்கள் ” இந்தியா முழுவதும் ஒரே போல் சரஸ்வதி
பூஜை ,ஆயுத பூஜை .கதையும் ஒன்றுதான் ஒரே போல்தான் கொண்டாட வேண்டும் “ என்று சொல்ல முடியுமா
? தீபாவளிக்கும் இதே கேள்வி “ஒரே கதை ஒரே பண்டிகை”
எனச் சொல்ல முடியுமா ?
தமிழரின்
பொங்கல் பண்டிகைக்கு எந்த புராணப் புளுகும் இல்லை . ஆந்திராவில் கொண்டாடும் பொங்கலுக்கும்
அப்படித்தான் .கேரளாவில் கொண்டாடும் ஓணம் மகாவிஷ்னுவுக்கு எதிரான மகிழ்ச்சி கொண்டாட்டமல்லவா
?
வட இந்தியாவில்
இப்படி புராணக் கதை மெழுகாத பண்டிகை எது ? தெரிந்தவர் சொல்லுங்கள் . ஹோலிப் பண்டிகையை
ஓரளவுச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
தசரா ,தீபாவளி
என ஒவ்வொரு பண்டிகையின் போதும் “ ஒரே நாடு ஒரே பண்பாடு” என்கிற கோஷம் பல்லிளிக்கிறது
.
இங்கே ஒவ்வொரு
நூறு கிலோ மீட்டருக்கும் மொழி ,பழக்க வழக்கம் , உணவு ,உடை ,சடங்கு ,பூஜை ,சம்பிரதாயம்
,புராணாப் புளுகு எல்லாம் மாறும் . அந்த பன்மைத்துவமே இந்தியா . இதனை புரிந்து கொள்ளாத
முரட்டு இந்துத்துவாவின் எந்த முயற்சியும் நீடித்து நிலைத்த வெற்றி பெறவே முடியாது
. தற்காலிக தேர்தல் வெற்றிகளை சொல்லாதீர்கள் .பண்பாட்டு வெற்றிகளை பேசுகிறேன்.
சரி , மேலே
நான் எழுப்பிய கேள்விகளுக்குள் நுழைவோம்.
1] பண்டிகைகள்
தேவையா ?
ஆம் . தேவையே
! பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இல்லாத நாடு தற்கொலை செய்து கொண்ட நாடென்பர் பண்பாட்டு
ஆய்வாளர்கள் . எந்த மனிதனும் 24 மணி நேரமும் மூஞ்சியை சிமெண்ட் மூஞ்சியாய் இறுக்கி
வைத்துக் கொண்டிருக்கவே முடியாது .ஆண்டு முழுவதும் வேலை ,தொழில் ,சம்பாத்தியம் என அலைந்து
கொண்டிருக்கவே முடியாது .இளைப்பாறுதலும் கொண்டாட்டமும் மனித குலத்துக்கு தேவையே. வரலாறு நெடுக எல்லா தேசத்திலும் ஏதேனும் பண்டிகையும்
கொண்டாட்டமும் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறதும் .இனியும் அது தொடரவே செய்யும்
. தனிமனிதனுக்கும் சரி ,சமூகத்துக்கும் சரி கொண்டாட்டங்கள் தேவையே !அது எத்தகையதாய்
இருக்க வேண்டும் என்பது மட்டுமே கேள்வி .
2] பண்டிகைகள்
வீண்செலவா ?
அப்படி மட்டையடியாய்ச்
சொல்லிவிட முடியாது . பண்டிகை சார்ந்து தொழில் ,வியாபாரம் எனும் பொருளாதாரச் சுழற்சி
நிச்சயம் உண்டு .இந்த பொருளாதாரச் சுழற்சி இல்லாத பண்டிகையோ விழாவோ காலகதியில் இல்லாமலே
போய்விடும். பண்டிகை விழாக்களுகென கடன் படுவதை ,ஆடம்பரமாகச் செலவு செய்வதை ஏற்க முடியாது
. விமர்சிக்க வேண்டும் .கண்டிக்க வேண்டும். தவிர்க்க வேண்டும்.பண்டிகைகளை எல்லோரும்கூடி
மகிழ்ந்து கொண்டாடும் நிகழவாக்க வேண்டும் .இருப்பவன் இல்லாதவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன்
என பேதமின்றி கொண்டாடும் வகையில் கொண்டாட்டங்களின் வடிவம் செதுக்கப்பட வேண்டும்.
3]பண்டிகைகள்
நம்பிக்கையா ?
பண்டிகைகளுக்கு
மதச் சாயம் பூசப்பட்டபோதே அதன் மீது சடங்கும் சம்பிரதாயங்களும் திணிக்கப்பட்டன .ஆதியில்
வேளாண்மை சார்ந்து அறுவடை சார்ந்து பருவமாறுதல் சார்ந்து உருவானவையே பண்டிகை கொண்டாட்டங்கள்
.அவற்றை ஹைஜாக் செய்து மதம் தன் சாயத்தை பூசியபோது நம்பிக்கையை அதன் தலையில் சுமையாக்கியது
.
ஆயினும் சம்பிரதாயம்
சடங்கு ,வழிபாடு எனும் வட்டத்துக்குள்தான் அவை இன்னும் வட்டமிடுகின்றன .நம்பிக்கை எனும்
பெரும் பரப்புக்குள் அரிதாகவே பண்டிகைகள் வருகின்றன . பண்டிகைகளை ஹைஜாக் செய்த மதம்
தன் தேவை சார்ந்து புராணக் கதைகளைப் புனைந்து திணித்தன .ஆயின் அந்த புராணப் புனைவுகளை
புளுகுகளை சட்டை செய்யாமல்தான் பண்டிகைகளை மக்கள் கொண்டாடுகின்றனர் . மதவெறி அரசியலாக்கப்படும்போது
மட்டுமே, ‘ இது எங்கள் நம்பிக்கை’ எனப் பீற்றப்படுகிறது.
4] பண்டிகைகள்
கொண்டாட்டமா ?
தீபாவளி கொண்டாடினோம்
என்கிற போது அது கொண்டாட்டம் . தீபாவளி கும்பிட்டோம் என்கிற போது அது சடங்கு அல்லது
வழிபாடு .பொதுவாய் எல்லா பண்டிகைகளுக்கும் இந்த இரண்டு முகமும் இருக்கிறது . சில பண்டிகைகளில்
கும்பிடுவது முன்னுக்கு வந்து அதுவே ஓர் கொண்டாட்டமாய் முடிந்துவிடுகிறது . சில பண்டிகைகளில்
கும்பிடுவது லேசாக தலைநீட்ட கொண்டாட்டம் மேலோங்கும். இப்போதுள்ள நுகர்வு கலாச்சாரமும்
வணிகமயமாக்கமும் ஒரே மாதிரியான கார்ப்பரேட் எண்டர்டைமெண்டாக பண்டிகைகளை மாற்றி வருகின்றன
.
“ தீபாவளிக்கு
இந்து கடையிலேயே சாமான் வாங்கு” ,” திருவிழாவில் முஸ்லீம் கடைகளுக்கு அனுமதி கொடுக்காதே
“ “ பண்டிகையில் இதை இதை சாப்பிடு இதை இதை சாப்பிடாதே!” என மதவெறி அரசியல் நகர்வுகள்
கொண்டாட்டங்களை கலவரங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன .
ஆயினும் பண்டிகைகளின்
சாரம் கொண்டாடி மகிழத்தான் . ஆட்டம் ,பாட்டம் ,விருந்து ,கேளிக்கை எல்லாம் இருந்தால்தான்
அது பண்டிகை .அப்போதுதான் கொண்டாட்டம் . குடியும் கூத்துமாகத்தான் உலகெங்கும் கொண்டாட்டங்கள் இருந்திருக்கின்றன .தமிழ்நாடும்
அப்படித்தான். நேற்றும் அப்படித்தான் .இன்றும் அப்படித்தான் .நாளையும் அப்படித்தான்.
ஆயினும் மது இல்லா கொண்டாட்டம் என பேசிக்கொண்டேதான் இருக்க வேண்டும். எதற்கும் ஓர்
எல்லை வேண்டுமல்லவா ? அதைத் தாண்டாமலிருக்க இந்த பரப்புரை தேவைப்படுகிறது .
5] பண்டிகைகளின்
வேர் எது ?
இனக்குழுவாக
வாழ்ந்த போதே ஆடிப்பாடி மகிழ்ந்து இருக்க தலைப்பட்டதுதான் மனித குலம் . இயற்கை சார்ந்து
வேட்டையில் பெரிய இரை கிடைத்த போது கூடிக் கொண்டாடி மகிழ்ந்து உண்டான் . பின்னர் வேளாண்மையில்
ஈடுப்பட்ட போது வளச்சடங்குகள் என கொண்டாடினால்தான் பயிர் வளரும் என நம்பினான் . மாதவிடாய்க்கு
பிறகுதான் பெண் கருத்தரிக்கிறாள் .நிலத்துக்கும் சிவப்பு நீர் தெளித்து மாதவிடாய் சடங்கு
வளச்சடங்கு செய்தான் . மழைக்காக இடியைப்போல் மின்னலைப்போல் செய்து ஆடிப்பாடினான் .
இந்த போலச் செய்தல்தான் சடங்காக பண்டிகையாக காலகதியில் பரிணாமம் பெற்றன .இந்த கொண்டாட்டங்களின்
தொடர்ச்சியாய் அறுவடை ,பருவ மாறுதல் என கணக்கிட்டு விழா எடுத்தான் .இதற்கு எந்த மதப்
புனைவும் இல்லை .அவை வாழும் வட்டாராம் சார்ந்தது அவ்வளவுதான்.ஒரு வட்டாரம் அல்லது குழு
இன்னொரு குழுவுடன் கொள்வினை கொடுப்பினை செய்த போது இந்த பண்டிகைகளும் கொண்டு கொடுத்து
விரிந்து பரந்தது ஓங்கியன .
ஆறாம் போப்
ஆண்டவர் சொல்லும் வரை கிறுத்துவுக்கு பிறந்த நாள் கிடையாது .எதுவெனத் தெரியாது . கிறுஸ்துமஸ்
கிடையாது . சில பகுதியினர் கிறுஸ்துமஸ் கொண்டாடியபோது வாட்டிகன் கத்தோலிக்க மத பீடம்
எதிர்த்தது .மத விரோதம் என்றுகூடச் சொன்னது . குளிர் நாடுகளில் நீண்ட குளிருக்கு பிறகு
சூரியனின் வருகையை மகிழ்வோடு வரவேற்றனர் .அதனையொட்டி டிசம்பர் 25 ஐ பழங்குடியினர் கொண்டாடினர்
.அதுவே பின் கிறுத்துவின் பிறந்த நாளாக ஏற்கப்பட்டு கிறுஸ்துமஸ் கொண்டாடப்படலானது
.
உலகெங்கும்
மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த விழாக்களை , பண்டிகைகளை கபளீகரம் செய்து ,கதைகட்டி மதம்
தன் வயப்படுத்திக் கொண்டன .இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அதுதான் நடந்தது . ஆகவேதான்
புராணப் புளுகுகள் எல்லோருக்கும் தெரிந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் சடங்குகளும்
கொண்டாட்டங்களும் தொடர்கின்றன .
மீண்டும்
சொல்கிறேன் கொண்டாட்டங்கள் இன்றி தனிமனிதனும் சமூகமும் இருக்காது .எவ்வளவு நெருக்கடியிலும்
இருண்ட காலத்திலும் ஏதேனும் ஒரு வகையில் கொண்டாடி விடுவான் .
நமக்கு இப்போது
தேவை மதச்சார்பு இல்லாத - மூடத்தனங்கள் இல்லாத கொண்டாட்டங்களும் விழாக்களும் பண்டிகைகளும்
தேவை .தேவை.தேவை.கும்பிட அல்ல கொண்டாடி மகிழ்த் தேவை .
” நான் பிறந்த
நாள் கொண்டாட மாட்டேன்,” என்கிற பழைய வைராக்கியத்தை தூக்கி எறிந்துவிட்டு ,பிறந்த நாள்
,திருமண நாள் இவற்றை ஆடம்பரமின்றி வாழ்த்துகளைப் பரிமாறி எளிமையாய்க் கொண்டாடுக! .
வட்டாரம்
சார்ந்து ,நாட்டார் வழக்காறு சார்ந்து, சில விழாக்கள் ; சில வரலாற்று நிகழ்வுகளின்
நினைவூட்டல் ; அவ்வட்டாரத்திற்கு பெருமை சேர்த்த சில ஆளுமைகளின் பிறந்த நாள் ; இவற்றை
சடங்காக அல்லாமல் ; வறட்டு கூட்டமாக இல்லாமல் ,ஆடல் ,பாடல் உட்பட பல வண்ண நிகழவாகக்
கொண்டாடுக!.
நமக்கு இருக்கவே
இருக்கிறது பொங்கல் .இதனை ஒவ்வொரு ஊரிலும் பெரும் விழாவாக ஆடல் ,பாடல் ,விளையாட்டு
,விருந்து ,கலை ,இலக்கியம் ,ஓவியம் ,அறிவியல் ,சினிமா என ஒல்லும் வகையெல்லாம் உள்ளம்
இணைந்து மகிழ்ந்து உறவாடி கொண்டாடுக! .ஊர் சேரி பேதம் அறக் கொண்டாடுக ! சாதி மத இன்னபிற
வேற்றுமை களைந்து இணைந்து கொண்டாடுக !
கொண்டாட்டங்கள் போராட்டங்களின் எதிரி அல்ல ;
போராட்டங்களின் ஒரு பகுதி .
கொண்டாட்டங்கள் விழிப்புணர்வில் விரோதி அல்ல ;
விழிப்புணர்வின் கூட்டாளி !
சு.பொ.அகத்தியலிங்கம்.
5 /9/
2022.
0 comments :
Post a Comment