புரட்சிப் பெருநதி – 28
புரட்சியே ஆயுதம் ஏந்தியது
சு.பொ.அகத்தியலிங்கம்
பெண்களின் வீரமிக்க
எதிர்வினையை கண்டு
ராணுவம் மிரண்டது.
கூட்டத்தைச் சுட்டுத் தள்ள
தளபதி லீ காம்ச் இட்ட உத்தரவை
ஏற்க ராணுவம் மறுத்தது.
“பெண்கள் ஆண்களுக்காகக் காத்திருக்கவில்லை; ‘இது அவமானம்! என்ன செய்கிறீர்கள்?” எனக் கூச்சலிட்ட படி பீரங்கிகளைப் பெண்கள் சூழ்ந்து கொண்டார்கள் என்கிறார் லீசாகார்.இந்த எழுச்சி ஓரிரவில் உருவாகவில்லை; அதற்கு பின்னே நெடிய வரலாற்றுக் கோபம் உண்டு.
1789 பிரெஞ்சுப் புரட்சி மிகப்பெரும் ஆற்றலைக் கிளர்த்திவிட்டது; தொடர்ந்து மக்கள் எழுச்சிகள் வெடித்த வண்ணம் இருந்தன. ஆட்சிப் பொறுப்புகள் மாறினும் துயரம் தொடர்கதையானது.1869 இல் தேர்தலில் எதிர்க்கட்சி வென்றது .பிரஷ்ய பிஸ்மார்க் யுத்தப் பிரகடனம் செய்தார்.
போரில் பிரெஞ்சுப் படைகள் தோல்வி அடைந்தன; பிரஷ்ய ராணுவம் பாரீஸை முற்றுகையிட்டது; கடும் நிபந்தனைகளை விதித்தது.முற்றுகை ஐந்து மாதங்கள் நீடித்தது. கடும் துன்பம் சூழ்ந்தது. உறைபனி எனினும் கதகதப்பூட்ட எரிபொருள் இல்லை. விலைவாசி விண்ணுக்கு தாவியது. கைவினைஞர்களும் தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்குள்ளாயினர்; நாய்களையும், எலிகளையும் தின்று உயிர் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நகரைக் காக்கும் பெரும் பொறுப்பையும் வரலாறு இவர்கள் பக்கமே நகர்த்தியது.
சுமார் மூன்றரை லட்சம் பேர் தேசிய பாதுகாப்புப் படையில் இணைந்ததும் மிரண்டது பிரஷ்யா மட்டுமா? பிரெஞ்சு ஆட்சியாளரும்தான்.கிறிஸ் ஹர்மன் எழுதுகிறார்; “1872 எழுச்சியின் எளியவர்களின் வாரிசுகள், 1848 போராளிகளின் குழந்தைகள் என எல்லோரும் இப்போதும் ஆயுதம் ஏந்தினர். சிகப்பு கிளப்புகளும், புரட்சிகர செய்தித்தாள்களும் மீண்டும் புத்துயிர் பெற்றன. அதே நேரம் 1848 புரட்சி முடிவில் குடியரசுவாதிகள் தங்களை எப்படி நடத்தினார்கள் என தொழிலாளர்களும் கைவினைஞர்களும் நினைவுபடுத்தத் தவறவில்லை.”
“ பாரீஸ் ஆயுதம் ஏந்தியது; புரட்சியே ஆயுதம் ஏந்தியதாக இருந்தது” என்றார் காரல் மார்க்ஸ்.1870 அக்டோபரில் நடைபெற்ற ஒரு இடதுசாரி ஆட்சி கவிழ்ப்பு முயற்சி அடக்கப்பட்டது; 1871 ஜனவரி 22 இல் மீண்டும் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை பிரிட்டன் படைகளைப் பயன்படுத்தி நசுக்கிவிட்டது அரசு.
ஆயினும் பிரெஞ்சு அதிபர் மிரண்டார். துணை அதிபர் ஃபாவ்ரே கூறினார், “உள்நாட்டுப் போர் சில கஜ தூரங்களில் நிற்கிறது; சில மணி நேரத்தில் பஞ்சம் தாக்க இருக்கிறது”.இச்சூழலில் பிரஷ்யாவிடம் சரணடைய அதிபர் முடிவெடுத்தார். ஃபாவ்ரே அதற்குத் தூது போனார்.ஏற்கெனவே முற்றுகைக்கு வழிவகுத்த துரோகம்; மோசடியாக நடத்தப்பட்ட தேர்தல் மூலம் சரணாகதிக்கான ஒப்புதல் என்கிற துரோகமும்; குடியரசு மிதவாதி என அழைத்துக் கொண்ட தீயர்ஸை அதிபராக்கிய துரோகம் என்கிற முப்பெரும் துரோகங்கள் மக்களின் கோபநெருப்பில் பெட்ரோல் ஊற்றியது.பிரஷ்ய ராணுவத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் ராணுவம் கலைக்கப்பட்டது; ஜெர்மன் கொடி பறந்தது.
தீயர்ஸ் மோன்மாட்டர்ஸ் சிகரங்களிலிருந்து 200 பீரங்கிகளை அனுப்பி தாக்குதலை தொடங்கினார். அப்போதுதான் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட நிகழ்வு நடந்தது. பெண்களின் வீரமிக்க எதிர்வினையை கண்டு ராணுவம் மிரண்டது. கூட்டத்தைச் சுட்டுத் தள்ள தளபதி லீ காம்ச் இட்ட உத்தரவை ஏற்க ராணுவம் மறுத்தது; மக்களோடு ராணுவம் தோள் கொடுத்தது. மாண்ட்ரோத் பகுதியில் தேசியப்படைப் பிரிவு தனி கமிட்டி அமைத்தது; தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரம் கொண்ட மத்தியக் குழுவும் அமைக்கப்பட்டது.
மக்களுக்கு ஆயுதம் வழங்கப்பட்டது. இது மார்ச் முதல் நாள் நடந்தது.குறிப்பிட்ட நாளில் புரட்சி சதுக்கத்தில் மக்கள் கூடினர்; மெய்யான மக்கள் தலைவர்கள் ஒவ்வொருவராய் தியாகிகள் சின்னத்தில் மாலைவைத்து வணங்கினர். மக்கள் உற்சாகம் கரை புரண்டது. செங்கொடி காற்றில் அசைந்தாடியது.பிரஷ்ய ராணுவம் பாரீஸைக் கைப்பற்ற விரைந்து வந்தது, தீயர்ஸ் சார்பு ராணுவப்பிரிவு அவர்களோடு சேர்ந்து கொண்டது.பாரீஸை எந்த விலை கொடுத்தேனும் கைப்பற்ற வேண்டும் என வெறியோடு பிரஷ்யாவும்; உயிர் கொடுத்தும் எம் நகரைக் காப்போம் என மக்களும் மோத நாடு பற்றி எரியத்துவங்கியது .
“மக்களே! நீங்கள் தீய சக்திகளோடு சேராதீர்! நீதியின் காலடியில் அக்கிரமங்கள் அடிபணிந்தே தீர வேண்டும் .மாற்றமில்லாத நிலையான ஒழுங்கு இங்கே உடனடியாக நிறுவப்பட்டே ஆகவேண்டும் .” என தீயர்ஸ் சுவரொட்டி மூலம் செய்த விளம்பரம் கேலிப்பொருளானது .ஊடகங்களின் ஊளையை மக்கள் புறம்தள்ளினர் மார்ச் 18 மதியம் மூன்று மணிக்கு தீயர்ஸூம் , எடுபிடி அதிகாரிகள் சிலரும் நாட்டைவிட்டு ஓடினர்.தேசியப்படையை ஒரே நாளில் வீழ்த்திவிடலாம் எனக் கணக்குப் போட்ட பிரஷ்யப் படைகள் பெண்களின் ஆவேசமிக்க முற்றுகைகளால் நிலை குலைந்தது. மக்களின் வெஞ்சினத்தில் பல தளபதிகள் தலை உருண்டன.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியக்குழு செயலில் இறங்கியது.
“மக்களே! உங்களை நீங்களே விடுவித்துக் கொண்டீர்கள்! உங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து எதிரிகளுக்கு தக்க பதிலடி கூறுவீர்! பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை விரைந்து அமைப்போம்!” இந்த அறைகூவல் காந்தமாய் மக்களைக் கவ்வியது.கம்யூன் என்பது ஒரு பிரஞ்சுச் சொல். பிரான்ஸ் தேசத்தில் அக்காலத்தில் இருந்த மக்கள் தொகை மிகுந்த பகுதிகள் கம்யூன் என்று அழைக்கப்பட்டன. பாரீஸ் நகரம் ஒரு கம்யூன். இது இருபத்தெட்டுப் பிரிவுகளாக இருந்தது. இந்த நகரத்தில் இருந்த உழைக்கும் மக்கள், சிறு பூர்ஷ்வாக்கள், அறிவாளிகள் ஆகியோர் இணைந்து நடத்திய புரட்சிதான் பாரீஸ் கம்யூன் புரட்சி.
இதில் அதிகாரம் உழைக்கும் மக்கள் கைக்குச் சென்றது.பாட்டாளிவர்க்கத்தோடு தோளுரசி மத்தியதர வர்க்கமும் நின்றது .கம்யூன் என்கிற மந்திரச் சொல் மத்தியக் கமிட்டி முதல் தெருமுனைவரை பெரும் புத்தெழுச்சியின் குறியீடானது !ஏங்கெல்ஸ் எழுதினார், “கம்யூனைப் உண்டாக்க ஸகம்யூனிஸ்ட்] அகிலமானது ஒரு சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை என்றாலும் உண்மையில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அறிவுத்துறையில் அது அகிலத்தின் குழந்தையாகும்.
” அதனாலேயே ஆரம்பம் முதல் பல்வேறு நாடுகளின் தொழிலாளர்கள் கம்யூனின் லட்சியத்தை அகிலத்தோடு இணைத்தே அடையாளம் கண்டார்கள். அதைக் காக்க உறுதியான ஒருமைப்பாட்டை காட்டினார்கள்.பாரீஸ் கம்யூன் தன் வீரியமிக்க செயல்பாட்டைத் துவக்கியது; பொறுக்குமா ஆளும் வர்க்கம்?என்ன ஆனது? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
புரட்சி தொடரும்…
நன்றி : தீக்கதிர் , 15/05/2017
0 comments :
Post a Comment