சோசலிஸ்ட் தலைவரான கடைசல் தொழிலாளி

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி – 27

சோசலிஸ்ட் தலைவரான கடைசல் தொழிலாளி

சு.பொ.அகத்தியலிங்கம்.



“சோசலிசமும் பெண்களும்”
எனும் நூலை எழுதினார்.
1879 இல் ஜெர்மனியில் ரகசியமாக வெளியிடப்பட்டது.
உலகம் முழுவதும் இன்றும்
விவாதிக்கப்படுகிற பெண்ணிய  நூலாகும்.




“அந்த இளம் தொழிலாளி ஏற்கெனவே தொழிலாளர்களிடையே சிறந்த ஸ்தாபன அமைப்பாளர், பாட்டாளி வர்க்கப் பேச்சாளர் எனச் செல்வாக்குப் பெற்றிருந்தார்.” இப்படி கார்ல் மார்க்ஸ் அவரைப் பாராட்டினார். அந்த கடைசல் தொழிலாளியின் வாழ்வும் ஜெர்மன் சோஷலிஸ்ட் இயக்க வரலாறும் பின்னிப் பிணைந்தது. அவர்தான் பெர்டினண்ட் ஆகஸ்ட் பேபல். 1840 இல் கொலோன் நகரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் .இளமையிலேயே தாய் தந்தையரை இழந்தார். உறவினர் உதவியில் பள்ளிப் படிப்பை முடித்தார். முதலில் தச்சராகவும் பின்னர் கடைசல் தொழிலாளியாகவும் மாறினார். பிழைப்பு தேடி ஊர் ஊராய் திரிந்த பேபல் தொழிலாளர்களின் வாழ்க்கைப்பாட்டை அனுபவித்து அறிந்தார்.

லீப்சிக் நகரில் வேலை நிமித்தமாக வாழ நேரிட்டபோது ஆங்கிலமும், பிரெஞ்சும் கற்றுக்கொண்டார். ஜெர்மனியில் வேலைநிறுத்த அலை வீசியபோது பேபலும் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக 1863 இல் லாஸ்ஸல் எனும் சோஷலிஸ்ட் தலைவரின் பிரசுரம் இவரை அவர் பக்கம் கொண்டு நிறுத்தியது. ஆழ்ந்த தொழிலாளி வர்க்க ஈடுபாட்டால் 1867 இல் சாக்ஸேனிய ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராகவும்; அதனைத் தொடர்ந்து ஜெர்மன் நாடாளுமன்றமான ரீச்ஸ்டாக்கின் உறுப்பினராகவும் ஆனார். நாடாளுமன்றத்தில் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தியும் – கட்டாய ராணுவ சேவை திட்டத்தை எதிர்த்தும் ஆற்றிய உரை மூலம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

நாடாளுமன்ற பணிகளுக்காக ஊதியம் எதுவும் வாங்கவில்லை. கடைசல் பட்டறையில் பணியாற்றியே குடும்பத்தைக் காப்பாற்றினார். வெளியூர் செல்கிற நேரத்தில் அதுவும் இல்லை . குடும்பம் சிரமப்பட்டது. 1848 போராட்டத்தில் நாடு கடத்தப்பட்டு நெடுநாள் இங்கிலாந்தில் வாழ்ந்த லீப்னெக்ட் தொடர்பு பேபலை மார்க்சியம் நோக்கி உறுதியாக நகர்த்தியது .1868 இல் லீப்னெக்டோடு சேர்ந்து முதலாவது அகிலத்தின் திட்டத்தை அமலாக்க நூரம்பர்க் தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் கொணர்ந்தார். ஸ்பெயினில் முடியாட்சிக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து கட்டுரை எழுதியதற்காக இருவரும் மூன்று மாதம் சிறையிலடைக்கப்பட்டனர்.
லாஸ்ஸலின் மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்ட சூழலில் பேபலும் லீப்னெக்டும் இணைந்து வழிகாட்ட 1869 இல் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி பிறந்தது. 1867 முதல் 1871 வரை ரீச்ஸ்டாக்கில் இந்த இரண்டு பேர் மட்டுமே சோஷலிஸ்ட்டுகளாக இருந்தனர். பிரான்ஸ் –பிரஷ்ய போருக்கு அதிக நிதி ஒதுக்கீடு கோரிய தீர்மானத்தை பேபல் கடுமையாக எதிர்த்தார். முதலில் தடுமாறினும் லீப்னெக்ட் பின்னர் சரியான தடத்துக்கு வந்தார். இது நடந்தது நவம்பரில். டிசம்பரில் நடந்த தேர்தலில் பேபல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனால் கைது செய்யப்பட்ட அவர் விடுதலையானார் .

இவர்களின் தொடர் சிம்ம கர்ஜனை ஆட்சியாளரை வெகுளச்செய்தது.1872 இல் தேசத்துரோக வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் தலா இரண்டாண்டு சிறை; மன்னரை இழிவுபடுத்தியதாக பேபலுக்கு மேலும் ஒன்பது மாதச் சிறை. சிறையில் பேபல் மார்க்சிய நூல்களைத் தேடித் தேடிப் படித்தார்; கிறிஸ்துவ மதம் குறித்த நூல்களை மொழி பெயர்த்தார். “ஜெர்மனியில் விவசாயிகள் போர்” எனும் எளிய நூலை எழுதினார். சிறையிலிருந்தபடியே விவரங்களைச் சேகரித்து “சோசலிசமும் பெண்களும்” எனும் நூலை எழுதினார் .1879 இல் ஜெர்மனியில் ரகசியமாக வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் இன்றும் விவாதிக்கப்படுகிற பெண்ணிய நூலாகும். பேபலின் காத்திரமான படைப்பாகும்.

முதலாளித்துவ நன்னெறிகளின் போலித்தனம் – பெண்களுக்கு சமத்துவமின்மை – விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கொடுமை என அனைத்தையும் வரலாற்றுப் போக்கில் எழுதினார். கட்டுப்பாடற்ற காதலைப் பேசி ஒழுக்கக்கேட்டை வளர்ப்பதாக முதலாளிகள் குற்றம்சாட்டினர். தூய –பரஸ்பர ஈர்ப்பான – கட்டற்ற காதலை துணிந்து ஆதரித்தார் பேபல்; குடும்பம் மற்றும் சமூக உறவுகள் நோக்கி எழுந்த கேள்வியை முன்வைத்தார். அன்றும் இன்றும் மிகவும் முக்கியமான பெண்ணிய நூலாக இது விவாதிக்கப்படுகிறது.

1875 இல் சிறையில் இருந்தபடியே லாஸ்ஸலியன் தலைவர்கள் ஒன்றுபட லீப்னெக்ட்டுடன் சேர்ந்து முயற்சி எடுத்தார். சரியான விபரம் கிடைக்காத சூழலில் சமூக ஜனநாயகவாதிகள் தயாரித்திருந்த “கோதா திட்ட”த்திற்கு ஒப்புதல் தந்துவிட்டார். மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இருவரும் இத்திட்டத்தை விமர்சித்திருந்ததை பேபல் பின்னரே அறிந்தார். இதுகுறித்து இன்னொரு அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம். ஜெர்மனின் அதிகாரமிக்க இரும்பு மனிதர் பிஸ்மார்க்கை கடுமையாக விமர்சித்த நூலுக்காக மீண்டும் சிறைப்பட்டார். சோஷலிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட தடை செய்யப்பட்ட சூழலில், சித்ரவதைகளைத் தாங்கி, தலைமறைவாகக் கட்சியை வளர்த்தார்.

“பேபல் உண்மையான ஒரு கட்சித் தலைவர் எனக் காட்டிவிட்டார்” என லெனின் சொன்னது மிகை அல்ல . மொத்தத்தில் ஆறாண்டு சிறைவாசத்தில் பெரிய சித்தாந்தவாதியாய் உருவெடுத்தார்.  1880 இல் லண்டன் சென்று மார்க்ஸ், ஏங்கெல்ஸைச் சந்தித்தார். 1889 இல் இரண்டாவது அகிலத்தில் சமூக ஜனநாயக வாதிகளைப் பங்கேற்கச் செய்தார் , 1890 மற்றும் 1898 இல் முறையே 35 , 46 உறுப்பினர்களை கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் இடம் பெறச் செய்தார். 1903 இல் 81 இடங்களை வென்றார். இரண்டாவது அகிலத்தோடு இணைந்து பணியாற்றினார் ; மாநாட்டில் உணர்ச்சிப் பிழம்பாய் உரையாற்றினார்.

ஆளும் வர்க்கம் அளிக்கும் சிறுசிறு சலுகைளைக் கண்டு திருப்தி அடைவது –மக்களின் தீர்மானகரமான நடவடிக்கைகளைக் கண்டு பயப்படுவது–அரசாங்கத்தின் வர்க்க குணாம்சத்தையும், மக்கள் விரோதப் போக்கையும் மூடிமறைப்பது என புரையோடிப்போன திருத்தல்வாதக்கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்த வேண்டுமென்றார். 1905 ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சியில் காட்டிய உறுதியை – தியாகத்தை – அர்ப்பணிப்பை வெகுவாகப் புகழந்து தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தார்.

1910 பிப்ரவரி 22 பேபலின் 70 ஆவது பிறந்த தினத்துக்கு உலகெங்குமிருந்து வாழ்த்துகள் குவிந்தன. அவற்றிற்கு எழுதிய பதிலில்“போராட்டக் களத்தில் முன்வரிசையில் மக்களோடு தோள் இணைந்து செம்பதாகை ஏந்திச் செல்ல வேண்டும் ; அந்த நல்ல நாளைக் காணும் வரையில் நான் உயிரோடு இருக்க வேண்டும்” என்றார். 1913 இல் கட்சி மாநாட்டிற்கு தயார் செய்து கொண்டிருந்தபோது 74 வயதில் மாரடைப்பால் காலமானார்.  லெனின் தனது இரங்கல் செய்தியில், “சர்வதேசிய மற்றும் சமூக ஜனநாயகத்தின் முழுமையான வரலாற்றுக் கட்டத்தின் ஒட்டுமொத்த உருவமாக பேபல் விளங்கினார்” எனக் குறிப்பிட்டார்.

புரட்சி தொடரும்…

நன்றி : தீக்கதிர் ,08/05/2017.


0 comments :

Post a Comment