போர்க்கப்பலில் புரட்சிக் கொடி

Posted by அகத்தீ Labels:






புரட்சிப் பெருநதி – 26
போர்க்கப்பலில் புரட்சிக் கொடி
சு.பொ.அகத்தியலிங்கம்.


‘‘பயபீதியிலே கலங்கினாரு ஜாரு 
பதறிப்போயி அறிக்கையொன்னு விட்டாரு 
இறந்தவருகெல்லாம் சுதந்திரம்
இருப்பவருக்கெல்லாம் சிறைவாசம்…’



‘கப்பலை எங்களிடம் ஒப்புக் கொடுங்கள் . அடைக்கலம் தருகிறோம். ஜாரிடம் உங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டோம்’ – ருமேனிய அரசாங்கம் தூதுவிட்டது. நிலக்கரி தீர்ந்துவிட்டது . உணவும் இல்லை ; குடிநீரும் இல்லை . இனி தாக்குப்பிடிக்கும் வலுவில் போர்க்கப்பல் போத்தம்கின் இல்லை . வருத்தத்துடன் மாலுமிகள் இரவை போத்தம்கின்னில் கழித்தனர்.
மறுநாள், ‘சுதந்திரப் போர்க்கப்பலே! விடை கொடு! ஜெனரல்களையும், இராணுவ அதிகாரிகளையும், ஜார் மன்னரையும், எல்லா பணக்காரர்களையும் நீ பதினோரு நாட்கள் கலங்கடித்தாய்! புரட்சிக் கொடிக்கு உண்மையாய் நடந்து கொண்டாய் நீ! ஓங்குக உன் புகழ்’ ஜனவரி இரத்த ஞாயிற்றுக்கு பிறகு தொழிலாளரிடையே போராட்டங்கள் வெடித்தவண்ணம் இருந்தன ‘முன்னேறு’ ஏட்டில் ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் மூன்றாவது மாநாட்டைக் கூட்டுமாறு லெனின் எழுதினார் . மென்ஷ்விக்குகள் மாநாட்டைக் கூட்டத் தயங்கினர் .
1905 ஏப்ரல் 25 முதல் மே 10 வரை லண்டனில் நடைபெற்றது. போல்ஷ்விக்குகள் மட்டுமே பங்கேற்றனர் . இரண்டாவது மாநாட்டில் நிறைவேற்ற இயலாத ஸ்தாபன தீர்மானம் ஏற்கப்பட்டது. இதர கட்சிகளோடு உள்ள அணுகுமுறை குறித்து முடிவெடுக்கப்பட்டது. புரட்சிக்கான நடைமுறை உத்தி வகுக்கப்பட்டது. ஜாராட்சியைத் தூக்கி எறியும் போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. ‘மக்களின் எழுச்சி வெற்றி பெற்று முடியாட்சி முழுமையாகத் தூக்கி எறியப்படும் சூழலில் உருவாகும் தற்காலிக புரட்சி அரசில் நமது கட்சி பங்கேற்கலாம்; அனைத்து எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு எதிராக உறுதியாகப் போராடவும்; தொழிலாளி வர்க்கத்தின் சுயேச்சையான நலன்களைப் பாதுகாக்கவும் இவ்வாறு பங்கேற்கலாம்’ என்றது லெனின் வரைந்த தீர்மானம்.
மென்ஷ்விக்குகள் ஜெனீவாவில் மூன்றாவது சிறப்பு மாநாட்டைக் கூட்டினும் அதில் போல்ஷ்விக்குகளின் நிலைபாட்டிற்கு மாறான – புரட்சிக்கு குந்தகம் செய்யும் முயற்சிகளையே மேற்கொண்டனர்.‘முன்னேறு’ பத்திரிகை 18 வது இதழுடன் தன் மூச்சை நிறுத்த வேண்டியதாயிற்று .மே 27 முதல் ‘பாட்டாளி’ என்ற ஏடு வெளிவரத் துவங்கியது. இதில் லெனின் மாநாட்டு முடிவுகளை எழுதினார். மேலும் ‘ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு யுத்திகள்’ என்ற நூலையும் போத்தம்கின் கலகத்துக்கு முன்பே எழுதினார் . ஆனால் பின்பே வெளிவந்தது .
பீட்டர்ஸ்பர்க் தொழிலாளி போராட்டம் நகரம் நகரமாக பரவியபோது அதன் வீச்சு போர்க் கப்பலையும் தீண்டிவிடுமோ எனப் பயந்து கப்பலை நடுக்கடலுக்கு கொண்டுபோனான் கமாண்டர். ஆனாலும் பலன் இல்லை . காலையில் மேல் தளம் போன சிப்பாய்கள் தங்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் நெளிவதைக் கண்டு கொதித்தனர் . சாப்பிட மறுத்தனர் .  ‘கொண்டு வா தார்ச் சீலையை!’ என கமாண்டர் ஆணையிட்டார். தார்ச் சீலை போர்த்தப்பட்டால் விசாரணை இன்றி சுட்டுத் தள்ளப்படுவார்கள் .

‘இனி பொறுக்க முடியாது … ஆயுதம் ஏந்துவோம்!’ என மாலுமியான மத்யுஷென்கோ அறைகூவ கொதிநிலையை எய்தியது . ஒரு அதிகாரி சுட்டு வீழ்த்தப்பட்டார். ஜாரின் கொடி இறக்கப்பட்டு புரட்சிக் கொடி பறக்கவிடப்பட்டது .மத்யுஷென்கோ தலைமையேற்று ஒதெஸ்ஸோ நகரை நோக்கி திருப்பினான். நகரை நெருங்கியதும் தொழிலாளர்களோடு சேர்ந்து அதனைக் கைப்பற்ற யோசனை கூறி வாலிலியோவ் யுழினை லெனின் அனுப்பினார் ; ஆனால் அதற்கு முன்பே ஜாரின் 13 கப்பல்கள் போத்தம்கின்னை வளைத்தன .

சகோதர ஆதரவு கேட்டு இதர கப்பல் மாலுமிகளுக்கு அனுப்பிய வேண்டுகோள் பயனற்றுப் போனது. நடுக்கடலில் அல்லாடி ருமேனிய துறைமுகத்தை அடைந்தது .அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை முதலில் பார்த்தோம் . புரட்சிக்கு பிந்தைய சோவியத் யூனியன் தயாரித்த ‘பேட்டில்ஷிப் போத்தம்கின்’ திரைப்படம் ; இன்றும் உலக அளவில் கொண்டாடப்படுகிறது . போராட்ட அலை ஓங்கியது . புகையிலை ,ரொட்டி , டிராம் என பலதரத்தார் போராட – மாணவரும் கை கோர்க்க – மாஸ்கோ கிட்டத்தட்ட புரட்சியாளர் கைவசம் ஆகும் சூழலில் பெரும் தாக்குதலில் ஜார் இராணுவம் இறங்கியது.ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர் . பலநூறு பேர் காயமுற்றனர்.

அக்டோபர் 8 படுகொலை ‘மற்றொரு இரத்த ஞாயிறு’ அரங்கேறியது; ஒரே ஆண்டில் ‘இரண்டு இரத்த ஞாயிறு’களை தேசம் சந்தித்தது என லெனின் குறிப்பிட்டார். போராட்ட வீச்சு ஜாரை சற்று இறங்கிவர நிர்ப்பந்தித்தது ; சில சலுகைகளை அறிவித்தார். ‘நாம் மகிழ்ச்சி அடைய காரணம் உண்டு ; ஜார் காட்டியுள்ள சலுகைகள் புரட்சிக்கு பெரிய வெற்றிதான் .ஆயின் சுதந்திரத்தின் முழுவெற்றியை அடைய இன்னும் வெகுதூரம் போக வேண்டும்’ என்றார் லெனின்.

‘பயபீதியிலே கலங்கினாரு ஜாரு
பதறிப்போயி அறிக்கையொன்னு விட்டாரு
இறந்தவருகெல்லாம் சுதந்திரம்
இருப்பவருக்கெல்லாம் சிறைவாசம்……’ என மக்கள் பாடினர்.

போராட்டவீச்சில் ஆங்காங்கே சோவியத்துகள் உதயமாயின. சோவியத் எனின் ரஷ்ய மொழியில் குழு என்றே பொருள். ஆனால் அதைவிட வீச்சாய் உருவாயின. நகரங்களில் தொழிலாளர்களைக் கொண்ட சோவியத்துகள், விவசாயிகள், படைவீரர்கள் பங்கேற்ற சோவியத்துகளும் உருவாயின. 1905 அக்டோபர் தொடங்கி டிசம்பருக்குள் பெரிய நகரங்களெங்கும் சோவியத்துகள் பரவிவிட்டன. திடுதிப்பென உருவான போதிலும்; உருப்படியான வடிவமற்று உருவான போதிலும் இறுக்கமற்று உருவான போதிலும் அவை எங்கும் இயங்கின.

இந்த சோவியத்துகளுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் எதுவும் இல்லை; எனினும் பத்திரிகை சுதந்திரம், எட்டுமணி நேர வேலை ஆகியவற்றை அமலுக்கு கொண்டு வந்தன .வரி செலுத்த தேவை இல்லை என மக்களுக்குச் சொல்லின; அரசு கருவூலத்தை புரட்சிக்கு பயன்படுத்தலாயிற்று .அரசு சும்மா இருக்குமா? சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு லெனின் வந்தார் .அவருக்கு ரஷ்யாவிற்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை . ‘ நோவோயாஷிதின்’ அதாவது ‘புதுவாழ்வு’ எனும் ஏட்டிற்கு சோவியத்துகள் பற்றி எழுதினார்.

சோவியத் பற்றி தாம் கேள்விப்பட்டவற்றிலிருந்தே எழுதுவதாகவும்; நேரடி அனுபவம் இல்லை என்றும் சொன்னார் . ஒரு கேள்விக்கு பதில் சொல்கையில் ‘சோவியத்துகள் ,கட்சி இரண்டும் தேவைதான்’; ‘இரண்டின் பணிகளையும் எப்படி பிரித்துக் கொள்வது மற்றும் எப்படி ஒருங்கிணைப்பது என்பதே பிரச்சனை’ என்றார். 1905 நவம்பர் மாதம் ரகசியமாக ரஷ்யாவிற்குள் நுழைந்த லெனின் தலைமறைவாய் இருந்து கொண்டே மக்கள் எழுச்சிக்கு வழிகாட்டலானார்.

புரட்சி தொடரும்…


நன்றி : தீக்கதிர், 01/05/2017.



0 comments :

Post a Comment