மதபீடங்களை உலுக்கிய அறிவியல்

Posted by அகத்தீ Labels:
புரட்சிப் பெருநதி – 25
மத பீடங்களை உலுக்கிய அறிவியல்

- சு.பொ.அகத்தியலிங்கம்

தொழிற்புரட்சியின் தேவைகளுக்கேற்ப அறிவியல்
தன்னை வளர்த்துக் கொள்ளத் தொடங்கியது.
அடுத்துவந்த நூற்றாண்டுகளில் உற்பத்தியின்
தேவைக்கு ஏற்ப அறிவியல் வளர்ந்தது.


பைசா நகர வாழ் மக்களே! அரிஸ்டாட்டில் இதுவரை கூறிவந்தது தவறு! எடை எதுவாக இருப்பினும் ஒரே சமயத்தில் போடப்படும் பொருட்கள் ஒரே சமயத்தில்தான் கீழே விழும்எனக் கூறினார்.பேச்சோடு நில்லாமல் அக்கோபுரத்தின் மீதேறி வெவ்வேறு எடையுள்ள இரு பொருட்களை கீழே போட்டு நிரூபிக்கவும் செய்தார் கலிலியோ !

அறிவியல் முன்னேற்றம் இன்றி புரட்சிகளும் இல்லை; புரட்சிகரத் தத்துவமும் இல்லை. சமையலறையில் செய்கிற எந்த ஒரு செயலாகட்டும்; விவசாயம் சார்ந்த எந்தவொரு செயலாகட்டும்; கொல்லர் ,தச்சர் செய்வதிலாகட்டும் - அனுபவ அறிவின் தொகுப்பு உண்டு; அதில் அறிவியல் பொதிந்து கிடக்கும்; ஆயினும் அதுவே அறிவியல் அல்ல.அறிவியல் என்பது அனுபவ அறிவின் தொகுப்பு மட்டுமல்ல; அனுபவ அறிவைத் தாண்டி காரண காரியங்களை விளக்க முற்படும் அறிவியல் செயலுமாகும்.

அறிவியல் காலந்தோறும் மெல்ல நகர்ந்து வந்தாலும் மறுமலர்ச்சி காலத்தில் கூடுதல் விசை பெற்றது.15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உதித்த லியோனார்டோ டாவின்ஸி என்பவரை வெறும் ஓவியக் கலைஞனாக மட்டும் கருத முடியாது; கட்டிடப் பொறியாளன்;மனித ரத்த ஓட்டத்தை கண்டவன்; விமானத்துக்கு முன்னோடியாய் வடிவம் தந்தவன்,

பிரபஞ்சத்தின் மையம் பூமியே-ஏனெனில் அது அவ்வாறு தான் ஆண்டவனால் படைக்கப்பட்டிருக்கிறதுஎன்பது அக்காலத்திய நம்பிக்கை. அரிஸ்டாட்டில் மட்டுமல்ல, தாலமி என்ற வானவியலாளரும் அப்படித்தான் கூறியிருந்தார். “ பிரபஞ்சத்தின் மையம் பூமியல்ல. சூரியன்தான் மையம். சூரியனைச் சுற்றியே பூமியும் மற்ற கிரகங்களும் வருகின்றன. சூரியன் நகருவதாகத் தோன்றுவது பூமியின் வேகத்தினால்தான்என்பது கோபர்னிக்கஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு.

கலிலியோ கோபர்னிக்கஸின் கருத்துதான் சரி என்று நிரூபித்தார். தொலை நோக்கி அவரின் ஆய்வுக்கு உதவியது. கோபர்னிக்கஸின் கருத்துகளை ஆதரித்து கலிலியோ எழுதிய புத்தகம் மிகப் பிரபலமானது. பைபிளில் கூறப்பட்டதற்கு மாறாக கலிலியோவின் கருத்துக்கள் இருந்ததால் விசாரணையை அவர் எதிர் கொள்ள நேர்ந்தது. ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது. பின்னர் அது வீட்டுச் சிறைவாசமாக மாற்றப்பட்டது.

1642-இல் மறைந்தார். கலிலியோவின் பங்களிப்பு பெரிது. அவரை நவீன இயற்பியலின் தந்தை என்பர். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி மேலும் பல கண்டுபிடிப்புகளை உலகத்திற்குத் தந்தவர் சர் ஐசக் நியூட்டன். ஐன்ஸ்டீன் மேலும் பல படி முன் சென்றார்.

1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்று மன்னிப்புக் கோரினார்.

டைக்கோபிராஹியின் கண்டுபிடிப்புகளின் துணையோடு ஜொஹன்னஸ், கெப்ளர் கிரகங்களின் துல்லியமான பாதையைக் கண்டறிந்தார்.ஜியார்டானோ புரூனோ என்கிற இத்தாலிய தத்துவஞானி பைபிள் கதைகளுக்கு மாற்றாக கோபர் னிக்கஸின் கருத்துகளை உயர்த்திப் பிடித்தார்.மதத் துவேஷ குற்றத்துக்காக 1600 ஆம் ஆண்டு பிப்ரபரி 17 ஆம் நாள் உயிருடன் எரிக்கப்பட்டார். 4 ஆண்டுகளுக்குப் பின் புரூனோவின் இறப்புக்கு போப் வருத்தம் தெரிவித்தார்.

வில்லியம் ஹார்வி இரத்த ஓட்டத்தைக் கண்டு நிறுவியதும் பைபிள் கற்பனைக்கு பலத்த அடியானது; மருத்துவ அறிவியல் புது வேகத்துடன் பீறிடத்துவங்கியது. ஹார்வியும் மதபீடத்தின் கண்டனத்துக்கு ஆளானார்.

கடவுள் மனிதனைப் படைத்தான் என்கிற மதக் கோட்பாட்டைப் புரட்டிப் போட்டது டார்வினின் படிமலர்ச்சி அல்லது பரிணாமக் கொள்கை .சார்லஸ் ராபர்ட் டார்வின் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிமலர்ச்சிக் கொள்கை அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை ஆகும் . இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் தோற்றம் (The Origin of Species)என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். புரட்சியை ஏற்படுத்திய நூலாகும் இது.

இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகஸ் தீவுகளுக்குச் சென்று ஆய்ந்து சொன்னவை வியப்பூட்டுவன. மனித இனம் குரங்குஇனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்களுக்காக, அன்று இவரைப் பலர் எள்ளி நகையாடினர். எனினும் அது அறிவியல் புரட்சியாகும்.விஸ்வரூபம் எடுத்துவந்த தொழிற்புரட்சியின் தேவைகளுக்கேற்ப அறிவியல் தன்னை வளர்த்துக் கொள்ளத் தொடங்கியது. அடுத்துவந்த நூற்றாண்டுகளில் உற்பத்தியின் தேவைக்கு ஏற்ப அறிவியல் வளர்ந்தது.மார்க்சும் ஏங்கெல்சும் இந்த அறிவியல் சாதனைகளை புகழ்ந்தனர்; அவர்களின் தத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு இவை உந்து சக்தியும் உரமும் ஆயின .

விஞ்ஞானி .வி.வெங்கடேஸ்வரன் கூறுவது முக்கியமானது;“16,17 ஆம் நூற்றாண்டுகளில் தொழில் நுட்பம், வானவியல், கடல் போக்குவரத்திற்கான பிரச்சனைகள், துல்லியமான கடிகாரம், விண்மீன் பற்றிய ஞானம், இரவு வானின் வரைபடங்கள் ,பூகோள வரைபடங்கள் போன்றவை முன்னுரிமை பெற்றன.

18,19 ஆம் நூற்றாண்டுகளில் இயந்திர சக்தி, போக்குவரத்து, வேதிப்பொருட்கள், போர்த்தளவாடங்கள், அனைத்து தொழில்சார் பிரச்சனைகள் கவனம் பெற்றன.” “அதே போல் 16,17 ஆம் நூற்றாண்டுகளில் தொலைநோக்கி, நுண்ணோக்கி, தெர்மோகீட்டர், பாரோமீட்டர் உள்ளிட்ட பல முக்கிய கருவிகளை கண்டடைந்து இயற்கையை ஆழமாய் அறிய முனைந்தது அறிவியல்; 18,19 ஆம் நூற்றாண்டுகளில் புதிய புதிய இயந்திரங்கள், நீராவி எஞ்சின், டைனமோ, மின்சார மோட்டார், டர்பைன்கள், வேதியல் கூடங்கள் என முன்னேறியது.
அதாவது 18,19 ஆம் நூற்றாண்டின் கவனம் இயற்கையை அறிவது என்பதற்கு மேல் இயற்கையை நமக்கு சாதகமாகப் பயன் படுத்தும் நோக்குடன் வேகம் பெற்றது.”

இன்றைக்கு அறிவியல் என்பது இயற்கையை, உண்மையை அறியும் வழியாக மட்டுமின்றி; ‘சாத்தியமான அனைத்தையும்செய்து பார்க்கும் ஒன்றாகவும் மாறிவிட்டது.”

ஆம், அறிவியல் வளர்ச்சி ஒற்றை தேசத்தின் சாதனை அல்ல ஒவ்வொரு நாடும் ஏதேனும் ஒருவகை பங்களிப்பை நல்கி இருக்கிறது. ஆதியில் கிரேக்கம், பாரசீகம், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகவே இருந்தன.

“ 7 ஆவது நூற்றாண்டிலிருந்து 12 ஆவது நூற்றாண்டு வரை நீறுபூத்த நெருப்பாய் இருந்த அறிவியலை அணையவிடாமல் இஸ்லாமிய நாடுகளே காத்தனஎன்பர் அறிஞர். ஆனால் மதத்தின் கொடூரமான சமூகப்பார்வை அறிவியலை முடக்கியது. பின்னர் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அறிவியல் வேகம் பெற்ற போது பல நாடுகள் பின் தங்கிவிட்டன. அறிவியல் வளர்ச்சியே பல புரட்சிகளின் தத்துவத்திற்கு வலிமை கொடுத்தது.

புரட்சி தொடரும்...
நன்றி : தீக்கதிர் , 24/04/2017
0 comments :

Post a Comment