பிரம்மைகளைத் தகர்த்த கொந்தளிப்புகள்

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி – 24


பிரமைகளைத் தகர்த்த கொந்தளிப்புகள்
பிரம்மைகளைத் தகர்த்த கொந்தளிப்புகள்
பிரமைகளைத் தகர்த்த கொந்தளிப்புகள்
சு.பொ.அகத்தியலிங்கம்.



இந்த சம்பவத்தை
அரியணைக்கு அடியில் வைக்கப்பட்ட
வெடிகுண்டாக
ஐரோப்பா முழுவதும் கருதி நடுங்கியது.


ஆண்கள் மட்டுமே போராடவில்லை. டீ கிளெரி தெருவில் மறியலில் ஈடுபட்டிருந்த எழுவரில் இருவர் அழகிய ஏழைப் பெண்கள் .அதில் ஒரு பெண் செங்கொடி ஏந்தி தனியாக முன்னேறிய போது தேசியப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டாள்.’ என பிரான்சில் வர்க்கப் போராட்டம் நூலில் ஏங்கெல்ஸ் எழுதினார்.

1815-ஆம் ஆண்டு நெப்போலியன் மறைந்தார். மன்னர் போய் இன்னொரு மன்னர் வரினும் துயரம் தொடர்கதையானது.  1840, 1848ஆம் ஆண்டுகளில் பல பூர்ஷ்வாப் புரட்சிகள் நடைபெற்றன.
1845 க்குப் பிறகு விவசாயம் பொய்த்துவிட்டது ; சந்தையின் ஏற்ற இறக்கங்கள் சீரழிவை வேகப்படுத்தின . மேற்கே அயர்லாந்தில் குத்தகைக்காக தானியம் ஏற்றுமதி செய்யப்பட்டதால்; பத்து லட்சம் பேர் பட்டினியால் செத்துப் போயினர் .கிழக்கே ருஷ்யாவரை பெரும் பொருளாதார நெருக்கடியும் சிக்கலும் அதிகரித்தன.

‘பாரீஸ் நகர மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தினசரி 11,12 மணி நேரம் உழைத்தபோதும் கடும் வறுமையில் உழன்றனர்.’ இதனைச் சொன்னது அரசர் லூயி போனபார்ட்டின் சொந்த மூத்த அதிகாரி ஹாஸ்மன்.

பசி , விலையேற்றம் ,கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை அதிருப்தியையும் வெறுப்பையும் தீவிரப்படுத்தின .  இந்தச் சூழலில் தான் 1848 பிப்ரவரியிலும் மார்ச்சிலும் போராட்டம் வெடித்தது. கைவினைஞர்களும் , தொழிலாளர்களும் பங்கேற்க வீதிப் போராட்டத்தின் தன்மை மாறியது என்பார் வரலாற்றாசிரியர் கிறிஸ் ஹார்மன்.
‘1848 பிப்ரவரி 25 மதியம் முழுவதும் பாரீஸ் நெடுக சுற்றித் திரிந்தேன் . குறிப்பாக இரண்டு அம்சங்கள் என்னை ஈர்த்தன. சமீபத்தில் நடந்த புரட்சியில் பொதுமக்களின் பங்களிப்பு தனித்துவமிக்கதாய் இருந்தது ஒரு அம்சம் ; அதுவும் அனைத்து வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் மேலும் மக்களுக்கு அதாவது உழைக்கும் கரங்களுக்கு கிடைத்த எல்லையற்ற சக்தி. இரண்டாவது அம்சம், திடீரென முழு அதிகாரமும் பெற்றுவிட்ட அந்த நொடி தொடங்கி பிறர் மீது வெறுப்பைக் காட்டாதது.’ என்பார் வரலாற்றாளர் அலெக்ஸி டி டாக்கியூவில்லி.

‘சீர்திருத்தம் வாழ்க!’ என முழக்கமிட்டபடி படைகளை மீறி நாடாளுமன்றத்துக்குள் புகுந்தனர் . எதிர்க்கட்சியைச் சார்ந்த லாமார்ட்டின் தலைமையில் சோஷலிஸ்ட் புளோவையும் உடலுழைப்பாளர் ஆல்பர்ட்டையும் சேர்த்துக்கொண்டு ஒரு அரசமைத்தனர் .
வியன்னா ,மிலன் ,வெனிஸ்,பராக்,பெர்லின் என நகரம் நகரமாய் கிளர்ச்சி பரவின . எதிர்ப்புரட்சி சக்திகள் அலறி அடித்து ஓடின . இந்த சம்பவத்தை ‘அரியணைக்கு அடியில் வைக்கப்பட்ட வெடிகுண்டாக’ ஐரோப்பா முழுவதும் கருதி நடுங்கியது.

அனைத்து ஆண்களுக்கும் வாக்குரிமை, ஜூரிகள் மூலம் வழக்கு விசாரணை ,பத்திரிகை சுதந்திரம், நிலப்பிரபுத்துவக் கொடுமையிலிருந்து சற்று ஆறுதல் என சில முன்னேற்றங்கள் இந்தப் புரட்சியால் பளிச்சிட்டாலும் அதிக நாள் நீடிக்கவில்லை .

இந்தச் சூழல் பற்றி மார்க்ஸ் எழுதினார், ‘மார்ச் மாதம் நடைபெற்ற ‘அரைப் புரட்சி’ இன்னும் மன்னரின் ஒரு ரோமத்தைக்கூட பிடுங்கி எறியவில்லை .பழைய ராணுவம் அதனுடைய மண்டைக் கனம் பிடித்த மேட்டுக்குடி அதிகாரிகளின் படையோடு அப்படியே இருந்தது .அரசாங்க எந்திரம் இன்னும் பேராசை பிடித்த படுமோசமான அதிகாரிகள் கையிலேயே இருந்தது . நிலப்பிரபுக்கள் இன்னும் பெரும்பெரும் பண்ணைகளை வைத்துக்கொண்டு விவசாயிகளை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருந்தனர். கோட்டை அரண்கள் இனிதான் மூர்க்கமாகத் தாக்கப்பட வேண்டும்.’

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையோர் தொழிலதிபர்கள், நிலப்பிரபுக்கள், மதகுருக்கள், அதிகார வர்க்கத்தினர் இருந்ததால் இவர்கள் பழைய அதிகார வர்க்கத்தின் மீது கைவைக்கத் தயங்கினர்; போராடிய சாதாரண மக்களை ‘ஒழுங்கற்ற கும்பலாகக்’ கருதினர். அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பழைய பாதைக்குத் திருப்பப்பட்டது . வேலையின்மை பெருகியது . சலுகைகள் பறிக்கப்பட்டன ;பட்டறைகள் மூடப்பட்டன.

ஜூன் 21இல் இதற்கான அறிவிப்பு வெளியானது. ஜூன் 22 மக்கள் மீண்டும் வீதிகளில் தடையரண் அமைத்து போராடத்துவங்கினர் .அப்போது நடந்த ஒரு சம்பவத்தையே ஆரம்பத்தில் பார்த்தோம்.

 1849க்குள் எழுச்சி ரத்த வெள்ளத்தில் நசுக்கப்பட்டது. இதுகுறித்து இராணுவ அதிகாரியும் ஓவியருமான மைசோனியர் தன் குறிப்பில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார் ; ‘டிலா மெண்ட்லெரி தடையை நாங்கள் தகர்த்தபோது போரின் பயங்கரத்தை முழுமையாக உணர்ந்தேன். தடையைப் பாதுகாத்தவர்கள் சுடப்பட்டதை – ஜன்னல் வழியாகத் தூக்கி எறியப்பட்டதை – தரை முழுக்க பிணங்கள் கிடந்ததை -மண் ரத்தத்தால் சிவந்திருப்பதைப் பார்த்தேன்.’

12,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . இறந்தவர் எண்ணிக்கைச் சொல்லப்படவே இல்லை.ஏராளமானோர் கயானாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் .

‘நியூ ரெய்னிஷ் ஜீட்டிங்’ ஏட்டில் மார்க்ஸ் எழுதினார் ; ‘ மார்ச் முதல் டிசம்பர் வரை பூர்ஷ்வா வரலாறு காட்டும் அனுபவம் என்ன? ஒரு சுத்தமான நடுத்தர வர்க்கப் புரட்சியோ – பூர்ஷ்வா புரட்சியோ – சட்டத்திற்குட்பட்ட மன்னராட்சியை ஸ்தாபிப்பதோ ஜெர்மனியில் சாத்தியமில்லை. நம்முன்னுள்ள மாற்றுவழி ஒன்றே அதாவது நிலப்பிரபுத்துவ எதிர் புரட்சி அல்லது சமூகக் குடியரசுப் புரட்சி.’

‘ஐரோப்பாவில் 1848 ஆம் ஆண்டு புரட்சி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது .அவ்வாண்டில் பல நாடுகளில் புரட்சிகள் தோன்றின .அவற்றில் சில ஓரளவு வெற்றி பெற்றன. ஆனால்,அவை பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தன.’ என ஜவஹர்லால் நேருவும் குறிப்பிடுகிறார்.

1848 ஏப்ரல் 10 ஆம் நாள் சார்ட்டிட்டுகளின் ஆர்ப்பாட்டம் அடித்து நொறுக்கப்பட்டது; இது இங்கிலாந்தின் புரட்சி வழியை அடைத்தது.
ஜூன் 25 பாரீஸ் தொழிலாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர் , இதுவும் புரட்சி சக்திகளுக்கு பலத்த அடியாகும் .
ஆகஸ்ட் 6 ஆஸ்திரேலிய துருப்புகள் மிலான் நகரத்தைக் கைப்பற்றின ! நவம்பர் 1 வியன்னாவில் பேரெழுச்சி கொடூரமாய் நசுக்கப்பட்டது.
படுமோசமான – மன உறுதியைக் குலைக்கிற சூழலிலும் மார்க்ஸ் விரக்தி அடையாமல் சொன்னார்; ‘1848 புரட்சி இயக்கத்தின் பிரதான விளைவு மக்கள் என்ன வென்றெடுத்தார்கள் என்பதல்ல; மாறாக அவர்கள் என்ன இழந்தார்கள் என்பதே! மக்கள் அவர்களுடைய பிரமைகளை இழந்தார்கள்.’

போராட்டங்களும் கொந்தளிப்புகளும் மிகுந்த இக்காலகட்டத்தில் 1848 மார்ச் மாதம் மார்க்சும் ஏங்கெல்சும் உலகைப் புரட்டிய ‘கம்யூனிஸ்ட் அறிக்கையை’ வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது; அதனை இன்னொரு அத்தியாயத்தில் பார்ப்போம் .போராட்டக் கங்கு அணையவில்லை ‘நீறுபூத்த நெருப்பாய்’ தகித்துக் கொண்டிருந்தது; பாரீஸ் கம்யூன் எழுச்சிக்கு விதையாய் விழுந்தது.
(புரட்சி தொடரும்)

நன்றி : 17/04/2017.


0 comments :

Post a Comment