என்றும் மக்கள் பட்டணமாகவே சென்னை

Posted by அகத்தீ Labels:







என்றும் மக்கள் பட்டணமாகவே சென்னை

சி.கலாவதி




நகரம் என்பது வெறும் கட்டிடங்கள், திடல்கள், பூங்காக்கள் அல்ல. ஒரு நகரத்தின் வரலாறு அதை உரு வாக்கியவர்களின் வரலாறு. அந்த நகரத்துக்கு பெருமை சேர்த்தவர்களின் வரலாறு.

வெவ்வேறுவிதமான ஆட்சி முறைகளை எதிர் கொண்டபல்வேறு சாதி,மத,இன,மொழி,மரபு கொண்ட இந்த தேசத்தின் மக்கள்; எந்த ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக வலிமையோடு இணைந்தார்களோஅந்த வலிமையின் அடித்த ளத்தில் உருவான பெருமைமிகு நகரமே சென்னை என்பதை:‘சென்னப்பட்டணம்: மண்ணும் மக்களும்எனும்644 பக்க நூலில் எடுத்துரைக்கிறார் ராமச்சந்திர வைத்தியநாத்.

பல்வேறு சாதி, மத, இன, பேதங்களைக் கடந்துசகமனிதர்களோடு கரங்கோர்த்து நேசித்து வாழும் மக்களே இந்நகரை மாநகராக்குகின்றனர்.கிட்டத்தட்ட முன்னூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஆண்ட்ரூ கோகனும், பிரான்சில் டேயும். பெரி திம்மப்பாவும், நாகபத்தனும் சேர்ந்து உருவாக்கியதே சென்னை நகரம். இதில் மாறுபடுவோரும் உண்டு.

இதன் விரிந்த வரலாறு கட்டுமானங்களை, பூகோளப் பரப்பை மட்டுமா சுட்டும். அல்ல. எல்லைகளைத் தக்கவைத்துக் கொள்ளவாணிபத்தை நிலை நிறுத்திக்கொள்ளஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள நடைபெற்ற மோதல்களின் வரலாறாகவும்; அனைத்துக்கும் மேலாக பல்வேறுபட்ட மக்களின் வியர்வை வாசம் கலந்த வரலாறுமாகும்.

இந்தப் பட்டணத்தில் குடியேறிய அதன் பூர்வீக மக்களில் பெரும்பாலானவர் தமிழர் அல்ல! தெலுங்கர்களே! கம்பெனியின் ஆவணங்களில் இவர்கள் ஜெண்டூக்கள் என அழைக்கப்படுகின்றனர். கம்பெனியின் ஏஜெண்டுகள் பல்வேறு இனங்களைச் சார்ந்த மக்களை மதறாஸில் வாழ்ந்திட ஊக்கமளித்தனர். பல்வேறு தெருக்களின் பெயர்களும், நகரங்கள் அடங்கிய ஜில்லாக்களும் வெவ்வே றான மக்கள் இங்கு வாழ்ந்ததற்கான அதிசயிக்கத்தக்க ஆதாரங்களாக விளங்குகிறதுஎன்கிறார் நூலாசிரியர்.

வாழ்நிலையை மேம்படுத்திக்கொள்ள கிராமப்புறங்களி லிருந்து வந்தவர்கள்தான் இந்நகரின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர். மதறாஸ் பட்டணத்தின் ஆரம்பக்கால உழைப்பாளி மக்கள் இவர்களே என்பது பெருமைக்குரியது’.

ஒரு குறிப்பிட்ட நேரம், காலம், ஏதுமின்றி, துறைமுகத்தில் கப்பல் வந்தவுடன் மணியோசை கேட்டவுடன் சுமை இறக்கும் பணியில் நாள் கணக்கில் ஈடுபட்டவர்கள், அண்டை அயலில் வீடுவாசல் ஏதுமின்றி, வாழ்க்கையைத் துவக்கியவர்களின் வெட்டவெளிகளே பின்னாளில் சாலைகளாக, நடைபாதைகளாக மாறின.’

ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சிசெய்த போது மணலி, ஆதம்பாக்கம் பகுதிகளில் கிராமசபை செயல்பாடு பிரசித்தி பெற்றது.

மதறாஸ் பட்டணத்தையொட்டிய பல்வேறு பகுதிகள் பக்தி இயக்கத்தின் மையமாக விளங்கி இருக்கின்றன. கிறிஸ்த்துவமும், புனித போதகர்களும் வருவதற்கு முன்னே மைலாப்பூரும், திருவல்லிக்கேணியும் புகழ் பெற்றிருந்தன.

பௌத்தம், சமணம், வைணவம் போன்றவை இங்கு வலுவாக இருந்ததை கோவில்களும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன .

கிழக்கிந்திய கம்பெனி கால்பதிக்கும் முன்பே – 12,13ஆம் நூற்றாண்டுகளிலேயே நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், வியாசர்பாடி, தாம்பரம். அயன்புரம், அம்பத்தூர், மாதவரம் போன்ற கிராமங்கள் பெயர்பெற்றவையாக இருந்தன .

1612 ஆம் ஆண்டின் மசூலிப்பட்டிணத்தில் கிழக்கிந்திய கம்பெனி தொழிற்சாலைகளை நிறுவியது. இங்கிலீஸ்காரர் கேப்டனாக இருந்த பிரான்ஸ் டே மதறாஸ் பட்டணத்தில் துறைமுகத்தைச் செப்பனிட்டார். ஜார்ஜ் கோட்டை 17 ஆம் நூற்றாண்டு இஸ்லாமிய வர்த்தகர்களால் கட்டப்பட்டதை அங்குள்ள கிணறுகள் நினைவூட்டுகின்றன.

கறுப்பர் நகரம் என அறியப்பட்டு வந்த அந்நகர் ஜார்ஜ் வருகையை ஒட்டியே ஜார்ஜ் டவுன் எனப் பெயர் பெற்றது. 1896 ஆம் ஆண்டில் முதன்முதலாக காந்தி சென்னைக்கு வருகை தந்துபச்சையப்பா கல்லூரி மற்றும் மெட்ராஸ் லேபர் யூனியன் உள்ளிட்ட பல இடங்களில் பேசியுள்ளார். பெரம்பூரில் அருந்ததியர்களிடம் உரையாடி அவலநிலையை கண்டறிந்துள்ளார் .

காந்தியை முஸ்லிம் ஒருவர் கொன்றுவிட்டார் என முதலில் செய்தி பரவியதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அடர்த்தியாய் வாழும் பெரியமேடு, பட்டாளம், திருவல்லிக்கேணி, பகுதிகளில் மதவெறி தாக்குதல் பரவும் சூழல் உருவானது ..மாயாண்டிபாரதி, வி.பி.சிந்தன் போன்ற கம்யூனிஸ்ட் தோழர்கள் வீதிவீதியாய் சென்று கொன்றது முஸ்லிம் அல்ல,இந்து மதவெறியனே என எடுத்துச் சொல்லி அமைதிப்படுத்தினர் .
பக்கிங்ஹாம் கர்நாட்டிக் மில் எனப்படும் பின்னி மில் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலரின் எழுச்சி முழக்கம்பல்வேறு உழைப்பாளர் போராட்டங்கள் என சென்னையை சிவக்கச் செய்த பல போராட்ட நினைவுகளை இந்நூல் விவரிக்கிறது .

பிரான்ஸிஸ் ஒயிட் எலியஸ் என்பவர் 1818இல் சென்னை கலெக்டராக இருந்த போது 27 குடிநீர் கிணறுகளை அமைத்ததையும் அதையொட்டி எழுதப்பட்ட ஆசிரியப்பா கவிதையும் இதுபோன்ற தகவல்களும் இறைந்து கிடக்கின்றன.

மான் குடை, ஒரிஜினல் ஷண்முகம் பட்டணம் பொடி, அமிருதாஞ்சனம், 1431 பயோரியா பல்பொடி இப்படி பொடியான ஆனால் சுவையான செய்திகள் நூல் நெடுக நிரம்ப உண்டு.

நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் விவசாயத்துக்கு ஆதாரமாய்த் திகழ்ந்த இரண்டு பெரிய ஏரிகள் 1900 இருந்ததை நூலாசிரியர் சுட்டுகிறார்.

நகருக்கு மட்டுமல்ல அதன் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு வரலாறும் காயங்களும் தழும்புகளும் இருப்பதை இந்நூல் பதிவு செய்கிறது .

பீட்டர்ஸ் சாலை பெரிய சாலை
இங்கே
வானைச் சுமக்கிற மாளிகை உண்டு
மாளிகை நிமிர மண்ணைச் சுமக்கும் கூலிகள்
அந்த சாலையின் ஓரத்தில் கோணிப்பை அடைப்புக்குள்
குடும்பமே நடத்தும் கோலங்கள் உண்டு
என்று கவிஞர் இன்குலாப் பின்னர் பாடிய தெரு 1789இல் இறந்த கேப்டன் தாமஸ் பெயரால் அமைந்தது என்கிறார்.

இப்படி ஒவ்வொரு தெருவாக அசை போடும் போது சென்னைவாசிகள் ஒவ்வொருவரும் அத்தெருக்களில் முன்னூறு வருடம் சுற்றிப் பார்த்த பரவசம் கிட்டும். பாரம்பரியத்தையும் , வளமான இயற்கைச் செல்வத்தை யும் கொண்ட கிராமங்களின் பாடல் பெற்ற தலங்களையும் இணைத்தே மதறாஸ் பட்டணம் என்பதை நூலாசிரியர் விளக்குகிறார்.

மீனவர் கிராமங்கள், விவசாயக்கிராமங்கள் என இருந்த கிராம சமூகமே உழைப்பாளர் வியர்வையில், இரத்தத்தில் மதறாஸ் பட்டணமாக உயர்ந்ததைஅதில் பல்வேறு இனத்தவர் பங்கைதமிழரின் தனித்துவமான உரிமையை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார் .

எனது நாற்பதாண்டு கால சென்னை வாழ்க்கையில் பட்டணத்தின் அத்துணை முக்கிய இடங்களையும் நிகழ்வுகளையும் தெருக்களையும் என் நினைவில் நிழலாடச் செய்த நூலாசிரியரின் அரும்பெரும் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இறுதியாக நூலாசிரியர் மொழியில் சொல்வ தானால், ‘வரலாற்றுக்கு முந்திய காலத்துப் பொருட்கள், அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டக் கருவிகள். சவ அடக்கம் செய்யும் பானைகள் போன்றவையும் மதறாஸ் பட்டணம், மக்கள் பட்டணமாகவே தொன்றுதொட்டு இருந்துவந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது 

சென்னப்பட்டணம் : மண்ணும் மக்களும் 
ஆசிரியர் : ராமச்சந்திர வைத்தியநாத்,வெளியீடு :
பாரதி புத்தகாலயம்,7,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை,சென்னை – 600 018.
பக்கம் ;644 , விலை : ரூ.600/
நன்றி : தீக்கதிர் ,புத்த்க மேசை , 23/04/2017.




0 comments :

Post a Comment