ஒரு சிறுகதையும் பெரும் நிஜமும்..

Posted by அகத்தீ Labels:

ஒரு சிறுகதையும் பெரும் நிஜமும்..

சு.பொ.அகத்தியலிங்கம்.

 சாமி ! எங்களுக்குச் சொந்தமாக இருந்த மலைகளையும் மலங்காட்டையும் அவங்களுக்குச் சொந்த மாக்கிட்டாங்க . புலைகுடியே அழிஞ்சுபோச்சு . மலையிலே புலையனுக்கின்னு ஒண்ணும் கெடையாது . இங்கேயாச்சும் கூழோ கழியோ கெடைக்கிது . தயவு பண்ணி என்னை வெளியே அனுப்பிடாதீங்க ..” என்று பழனி சொல்வதைக்கேட்டு நீதிமன்றமே ஸ்தம்பித்துப்போனது .
இது பிப்ரவரி மாதச் செம்மலரில் டி.செல்வராஜ் எழுதிய  சிறைஎன்ற சிறுகதையின் முத்தாய்ப்பு .இப்போது பழங்குடி மக்களை வேரோடு பிய்த்தெறியும் அரசின் வனக்கொள்கையைவிட சிறையே மேலென மலைமக்கள் வருந்தும் நிலையை இச்சிறுகதை நன்கு படம்பிடித்துள்ளது .
இது திடீர் நிகழ்வல்ல ; அற்றைத் திங்களில் அவ்வெண்நிலவில் எங்களுக்கு காடு சொந்தமாக இருந்தது ஆனால் வேந்தர்கள் அதை ஆக்கிரமித்துகொண்டனரே என உண்மையை உரைக்கும் புறநானூற்றுப் பாடலொன்றை சிறுகதையின் ஆரம்பவரிகளாய் சுட்டி ; ன்று தொடங்கி இன்றைக்கு வந்து சேர்ந்துள்ள இழிநிலையை இக்கதை பறை சாற்றுகிறது . இது கற்பனை அல்ல உறுத்தும் நிஜமே !
சுற்றுச்சூழல் ஆர்வலர் ராமச்சந்திர குஹா தன் சொந்த அனுபவத்தைக் கூறுகிறார் ; “ இப்போது என் சொந்தக் களத்திற்கு வருகிறேன் . தெற்கு கர்நாடகாவில் நாகர் ஹோலே வனப்பகுதியில் நாற்பது புலிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது . இந்தப் புலிகளைக் காப்பதற்காக இந்திய , வெளிநாட்டுப் பணம் கொள்ளையளவில் கொட்டப்படுகிறது . இப்போது நாகர் ஹோலெ சுமார் ஆறாயிரம் பழங்குடி மக்களின் வாழிடமாக உள்ளது . புலிகள் வாழ்வதைப் போலவே நினைவிற்கு எட்டாத காலந்தொட்டு இப்பழங்குடி மக்களும் இங்குதான் வசித்து வருகிறார்கள் . இவர்கள் காட்டைச் சீரழிப்பதாகவும் , வனவிலங்குகளைக் கொல்வதாகவும் எனவே பழங்குடி மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்கிறது மாநில அரசின் வனத்திறை . ஆனால் அதற்குப் பதிலாக மக்கள் வைக்கும் கோரிக்கை நியாயமானது . காலங்காலமாக தேனெடுப்பது , பழங்கள் சேகரிப்பது , அடுப்பிற்கான விறகு சேகரித்தல் , பறவைகளின் முட்டைகள் சேகரித்து விற்றல் என அவர்கள் வாழ்வாதாரம் காடு சார்ந்தது . தங்களிடம் சொந்தத் துப்பாக்கிகளும் இல்லை . காடுகளின் விழிம்பில் காப்பித் தோட்டம் பயிர் செய்வோர்  தான் நிறைய துப்பாக்கிகள் வைத்திருக்கின்றனர் . அவர்கள் தாம் சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடலாம் என்கிறார்கள் . அவர்களுடய இறுதியான கேள்வி ; காடுகள் புலிகளுக்காக மட்டும்தான் என்றால் காட்டின் நடுவே சங்கிலித் தொடர் போல் வன ஓய்வில்லங்களைக் கட்ட தாஜ் குழுமம் போன்றவைகளை அனுமதிப்பதேன் ? ”
இதே கேள்வியைத்தான் நீலகிரி கூடலூர் மக்களும் கேட்கின்றனர் . புலிகள் மட்டுமல்ல பழங்குடியின மக்களும் நினைவிற்கெட்டா காலந்தொட்டு அங்கே வாழ்வது இயல்பல்லவோ ? 

 மேற்குமலைத்தொடர் மராட்டியம், குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது.

உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன. எனவே இம்மலைத்தொடர் பாதுகாக்கப்படவேண்டுமென கூறுவதையும் , அதிக மழைப்பொழிவுள்ள இம்மலைத்தொடர் காக்கப்படுவது அவசியம் எனவும் கூறுவதை யாரும் மறுக்கவில்லை . ஆனால் அதனை எப்படி சாதிப்பது என்பதுதான் கேள்வி . கார்கில் குழுவும் , கஸ்தூரி ரங்கன் குழுவும் செய்துள்ள பரிந்துரைகள் பழங்குடி மக்களையும் பாதுகாக்காது ; வனத்தையும் பல்லுயிரியையும் பாதுகாக்காது ; மாறாக பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளைக்கே வழிவகுக்கும்.

பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010 மார்ச் 4 அன்று அமைத்தது. இந்தக்குழு தனதுஅறிக்கையை 2011 ஆகஸ்ட் 30 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை 2012 மே - 23ந்தேதி இணையதளத்தில் வெளியிட்டு, கருத்துக் களையும், விமர்சனங்களையும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. அரசால் பிராந்திய மொழிகளில் இவ்வறிக்கை 2014 வரை மொழிபெயர்க்கப்படவில்லை ஏன் ? தாய்மொழியில் உண்மையறியாமல் கருத்து சொல்ல இயலுமா ?

1700 பேர் மட்டுமே இவ்வறிக்கை தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதிலும் 30.34 சதவீத பேர் மட்டுமே அறிக்கைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதாவது சுமார் எழுபது சதம் பேர் எதிர்க்கும் நிலையில் மாதவ் காட்கில் அறிக்கையை  அமல்படுத்த வகையில்  டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை 2012 ஆகஸ்ட் 17 அன்று மத்திய அரசு அமைத்தது ஏன் ?

மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை சூழ்ந்த 41 சதவீத பகுதியில் 37 சதவீத பகுதியை சுலபமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதி என கஸ்தூரிரங்கன் குழு வரையறுத்துள்ளது. மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் முதல் மண்டலத்தில் 4156 கிராமங்கள் வருகின்றன. இதில் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய எட்டுமாவட்டங்களில் 135 கிராமங்கள் வருகின்றன.இந்தப் பகுதியில் புதிதாக பட்டா வழங்கக்கூடாது. புதிய விவசாய பகுதிகள் விஸ்தரிக்கக்கூடாது. புதிய குடியிருப்புகள் கட்டக் கூடாது. வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது, அதாவது, பள்ளி, மருத்துவ மனை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, போக்குவரத்து ஆகியவை கூடாது. வனநிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.வன உரிமைச் சட்டம் 2006ன் படி வன நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு குடும்பத்துக்கு 10 ஏக்கர் வரை வழங்க வேண்டும். ஆனால் கஸ்தூரிரங்கன் அறிக்கை அதற்கு தடைவிதிக்கிறது. தமிழ்நாட்டில் 1989ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பட்டா வழங்க தடைவிதிக்கப் பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில், வனநிலங்களில் பயிர் செய்து வரும் மக்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். இந்த கட்டுப் பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கிராமத்திலிருந்து 10 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொருந்தும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இவை வழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதாகாதா ?

 இங்கு வெறும் அழகியல் உணர்வால் இயற்கையை நேசிக்கும் நகரவாசியைவிட விவசாயிகளும் , பழங்குடிமக்களும் தான் இயற்கையை பொறுப்புடன் பராமரிப்பதில் மகத்தான உறுதிப்பாடு கொண்டவர்கள் என்பதை இவ்வுலகம் அறிந்து கொள்ளவேண்டும் என சிப்கோ உள்ளிட்ட வனப்பாதுகாப்பு இயக்கங்கள் கூறுவதை அதிகார மமதை மிக்க அரசு புரிந்துகொள்ளத் தவறுவது ஏன் ?

காட்டைப் பாதுகாப்பதற்காக வைக்கப்படும் அனைத்து வாதங்களும் பழங்குடி மக்களின் உரிமையை மறுப்பதற்காக எழுப்பப்படும் வாதமே ஆகும் என்கிறார் சுற்றுச்சூழலியலாளர் வெர்னியர் எல்வினால் . மேலும் அவர் வாதிடுவது சரிதானே ? காட்டு மரங்களை வெட்டிக் கடத்துவோரும் யானைதந்தம் புலித்தோல் கடத்துவோரும் பழங்குடி மக்களா ? அவர்களுக்கா அவ்வளவு வாகன வசதியும் தகவல் தொடர்பும் பணபரிவர்த்தனையும் அதிகாரவர்க்க கள்ளக்கூட்டும் இருக்கிறது ? அப்பாவி பழங்குடி மக்களா பணத்தில் புரளுகின்றனர் ? பங்களாக்களில் வசிக்கின்றனர் ? தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்க வைக்கின்றனர் ?

வனத்தை பாதுகாக்க மலையின் மக்களைவிட உரியவர் யார்  ? கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார் , “ தமது கைக் குழந்தையைப் போன்று பாதுகாத்து வைத்துள்ளனர் .” அந்த பழங்குடி மக்களை நம்பாமல் வேறு யாரை நம்புவது ? மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையில் அமைந்த இடதுசாரி அரசு அப்படித்தான் செயல் பட்டது . உள்ளூர் மலை மக்களையும் உள்ளாட்சியையும் நம்பியது . பழங்குடிகளையும் வனத்தையும் ஒருசேரப் பாதுகாத்தது . தொடர்ந்து வனப்பாதுகாப்புக்காக ஐ.நா. விருது வாங்கியது ; ராமச்சந்திர குஹா கூறுகிறார் ;

 மேற்கு வங்கத்தில் இணைந்த வன மேலாண்மைக்குக் கிடைத்த வெற்றி ஆய்வாளர்களுக்கும் , செயல்பாட்டாளர்களுக்கும் , மலை மக்கள் மீது அனுதாபத்துடன் செயல்படும் குடிமை ஊழியர்களுக்கும் ஊக்கமளித்தது . இப்போக்கு இந்தியா முழுமைக்கும் தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது . என்றாலும் இபோக்கு அதன் பிறப்பிடத்திற்கு வெளியே மிக நிதானமாகவே நடந்தது .”

இன்றும் திரிபுரா இடதுசாரி அரசு பழங்குடி நலனையும் வனத்தையும் ஒருசேரக்காப்பதில் முன்மாதிரியைப் படைத்து வருகிறது . இடது சாரிகளின்றி வேறு யாரால் இது சாத்தியமாகும் ? என்றும் மலைமக்களுக்கும் வனத்துக்கும் உற்ற தோழர்கள் இடதுசாரிகளே !

நன்றி : தீக்கதிர் 27-2-2014


0 comments :

Post a Comment