கட்டுடையும் ஆகமப் புதிர்கள்
சு.பொ.அகத்தியலிங்கம்.
“ஆகம விதிப்படி…..” என்கிற சொல் ஏதோ கட வுளே நேரில் வந்து கட்டளையிட்டது
போன்ற தோற்றம் தமிழக பொதுபுத்தியில் முயன்றுதூவப்படுகிறது . ஆகமும் , வேதமும்
ஒன்றல்ல என்கிற விளக்கம்கூட பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரியாது . தமிழில்
வழிபட உரிமை வேண்டும் , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் எனக்கருதுவோர்
,கோருவோர் பலரும்கூட ஆகமம் பற்றிய குறைந்த பட்ச விவரம் அறிந்திருக்க வாய்ப்பில்லை
.இதுதான் பிராமணிய சமஸ்கிருத ஆதிக்கத்தை திணிக்க விரும்புவோருக்கு சாதகமான
அம்சமாகிறது.இந்தக் கையறு நிலையைப் போக்கஒரு விவரக் கையேடாக “ ஆலயமும்ஆகமும்” என்ற
நூலைத் தந்திருக்கிறார் சிகரம் ச. செந்தில்நாதன் .
கோயில் கட்டும் முறை , வழிபடும் முறை , திருவிழா நடத்தும் முறை போன்றவற்றை
வரையறுத்துச் சொல்லும் நூலே ஆகமங்கள் . இதனை சிவனே அருளியதாக சைவர்கள்
நம்பிக்கை.மொத்தம் 28 ஆகமங்களென்றும் அதில் இப்போது மூன்றோ , நான்கோதான் நடப்பில்
உள்ளதென்றும் நூலாசிரியர் விவரம் தருகிறார் .
“சிவன் ஆகமங்களை வெளியிட்டபோது தன்னுடைய கோயில்கள் எப்படிக் கட்டப்பட
வேண்டும் என்றுதானே சொல்லியிருக்க முடியும் ? தமிழ்நாட்டில் சிவன் வணக்கத்திற்கு
முன்னாலேயே இருந்த முருகன் வணக்கத்திற்கு எப்படி ஆகமத்தைக் கூறியிருக்க முடியும்?
பிள்ளையார் வணக்கம் சிவன் வழக்கத்திற்குப் பின் ஏழாம் நூற்றாண்டில்தானே ஏற்பட்டது.
அதற்கும் சிவன் ஆகமம் கூறியிருக்க முடியுமா ?” என நூலாசிரியர் எழுப்பும் கேள்விகள்
பல பொய்மைகளைக் கட்டுடைக்கிறது .
வர்ணாசிரமத்தைக் காப்பது வேதம். ஆகமம் அதற்கு எதிரானது.உண்மையில் ஆகமம்
ஆரியருடையது அல்ல . திராவிடருடையது .இது போன்ற பல உண்மைகளை இந்நூலில்
அலசிக்காட்டியுள்ளார் ஆசிரியர் .
“வர்ணபேதம் காட்டும் வேதவழியும் , அந்த பேதம் இல்லாத ஆகமவழியும் ஒன்றாக
இணைந்ததால் ஏற்பட்டத் தீங்கைத்தான் இன்று ஆலயங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன”
என்று வேதனைப்படுவதோடு நில்லாமல் ; அது குறித்த விழிப்புணர்வை நூல் நெடுக
விதைத்துள்ளார் செந்தில்நாதன் .
தமிழர்களின் வேதம் அல்லது நான்மறை அறம் , பொருள், இன்பம், வீடு என்பன
.ஆரியர்களின் வேதம் இதுவல்ல.” என்று நூலாசிரியர் வாதிட்டு புதிய சிந்தனைக்கு
வழிகோலுகிறார் . மரத்தடியில்தான் வழிபாடு தொடங்கியது ; ஆகமத்தின் தொடக்கமும்
அங்குதான் என்கிறார்,
குமார தந்த்ரம் எனும் வடமொழிநூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .இது
எப்படி ஆரிய புரட்டாக முருகவழிப்பாட்டில் கலந்தது என்கிறார் .
“சஷ்டி பர்வ நவம்யாம் சத்வாத்ச்யாம் ப்ரதிபத் த்யாயிமாதா பித்ரோச்ச திவஸே
நாச ரேத்தந்த தாவாதம்!!”இதன் பொருள் “ சஷ்டி ,அமாவாசை ,பவுர்ணமி , நவமி ,துவாதசி ,
பிரதமை ,தாய் தந்தையர் சிரார்த்த தினத்திலும் பல் தேய்க்கக்கூடாது.”இப்படியெல்லாம்
சொல்லியிருக்கிறார் எனத் தோலுரிக்கிறார் .
இராமானுஜர் மோட்சம் கிடைக்க அவருக்குச் சொல்லப்பட்ட மந்திரத்தை அனைத்து
சாதியினருக்கும் சொன்னார் என்பது பரவலாக நம்பப்படுகிற பேசப்படுகிற செய்தி .இது
மெய்யா ? சந்தேகத்தைக் கிளப்புகிறார் இந்நூலாசிரியர் . பிரம்ம சூத்திரத்திற்கு
ராமானுஜர் எழுதிய ஸ்ரீபாஷ்யத்தில் பிராமணர்களுக்கு மட்டும்தான் மோட்சம் கிடைக்கும்
என்று எழுதியிருப்பதை மேற்கோள் காட்டுகிறார் .
‘ஆலய நுழைவும் ஆகமும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்’ என்ற அத்தியாயம் ஆகமம் தடுத்ததையும்
நீதிமன்றம் உடைத்ததையும் எடுத்துக்காட்டுகிறது . புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய
செய்தி இது . அதுபோலவே அடுத்த அத்தியாயம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது
குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாரத்தைச் சொல்லுகிறது .மகராஜன் குழு அறிக்கை ,
ராஜன் குழு அறிக்கை போன்றவை பயனுள்ள பின்னிணைப்பு.
இந்நூல் நாத்திக நிலையில் எழுதப்பட்டதல்ல ; மாறாக தமிழில்வழிபாடு , அனைத்து
சாதியினரும் அர்ச்சகராதல் போன்ற ஜனநாயக நோக்கங்களுக்காக ;கடவுள்
நம்பிக்கையுள்ளோரையும் திரட்டும் பொருட்டு - தமிழக சைவ , வைணவமரபின் சில கூறுகளை
முன்னிறுத்தியும் - அதனை மீறும் சிவாச்சாரியார் குறித்து விழிப்புணர்வு ஊட்டவும்
எழுதப்பட்டதே !
“பொருளாதார ரீதியாக லாபம் இருந்தால் ஆகமவாதிகள் ஆகமத்தைத் தூக்கி
புழக்கடையில் வைப்பார்கள் . அப்படி லாபம் இல்லை என்றால் ஆகமத்தைத் தூக்கி
முன்வாயிலில் வைப்பார்கள்” என்று நூலில் ஓரிடத்தில் ஆசிரியர் சொல்லுகிறார் .
பிராமணியமும் சமஸ்கிருதமும் ஆதிக்கம் செய்ய பின்னப்பட்டுள்ள சதிவலையை
அறுக்க இந்நூல் பெரிதும் உதவும் கருத்தாயுதமாகும் என்பதில் ஐயமில்லை .
ஆலயமும் ஆகமமும்,ஆசிரியர் :
சிகரம் ச. செந்தில்நாதன்,
வெளியீடு : சந்தியா பதிப்பகம் ,
புதிய எண் 77 , 53 வது தெரு ,9வது அவென்யூ,
அசோக்நகர், சென்னை- 600 083.
பக் : 224 , விலை: ரூ.195.
0 comments :
Post a Comment