மதச் சடங்குகளில் பெண்கள் அதிக அக்கறை காட்டுவதேன் ?

Posted by அகத்தீ Labels:








மதச் சடங்குகளில் பெண்கள்
அதிகஅக்கறை காட்டடுவதேன்?

சு.பொ.அகத்தியலிங்கம்


மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்என நம்முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். மனசு அலைபாயாமல் தடுக்க பக்தி, தியானம் தேவை அல்லவா ?
மதம் பெண்களை இழிவு படுத்துவதாய்க் கூறுகிறீர்கள்; ஆனால் அந்த மதச் சடங்குகளில் மிகுந்த ஈடுப்பாடு காட்டுவதும், வழிபாட்டில் அதிக அக்கறை காட்டுவதும் பெண்களாகவே உள்ளனர். அப்படியாயின் உங்கள் குற்றச்சாட்டு பொய்யென்று ஆகிவிடவில்லையா?


 மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்என நம்முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். மனசு அலைபாயாமல் தடுக்க பக்தி, தியானம் தேவை அல்லவா?


மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்.” மெத்தச் சரி! எப்படி? அறத்துக்கு விளக்கம் சொல்ல வந்த வள்ளுவர்,

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிறஎன்றார் .”

அறம்ணா என்னன்னு அலட்டிக்காதீங்கப்பா….. மனசுல கள்ளம் கபடம் இல்லாம சுத்தமா இருக்கிறதுதானப்பா அறம்,” என்றார் . சரிதான் . மனதுக்கு முக்கியப் பங்கிருக்கு . மன உறுதி , மன வலிமை , மன ஈடுபாடு இவை தனி மனித வெற்றிக்கும் நிம்மதிக்கும் மிக முக்கியம்.

மனதொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை

-என்று சொன்னதும் வள்ளுவரே ! மனமொன்றி வாய்மைவழி ஒருவன் நிற்பின் ; அவன் தானம் தருமம் செய்வாரெல்லோரையும் விட உயர்வானவன் என்று எல்லாவற்றையும் விட மனம் வாய்மை என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர் அவர்.

உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கி விடும்

-ஊக்கமுடைமை எனும் அதிகாரத்தில் வரும் இந்தக் குறளில் ஊக்கம் என்ற சொல்லுக்கு பதில் உள்ளம் என்றே சொல்லியுள்ளதுடன், ஊக்கம் உடைமையே நிலையான செல்வம் எனவும் மற்றவை எல்லாம் போய்விடும் என்றும் சொல்லுகிறார்.

அஷ்ட லட்சுமிகளில் எந்த லட்சுமியை இழந்தாலும் தைரிய லட்சுமியை மட்டும் இழக்கக் கூடாது என்பது நாட்டு வழக்கு. ஏனெனில் மனதைரியம் இருப்பின் இழந்ததைப் போராடி மீட்கலாம் . இப்படி ஆக்கப்பூர்வமாய் மனவலிமைக்கும் உறுதிக்கும் வள்ளுவனைப் பின்பற்றி முக்கியத்துவம் கொடுப்பதில் பிழையே இல்லை. தேவையும் கூட. வாழ்வியலைச் சொல்லும் வள்ளுவ வழி உவப்பானதே .
ஆனால் , பகவத் கீதை காட்டும்ஸ்திதப் பிரஞ்ஞன்இப்படிப் பட்டதா?

பார்த்தா! ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்கள் அனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின் அப்போது ஸ்திர புத்தியுடையோன் - ஸ்திதப்பிரஞ்ஞன் என்று கூறப்படுவான்” -( கீதை 2.55)“

ஆமை தன் அவயங்களை இழுத்துக் கொள்வது போல், எப்புறத்தும் விஷய யதார்த்தங்களினின்று புலன்களை ஒருவன் மீட்க வல்லவன் ஆயின் அவனறிவே நிலைகொண்டது.”

இது மனம் சலனமற்றிருப்பது அல்ல; ஆன்மீக தன்னகங்காரம் . மாறாக தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது எனப் பார்ப்பதும் கேட்பதும் பேசுவதும் மனிதநேயமிக்க ஒவ்வொருவரின் கடமையாகும். அத்தகையோரால்தான் உலகில் நல்லன நடந்து கொண்டிருக்கிறது . தியானம், பக்தி எல்லாம் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வம் சார்ந்தது.

முந்தைய ஒரு கேள்விக்கான பதிலில் சுட்டிக்காட்டியவீரம் விளைந்ததுஎன்ற நாவல் போன்ற படைப்புகள், லட்சியவாதிகளின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு மனவலிமை தரும். வள்ளுவன் வழியின் மனசுக்கண் மாசு இலனாய் இருப்போம் .



மதம் பெண்களை இழிவு படுத்துவதாய்க் கூறுகிறீர்கள்; ஆனால் அந்த மதச் சடங்குகளில் மிகுந்த ஈடுப்பாடு காட்டுவதும், வழிபாட்டில் அதிக அக்கறை காட்டுவதும் பெண்களாகவே உள்ளனர்.அப்படியாயின் உங்கள் குற்றச்சாட்டு பொய்யென்று ஆகிவிடவில்லையா?


மதங்கள் பெண்களை இழிவு படுத்துவதும் மெய்யே ! மதச் சடங்குகளில் , சம்பிரதாயம் , வழிபாடு இவற்றில் பெண்கள் அதிகம் ஈடுபாடு காட்டுவது அதனினும் மெய்யே! இது எமது நிலையை உறுதிப்படுத்துகின்றது என்பதே மெய்! குழப்பமாக இருக்கிறதா?
 இதோ விளக்கம்.மதம் பெண்களை சமையலறைக்குள்ளும் , படுக்கை அறைக்குள்ளும் அடைந்து கிடக்கவே சொல்கிறது .

ஆதியில் தாய்வழி சமுதாயமும், தாய் தெய்வங்களும் சமூகத்தின் மையமாய் இருந்த நிலை மாறி ஆண் ஆதிக்கமும் , ஆண் தெய்வங்களுமாய் ஆண் மைய சமூகம் உருவெடுத்தது முதல் இந்நிலையே.

பெண் அடிமைத்தனம் சமூக ஒழுங்காக்கப்பட்டது .அதிர்ந்து பேசக்கூடாது. ‘பொம்பள சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சுஎனச் சிரிப்புக்கும் கட்டுப்பாடு

.“தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்எண்ணுங்காலை கிளத்துக்கு இல்லை”-என்பது தொல்காப்பியம். அதாவது தன் ஆசையை தன் கணவன் முன் சொல்லக்கூட பெண்ணுக்கு உரிமை மறுக்கப்பட்டது.

பொது இடங்களில், பொது சபைகளில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்பட்டனர். பொது அறிவுக்கான தேடலும் வெளியும் கூட அவர்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.
ஆண்கள் சுதந்திரமாய் உலவும் அனைத்து பொது வெளிகளும் பெண்களுக்கு மறுக்கப்பட்டன .இச்சூழலில் ஒடுக்கப்பட்ட பெண்களின் ஏக்கப் பெருமூச்சை வெளிப்படுத்கக்கூடிய இடம் கோவில்கள் மட்டுமே என்றானது .

அங்கே பேசாத, கேட்காத, உணராத கடவுளிடம் தங்கள் வலியை வேதனையைக் கொட்டித் தீர்ப்பது மட்டுமே அவர்களின் ஒரே வடிகாலானது. பென்கள் மதச்சடங்குகளிடம் மண்டியிட்டுக் கிடப்பதற்கும் ஆணாதிக்க சமூகமே காரணம். எந்த மதம் பெண்களை இரண்டாந்தர குடிமக்களாய் ஆக்கியதோ, அதே மதத்தின் காலடியில் கும்பிட்டுக் கிடக்க அவர்களைப் பழக்கப்படுத்தி, அதன் மூலமாக மதமும் மதத்தின் வழி ஆணாதிக்கமும் தங்கடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டன என்பதே உண்மை .

இன்றைக்கும் ஆட, பாட, தன் சந்தோஷத்தையோ துக்கத்தையோ வெளிப்படுத்த, எல்லாவற்றிலும் ஆணோடு பெண்ணும் சரிநிகராய் களத்திலும் வீதியிலும் பொதுவெளியிலும் நிற்க , செயல்பட பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டதா? ஆடைக் கட்டுப்பாடு, ஒழுக்கக் கட்டுப்பாடு எல்லாம் இன்றும் பெண்களுக்கே பெரிதும் விதிக்கப்படுகிறது.

இந்நிலை உடையும் வரை சடங்கு, சம்பிரதாயம் இவற்றிலிருந்து பெண்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல .விளக்கு பூஜை, விரதம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலம் பெண்களை அதே போதையில் தொடர்ந்து இருக்கச் செய்திட மதவெறிக் கூட்டம் முயல்கிறது.
இதற்கு எதிராகப் பொதுப் பண்பாட்டு வெளியை உருவாக்கி அதில் பெண்களை ஈடுபடுத்தும் ஆகப்பெரிய சமூகக்கடமை, சவால் மிக்கப் பணி நம்முன் உள்ளது என்பதையே இக்கேள்வி உணர்த்துகிறது. இக்கேள்வியும் அதன் தேவையை வலியுறுத்துகிறது.

கீழே உள்ள பாலபாரதி கவிதையை அசை போடுங்கள் நான் சொல்வது விளங்கும்:

என் அன்பு அம்மா
அலுவலகம் முடிந்ததும்
அர்ஜூனன் கை அம்பாக
வீடுவந்து சேர எனக்கு
விருப்பம் இல்லை!

எல்லா சேனல்களாலும்
கொட்டப்படும்
சினிமாகுப்பைகளை எத்தனை நாள்தான்
பார்ப்பது?
சிலமணி நேரங்களாவது
என் சிந்தனைக்காக
நூலகத்தில் செலவழிக்கப்
போகிறேன்

பாதுகாப்புக் கைதியைப் போல்
என்னைக் கேயிலுக்கு அழைத்துச்
செல்வாயே
நாளை முதல் நானே தனியாக
சென்று வருகிறேன் அம்மா

இரவு உணவை
நீயே தயார் செய்துகொள்
நடைபாதைக் கடையில்
விதவைப் பெண்ணின்
வியாபாரத்தில்
என்எளிய உணவை நானே
முடித்துக் கொள்கிறேன்

எட்டரை மணிக்கு மேலாகியும்
என்னைக் காணாமல்
அப்பா ஆவேசப்படுவார்
ஊருக்கு வெளியே உள்ளஒற்றைப்
பாலத்தின் மீதமர்ந்துஎன்
இலக்கிய நண்பர்களோடுஉரையாடிக் கொண்டிருப்பேன்
என்று கூறிவிடு

போருக்கு கிளம்பிவிட்ட
குதிரைகளின் குளம்பு ஓசையை
நீ கேட்டதுண்டா
இரவு நேர கொத்துப்பரோட்டாக்
கடைகளில்
கிளம்பிவிடும் ஓசையைக்
கேட்டுவந்து சொல்கிறேன்

நடுநிசி தாண்டிய நேரத்தில் நாய் குரைத்தால்
நான் வருகிறேன் என்பதை உணர்ந்து கொள்

கோடைப் புழுக்கத்தில்
கொட்டும் வியர்வையில்
அறைக்குள்ளே என்னால்
அடைந்து கிடக்க முடியாது
வேப்பமரக் காற்றில்
வெளித்திண்ணையில் படுத்துறங்கும்
உன் இளைய ராஜ குமாரனை
எழுப்பி விடு
சூரியன் எழுப்பும்வரை
என்னைக் கொஞ்சம் சுகமாகத் தூங்கவிடு!

காலையில் கண் விழித்ததும்
தெருமுனைக் கடை சென்று
தேநீர் அருந்தி
எழுமணி செய்தி கேட்டு
எல்லா நாளிதளும் வாசித்து
அவசரமில்லாமல் குளித்து
அலுவலகம் செல்ல வீடு வருவேன்


இப்படிச் சொன்னதும்
அம்மா அதிர்ந்தே போனார்
ராவுத்தர் பிச்சையிடம் மந்திரித்து
தாயத்து கட்ட வேண்டும்
பக்கத்துவீட்டு மாமியிடம்
பதற்றத்தோடு சொன்னாள்
மனநல மருத்துவரிடம்
அழைத்துப் போக
தயாரானார் அப்பா
காலாகாலத்தில் யார் தலையிலாவது
கழுதையைக் கட்டிவிடுங்கள்
அண்ணன் அலோசனை கூறினான்
பின்னே
நான் ஒரு பெண் அல்லவா?”

இந்தக் கவிதைநான் ஒரு பெண்ணல்லவா!” -என்ற தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் கவிஞர் பாலபாரதி எழுதியது.

இது திருமணம் ஆகக் காத்திருக்கும் ஒரு பருவப்பெண்ணின் மனோநிலையில் எழுதப்பட்டுள்ளது . பெண் இழந்துள்ள சுதந்திர வெளி இதில் தெரிகிறது. அதன் வலியும் இதில் தெறிக்கிறது . திருமணமான பெண்ணின் வெளி இன்னும் சுருங்கும் இன்னும் வலி அதிகரிக்கும். அவர்களின் ஒரே பொதுவெளி கோயிலென்று ஆனது அவர்களின் குற்றமா? ஆணாதிக்கம் திணித்ததா? யோசியுங்கள்.

நன்றி : வண்ணக்கதிர் . தீக்கதிர் , 20 -03-2017


0 comments :

Post a Comment