மணமுறிவின் பின்னே…

Posted by அகத்தீ Labels:

 


மணமுறிவின் பின்னே…


 

 “காதல் திருமணங்களில் மண முறிவு அதிகம் இருப்பது ஏன் ? அப்படியாயின் ஏற்பாட்டுத் திருமணங்களே மேலானதா ?”  - இப்படி ஒரு கேள்வியை வாட்ஸப்பில் ஒரு இளைஞர்  அனுப்பி இருந்தார் .அவருக்கு நான் அனுப்பிய பதிலை பொது வெளியிலும் இப்போது பகிர்கிறேன்.

 

காதல் திருமணங்களில்தான் மணமுறிவு அதிகம் நடப்பதாக அண்மையில் ஓர் நீதிபதி சொன்னார் . அவர் அதற்கு எந்த புள்ளிவிவர ஆதாரமும் தரவில்லை . நீதிபதி சொன்னதால் அதை உண்மை என்றே கொண்டாலும் ; அந்தத் தகவல் சரியான செய்தியைத்தானே உரக்கச் சொல்கிறது .

 

ஏற்பாட்டு திருமணத்தில் மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையோ விருப்பமோகூட பெண்ணுக்கு உண்டென அனுமதிக்காத சமூகத்தில், அவளால் மணமுறிவைப் பற்றி யோசிக்கவாவது முடியுமா ? முடியாது .

 

மாறக , எங்கே பெண் விரும்பி தன் இணையை சுதந்திரமாகத் தேர்வு செய்கிறார்களோ அங்கேதான் மனமொத்து வாழமுடியாதபோது மணமுறிவையும் சுதந்திரமாகக் கோர முடிகிறது . ஆகவே நீதிபதி சொன்னதை சரியாகவே புரிந்து கொள்வோம்.

 

 

ஏற்பாட்டுத் திருமணங்களில் பெரும்பாலோர்;  சமூக கட்டாயம் ,குடும்பக் கட்டாயம் வேறு போக்கிடமில்லா கையறு நிலையிலேயே திருமண பந்தத்தில் ஒட்டிக் கிடக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து அல்ல அல்ல இருந்து தொலைக்கிறார்கள் .

 

பெண்களின் மனதை அறிய ஓர்  “ஆர்ட்டிபீசியல் இண்டலின்சா மெஷின் ” செயற்கை நுண்ணறிவு இயந்திரம் கண்டுபிடிக்கப் படுமானால் ஏற்பாட்டுத் திருமணங்களிலும் பெண்களின் அடிமனதில் அலையடிக்கும் வெறுப்பு வெளிப்படும் . திருமண முறிவு தேவைப் படுவதை உணரலாம்.  ஏற்பாட்டுத் திருமணங்களிலும் பெரும்பாலான திருமணங்கள் முறிந்து போகும் என்பது இருநூறு விழுக்காடு மெய்யே !

 

 

ஒவ்வொரு மணமுறிவின் பின்னாலும்  வலியும் ரணமும் கண்ணீரும் நிச்சயம் இருக்கும் ; அதுவும் பெண்ணின் வலி கடுமையானது . பாலின சமத்துவம் சமூக உளவியலாய் கருத்தியலாய் கவ்வாமல் இந்த வலியை உணர்வது எளிதல்ல .

 

யார் குற்றவாளி என பட்டிமன்றம் நடத்தலாம் . தீர்வு கிட்டாது . ஆண் ,பெண் .இருபக்கம் என யார் பக்கம் குற்றம் இருப்பினும் அதனை துருவினால் ஆணாதிக்கம் ஓங்கி நிற்பதைக் காணலாம் .ஆணாதிக்கப் பார்வை ஆணிடம் மட்டுமல்ல பெண்ணிடமும் உண்டு .

 

 

ஐரோப்பிய சமூகம் ஓப்பன் சொசைட்டி அதாவது சுதந்திர சமூகம் அங்கே தன் விருப்பை வெறுப்பை முகத்துக்கு நேர சொல்லும் பண்பாடு உண்டு .ஆனால் நேர் எதிராக ஆசிய சமூகம் குறிப்பாக  இந்திய சமூகம் அடிப்படையில் ஓர் மூடுண்ட சமூகம் இருண்மை சமூகம் ஹிப்போகிராட் சொசைட்டி என்பதை மனதில் நிறுத்தி பிரச்சனையைப் பார்க்க வேண்டும். ஆண்மைய சமூகம் இது என்பதை மனதில் நிறுத்தி பார்க்க வேண்டும்.

 

அடுத்து ,இப்போது திருமணம் / குடும்பம் என்கிற அமைப்பையே நொறுக்க வேண்டும் என்கிற குரல் வலுக்கத் தொடங்கி இருக்கின்றன . ஏன் ? குடும்பத்துக்குள் சமத்துவமும் சுதந்திரமும், ஜனநாயகமும்  இல்லாத போது இந்தக் கூண்டை உடைத்து வெளியேறத் துடிப்பது இயல்பே .

 

அதை தவறென்றும் சொல்லிவிட முடியாது .ஆயினும் இந்த குடும்ப அமைப்பை நொறுக்கி விட்டு அந்த இடத்தில் அமைக்கப் போவது எது ? இக்கேள்விக்கு பதில் இல்லை .

 

தெளிவான புரிதலின்றி குடும்ப அமைப்பை நொறுக்கினால் அவ்விடத்தில் மோசமான அராஜகமே தலைதூக்கும். அது பெண்ணினத்துக்கும் பேரழிவையே கொண்டுவரும் . எனவே சரியான மாற்றை நோக்கிய உரையாடல் வழி தேடலைத் தொடங்க வேண்டும் .

 

பாலின பேதம் நொறுக்கிய சமத்துவம் ,சுதந்திரம்,ஜனநாயகம் மிக்க உறவை நோக்கி ; அதற்கொப்ப சமூகச் சூழலும் சமூக உளவியலும் கட்டி எழுப்பப்பட்டு ;அதன் விரிவாக்கமான குடும்பம் நோக்கி நகர்தலே தீர்வாக இருக்கக்கூடும்.

 

இவை எல்லாம் பேசவதற்கு எளிது . எழுதுவதற்கு எளிது .ஆனால் செயலுக்கு வர கடும் போராட்டம் ,நெடிய போராட்டம் ,பலகட்டப் போராட்டம் என பலபடிகளில் ஏறி இறங்கி விழுந்து சிராய்ப்புகள் காயங்களோடுதான் முன் செல்ல முடியும்.

 

காதல் திருமணம் அதன் முதல் படியே .இன்னும் நூறுபடி ஏற வேண்டும் என்கிற பார்வையோடுதான் முதல் படியில் காலடி வைக்க வேண்டும்.ஆகவே காதல் செய்வீர் ! முதல்படியில் ஏறாமல் நூறாவது படிக்கு போக முடியுமா ?

 

இன்று அமலில் உள்ள குடும்பம் , ஒரு தார மணம் இவை எல்லாம் எப்படி கடும் போராட்டங்களூடே தேவையின் நிர்ப்பந்தத்தில் முகிழ்த்தது என்பதை மிகச் சரியாக உள்வாங்காமல் தூய காதல் ,புனிதக்காதல் , குடும்ப ஒழுக்கம் ,குடும்ப சமத்துவம் என்றெல்லாம் பேசுவது இயலாது .

 

ஏங்கெல்ஸ் எழுதிய “ குடும்பம் – தனிச் சொத்து –அரசு ஆகியவற்றின் தோற்றம் “ எனும் நூலை வாசித்து முழுமையாக உள்வாங்கி - மானுடவியலை இயங்கியல்  பார்வையில் உள்வாங்கி ; உரையாடலைத் தொடங்கினால் , ஓரளவு புரிதல் மேம்படலாம்.

 

இவை என் புரிதலே . உரையாடலே சரியான புரிதலுக்கு இட்டுச் செல்லும் .

 

முதலில் வாசிப்பீர் !

குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்

பிரெடெரிக் எங்கல்ஸ்

பாரதி புத்தகாலயம்

 

 

 

சுபொஅ.

1/6/2023.

 

 

 

0 comments :

Post a Comment