உங்களுக்கு ஒரு உண[ர்]வுப் போட்டி .
போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் அறுபது
வயதைக் கடந்தவராக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை .
1] உங்களுக்கு
பத்து வயதாக இருந்த போது உங்க அம்மா செய்து கொடுத்த பலகாரங்கள் ,உணவு வகைகளைப் பட்டியலாக
எழுதுங்கள் .
2] உங்களுக்குத்
திருமணமான பின்பு சாப்பிட்ட உணவு வகைகளைப் பட்டியல் போடுங்கள் .
3] இன்று
உங்கள் வீட்டில் தயாராகும் உணவு வகைகளைப் பட்டியல் போடுங்கள்.
4] இப்போது
உங்கள் பிள்ளைகள் ஹோட்டலுக்கு அழைத்துப் போகும் போது ஆர்டர் செய்யும் உணவுகளின் பெயர்களையாவது
நீங்கள் முன்பு கேட்டதுண்டா ?
5]உங்களின்
பேரப்பிள்ளைகளின் விருப்ப உணவுகள் இப்போது என்னவாக இருக்கின்றன ?
இந்தக் கேள்விகளுக்குள்
ஆழ்ந்து பதில் எழுதினால் உங்கள் உணவுக் கலாச்சாராம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் எந்த அளவு
விரிந்து பரந்து வளர்ந்திருக்கிறது என்பது மிகத் தெளிவாகப் புரியும் .
ஏன் தயிர்
சோறு கூட தயிர்சாதமாக கர்ட்ரயிஸாக [curd rice] மாறிவிட்டதே !வெறும் பெயர் மாற்றம் மட்டுமா
? என் அம்மா செய்த தயிர் சோறு வேறு .இன்று நான் சாப்பிடும் கர்ட்ரயிஸ் வேறு .இதனை எப்படி
தயார் செய்வதென ஒரு யூ டியூப்பில் ஒருவர் விவரித்துக் கொண்டிருப்பதை நான் நேற்று பார்த்தேன்.
வெள்ளரிக்காயும் கேரட்டும் மாதுளம் பழமும் தயிர் சோறில் எப்போது கலந்தது ? மேலே காரப்பூந்தியை
எப்போது தூவினார்கள் ?
ஐம்பது ஆண்டுகளுக்குள்
இவ்வளவு மாற்றம் எனில் ஐநூறு ஆண்டுகளில் , ஆயிரம் ஆண்டுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளில்
எவ்வளவு மாற்றங்கள் வந்திருக்கும் ? அண்டை அயலார் , வந்துபோனோர், போய் வந்தோர் என ஒவ்வொருவரும்
கொண்டும் கொடுத்தும் நம்மிடம் கொண்டு சேர்த்தன எவ்வளவு ? எது நமது கலாச்சார உணவு ?
உணவு ,உடை
, பழக்க வழக்கங்கள் , விழாக்கள் ,கொண்டாட்டங்கள் ,நாகரீகம் எதிலும் தூய்மை வாதம் என்பது
வெறும் பேச்சே ! மாறும் .மாறிக்கொண்டே இருக்கும் . நல்லனவும் அல்லனவும் அப்படித்தான்.
சாஸ்திரம்
,சம்பிரதாயம் என்பதெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சு . வீட்டு சாமி அறையில் ஸ்டிக்கர்
கோலமும் , சாமிகளுக்கு ஸ்டிக்கர் பொட்டும் , ,அலெக்ஸாவை காயித்திரி ஜெபம் சொல்லச் சொல்வதும்
வேறு என்னென்னவோ மாற்றம்…. சாமி கோபிக்கவே இல்லையே . ஏற்றுக்கொண்டாரே !
நான் ஐந்து
வயதில் கும்பிட்ட சாமியும் கோயிலும் அப்படியேவா இருக்கிறது ? உள்ளுக்குள் எவ்வளவு நவீனங்கள்
? எவ்வளவு வியாபாரங்கள் ? எவ்வளவு விளம்பரங்கள் ? வழிபட எவ்வளவு விலை நிர்ணயங்கள்
? இவை எல்லாம் எந்த சாஸ்திர சம்பிரதாயங்கள் அடிப்படையில் ஆனவை ?
வங்கியோ கேஎப்சியோ
கிளைகள் திறப்பதுபோல் திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஊருக்கு ஊர் கிளை திறக்கும் கார்ப்பரேட்
வியாபாரம் எந்த சாஸ்திர சம்பிரதாய அடிப்படையிலானது ? மலைக்காளியாய் இருந்தவளைத்தான்
முருகனாக்கி பின் பெருமாளாக்கினார் என்பதும் மெய்யான வரலாறு அல்லவா ? திருப்பதி லட்டும்கூட
ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவு மாறிவிட்டது ? சுவையும் சேர்மானமும் தயாரிக்கும் முறையும்
மாறிவிட்டனவே !
தங்கள் வசதிக்கும்
தங்கள் வியாபாரத்துக்கும் கோவிலை .விழாவை ,பூஜையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளுபவர்கள்
; கருவறையில் இன்ன சாதிதான் பூஜை செய்ய வேண்டும் என முரண்டு பிடிப்பது ஏன் ? இந்த சாதி
மட்டும்தான் இந்த சாமியை வழிபட வேண்டும் இந்த இந்த சாதிகள் கிட்டவே வரக்கூடாது என்பது
என்ன நியாயம் ? யானைக்கு எந்த நாமம் போடுவதென முட்டி மோதுவது என்ன நியாயம் ? இந்த மொழியில்
வழிப்பட்டால்தான் சாமி ஏற்பார் என்பது என்ன நியாயம் ?
மீண்டும்
சொல்கிறேன் , தங்கள் வசதிக்கும் தேவைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப உணவு ,உடை ,கொண்டாட்டம்
,திருவிழா எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள் ! தப்பே இல்லை . இனி டிஜிட்டலில்
சாமி கும்பிட்டாலும் தப்பில்லை ..
ஆனால் நனைந்த
ஈரக் கம்பளியை தோளில் சுமந்துகொண்டு மழையில் நனைவது போல் சாதியை மதத்தை மூடநம்பிக்கைகளை
, தூய்மைவாதத்தை சுமந்து திரிவது என்ன நியாயம் ? என்ன நியாயம் ?
சுபொஅ.
12/06/2023.
0 comments :
Post a Comment