வாழ்ந்ததின் எச்சங்கள்! வரலாற்றின் பக்கங்கள் !

Posted by அகத்தீ Labels:

 


வாழ்ந்ததின் எச்சங்கள்!

வரலாற்றின் பக்கங்கள் !

 

கீழடிக்கு போக வேண்டும் என்கிற வெகுநாள் எண்ணம் . 21 ஜூன் 2023  புதன் கிழமை அன்று கை கூடியது . நானும் இணையர் சி.கலாவதியும் சென்று வந்தோம் . திருப்புவனம் கட்சித் தோழர் சின்ன கருப்பன் , கீழடி அகழ்வாய்வில் உழைக்கும் தோழர் கதிரேசன் ,மற்றும் ஓட்டுநர்தோழர் கார்த்திக் ஆகியோர் உடன் உதவி வழிகாட்டினர் .மதுரை தீக்கதிர் தோழர்கள் ஒத்துழைப்புடன் இப்பயணம் மகிழ்வோடும் மனநிறைவோடும் நடந்தேறியது . அனைவருக்கும் மிக்க நன்றி!!!

 

கண்காட்சி , ஆய்விடங்கள் ,புதிய ஆய்விடம் கொந்தவை என எல்லாம் சுற்றிவந்தோம் . வியப்பும் பெருமிதமும் பொங்க கீழடியில் காலடி வைத்து தொல்பெருமையோடு தோளை நிமிர்த்தினோம் .

 

கண்காட்சியில் சங்க இலக்கிய வரிகளோடு செய்திகளைக் தரவுகளைக் காட்சிப் படுத்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது . ஆதிச்ச நல்லூர் ,பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு  தொல் பெருமைகளை இணைத்து  நம் தொல் பாரம்பரியத்தை நச்சென பதிவு செய்திருக்கிறார்கள்.

 

 

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய கண்காட்சி. ஒவ்வொரு இந்தியனுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய செய்தி .

 

சில கருத்துகள் :

Ø  கீழடி குறித்த தமிழ் /ஆங்கிலப் புத்தகங்கள் ஸ்டாக் இல்லை என்கின்றனர் .அரசு கவனிக்க வேண்டும்.

Ø  கீழடி குறித்தும் தொல்லியல் ஆய்வு குறித்தும் நம் பண்பாட்டுப் பெருமிதம் குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தக கடை ஒன்று உள்ளே அமைக்கலாம் .

Ø  வடநாட்டவருக்கு  இலவசமாக விநியோகிக்க இந்தியில் ஒரு சிறு வெளியீடு ஏற்பாடு செய்யலாம் . ஏனையோருக்கு தமிழ் / ஆங்கிலத்தில் விநியோகிக்கலாம்.

 

 

வாழ்ந்ததின் எச்சங்கள்!

வரலாற்றின் பக்கங்கள் !

 

 

அடி முடி கண்டதாய் பொய் உரைத்த

பன்றியையும் தாழம்பூவையும்

புராணப் புளுகாய் சாணியாய் மூளையில்

அப்பி வைத்த சனாதனமே !

 

கீழடி கண்டோம் – எம்மைக்

கிள்ளிப் பார்த்தோம்

உறைகிணறு ,முதுமக்கள் தாழி,

அணிகலன்கள், நாணயங்கள் ,

ஆயுதங்கள், ஆணிகள்

இரும்பு .எலும்பு,செங்கல் ,

சுடுமண் சிற்பம்,செங்கல் வீடுகள்

கழிவுநீர் வடிகால், மண் குழாய்கள்

 ஒவ்வொன்றும் தொல்பெருமை

பறை சாற்றி நின்றது !

 

எம் வேரின் தூரில் ஒட்டி இருக்கிறது

மூவாயிரம் ,நாலாயிரம் ஆண்டுகள்

நாகரீகத்தின் அழுத்தமான தடங்கள் !

எம் அடியும் முடியும் சனாதனத்தின்

தலையில் இடியாய் இறங்கும்.

தோண்டத் தோண்டத் தொல் பெருமை

தோளை நிமிர்த்தும் எம் தமிழர் !

இதிகாசக் கதைகளல்ல எம் முன்னோர்

வாழ்ந்ததின் எச்சங்கள்!வரலாற்றின் பக்கங்கள் !

 

குறிப்பு :

பட்டை போட்டு பொட்டு வைத்த போலீஸ்காரர் ஒருவர் ; வருகைதருவோர் பின்னாடியே வந்து தொன்மையின் மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் . ஊழியர்கள் அன்போடு பணியாற்றுகின்றனர் . அவர்களை வழிகாட்டியாக [கைடாக ] மாற்றும் அளவு பயிற்சியில் இன்னும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 0 comments :

Post a Comment