சொல்.33

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .33 [ 1/10/2018 ]

பிக்னிக் [ picnic ] போவது ஒரு நல்ல பண்பாட்டு முயற்சி . பிக்னிக் என்பதற்கு பொருத்தமான தமிழ்ச் சொல் எது ? இதையும் இன்பச்சுற்றுலா என்றே அழைக்கின்றனர் . பிக்னிக் எனினும் பிழையில்லை அல்லவா ?

குடும்ப உறவுகளை அழைத்துக்கொண்டு குலசாமி கும்பிடப் போவது பிக்னிக் ஆகாது .ஏனெனில் அதில் சாதி உறவும் , சடங்குகளுமே மேலோங்கி நிற்கும் .

ஐந்தாறு குடும்பத்தினர் சாப்பாட்டு மூட்டையுடன் மனைவி , குழந்தைகளோடு போனால்தான் அது பிக்னிக் . சாதி ,மதம் மீறிய சந்திப்பாய் அமைவது மிக நன்று .

நாள் முழுக்க ஆட்டம் ,பாட்டம் , உரையாடல் என கவலையை மறந்து கொண்டாடும் மனோநிலை மிக அவசியம் .அங்கே போயும் சொந்தக்கதை சோகக்கதை பேசி நொந்து நூடுல்ஸ்சாய் வருவது பிக்னிக் நோக்கத்திற்கு ஊறு செய்யும் . அப்படி பேசாமல் இருப்பதும் சிரமம் ; ஆனால் அதை மட்டுமே பேசி ஓய்வது பெருங்கொடுமை . கூடிக்களிப்பது என்பது ஒருபெருங்கலை .அதற்கு பழக வேண்டும் .

பிக்னிக் எனப் போய்விட்டு அங்கேயும் பெண்கள் சாப்பாடு பரிமாற ,தட்டுக் கழுவ என ஒதுங்க – ஆண்கள் தம்மடித்தல் , அரட்டை என பொழுதைக் கரைக்க – பிள்ளைகள் கண் மண் தெரியாமல் ஆடி இரத்த காயமாக ; சோகத்தோடு விடுதிரும்பும் கசப்பான அனுபவம் நிகழாதிருக்க வேண்டும் .

எல்லோர் திறமையையும் வெளிப்படுத்தும் களமாகவும் ; ஆரோக்கியமான உரையாடலின் வாய்ப்பாகவும் ; பிக்னிக் அமைய முன்கூட்டியே  திட்டமிடல்களோடு செல்ல வேண்டும் .வழிநடத்துவோர் கூட்டுக்களியை அர்த்தச் செறிவுள்ளதாக்க முன்முயற்சி எடுக்கவேண்டும் .

சுற்றுச்சூழலை கெடுக்காமலிருக்க  பிளாஸ்டிக் போன்ற யூஸ் அண்ட் துரோ ஐட்டங்கள் இல்லாமல் பிக்னிக்கை அமைப்பதும் . காடு ,தோட்டம் ,கடற்கரை , மலை , ஆற்றங்கரை என இயற்கையை போற்றும் நிகழ்வாக பிக்னிக்கை அமைப்பதும் அவசியம் .முற்போக்கு பண்பாட்டு நடவடிக்கை என வாய்ப்பறை கொட்டாமல் செயலில் துவங்கலாமே !


0 comments :

Post a Comment