#முதியோர் தீர்மானம்

Posted by அகத்தீ Labels:

#முதியோர் தீர்மானம்

முதியோர்கள் சபையில்
’இன்னும் அழைப்பு வரவில்லை’
என்கிற ஆதங்கம்
கேட்காத நாளிருக்காது !

நோயில் விழாமல்
பாயில் கிடக்காமல்
பட்டென்று உயிர்பிரியும்
வரம் கேட்கா முதியோர் அபூர்வம் .

எங்கே பேச்சு தொடங்கினும்
மரணத்தைத் தொடாமல்
முதியோர் சபை
ஒரு நாளும் கலைந்ததில்லை .

இன்றொரு குரல் வித்தியாசமாய்
ஆனால் ஆத்மார்த்தமாய் வெளிப்பட்டது
 ‘பாசிசப் பேயிருள் தேசத்தைச் சூழ்கிறது .
பகத்சிங்காக வெளிப்பட இளவயது அல்ல
காந்தியாய் போராட சூழல் சரியில்லை
இனியும் வாழ்ந்து பயன் என்ன ?’

முதியோரின் உள்ளக் கிடக்கை
இளையோர் நெஞ்சில் நெருப்பை மூட்டுமோ ?
அது முதியோர் நெஞ்சில் பால் வார்க்குமோ ?
ஏக்கத்தோடு கலைந்தது
இன்றைய முதியோர் சபை !

சு.பொ.அகத்தியலிங்கம்.
20 செப்டம்பர் 2019.


0 comments :

Post a Comment