எருமை மீது எமனை உட்கார வைத்தது யார் ? எப்போது ?

Posted by அகத்தீ Labels:

 


எருமை மீது எமனை

உட்கார வைத்தது யார் ? எப்போது ?

 

 “சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை பார்த்து , தமிழர் பண்பாட்டை அதன் அரசியல் வெப்பத்தோடு இந்நூல் பேசுகிறது .இந்நூலை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது மிக அவசியம். இந்தியாவின் பன்மைத்துவத்தை மறுக்கும் பாசிசம் கவ்வும் வேளையில் இந்நூல் புதிய சாளரத்தைத் திறக்கிறது .”

 

என 2021 ஆண்டு நவம்பர் மாதம்  ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய   “சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக ” நூல்  குறித்து நான் எழுதிய நூல் அறிமுகத்தில் குறிப்பிட்டேன்.

 

இன்று [ 12/8/2023] “சங்கச் சுரங்கம் – இரண்டாம் பத்து – அணிநடை எருமை” நூலை படித்து முடித்தேன் . முதல் நூலுக்கு நான் எழுதியதையே மீண்டும் இங்கு முதல் கருத்தாய் முதல் பத்தியில் வழி மொழிந்துள்ளேன்.

 

இந்நூலில் இடம் பெற்றுள்ள பத்து உரைகளும் பத்து கோணத்தில் தமிழர் பண்பாட்டு வேரை நோக்கி நம்மைப் பயணப்பட வைக்கிறது . பத்தும் என்னைக் கவர்ந்தன ஆயினும் எருமை , பானை , விளையாட்டு ,காற்று , சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் ஆழ்ந்த வாசிப்புக்கு உரியன .இன்னொரு வகையில் வசையும்இசையும் ,பண்புடைமையும் பண்பின்மையும் ,நடுவுநிலைமை , எனும் கட்டுரைகள் புது பார்வை தருவன . ஏனைவை மதுரை குறித்தும் உலகெங்கும் பரந்த தமிழன் குறித்தும் புன்னையும் வன்னியும் குறித்தும்  சுவையான செய்திகள் தருவன .ஆக பத்தும் முத்துதான். இங்கே அனைத்தையும்  விரிவாகச் சொல்லல் சாத்தியமல்ல ஒன்றிரண்டைச் சொல்கிறேன்.

 

பசுவுக்குத் தரும் முக்கியத்துவம் ஏன் எருமைக்குத் தரப்பட வில்லை ? ஆனால் ஆதியில் இருந்தே எருமை நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது அல்லவா ? நீர் எருமை இந்தியாவில்தாம் முதன் முதலில் வீட்டு விலங்காகப்  பழக்கப்பட்டது என்பதும் ; இங்கிருந்தே மொசபட்டோமியா  சென்றது என்பதும் ,பால் உற்பத்தியில் இன்றும் எருமைப்பாலின் பங்கே அதிகம் என்பதும் ,எருமை இறைச்சி ஏற்றுமதியே அதிகம் என்பதும் வெறும் தகவல் அல்ல . இன்றும் பழங்குடியினர் வாழ்வோடு எருமை பிணைந்திருப்பது முக்கியமானது .

 

எருமையைப் பற்றி நம் சங்க இலக்கியம் நிறையச் சொல்கிறது .ஓரம் போகியார் எனும் புலவர் எருமைப் பத்து என பத்து பாடல்களை அகநானூற்றில் எழுதி இருக்கிறார் .நற்றிணை ,பெரும்பாணாற்றுப் படை .தொல்காப்பியம் ,திருக்குறள் கலித்தொகை ,அகநானூறு உட்பட எருமையை பற்றி குறிப்பிட்ட சங்க இலக்கிய வரிகள் பலவற்றை நூலாசிரியர் சுட்டி நிறுவி இருப்பது கவனிக்கத்தக்கது .

 

இக்கட்டுரையின் கடைசியில் ஆர் .பாலகிருஷ்ணன் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை .

 

“ இந்தியாவில் வளர்ப்பு விலங்காகப் பழக்கப்பட்ட எருமை ஏன் எப்போதிருந்து பசுவாக்கப்பட்டது ?

சிந்துவெளிப் பொறிப்புகளில் முத்திரைகளில் கம்பீரமான காளை, சடங்கு வழிபாட்டு முறைகளோடு சித்தரிக்கப்படுகையில் பசுமாட்டு முத்திரையோ பொறிப்போ ஏன் இல்லை ?

பழங்குடி மக்களின் வாழ்வியலில் எருமையின் இடம் இன்னும் மாறவில்லை என்பது எதைக் காட்டுகிறது ?

சங்க இலக்கியம் எருமையைப் போற்றுவதற்கான சமூக உளவியல் மற்றும் தொன்ம மரபுகளையும் அதன் பின் நேர்ந்த தாக்கங்களையும் எப்படி மீள் கட்டமைப்பு செய்வது ?

எருமை மீது எமனை உட்கார வைத்தது யார் ? எப்போது ?”

 

ஓர் பண்பாட்டு சதி அல்லது பண்பாட்டுத் திணிப்பு நடந்துள்ளதை இக்கேள்விகள் சொல்லாமல் சொல்கிறது .

 

அடுத்து பானையும் குயவனும் எப்படி எங்கும் பண்பாட்டு வேரின் முக்கிய கண்ணியாக இருந்துள்ளனர் என்பதுதான். .

 

“கலம் என்ற சொல்தான் மையம் . அதுதான் சங்க இலக்கியத்தில் அதிகமாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது . இன்று நாம் ‘பானை என்று சொல்வது ஓர் இடத்தில்தான் வருகிறது .’பானையன்என்ற ஓர் மனிதன் பெயர் வருகிறது .மற்றபடி தாழி ,குழசி ,பிழா [தட்டு ,பானை] ,குடம் ,வட்டி ,துதை [சிறு கலம்],மடாஅ[மடா] [ இன்றுகூட யாராவது குடிகாரனாக இருந்தால் மடா குடிகாரன் என்று சொல்வார்கள்]தடவு ,தசம்பு ,வள்ளம் [கிண்ணம் ,கோப்பை],கரகம் ,குடம் முதலிய சொற்கள் பயன் படுத்தப் பட்டுள்ளன என்கிறார் நூலாசிரியர் .

 

நற்றிணை ,பதிற்றுப்பத்து ,மலைபடுகடாம் ,அகநானூறு ,சிறுபாணாற்றுப்படை , ஐங்குறு நூறு ,பெரும்பாணாற்றுப்படை ,புறநானூறு என நெடுக பானையும் குயவனும் வந்து போவதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் நிறுவுகிறார் .

 

சீனர்களின் சில்க் ரூட் எனப்படும் பட்டுப்பாதை ,ஸ்பைஸ்ரூட் போல இந்தியாவில் ‘ பானைத்தடம் பற்றி நூலாசிரியர் பேசி சிந்து சமவெளி ,குஜராத் ,ராஜஸ்தான் ,தமிழ்நாடு ,கீழடி என  நம்மையும் அழைத்துச் சென்று காட்டுகிறார்.வரலாற்றுதடம் வியக்க வைக்கிறது . பானையில் கீறப்பட்ட குறியீடுகள் பற்றி பேசுகிறார் .

 

குயவர் படைப்பாளர் என்ற நிலையில்  முன்பு ஓங்கி இருந்ததும் ,அந்த படைப்பாளர் பின்னர் சமூகத்தின் தாழடுக்கில் தள்ளப்பட்டதும் குறித்து இக்கட்டுரை பேசுகிறது . பானையைக் கீறியவனே எழுத்தைக் கொண்டுவந்தான் எனச் சொல்கிற நூலாசிரியர் ,”அதனால்தான்சங்க இலக்கியம் அவனைமுதுவாய் குயவ என்று சொல்கிறது .’பண்டைய அறிவு பொருந்திய குயவன் என்று சொல்கிறது .

 

 “ விளையாட்டும் விரும்பார் கொல்” எனும் கட்டுரை தமிழ்ச் சமூகத்தில் விளையாட்டின் இடத்தை தெற்றென படம் பிடிக்கிறது .பகடைக்காய் குறித்து குறிப்பாகப் பேசுகிறது . பண்டை தமிழ்கத்தில் ஆண்கள் மட்டும் விளையாடுவது 10 ,பெண்கள் மட்டும் விளையாடுவது 15 , இருபாலரும் விளையாடுவது 12 என்கிற புள்ளிவிவரங்களோடு பேசும் இக்கட்டுரை நிறைய செய்தியை நமக்குச் சொல்கிறது .’விளையாட்டும் விரும்பார் கொல்’ என்கிற சங்க காலப் பண்பாடு பற்றி அறிய வாசிப்பீர் இக்கட்டுரை .

 

குட [மேற்கு ] ,குண [கிழக்கு] .தென்றல் [தெற்கு ] ,வாடை [வடக்கு] என திசையோடு சேர்த்து காற்றைப் பேசிய சங்க இலக்கியத்தோடு நம்மை அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் .

 

“ வெள்ளிக்கு வெளிச்சம் காட்டிய சங்கத்தமிழ் கடவுளை மறுக்கவில்லை , ஆனால் கடவுள் பிறக்கும் போதே நீரும் நிலமும் வானும் தீயும் இருந்தன என்ற இயற்கையின் இயல்பைத் தமிழ் அறிந்திருந்தது . காற்றின் மீதும் நீரின் மீதும் ,தீயின் மீதும் தமிழர்களுக்கு கவனிப்பு இருக்கிறது .ஆனால் அதற்கு அவர்கள் கடவுள் உருவம் கொடுக்க வில்லை.” என்கிறார் நூலாசிரியர் .

 

புன்னை மரத்தையும் வன்னி மரத்தையும் முன்வைத்து பேசும் ,’நும்மினும் சிறந்த நுவ்வை’ கட்டுரைச் செய்திகள் சுற்றுச்சூழல் சார்ந்த நம் விரிந்த பார்வையை வரலாற்று ,பூகோளத் தொடர்புகளோடு நம்மிடம் உரையாட வைக்கிறது .

 

 “ஆக , உலகளாவிய அளவில் பார்த்தாலும் சரி , தமிழ்த் தொன்மங்கள் காட்டுவதானும் சரி ,இசையும் நிற்கும் வசையும் நிற்கும் .சிலர் கல்யாண வீட்டில் மாப்பிளையாக இருக்கவும் ,இறப்பு வீட்டில் பிணமாக இருக்கவும் ஆசைப்படுவார்கள் .ஏனென்றால் அவர்களைத்தான் திரும்பத் திரும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் . இந்த புகழாசை மிகவும் மோசமானது . இந்தப் புகழாசை மயக்கக்கூடியது .புகழ் என்பது அறம் சார்ந்ததாக ,ஆக்கம் சார்ந்ததாக ,சுயநலம் கடந்ததாக ,எதிர்காலத்தைக் கருதியதாக இருக்க வேண்டும்.” என சங்க இலக்கிய சான்றுகளோடு சொல்லும் “ வசையும் நிற்கும் ,இசையும் நிற்கும்” கட்டுரை உளவியலோடு நம்முடன் உரையாடுகிறது .

 

“ பண்பாடு என்பது வேறொன்றுமில்லை .நாம்தான் மகாத்மா காந்தி அடிகள் என தனித்து விலகி நிற்க முயற்சிக்கும் எந்தப் பண்பாடும் வாழ் முடியாது என்று குறிப்பிட்டுள்ளதையும் இங்கு நினைவுகூர்வோம் . உலகெங்கும் ஒடுக்கப்படுவோர் சார்பில் ஒலிக்கும் குரல்கள் அனைத்திற்கும் இவ்வுரை காணிக்கை “ என ஓரிடத்தில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார் .

 

சங்க இலக்கியத்தில்  கடந்த காலம் குறித்த “மீள் நினைவுகள் இருக்கின்றன,” என்பதை முந்தைய நூலைப் போல இந்த நூலிலும் வலுவாக எடுத்துக் காட்டுகிறார்.

 

 “ இப்படி ஒவ்வொரு கட்டுரையையும் எடுத்துப் பேசலாம் .சங்க இலக்கியச் செய்தி ஒன்றை எடுத்து அதை இந்திய வரலாற்றோடும் சிந்துவெளியோடும் இயைத்துக் காட்டும் ஆய்வு முறை தமிழுக்கும் இந்திய வரலாற்றுக்கும் புதியது.” என மிகச் சரியாகச் சுட்டுகிறார் பெருமாள் முருகன் முன்னுரையில்.

 

ஆய்வு எனில் உடன்படவும் மறுக்கவும் இடம் உண்டுதானே ! இந்த ஆய்வு நூலிலும் யாரும் முரண்படலாம்.கேள்விக்கு உள்ளாக்கலாம் .அதன் மூலம்  இன்னும் தெளிந்த விசாலப் பார்வையை நாம் பெறக்கூடும்.

 

தற்பெருமிதங்களைத் தாண்டி ஆழ வேர்கொண்டு நிற்கும் தமிழர் பண்பாட்டை நாம் மிகச் சரியாய் உள்வாங்க உரையாடலைத் தொடங்குவோம் !! அதற்கு  இந்நூல் நிச்சயம் துணை நிற்கும் !!!

 

 

சங்கச் சுரங்கம் – இரண்டாம் பத்து – அணிநடை எருமை

ஆசிரியர் : ஆர் .பாலகிருஷ்ணன் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

தொடர்புக்கு :24332924 / 9498062424  , email : bharathiputhakalayam@gmail.com  , www.tamizhbooks.com  பக்கங்கள் : 167 ,  விலை : ரூ.160 /

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

12/8/2023.

 

0 comments :

Post a Comment