ஒரு புத்தகமும் 11 + 1 பேர்கள் விமர்சனமும் ….

Posted by அகத்தீ Labels:

 





ஒரு புத்தகமும் 11 + 1  பேர்கள் விமர்சனமும்   ….


ஓசூர் புத்தகக் காட்சியில் இம்முறை ஒரு சோதனை முயற்சி செய்யப்பட்டது . தமுஎகச வோடு இணைந்து . புத்தக விமர்சனம் என்பதை ஒரு போட்டியாக்கியது . ஒரு புத்தகத்தை பலர் விமர்சனம் செய்ய வேண்டும் . சிறந்த விமர்சன்ங்களுக்கு பரிசு உண்டு .

 

இம்முறை எடுத்துக் கொள்ளப்பட்டது என்ன தெரியுமா ? “ வானி” எனும் இளையோருக்கான நாவல் . 11 பேர் பங்கேற்றனர் .அதில் இரண்டு மாணவர்கள் . பெண்கள் 6 , ஆண்கள் 5 . முதல் முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாக இருப்பினும் முயற்சி நிறைவாக இருந்தது . நான் நடுவராகப் பங்கேற்றேன்.

 

எல்லோரும் புத்தகத்தை வாசித்து வந்திருப்பதை உணர முடிந்தது . அவரவர் அந்நூல் கூறும் செய்தியை தங்கள் வாழ்க்கை அனுபவத்தோடு உரசி ‘ சுற்றுச் சூழலை’ பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையைப் பகிர்ந்தனர் . வெறும் கதைச் சுருக்கமாக இல்லாமல் கருத்துச் செறிவோடு பேசியது மகிழ்ச்சி அளித்தது. பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் .

 

நூலின் பெயர் ’வாணி’ அல்ல ’வானி’ . ஏன் மூன்று சுழி போடாமல் இரண்டு சுழி போடப்பட்டது . வானி என்பது சரியே ஏன் ? எல்லோரும் விளக்கினார்கள் . இங்கே சொன்னால் எப்படி ? நூலை வாசித்து அறிக !

 

பவானி ஆற்றில் விஸ்கோஸ் ஆலை நச்சுக் கழிவு நீர் கலந்ததால்   தண்ணீர் மாசாகியது ,பொது மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு தோல் நோய் ,புற்று நோய்ப் பரவ காரண மாகியது . இதனை எதிர்த்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போராடி நதியை மீட்டதே கதை .

 

கதாநாயகி டாக்டர் சத்திய சுந்தரியும் அவர் பேத்தி நித்திலாவும் தான் கதையின் மைய பாத்திரங்கள் . அவர்களின் உரையாடலே பெரும்பகுதி கதையை நகர்த்தியது . டாக்டர் சத்திய சுந்தரி , டாகடர் ஜீவா ஆகியோர் உண்மையில் அப்போராட்டத்துக்கு முன் நின்றவர்கள் . அமைப்பாக்கியவர்கள் . மக்களுக்கு விழிப்பூட்டியவர்கள் ,

விழிப்புணர்பிரச்சாரம் ,சட்டப் போராட்டம், மக்கள் பங்கேற்பு ,ஊடகக்குரல் எல்லாம் சேர்ந்து வெற்றியை ஈட்டியது .இதனை பேசியவர்களில் பலர் சுட்டிக்காட்டினர் .

 

நான் இங்கு கதைச் சுருக்கம் சொல்லப் போவதில்லை . வாசியுங்கள் ! வாசித்த பின் பேசிய ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்ட தென்பெண்ணை ஆற்றைப் பற்றி கவலையைப் பகிர்ந்தார் . ஒரு பெண் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தோடு நினைவு கூர்ந்தார் .ஒருவர் காவிரி மாசுபடுவதைச் சொன்னார் . ஒருவர் குடிநீர் சவாலைச் சொன்னார் .

 

நான் முடிவுரையில் பெங்களூரில் 1200 ஏரிகளில் நூறு மட்டுமே மிச்ச மிருப்பதை ; ஒரு மருந்து கம்பெனி கழிவால் என் வீட்டருகே உள்ள காச்சநாய்க்கன் ஹள்ளி ஏரி நாசமானதை . குடிநீர் தட்டிப்பாட்டில் கிராமமே அல்லாடுவதை . இப்போது ஏரியை மறு சீரமைக்க நடக்கும் முயற்சியைச் சொன்னேன் .

 

ஒரு நாவல் மேலும் பல உண்மைகளைப் பார்க்கத் தூண்டியது என்பது அந்நூலுக்கு பெருவெற்றி ஆகும் !

 

கடைசியாக ஒரு வேண்டுகோள் ஓசூர் புத்தகத் திருவிழா அமைப்பாளர்களுக்கும் தமுஎகசவினருக்கும் ! இனி ஒவ்வொரு ஆண்டும் இதனைத் திட்டமிடுவீர் ! பத்து நாட்கள் பத்து புத்தகங்கள் என யோசிக்கலாம் . சுற்றுச்சூழல் ,மனித உரிமை ,பாலின சமத்துவம் , மத நல்லிணக்கம் , விடுதலைப் போராட்ட வரலாறு  இப்படி பல பொருண்மைகளை மையப்படுத்திய நாவல் ,சிறுகதை , கவிதை ,ஆய்வு நூல் , உரைநடை என வகைக்கொண்றாய் எடுக்கலாம் . யோசிப்பீர் அன்பர்களே !


வானி [ இளையோர் நாவல் ]

ஆசிரியர் : ஈரோடு சர்மிளா ,

சூழல் அறிவோம் பதிப்பகம் ,

91-8825857649 / 

suzhalarivom@gmail.com   


சு.பொ.அகத்தியலிங்கம்.