பிரச்சனைகளை டி கோடிங் decoding செய்து பார்த்தால்......
“ மனச்சோர்வு விடைபெற…. : ஓர் உரையாடல்.” என ஒரு கட்டுரையை இங்கு பதிந்திருந்தேன் . அதனை வாசித்த பலர் பாராட்டினர் .சிலர் கேள்வி எழுப்பினர் . கேள்விகள் எப்போதும் எனக்குப் பிடித்தமானவை . அதில் ஒரு கேள்வியை முன்வைத்து இன்றைக்குப் பேசலாம் எனக் கருதுகிறேன் .
“நாம் என்னதான் யோசித்துத் திட்டமிட்டுச் செய்தாலும் எதிர்பாராமல் ஏதேனும் நடந்து நம் முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடுகின்றனவே , இதனை விதி என்றோ தலையெழுத்து என்றோ சொல்லாமல் வேறெப்படி புரிந்து கொள்வது ?”
யதார்த்தமான நியாயமான கேள்வி . ஒவ்வொருவரும் தம் வாழ்வில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை நிறையவே எதிர்கொண்டிருப்பீர்கள் . இன்னும் சொல்லப்போனால் சிறிதாகவோ பெரிதாகவோ இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளாதவர்களே இருக்க மாட்டார்கள் .
கடன் வாங்காமல் பட்ஜெட் பத்மநாபன் போல் மிகமிகச் சிக்கனமாக வாழ்பவர் . அவருக்கு கஞ்சன் என்றே வீட்டில் கெட்ட பெயர் . மனைவி பிள்ளைகளுக்கு எல்லாம்கூட அவர் மேல் கோபம் . சினிமாவுக்கு போகும் போதுகூட பட்ஜெட்டுக்குள் அடக்குபவர் . அவர் வீட்டில் அப்பாவுக்கு திடீரென ஓர் விபத்து . மருத்துவச் செலவு எகிறுகிறது . கடன் வாங்க நேர்கிறது .
இது விதியா ? தலை எழுத்தா ? இல்லை நம் குடும்ப பட்ஜெட்டில் எதிர்பாரா மருத்துவச் செலவு , கல்விச் செலவு ,வருங்காலத்துக்கான சேமிப்பு இவற்றுக்கான ஒதுக்கீடு செய்யும் அளவு வருமானம் இல்லை என்பதுதானே உண்மை . மருத்துவம் இலவசம் என்கிற அரசியல் சூழலும் இல்லை .நம் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாய் போகையில் எதிர்காலத் திட்டமிடல் சாத்தியமாகுமா ? விலைவாசி ஏறிக்கொண்டே இருக்க வருவாய் அதற்கொப்பக் கூடாமல்த் தேங்கும் சூழலில் ,வருவாயில் முப்பது சதம் குறைந்தது இருபது சதம் சேமியுங்கள் என்று சொல்லலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியமா ? சமூக அரசியல் சூழலிலின் நெருக்கடியைப் பற்றி யோசிக்காமல் விதி ,தலையெழுத்து என பேசி தப்பிக்க இயலுமா ?
ஒரு வேலைக்கான இண்டர்வியூவுக்குப் போக ரயிலில் டிக்கெட் போட்டிருந்தான் . திடீரென ஏற்பட்ட ரயில் விபத்தால் போக்குவரத்து முடங்கிப் போய்விட்டது . அவனால் போக முடியவில்லை . தன் தலை எழுத்து என நொந்து கொள்கிறான் . உண்மையில் இது ஒரு தற்செயல் நிகழ்வு . பஸ் ,விமானம் ,கார் என மாற்று பயண ஏற்பாட்டை முயற்சி செய்ய அவன் முயலாமல் இருந்திருக்கலாம் . அல்லது அதற்கான பண ஏற்பாடு முடங்கி இருக்கலாம் .அதற்கான நேரம் கடந்திருக்கலாம் .வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம் . சம்மந்தப்பட்ட நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு சூழலை விளக்கி மறுவாய்ப்பு பெற முயற்சித்திருக்கலாம் . ஒரு வேளை எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கலாம் . இது எதிர்பாரா நெருக்கடி . தற்காலிகப் பின்னடைவு . அடுத்து முயன்று முன்னேறுவதுதான் தீர்வு .விதி ,தலையெழுத்து ,நம்ம நேரம் சரியில்லை என முடங்கிவிட முடியாது .
Breadwinner என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் , தன் ஒற்றைச் சம்பாத்தியத்தால் குடும்பத்தையே காப்பாற்றுகிறவர் என்று சொல்லப்படுகிற குடும்பத் தலைவர் எதிர்பாரா விபத்தில் மரணித்துவிடுக்கிறார் . பேரிழப்பு . ஈடு செய்வது மிகச் சிரமம் .
‘நம்ம விதி அப்படி ,நம்ம தலயில அப்படி எழுதியிருக்கு ,நம்ம பொறந்தநேரம் அப்படி’ போன்ற சொற்கள் கண்ணீருக்கும் அழுகைக்கும் சொல்லப்படுகிற தற்காலிக சமாதானங்களே தவிர தீர்வல்ல . வாழ்க்கை முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டதுபோல் ஆகலாம் .அதற்காக அங்கேயே தேங்கிவிட முடியுமா ?வாழ்க்கை என்பது முட்டுசந்தல்ல ; முடங்கி நிற்க ; பயணப் பாதையை மாற்றி நடக்கும் நேரம் . அவ்வளவுதான்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போக முடியும் விபத்துகளும் தற்செயல் நிகழ்வுகளும் வாழ்க்கை நெடுக குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும் . அப்போது வலியில் துடிப்போம் . அந்நேரம் வலி நிவாரணி போல் ஒரு சில சொற்கள் பயன்படலாம் .ஆயின் அது முடிவல்ல .தீர்வல்ல.அங்கேயே வாழ்க்கை தேங்கிவிடாது .
தனக்கு மட்டுமே இப்படி நிகழ்வதாக நினைத்து வருந்தலாம் . ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது இன்னொரு சந்தர்ப்பத்தில் இதுபோல் நிகழ்ந்திருக்கும் . ஆக , உலக ஞானம்தான் இந்த அறியாமையிலிருந்து விடுதலை தரும் .
ஒரு பழைய பாடல் நினைவிற்கு வந்தது
“ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ
அகமுடையாள் மெய் நோவ அடிமை சாக
மாஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட
வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
சாவோலை கொண்டொருவன் எதிரே வர
தள்ளவொணா விருந்து வர சர்ப்பம் தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடனைக் கேட்க
குருக்களோ தட்சணைகள் கொடு என்றாரே”
பாடலின் பொருள் நம்மை அதிரவைக்கும் . மிகவும் சோகம் ததும்பும் கதையைச் சொல்லும் . ஒருவன் வீட்டில் பசுமாடு கன்று போட்டிருந்ததாம். அது மகிழ்ச்சிதான் எனினும் மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த அவஸ்தை உடனே புரியும். ஏனெனில் அப்போது வீடே நச நச என இருக்கும். வெள்ளம் புகுந்த வீடு மாதிரி இருக்கும். அப்போது மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தால் நிலை கேட்கவே வேண்டாம் .அந்நேரம் பார்த்து மனைவிக்கு உடம்பு சரியில்லை எனில் வீடே நாறிப்போய்விடும். சட்டென்று வீடும் இடிந்து விழுந்து விட்டால் கேட்கவும் வேண்டுமா துயரம் . வீட்டு வேலைக்காரும் வரவில்லை , விசாரித்தால் அவரும் செத்துவிட்டாராம் .. கிடப்பது கிடக்கட்டும் நமது வயலுக்கு இப்போது தண்ணீர் / ஈரம் உள்ள நேரம் ஆதலால் விதைப்போம் என்று வயல்வெளிக்கு ஓடியபோது ; வழியில் கடன்காரர் மறித்துக்கொண்டால் எப்படி இருக்கும் ? அந்தநேரம் பார்த்து. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டார் என்று சாவோலை வந்தால் அழுவதற்கும் நேரம் இருக்குமா . இப்படி நிலை இருக்க மறுக்கவே முடியாத சொந்தக்காரர் ஒருவர் திடீரென விருந்துக்கு வந்துவிட்டாராம். வீட்டில் ஒருவரை பாம்பும் தீண்டிவிட்டதாம். எதைப்பற்றியும் யோசிக்காமல் விவசாயத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு வாசலில் நின்றனர் ஆட்சியாளர்கள். நேரம் காலம் தெரியாமல் குருக்கள் எனக்கு சேரவேண்டிய தட்சணை கொடு என்று அடம் பிடித்தாராம் !
சும்மா கற்பனைதான் எனினும் இப்படி அடுக்கடுக்காகத் துன்பம் படை எடுப்பது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் விவகாரம்தானே ! இது மனித குலத்துக்கான பொது விதி . ஆயிண் இப்பாடலைக் கூர்ந்து கவனித்தால் புரியும் ; ஓர் ஆட்சி மக்கள் நலனைப் பற்றி கவலைப்படுகிற ஆட்சியாக இருப்பின் இதில் சொல்லப்பட்ட பல பிரச்சனைகளே அல்ல .இன்றைய பாணியில் சொல்வதாயின் டி கோடிங் decoding செய்து பார்த்தால் பிரச்சனைகளை எளிதாய் புரிந்து கொள்ளலாம் ; தீர்வின் நுனி கையில் அகப்படும் .
எனவே விதியென்றோ தலையெழுத்தென்றோ எதையும் எண்ணி முடங்க வேண்டியதில்லை .சிலவற்றின் காரணம் பளிச்செனப் புலப்படும் .சிலவற்றின் காரணம் உடனே புலப்படாது . தற்செயலாகவோ விபத்தாகவோ இருக்கலாம் ; அல்லது நாம் யோசிக்கத் தவறிய புதிய கோணமாக இருக்கலாம் .புதிய சவாலாக இருக்கக்கூடும் .
விதி ,தலையெழுத்து என சோர்ந்து கிடந்தால் பிரச்சனையிலிருந்து வெளியேறவே முடியாது .கவலையே கொன்றழித்து தின்றுவிடும் . மனதை தைரியமாக்கிக் கொண்டு இதிலிருந்து மீள்வது எப்படி என யோசிக்கத் தொடங்கினால் , முயற்சியைத் தொடங்கினால் தொலைதூரத்திலேனும் வெளிச்சம் புலப்படும் . விடாப்பிடியாக நகர்ந்து நெருங்கலாம் .பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஓடாமல் ; மனோதைரியத்துடன் எதிர்கொள்வதுதான் நம்முன் உள்ள ஆகச் சிறந்த வழி .
Natarajan Narayanaswamy என்பவர் என் பதிவொன்றில் சொல்லி இருக்கிறார் ,” கம்யுனிசம் ஒரு கானல் நீர். அதை ரசிக்கலாம். நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாதது.” இதற்கு விரைவில் பதில் சொல்ல முயல்வேன்….
சு.பொ.அகத்தியலிங்கம்
01 /06 /26 .
l

0 comments :
Post a Comment