சொடலி ...சொடலி...
இந்நூலைப் பற்றி ‘ அருவாள் தேசத்திலிருந்து…’ என்ற தன்னுரையில் வசந்தி முனீஸ் சரியாகச் சொல்கிறார் ; “ எங்கள் ஊர் இருட்டுக்கடை அல்வாவை எல்லோரும் சப்புக் கொட்டிச் சுவைத்திருப்பீர்கள் .ஆனால் , எங்கள் அருவாள் தேசத்தின் அட்டூழியங்களையும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் அத்துமீறல்களையும் தோலுரித்துக் காட்டுவாள் என் ‘சொடலி’. “
இப்படி தன் பிறந்த மாவட்டத்தை சுயவிமர்சனமாய்ச் சொல்ல -அதுவும் ‘அருவாள் தேசமென..’ தலைப்பிலேயே சொல்ல ; மனோ தைரியம் ரொம்ப வேண்டும் . ஆழமான சமூகக் கோபம் இருக்க வேண்டும். வசந்தி முனீஸூக்கு இவை அதிகமாக உள்ளது. நூலை வாசித்தால் புரியும்.
“ ‘சொடலி’ கதை வெறும் பழிவாங்கல் கதையல்ல ; அது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியின்வெடிப்பு.” என்கிறார் அணிந்துரையில் பிறைமதி குப்புசாமி . இது கவனத்தில் கொள்ள வேண்டிய அவதானிப்பு .
எட்டு கதைகள் . எட்டு கொடுமைகளை தோலுரிக்கிறது .எதுவும் வெறும் கற்பனையின் படைப்பல்ல . நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு கதாசிரியர் ஓர் கதை வடிவம் கொடுத்து ஒரு கோவப் பார்வையை வீசி இருக்கிறார் .
ஆணவக்கொலை ,சாதிவெறி .ஆணாதிக்கம் இவற்றையும் மதநல்லிணக்கம் , மனிதம் ,பேரன்பு இவைகளையும் உரக்க வெளிப்படுத்துகிற கதைகள் இவை .சொடலி , வரிப்பணம் , முனியாண்டிக்கு ஸ்தோத்திரம் போன்ற கதைகள் என்னை பெரிதும் ஈர்த்தன . நாட்டார் தெய்வங்களின் வரலாற்றுக் கதை நூலாசிரியருக்கு மிகவும் பிடித்த ஒன்று என நினைக்கிறேன் . சொடலி அதன் வெளிப்பாடுதானோ !
சமூகக் கோபம் நியாயம் . கிராமத்து மொழி நன்று . தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டுவருபவர் வசந்தி முனீஸ் . 'விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை ‘ என்கிற பாரதிதாசன் வரிகளையும் உள்வாங்கி , சிறந்த கதை சொல்லியாய் காலவெளியில் பரிணமிப்பார் என்பதில் ஐயமில்லை .
சொடலி [ சிறுகதைத் தொகுப்பு , ஆசிரியர் : வசந்தி முனீஸ் , கேலக்ஸி நூல் பதிப்பகம் & விற்பனையகம் , தொடர்புக்கு : galaxybs2022@gmail.com , 99944 34432 , பக்கங்கள் : 125 , விலை : ரூ.165 /
சுபொஅ.
28 /06 /26.

0 comments :
Post a Comment