மனச்சோர்வு விடைபெற ... : ஓர் உரையாடல் .
மார்க்சிய தொகுப்பு நூல்களை வாசிக்கத் தொடங்கியதும் என் மனச் சோர்வு விடை பெற்றதாக 25 /05 /26 பதிவிட்டேன் . அலைபேசியில் ஓர் அன்பர் அழைத்தார் .
“ பொய் சொல்லாதீங்க தோழர் ! மார்க்சிய நூல்களைப் படித்தால் மண்டைதான் காயும் . வறட்டு்ப் புரட்சி கோஷங்கள் முழங்கலாம் ! அது ஓர் அரசியல் சித்தாந்தம் அவ்வளவுதான் .மன அமைதிக்கு பகவத்கீதை படியுங்கள் ! குரான் படியுங்கள் ! பைபிள் படியுங்கள் ! கிரந்த சாஹிப் படியுங்கள் ! தம்ம பதம் படியுங்கள் ! தேவாரம் ,திருவாசகம் ,திவ்ய பிரபந்தம் . திருமந்திரம் ,திருஅருட்பா ஏதேனும் படியுங்கள் !....” என நீண்ட பட்டியல் வாசித்தார் . “ கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலை வாசிக்கச் சொல்லி முடித்தார்.
அத்தோடு நில்லாமல் , “ வேண்டுமானால் உளவியல் வல்லுநரை கலந்து அறிவுரை பெறலாம் ... மார்க்சியம் ஓர் வறட்டு பொருளாதார , வறட்டு அறிவியல் சித்தாந்தம் அவ்வளவுதான்...” என்று பொரிந்தார் .
நெடுநாள் நண்பர் , என்னிலும் வயது மூத்தவர் எனவே நான் அவர் சொல்வதற்குப் பொறுமையாக முழுவதுமாகக் காதுகொடுத்துவிட்டு என் கருத்தைச் சொல்ல ஆரம்பித்தேன் . இடைமறித்து அவரே பேசினார் ,
“ தோழரே ! உங்கள் கம்யூனிச விளக்கங்களைக் கேட்டுக்கேட்டு காது புளித்துவிட்டது ... வயதான காலத்திலாவது அமைதியாக இருக்கட்டும் என்கிற நல்லெண்ணத்தால் உங்களுக்கு சில ஆலோசனைகளைச் சொன்னேன் கேட்டால் கேளுங்கள் இல்லாவிட்டால் எப்படியும் நாசமாய்ப் போங்கள்...”
ஆனமீகவாதிகள் எப்போதும் அடுத்தவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக்கூட அறிந்துகொள்ளும் பொறுமை அறவே இல்லாதவர்கள் . இதனை பலமுறை அனுபவித்துள்ளேன்.
சரி ! போகட்டும் ! நான் உங்களிடம் கொஞ்சம் பேசலாம் அல்லவா ?
ஒருவர் சிரமத்தில் சிக்கலில் இருக்கும் போது அவருக்கு ஆன்மீகவாதிகள் சொல்லும் ஆறுதல்களைக் கொஞ்சம் அசைபோடுங்கள் .
“ நீங்க புழுபூச்சிக்குகூட தீங்கு நினைக்காத ஆளு ... உங்களுக்கா இப்படி ஒரு நிலை .... உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் ... கவலைப் படாதீங்க .... வாழ்க்கை ஒரு சக்கரம்தான் மேல இருக்கிறவன் ஒருநாள் கீழே வந்திடுவான் ... கீழே இருக்கிறவன் நிச்சயம் மேல போவான் .... நம்பிக்கையோடு பகவான இறுகப் பிடிச்சுக்கோங்க ... நமக்கெல்லாம் அவன்தான் துணை...”
தொழுகை , பிரார்த்தனை ,ஜெபம் ,துவா என அவரவர் மதநம்பிக்கைகளுக்கு ஏற்ப சொற்கள் மாறும் ; உபதேசங்கள் கொஞ்சம் வேறுபடும் . பைபிள் அல்லது குரானை வாசித்தும் காட்டக்கூடும்.
“ நீங்க கும்பிடுற தெய்வம் உங்களைக் கைவிட்டுவிடாது...”
“ ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் . கெட்டவங்களுக்கு கொடுப்பான் கைவிட்டுவிடுவான்...” என ரஜினி ஸ்டைலில் சொல்லுவோர் உண்டு .
“ விதி வலியது அதனை யாராலும் வெல்ல முடியாது பாண்டவாளப் பார்க்கலையோ சீத்தாராமனைத்தான் பிரிக்கலையோ...” கண்ணதாசன் பாட்டை நினைவூட்டுவோர் உண்டு .
“ உங்களுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து ஏதாவது ஒண்ணுக்கு மேல ஒண்ணா கஷ்டம் வந்துகிட்டே இருக்கு ... நேரம் சரியில்ல போல ... எதுக்கும் திருநள்ளாறுக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துருங்க...”
“ ஏதோ ஒரு தோஷம் உங்களப் போட்டு வாட்டி வதைக்குது ... மனுஷாள நம்ப முடியாது தெய்வத்தை நம்புங்க ... எதுக்கும் 48 நாட்கள் அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுங்க ...கூடவே குலதெய்வம் கோயிலுக்கும் போய் வந்துருங்க...”
“ வேறொண்ணுமில்ல குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமா இல்லை ... கொஞ்சம் கஷ்டத்தைக் கொடுக்கத்தான் செய்யும் ... ஆனால் அது நல்லதுக்குத்தான் ... வட்டியும் முதலுமாய் சந்தோஷமான செய்தி சித்திரைக்குப் பிறகு நிச்சயம் வரும் ... எதுக்கும் திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டு அங்கபிரதட்சணம் செய்திட்டு வந்திடுங்க...”
அப்பப்பா ! எத்தனை யோசனைகள் ? எத்தனை சிபாரிசுகள் ?
எல்லாம் அப்போது சற்று ஆசுவாசமாய் இருக்கலாம் . ஒத்தடம் கொடுத்தது போல் இதமாய் இருக்கலாம் . கொஞ்சம் போதை அடித்ததுபோல் மனசு லேசாகலாம் . ஆனால் எல்லாம் கொஞ்ச நேரம்தான் .பரிகாரம் ,சடங்கு ,பூஜை , யாத்திரை ,ஜோதிடம் என மேலும் காசு கரையலாம் .கடனாளி ஆகலாம்.ஜோதிடம் என்பதும் பரிகாரம் என்பதும் ஒரு விதமான ஏமாற்றே . மன வலிமை அற்றவர்களை எளிதில் வீழ்த்திவிடும் . இதனால் வாழ்வைத் தொலைத்தவர்களே அதிகம்.
கடைசியில் , “ அந்த ஆண்டவனுக்கும் கண்ணில்லை” என மனம் நொந்து புலம்பலாம் . இதற்கிடையில் காலம் கடந்து போவதால் அந்த கஷ்டம் பழகிப் போயிருக்கும் . அதைவிட பெரிய இன்னொரு கஷ்டம் வந்திருக்கும் . கவனம் முழுக்க அந்தப் பக்கம் திரும்பி இருக்கும் .
இப்படித்தான் வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறான் சாதாரண மனுஷன்.
ஆன்மீகம் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவனுக்கு இளைப்பாறுதல் தருமே ஒழிய விடுதலையை ஒரு போதும் தராது .
மத ஆன்மீக போதனைகள் ஒரு கற்பனை மயக்கத்தை போதிக்குமே தவிர மண்ணில் காலூன்றி விருட்சமாக வளர ஒரு போதும் வழிகாட்டுவதில்லை .
“ இதெல்லாம் ரொம்ப மேலோட்டமானவை . அவர் உங்களுக்கு சிபாரிசு செய்த நூல்கள் தத்துவ வழிகாட்டல் அல்லவா ? அதற்கென்ன பதில் ?”என நீங்கள் கேட்கக்கூடும் .
“ நான் அவர் குறிப்பிட்ட நூல்களை பலமுறை வாசித்துள்ளேன் . பகவத் கீதை குறித்து ‘ கீதை தரும் மயக்கம்’ன்னு நூலே எழுதி இருக்கேன் . பைபிள் ,குரான்,தம்மபதம் வாசித்துள்ளேன் . கிரந்த சாஹிப் வாசித்ததில்லை . பக்தி இலக்கியங்கள் வாசித்துள்ளேன் . மனனம் செய்த பாடல்களும் உண்டு . மற்றபடி “ போதை ஏறிய தத்துவ விசாரமே” எனக் கருத்துமுதல்வாதிகள் பற்றி மார்க்ஸ் கூறிய சொற்றொடர்தான் நினைவுக்கு வருகிறது
சரி ! கஷ்டப் படுகிறவனுக்கு மார்க்சியம் என்ன வழிகாட்டும் ?
ஒரு மார்க்சிஸ்ட் ஒருவனின் துயரம் கண்டு மெய்யாகவே மனவருத்தம் கொள்வார் .அதனை அவரோடு பகிர்ந்து கொள்வார் . தோள் அணைப்பார் .
“ கவலைப்படாதே ! நாங்களெல்லாம் இருக்கோமில்ல பார்த்துக்கலாம் ...” என தோள் கொடுப்பார் . அவர் பிரச்சனைகளை பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டறிவார் .மனம் திறந்து அவரோடு உரையாடுவார் . தன்னால் முடிந்தவரை அவருடன் நின்று பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுவார் . அதே சமயம் ஒவ்வொருவரும் அவரவர் பிரச்சனையை அவரவர்தானே துணிவுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டுமென உணர்த்துவார் .
சிக்கலில் சிக்கிக் கொண்டவரை மீட்பது எப்படி ? உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன ? தொலை நோக்கில் செய்ய வேண்டியது என்ன ? சுயவிமர்சனமாய் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியவை எவை ? கொஞ்சம் கறாராய் கண்டித்து விமர்சித்து திருத்த வேண்டியவை எவை ? இப்படி எல்லா கோணத்திலும் அலசி ஆய்ந்து தீர்வை நோக்கி நெருங்க முயலுவதும் ; அதற்குப் போராட நம்பிக்கை ஊட்டுவதுதான் மார்க்சிஸ்டுகள் வழி .
“ அரசியல் நடத்தவும் குடும்பம் நட்த்தவும் அறிவியல் தேவை” என்ற சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அடியொற்றி நிறைய பேசப்பட வேண்டும் .எழுதப்பட வேண்டும் .
இங்கே நான் பதிவிட்டிருப்பதை அந்த அன்பர் நிச்சயம் வாசிப்பார் . ஆயினும் அவர் என் கருத்தோடு உடன்பட மாட்டார் .நான் அவரோடு உடன்பட இயலாது .அவருக்கு நானோ எனக்கு அவரோ எதிரிகளல்ல ; ஏனெனில் அவர் நடைமுறையில் மதவெறிக்கு எதிரானவர் . அந்த ஒற்றைப் புள்ளியில் இணைந்திருக்கிறோம். உரையாடுவோம் தொடர்ந்து ....
சு.பொ.அகத்தியலிங்கம்.
26 /05 /26 .

0 comments :
Post a Comment